Published : 15 Jul 2021 07:34 PM
Last Updated : 15 Jul 2021 07:34 PM

பழங்குடிகளிடம் சிக்கிள் செல் அனீமியா நோய்த் தடுப்புப் பணிகள்: கரோனாவால் சிக்கல்

கரோனா தொற்று சிகிச்சை என்று வரும் சுகாதாரத் துறையினரைக் கண்டாலே காடுகளுக்குள் ஓடி ஒளிந்தும், மரங்கள் மீது ஏறி மறைந்தும், வருபவர்களை ஊருக்குள் வரவிடாமல் கத்தியைக் காட்டி விரட்டியும் விடும் பழங்குடிகள் பற்றிய செய்திகள் சமீபத்தில் வந்தபடி உள்ளன. அவர்கள் ஏற்கெனவே ‘சிக்கிள் செல் அனீமியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும், அவர்களுக்குக் காலங்காலமாக சிகிச்சையளிக்கச் செல்லும் தன்னார்வலர்கள், மருத்துவர்களும்கூட இந்த கரோனா வரவு பயத்தால் தடுக்கப்பட்டார்கள் என்ற செய்தியெல்லாம் யாருக்காவது தெரியுமா?

அதைப் பற்றிய ரிப்போர்ட் இது.

சிக்கிள் செல் அனீமியா என்றால் என்ன?

உலகில் 8 ஆயிரம் அரிய வகை நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றால் பீடிக்கப்பட்டு உலகெங்கிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 40 கோடி பேர். இதில் இந்தியாவின் கணக்கில் மட்டும் 450 அரிய வகை நோய்களும், 7 கோடி மக்களும் வரையறை செய்யப்பட்டுள்ளனர். இப்படிக் குறிப்பிட்ட மக்கள்தொகையில் குறைந்த அளவில் ஏற்படும் நோய்களை ‘அரிய வகை நோய்கள்’ (Rare Diseases) என்று வரையறுத்திருக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி இந்த அரிய வகை நோய் என்பது 10 ஆயிரம் பேரில் 10 பேருக்கும் குறைவாக இருப்பது. அரிய வகை நோய்களில் 5% நோய்களுக்குத்தான் சிகிச்சை இருக்கிறது.

ஆனைகட்டி தூமனூர் பழங்குடி கிராமம்.

இருக்கும் சிகிச்சைகளும் செலவு மிகுந்தவையாகவே இருக்கின்றன. அதனால், எல்லா நோயாளிகளும் உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள முடியாமல் வாழ்நாள் முழுவதும் நோயுடன் போராடுகின்றனர். இந்தப் பின்னணியில் உலகில் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகள் அரிவாள் உயிரணு நோயுடன் (Sickle cell disease) பிறக்கின்றனர் எனும் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. அரிய நோய் வகையைச் சேர்ந்த இவர்களில் பாதிக் குழந்தைகள் இந்தியா, நைஜீரியா, காங்கோ ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை 2050-ல் 4 லட்சமாக உயரக்கூடும் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

ஆனைகட்டிக் காடுகளில் 300 பேர்

இந்த நோய் பீடிக்கப்பட்டவர்கள் இந்தியாவில், தமிழகத்தில், குறிப்பாக கோவை ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், நீலகிரி பழங்குடி கிராமங்களில் வாழ்கின்றனர் என்பது இதுவரை பெரிதாக அறியாத செய்தி.

ஆனைகட்டி, பாலமலை, பில்லூர் அணை வரை 56 பழங்குடி கிராமங்களில் சுமார் 250 பேருக்கு இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கான மருந்து, சத்துப் பொருட்களையும், சிகிச்சையையும் நேரில் சென்று அளிக்கிறது பழங்குடிகளுக்காக நீலகிரியிலிருந்து இயங்கி வரும் நாவா என்ற தொண்டு நிறுவனம். இதன் தன்னார்வலர்களில் ஒருவராகச் செயல்படுகிறார் ஆனைகட்டி தூவைப்பதியைச் சேர்ந்த பாலன். இவர் இப்பகுதி மாவட்டப் பஞ்சாயத்து கவுன்சிலரும் ஆவார். அவர் இந்த நோய்த் தாக்குதலில் இங்கு வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்நிலையைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘நாவா அனுப்பும் வேனில் மாதத்துக்கு 56 கிராமங்களுக்கு டாக்டர் மற்றும் நர்ஸ்களுடன் போய்ப் பார்க்கிறோம். இந்த நோய்க்குரியவர்கள் எஸ்.எஸ்., ஏ.எஸ் என்று இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஏ.எஸ். என்பவர்கள் நோயைப் பரப்பக் கூடியவர்கள். எஸ்.எஸ். பிரிவு நோய் பரப்ப முடியாதவர்கள். இந்நோயின் எஸ்.எஸ். பிரிவினர் மருந்து டானிக், சத்தான உணவு எல்லாமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏ.எஸ். பிரிவினர் சத்துப் பொருள் மட்டும் எடுத்தால் போதும்.

ஏ.எஸ்.க்கு ரூ.200-க்கான (10 முட்டை, தேன் நெல்லி 4 பாக்கெட், சத்துமாவு அரைகிலோ, பேரிச்சம்பழம் கால் கிலோ) பொருளும், எஸ்.எஸ்.பிரிவினருக்கு ரூ.500 மதிப்புள்ள பொருட்களும் (30 முட்டைகள், அரை கிலோ ஹெல்த் மிக்ஸ், தேன் நெல்லி 12 பாக்கெட், பேரிச்சம் பழம் அரை கிலோ, டானிக், மருந்து மாத்திரைகள்) கொடுக்கிறோம். இவற்றை அரசு ஐசிஎம்ஆர் மூலம் நாவாவுக்குத் தருகிறது. நாவா இதை கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறது. எங்கள் வட்டத்தைப் பொறுத்தவரை எஸ்.எஸ்.ஸில் 50 பேரும், ஏ.எஸ்.ஸில் 250 பேரும் ஆனைகட்டி, பாலமலை, பில்லூர் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றனர்.

சிக்கிள் செல்- பாதிப்பு உள்ளவர்க்கு நாவாவின் உதவி

பழங்குடிகளுக்கு மட்டும் ஏன் இந்நோய்?

நீண்ட காலம் முன்பு சுகாதாரமான குடிநீர் இல்லாமல் பழங்குடிகள் நிறைய பேர் காலராவால் பாதிக்கப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் மலைப் பகுதிகளில் உணவு வகையிலோ, பூச்சிக்கடி காரணத்தாலோ மலைப் பகுதிகளில் இந்நோய்த் தாக்குதல் இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்நோய் அப்பாவுக்கு இருந்தால் மகனுக்கு வருவதும், தாத்தாவுக்கு இருந்தால் பேரனுக்கு வருவதும் சகஜமாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இது பரம்பரை நோய். இந்நோயைக் கட்டுப்படுத்தி, இல்லாமல் செய்வதற்காக இம்மக்களிடையே விழிப்புணர்வுக்காக மூன்று கார்டுகள் கொடுக்கிறோம். வெளிர் நீல வண்ண அட்டை பொதுவானது. ஏ.எஸ்.க்கு மஞ்சள் வண்ண அட்டை. எஸ்.எஸ்.க்கு ரோஸ் வண்ண அட்டை. இதில் மஞ்சள் வண்ணம் உள்ளவர்களுக்குள் திருமணம் கூடாது. அதேபோல் மஞ்சள் வண்ணத்துக்கும், ரோஸ் வண்ணத்துக்கும் திருமணம் செய்யக் கூடாது. இப்படி இருந்தால் மட்டும்தான் இந்த நோயை நாம் குறைக்க முடியும்.

பாதி வயதுதான் ஆயுள்

இதன் அறிகுறிகள் பல உள்ளன. அவர்கள் மெலிந்து காணப்படுவர். அதிகமாக வேலை செய்ய முடியாது. கால் வலி, இடுப்பு வலி, மூட்டுகளில் வலி இருந்துகொண்டே இருக்கும். இதை ரத்த மாதிரி சோதனையில்தான் கண்டுபிடிக்கிறார்கள். இது ஆயுளைக் குறைக்கக்கூடிய நோய். மனித ஆயுள் 80 வயது என்றால் 40, 35, 30, 25, 18 வயதில் கூட இந்நோய் ஆளை முடித்து விடும். இப்படியானவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்தால் இவர்கள் ஆயுளை நீட்டிக்க முடியும். அதற்கான வேலையைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.

கரோனா காலத்துச் சிக்கல்கள்

இந்த கரோனா காலத்தில் அரசு, நாவாவிற்கு தமிழ்நாடு அரசு பெயர் பொறித்த வாகனம் தந்துள்ளது. உயர் அதிகாரி கையெழுத்துப் போட்டு தமிழ்நாடு அரசு முத்திரையுடன் எல்லா இடத்திற்கும் போவதற்காக பாஸ் கொடுத்துள்ளார்கள். அதனால் அரசுத் தரப்பில் எங்களை யாரும் தடுப்பதில்லை. ஆனால், பழங்குடி மக்களிடம்தான் நிறைய பீதி. நான் இதே ஊரைச்சேர்ந்தவன், பழங்குடி இனத்தவன், பல வருடங்களாக 56 ஊர்களுக்கும் சென்று இந்தப் பணியைச் செய்து வருபவன்தான் என்றாலும் கூட ஒவ்வொரு கிராமத்திலும் அவ்வளவு சுலபமாய் மக்கள் எங்களை விட்டுவிடுவதில்லை.

கரோனா வந்த பிறகு ஒரு ஊருக்குள் போவதற்கு முன்பே நிறைய விசாரிக்கிறோம். ‘ஊருக்குள் யாருக்கும் காய்ச்சல், சளி தொந்தரவு உள்ளதா? வெளியூர் போய்விட்டு வந்துள்ளார்களா? என்றெல்லாம் தெரிந்துகொண்டே குறிப்பிட்ட ஊருக்குள் செல்கிறோம். அப்படிச் சென்றாலும் கூட மக்கள் எங்களை விடுவதில்லை. பல பழங்குடி கிராமங்களில் ஊரின் முகப்பிலேயே தடுப்புப் போட்டு வைத்து விடுகிறார்கள். உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் அனுமதி பெற்று வாருங்கள் என்கிறார்கள். அதோடு அவர்களே பஞ்சாயத்துத் தலைவருக்குத் தகவல் கொடுத்து வரவழைக்கிறார்கள்.

ஆனைகட்டி தூவைப்பதி பழங்குடிக் குழந்தைகள்

ஊருக்கு இரு பகுதிகளிலும் தடுப்புகள்

‘நாங்கள் எப்போதும் வருபவர்கள்தான். எங்களில் யாருக்கும் காய்ச்சல் சளி இல்லை. சிக்கிள் செல் அனீமியாவிற்கே சிகிச்சை செய்ய வந்துள்ளோம் என்று சொன்னாலும் கூட, ‘அப்போது உங்களுக்கு நோய் இல்லை; காய்ச்சல் இல்லை. இப்போது இருக்கிறதா, இல்லையா?’ன்னு எப்படித் தெரிந்துகொள்வது?’ என்று எதிர்கேள்வி கேட்பதும் நடக்கிறது. இவர் டாக்டர், இவர் நர்ஸ். எல்லோரும் தடுப்பூசி போட்டிருக்காங்க. நீங்களும் தடுப்பூசி போட்டுட்டீங்கன்னாத்தான் நோயிலிருந்து தப்பிக்க முடியும்!’ என்று சொன்ன பிறகே பல ஊர்களில் எங்களை உள்ளே விடுகிறார்கள்.

மூன்று வாரங்களுக்கு முன்பு காரமடை வெள்ளியங்காடு உள்ள இருளர் காலனிக்குள்ளும், அதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு பழங்குடி கிராமத்திற்குள்ளும் நாங்களே போக முடியவில்லை. இந்த ஊரில் இரண்டு பக்கமும் தடுப்புப் போட்டிருக்கிறார்கள். அங்கே போகும்போது ஆட்கள் வந்து தடுத்துவிட்டார்கள். பிறகு பஞ்சாயத்துத் தலைவர் பேசினார். ‘நாங்க எல்லாமே மொபைல் வண்டில, நர்ஸ், டெக்னீசியன்தான் வர்றோம். கோவை மாவட்டத்தில் இது வழக்கமா நடந்துட்டிருக்கு!’ என்று ஆயிரம் பதில்களை வாங்கிக்கொண்டுதான் விட்டார்கள்!’’ என்கிறார் தூவைப்பதி பாலன்.

80 பேருக்குத் தாலசீமியா

நாவாவிலிருந்து வருபவர்கள் சிக்கிள் செல் அனீமியா நோயை மட்டுமே பார்ப்பதில்லை. தாலசீமியா நோய் இங்கே எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்பதையும் கவனித்து அறிக்கை அனுப்புகிறார்கள். தற்போது 80 பேருக்கு இதன் அறிகுறி இருப்பதாக மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் குழந்தைகள் மூலம் அறிக்கைகள் எடுத்துக் கொடுத்திருக்கிறார்களாம். இப்போது அந்தக் குழந்தைகளுடைய குடும்பத்துக்குள்ளேயே (அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சகோதர, சகோதரி) இது எந்த அளவுக்கு இருக்கிறது என்று ஸ்கிரீன் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாலன் மேலும் கூறும்போது, ‘‘தாலசீமியா ரத்த மாதிரி எடுத்து அறிக்கை கொண்டுபோய் அரசு பொது மருத்துவமனையில் கொடுக்க வேண்டும். கரோனா வந்த பிறகு காட்டுக்குள்ளே நிறைய பிரச்சினைகள். அவர்களுக்கு உணவே இல்லை. காட்டுக்குள்ளே போய் நூரே கிழங்கு தோண்டி வந்து சாப்பிடுகிறார்கள். எங்களையே சந்திக்கத் தயங்குகிறார்கள். வெளியிலிருந்து யார் வந்தாலும் கரோனாவுடன் வந்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறார்கள். இந்த நிலையிலும் ஒவ்வொரு கிராமத்திலும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று விழிப்புணர்வு ஊட்டுகிறோம். அப்படி வீரபாண்டி பஞ்சாயத்தில் மட்டும் 100 பேருக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறோம்!’’ என்று பாலன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x