Published : 14 Jul 2021 09:21 AM
Last Updated : 14 Jul 2021 09:21 AM

எம்.எஸ்.வி. - இசை கேட்டால் புவி அசைந்தாடும்

லாரன்ஸ் விஜயன்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு தினம்:

பாட்டு... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசந்தம். ராஜவீதிகளில் வலம்வரும் தேவதைகளின் தெவிட்டாத ஊர்வலம். உடற்கூட்டுக்குள் சிறகடிக்கும் உயிர்ப் பறவை. சிட்டுக்குருவியைப் போல துன்பங்களிலிருந்து விட்டு விடுதலையாகும் சுக அனுபவம்.

தாயின் கருவறையிலிருந்து, புது உலகுக்குப் புறப்படும் குழந்தையின் முதல் அழுகை. பாப்பா பாட்டு, கண்மூட தாலாட்டு. கண்விழிக்க திருப்பள்ளி எழுச்சி. இங்கு எல்லாவற்றுக்குமே பாட்டுதான். அதைக் கேட்டுத்தான் ரத்த நாளங்களில் வாடகை ஏதுமில்லாமல் ரசிப்புத்தன்மை குடியேறிவிடுகிறது.

தமிழ் சினிமா, பாட்டுகளால் வளர்ந்தது, வளமானது, செவிக்கு நலமானது. பாட்டுகள் இல்லாத தமிழ் சினிமாவை எள்ளளவு கூட கற்பனை செய்து பார்க்க முடியாது.

தமிழ் சினிமாவின் இசை வரலாறு எம்.கே.டி., பி.யு. சின்னப்பா, சுப்பராமன், ஜி.ராமநாதன், டி.ஜி. லிங்கப்பா, சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல மேதைகளால் எழுதப்பட்டாலும், கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில், அந்த இசை வரலாற்றின் ஒரு பெயரை உச்சரிக்கும்போதே, உணர்வுகளை சிலிர்க்க வைத்தது. நாடி நரம்புகளை களி நடனம் புரியவைத்தது. இசை என்றால் இவ்வளவு இனிமையாக இருக்குமா? என புது விளக்கம் ஒன்றை, உரையாக எழுதியது.

அந்த இசை வரலாற்றின் இனிப்பான பெயர்தான் "எம்.எஸ்.வி". மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற நீண்ட இசையின், மென்மைகூட்டிய சுருக்கமான மெல்லிசைதான் எம்.எஸ்.வி.

சேர நாட்டிளம் பெண்களுடனே என மகாகவியால் மகிழ்ந்துரைக்கப்பட்ட கேரள மாநிலம். பாரம்பரிய இசைக்கு பேர்போன பாலக்காடு. அதன் அருகேயுள்ள எலப்பள்ளி கிராமம்.

இங்குதான், 1932-ம் ஆண்டு "எம்.எஸ். விஸ்வநாதன்" என்ற இசைப்பறவை கருவிலிருந்து உருவம் பெற்றது. எம்.எஸ்.வி. என்ற அந்தக் குழந்தையின் முதல் அழுகை கூட நிச்சயம் சங்கீதமாகத்தான் இருந்திருக்கும். மூன்றரை வயதில் தந்தையை இழந்த எம்.எஸ்.வி., தாயின் அன்பிலும், தாய் வழி தாத்தா கிருஷ்ணன் நாயர் அரவணைப்பிலும் வளர்ந்தார். கண்ணனூருக்கு மாற்றம் செய்யப்பட்ட கிருஷ்ணன் நாயரோடு, அங்கே சென்ற எம்.எஸ்.வி.க்கு, இசை மீது தவிர்க்க முடியாத பற்று. 3 ரூபாய் கொடுத்து இசைப் பள்ளியில் சேரமுடியாததால், இசைப்பள்ளியின் ஆசிரியர் நீலகண்ட பாகவதருக்கு எடுபுடி வேலைகள் செய்து, இசையின் அகரம் அறிந்துகொண்டார் எம்.எஸ்.வி. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் எம்.எஸ்.வி. வளர, இசையும் அவரிடம், அவரை விட வேகமாக வளர்ந்தது.

ஜூபிடர் பிக்சர்ஸ்... தமிழ் சினிமாவின் ஆலமரம். இங்கு S.V. வெங்கட்ராமன், வரதராஜூலு, எஸ்.எம். சுப்பையா நாயுடு உள்ளிட்ட பல இசைக்கூடுகள் சுவாசித்தன. இந்த இசையை, ரசிகர்களின் மனங்கள் நேசித்தன. எம்.எஸ்.வியின் தாய் மாமன் ஜூபிடர் பிக்சர்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், எம்.எஸ்.விக்கு அங்கு வேலை கிடைத்தது. S.M. சுப்பையா நாயுடுவிடம், இசை உதவியாளனாய் சேர்ந்தார் எம்.எஸ்.வி. படிப்படியாகத்தான் வளர்ச்சி, ஆனால் எல்லாப் படிகளிலும் முன்னேறிவிட முடியாமல் எம்.எஸ்.விக்கு எத்தனையோ தளர்ச்சி. என்ன செய்வது, என்னதான் அறிவு, ஆற்றல், அழகு இருந்தாலும், பிருத்திவிராஜன்கள் வரும்வரை சம்யுக்தைகள் காத்துக்கொண்டுதானே இருக்க வேண்டி இருக்கிறது!.

வீர அபிமன்யு என்ற படத்தில், ஒரு பாடலுக்கான மெட்டு, இசை மேதை சுப்பையா நாயுடுவோடு போர் புரிந்துகொண்டிருக்க, சிறுவனான எம்.எஸ்.வி. யாருக்கும் தெரியாமல், அழகான மெட்டொன்றை வாசித்துக் காட்ட, மெய்சிலிர்த்த சுப்பையா நாயுடு, அந்த மெட்டைத் தன்னுடையது என இயக்குநரிடம் கொண்டுபோய் சேர்க்க, இது அற்புதம் என்று புகழப்பட்டு, அந்தப் பாடல் வெளியானது. முதல் முதலாக மெட்டு அமைத்தாலும், எம்.எஸ்.வி. பெயர் வராததால் ஏமாற்றம். தான் பெற்ற பிள்ளையை, வேறு ஒருவர் உரிமை கொண்டாடினால், உடைந்து போகாதா மனது. பரவாயில்லை. திறமைசாலிகள் துவண்டு விடமாட்டார்கள். எம்.எஸ்.வி துவளவில்லை. ஒரு வழியாக பல போராட்டங்களுக்குப் பிறகு, சென்னையில் இசையமைப்பாளர் C.R. சுப்பராமனிடம் உதவியாளனாய்ச் சேர்ந்து, எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த "ஜெனோவா" படத்திற்கு, இசையமைப்பாளர் வாய்ப்பு எம்.எஸ்.விக்குக் கிடைத்தது. நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில், முதன்முதலாய் எம்.எஸ்.விக்கு ஒரு வசந்தம் அறிமுகமானது. இதில் சிறப்பாகப் பாடல்கள் அமைத்திருந்தார் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.வியின் இசை அமைக்கும் வேகம், தயாரிப்பாளர்களை அவர் பக்கம் திருப்பியது. இயக்குநர்கள் விரும்பும் மெட்டுகளை, எம்.எஸ்.வி.யின் ஹார்மோனியப் பெட்டி அடைகாத்து வைத்திருந்தது. அவர்களின் விருப்பங்களை எல்லாம் அது நிறைவேற்றிக் கொடுத்தது.

இசையமைப்பாளர் சுப்பராமனிடம் மற்றொரு உதவியாளரான ராமமூர்த்தியிடம், எம்.எஸ்.விக்கு எப்போதுமே ஒரு மரியாதை. அபாரமாக வயலின் வாசிக்கும் திறமைகொண்ட ராமமூர்த்தி, எம்.எஸ்.வியிடம் இணைய, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை, தமிழ் சினிமாவின் இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட வைத்தது. 1960-களில் இவர்களின் இசை ஆதிக்கத்தில், கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்கள் கவலை மறந்தனர். களிப்பில் ஆழ்ந்தனர்.

மூத்தவரான ராமமூர்த்தி பெயரை வைக்க வேண்டும் என விரும்பிய விஸ்வநாதன், ராமமூர்த்தி-விஸ்வநாதன் என்று சொல்ல, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ, நீ சின்ன பையன், நீ விழுந்தாலும் மூத்தவரான ராமமூர்த்தி உன்னைத் தாங்கிப் பிடிப்பார் என்று சொல்லி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்ற பெயரை, அவர்களுக்குச் சூட்ட, இந்த இரட்டையர்களுக்கு, தமிழ் ரசிகர்கள் மகுடம் சூட்டி மகிழ்ந்தனர். இந்த இரட்டையர்களின் மெல்லிசையில், தமிழ் சினிமா இசை தன்னைத்தானே மேலும் அழகுபடுத்திக்கொண்டது.

மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகில், இரட்டையர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்திக்கு, மாறுபாடுகள் வந்தன. பிரிவு என்ற கொடுமையை, அவர்களுக்குத் தந்தது. மெல்லிசை மன்னர்கள் பிரிந்து, மெல்லிசை மன்னராக எம்.எஸ்.வி. ஆனார். அவரது சிந்தை முழுவதும் பரவியிருந்த சினிமா இசை, சினிமாவில் பல மெல்லிசை உருவாகக் காரணமாக இருந்தது.

தென்றலின் கைபிடித்து, நந்தவனத்துக்குள் நடந்து சென்று, மலர்களை மார்போடு தழுவி, பச்சை சட்டை போட்டுக்கொண்ட இலைகளோடு இழைந்து இயற்கையின் எழிலை ரசிப்பது எவ்வளவு சுகம். அந்த சுக அனுபவத்தை தந்தது எம்.எஸ்.வியின் பல பாடல்கள்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினி, கமல் என எத்தனையோ கதாநாயகர்களின் படங்களுக்கு எழுதப்பட்டிருந்த வெற்றியின் முகவரியில், எம்.எஸ்.வி.யின் பெயர் பிரதான இடம் பெற்றிருந்தது.

சந்தம் பெரிதா? பாடல் பெரிதா? எல்லாம் சந்தங்களுக்கும் பாடல் எழுத முடியுமா? மெல்லிசை மன்னருக்கும், திரையுலகல் கம்பன் கண்ணதாசனுக்கும் ஒரு போட்டி. ஆனால் இந்தப், போட்டியில் உண்மையான வெற்றி ரசிகர்களுக்குத்தான். அந்தப் பாடல்தான் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் வரும் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' என்ற பாடல்.

தமிழ் சினிமா இசை வரலாற்றில், அமர்க்களமான அத்தியாயமாகத் திகழ்ந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் சினிமா இசையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கலந்திருக்கும் எம்.எஸ்.வி. என்ற இசைத்தொகுப்பு, 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி, இயற்கையின் விதிப்படி இயற்கை எய்தியது. ஆனால், அந்த இசைத்தொகுப்பு ஏதோ ஒரு வடிவில் ராகமாய், தாளமாய், லயமாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். காற்றில்லாத உலகைக் கற்பனை செய்து காண இயலுமா? எம்.எஸ்.வியின் பாட்டு இல்லாத பொழுதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? எம்.எஸ்.வி. காற்று... உயிருள்ளவரை தமிழர்கள் அதை சுவாசித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.

கட்டுரையாளர்: லாரன்ஸ் விஜயன்,
மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: vijayanlawrence64@gmail.com.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x