Published : 12 Jul 2021 09:39 AM
Last Updated : 12 Jul 2021 09:39 AM

திரைப்படச்சோலை 48: பாசப்பறவைகள்

சிவகுமார்

1987 -நவம்பர் 18-ந்தேதி பூம்புகார் புரொடக்சன்ஸ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன். கலைஞர் அவர்களின் சகோதரிகளின் பிள்ளைகள் அமிர்தம், முரசொலி செல்வம் தயாரிக்கும் படம் இது.

அமிர்தம் எம்.ஜி.ஆர், சிவாஜியின் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர். டைரக்டர் ராமண்ணாவின் பல படங்களுக்கு காமிராமேன்.

என்னுடைய பத்து வயதில் கலைஞர் அவர்கள் முகம் அறிமுகமில்லாத காலத்திலேயே அவரது நெருப்புப் பொறி வசனங்களை ‘பராசக்தி’ படத்தில் கேட்டு அவரது ஆதர்ச ரசிகனான நான் திரைப்படத்துறையில் நுழைந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பை இந்தப் படத்தில் பெற்றேன்.

‘மூன்று மாதங்களுக்கு முன்னால்’ - என்ற பெயரில் கொச்சின் ஹனீஃபா மலையாளத்தில் எடுத்த வெற்றிப் படத்தை தமிழில் இப்போது பாசப்பறவைகள் என்ற பெயரில் அவரே இயக்குகிறார். திரைக்கதை- வசனம் கலைஞர் அவர்கள். ஒளிப்பதிவு புகழ்பெற்ற அந்நாளைய ஒளிப்பதிவு மேதை வின்சென்ட்டின் இளைய மகன் அஜயன் வின்சென்ட். இசை இளையராஜா.

கதாநாயகன் சுகுமார் (சிவகுமார்) ஒரு டாக்டர். அவர் மனைவி ஆனந்தி (லட்சுமி) ஒரு வழக்கிறஞர். சுகுமாரின் தங்கை உமாவை (ராதிகா) பாசத்துடன் வளர்த்து வக்கீலாக, உயர்த்திய அண்ணன் டாக்டர் சங்கருக்கு (மோகன்) திருமணம் செய்து வைக்கிறார். தங்கை உமா மேல் அவனுக்கு அளவற்ற பாசம் இருக்கக்காரணம், உமா பிறந்தபோதே அம்மா இறந்து விடுகிறாள். பெற்றோரில்லாத பெண் குழந்தைக்கு தாயும், தகப்பனுமாக இருந்து ஆகஸ்ட் 19-ந்தேதி இரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் தங்கையை தேடி வந்து பிறந்தநாள் பரிசு கொடுத்து வாழ்த்துவான்.

வெளிநாட்டில் மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர் சுகுமாரும், சங்கரும்.இண்டர்வியூவுக்கு பெங்களூருக்கு இரண்டு பேரும் புறப்பட இருந்த சமயம். இறந்து போன ஒரு பெண்ணின் சடலம் போஸ்ட் மார்ட்டத்திற்கு வருகிறது. அதைப் பார்த்து சங்கர் திடுக்கிட்டான். ஆகவே பெங்களூர் இண்டர்வியூவுக்கு சுகுமாரை அனுப்பி விட்டு சென்னையிலேயே தங்கி இருந்தான். பெங்களூர் இண்டர்வியூவுக்கு சுகுமார் சென்றிருந்த நேரத்தில் ஒரு கார் விபத்தில் சங்கர் அகால மரணமடைகிறான்.

அண்ணனுக்கேற்ற அண்ணி

சுகுமாரால் மருத்துவமனையில் அவமானப்படுத்தப்பட்ட ஒரு டாக்டர் அவரைப் பழிவாங்க முடிவு செய்து, சங்கர் கார் விபத்தில் எதிர்பாராமல் சாகவில்லை -அது திட்டமிட்ட சதி. அந்த சதித் திட்டத்தை தீட்டியவர் உமாவின் அண்ணன் டாக்டர் சுகுமார்தான் என்று சங்கரின் அப்பாவையும், உமாவையும் நம்ப வைக்க காட்சிகளை செட்டப் செய்து விடுகிறான்.

ஆரம்பத்தில் அண்ணன் மீது யாரோ வீண்பழி சுமத்த இப்படி வேலை செய்கிறார்கள் என்று நினைத்த உமா, ஒரு கட்டத்தில் தன் கணவர் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க இருந்த வாய்ப்பை தட்டிப் பறிக்க அண்ணன் இந்த வேலை செய்திருக்கிறார் என்று நம்ப ஆரம்பித்து விடுகிறாள்.

விளைவு. அண்ணனையும், அண்ணியையும் ஜென்மப் பகைவர்களாக நினைத்து, அண்ணன் மீது கொலைக்குற்றம் சுமத்தி உமா நீதிமன்றத்தில் வாதாட ஆரம்பித்து விடுகிறாள்.

திட்டமிட்டே காரின் ‘பிரேக் லைனை’த் துண்டித்து விட்டு அதைத் தன் கணவர் ஓட்டிச் செல்ல வற்புறுத்தி அவரைச் சாகடித்து விட்டார் என்று வாதாடுகிறாள்.

இதற்கு சாட்சியாக வீட்டு வேலைக்காரனைப் பயன்படுத்தி இண்டர்வியூவுக்கு அண்ணன் பெங்களூர் போவதாகப் பொய் சொல்லி விட்டு ஊரிலேயே இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார் என்று மேலும் ஒரு ஆதாரத்தை வைத்து ஸ்ட்ராங்காக வாதாடுகிறாள்.

பெங்களூர் செல்லும் விமானத்தில் அன்று மாலையோ, மறுநாள் காலையோ அவர் பயணம் செய்ததற்கான பயணக்குறிப்பு சீட்டில் அவர் பெயர் இல்லை என்பதை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் விளக்கினாள் உமா.

இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வழியில்லாமல் எப்படியும் சுகுமார் தண்டிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அந்தச் சமயத்தில் மனைவி ஆனந்தியிடம் (லட்சுமி) ஒரு ரகசியத்தை வெளியிடுகிறான் சுகுமார்.

நீடூழி வாழ்க

அதாவது கல்லூரியில் சங்கர் (மோகன்) படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணுடன் அவருக்கு காதல் இருந்துள்ளது. ஆனால் அந்தப் பெண் முழுமையாக அவரைக்காதலிக்கவில்லை. வேறொரு லாரி ஓனருடன் அந்தப் பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண் கருவுறுகிறாள். வஞ்சகனான அந்த லாரி ஓனர் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு சங்கர்தான் காரணம் என்று குற்றம்சாட்டி, லட்சக்கணக்கில் சங்கரிடம் பணம் பிடுங்க ஆரம்பித்து விடுகிறான். கேட்கும் பணம் சங்கர் தரமுடியாத போது அவரை மிரட்டி வந்திருக்கிறான்.

தற்கொலை செய்து கொண்ட அந்தப் பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவள் கருவற்றிருப்பது தெரிய வருகிறது. இதையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, உடனடியாக ஒன்றரை லட்சம் பணம் தராவிட்டால் சங்கரும் அந்தப் பெண்ணும் உள்ள புகைப்படத்தையும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டையும் போலீஸில் கொடுத்து உன் மானத்தை வாங்குவேன்; இல்லாவிடில் லாரி ஏற்றி உன்னைக் கொன்று விடுவேன்!’ என்கிறான் லாரி ஓனர்.

கடைசியாக லாரி ஓனர் சங்கரை எச்சரிக்கை செய்ததை தன் கண்ணால் பார்த்தேன் என்று மனைவி ஆனந்தியிடம் சுகுமார் கூறுகிறார்.

இப்போது நீதிமன்றத்தில் ஆனந்தி வாதிடும் போது சங்கருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்த விஷயம் அந்தப் பெண் கருவுற்றது, லாரி டிரைவர் மிரட்டியது போன்றவற்றை எடுத்துச் சொல்கிறாள்.

ஆனால் உமாவோ, இறந்து போன தன் கணவருக்கு அவப் பெயரைத் தேடித்தர, புனையப்பட்ட கட்டுக்கதைதான் இது என்று ஆனந்தியின் வாதத்தை ஏற்க மறுக்கிறாள்.

ஒரு கட்டத்தில் லாரி ஓனரை கோர்ட்டுக்கு அழைத்து வந்தால் சுகுமார் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலை வரும்போது ஆனந்தி, ‘என்னங்க. எப்படியாவது அந்த லாரி டிரைவரை இங்க கூட்டிட்டு வந்திருங்க. நிச்சயம் நீங்க விடுதலையாயிருவீங்க!’ என்று சுகுமாரிடம் வேண்டுகிறாள்.

ஆனால் சுகுமார், லாரி டிரைவர் வரமாட்டான். அவன் இப்போது உயிருடன் இல்லை. சங்கரை லாரியில் அடித்துக் கொன்ற லாரி டிரைவரை நான் கொலை செய்து விட்டேன்!’ என்று வாக்குமூலம் கொடுக்கிறான்.

நீதிமன்றத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. தன்னை விதவையாக்க, தன் குழந்யைின் அப்பாவைக் கொல்ல, உடன் பிறந்த தன் அண்ணனே திட்டம் தீட்டினான் என்று நீதிமன்றத்தில் மூர்க்கத்தனமாக வாதாடிய உமா, அண்ணனின் தியாகச்செயலை உணர்ந்து அவன் காலில் விழுந்து கண்ணீரால் அண்ணன் பாதத்தைக் கழுவுகிறாள்.

நீயா நானா

பாசமும், திகிலும், விறுவிறுப்பும் உள்ள இந்த கதைக்கு வசனம் எழுதிய கலைஞர் ஹனிஃபாவை அழைத்து, ‘விருப்பம் போல் வசனங்களை குறைத்துக் கொள்ளலாம்!’ என்றார்.

காலமாற்றம், ரசிகரின் ரசனை மாற்றத்தை நன்கு உணர்ந்து வைத்துள்ள கலைஞர் அவர்கள் மனோகரா, பராசக்தி மாதிரி பக்கம் பக்கமாக வசனங்களை எழுதி குவிக்காமல், நறுக்கென்று பத்து வரிகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை எழுதிக் கொடுத்தார்.

ஹனீஃபா அந்த பத்து வரிகளை இன்னும் சுருக்கி,. நாலே வரிகளில் நச்சென்று சொல்ல வேண்டிய கருத்தை சொல்லி நடிகர்களிடம் வேலை வாங்கினார்.

படம் 100 நாட்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக ஓடியது. உட்லண்ட்ஸ் ஓட்டலில் விழா கொண்டாடப்பட்டது. 1988 ஆகஸ்ட் 13-ந்தேதி நடந்த அந்த விழாவில் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்க முக்தா சீனிவாசன், பாரதிராஜா, வைரமுத்து, ஆர்.சி.சக்தி, ராமநாராயணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

1988 ஜூன் 17-ந்தேதி பாசப்பறவைகள் 50-வது நாள் திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டரில் நடைபெற்றது. கட்டுக்கடங்காமல் கூட்டம் என்றதால் தியேட்டருக்கு முன்னால் தெரு முழுக்க ரசிகர்கள் நின்று பார்க்கும் வண்ணம் மேடை அமைத்திருந்தனர்.

நிகழ்ச்சியின் ஹைலைட் - பராசக்தி, மனோகரா வசனம் எழுதிய கலைஞர் நம் படத்துக்கு வசனம் எழுதுவார். நாமும் மூச்சு முட்ட வசனம் பேசி இந்தப்படத்தில் நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கலைஞர் அவர்கள் திருக்குறள் போல சுருக்கி எழுதிக் கொடுத்து விட்டார்.

என் ஏக்கத்தைப் போக்க இந்த மேடையில் 1954-ல் ராஜாராணி படத்தில் வந்த ‘சேரன் செங்குட்டுவன்’ -ஓரங்க நாடக வசனத்தை உங்கள் அனைவர் முன்னிலையில் பேசுகிறேன் என்று சுமார் 5 நிமிடம் மூச்சுவிடாமல் பேசி கைதட்டல் பெற்றேன்.

பழிக்குப்பழி

அமைதியாக அதுவரை இருந்த கலைஞர், சிவகுமார் 34 வருஷம் முன்பு படத்தில் வந்த வசனத்தை அழகாக பேசினார். நான் அதற்கும் முன்னால் பரப்பிரம்மம் - என்ற நாடகத்தில் சிவாஜி பேசி நடிக்க எழுதிய வசனத்தை இப்போது பேசிக்காட்டுகிறேன் என்று சொல்லி, 64 வயதில் குடிசைதான் ஒரு புறத்தில்’ - என்ற புறநானூற்று தாயின் பெருமை சொல்லும் வசனத்தை 5 நிமிடம் தடங்கல் இல்லாமல் பேசி விண்ணதிரக் கைதட்டல் பெற்றார்.

நான் பொய்யாகக் கோபித்துக் கொண்டு -எனக்குப் போட்டியாக ஏன் இப்படி செய்தீர்கள் என்றேன். 1952-களில் சிவாஜிக்கு இந்த சில வசனத்தை மேடையில் சொல்லிக் கொடுத்தபோது மனப்பாடம் ஆகி விட்டது என்றார்.

அந்த மேடையில் ‘செந்தமிழ் கலைச்சுடர்’ என்று எனக்கு பட்டமளித்தார். அடுத்த படம் பாடாத தேனீக்கள் டைட்டிலிலேயே இந்தப் பட்டம் இடம் பெற்றுள்ளது.

கலைஞர் எங்கள் இல்லத்தில்

பொதுவாக இது போன்ற அடைமொழியை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதில்லை என்பதால் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதே ஆண்டு 1988, நவம்பர் 14-ந்தேதி, கலைஞர் அவர்கள் கனிமொழி, ராசாத்தி அம்மாளுடன் எங்கள் இல்லம் வந்து ஒன்றரை மணி நேரம் என் ஓவியங்களைப் பார்த்து ரசித்தது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.

--

அனுபவிப்போம்
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x