Published : 09 Jul 2021 10:48 AM
Last Updated : 09 Jul 2021 10:48 AM

இயக்‍குநர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்த நாள்: வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்!

லாரன்ஸ் விஜயன் 

தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி தன் சிந்தனையில் கரு தாங்கி, பெற்ற குழந்தைதான் சினிமா. கைக்குழந்தையாய் தவழ்ந்த சினிமாவை, பேசாத படமாக கை, கால் முளைக்க வைத்து, பின்னர் பேசும் படமாக வளர்த்தது விஞ்ஞானம். தாமஸ் ஆல்வா எடிசன்தான் சினிமாவுக்குத் தாயும், தந்தையுமான தாயுமானவர். தாயுமானவர்களில் முக்‍கியமான மாணவர் உண்டு. கே.பி. என்று அழைக்கப்படும் கே.பாலசந்தர் இந்தத் தாயின் மாணவர்களில் ஒருவர். அதுவும் தலைசிறந்த மாணவர்.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், தற்போது திருவாரூரில் உள்ள நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடிதான் பாலசந்தரின் பிறப்பிடம். தந்தை கைலாசம் - தாயார் காமாட்சியம்மாள், தந்தைக்‍கு கிராம முன்சீப் பணி. சரளமாக ஆங்கிலம் பேசுவார். அவருடைய சிரத்தை, அர்ப்பணிப்பு உணர்வு போன்ற சிறந்த குணங்கள் அப்பாவிடமிருந்து, பாலசந்தரை அப்பிக்‍கொண்டது.

தாயார் காமாட்சியம்மாள். வாழ்நாளில் பெரும் பகுதி எத்தனையோ துன்பங்களை அனுபவித்த அம்மாவின் வசந்தகாலம் என்பது, பாலசந்தருடன் சென்னையில் அவர் இருந்த நாட்கள்தான். பாலசந்தருக்‍கு நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலை பல்கலைக்‍கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் பட்டம். நன்னிலத்தில் பிறந்ததாலோ, என்னவோ, நல்ல விதையாக உருவாகி, கலை வயல்களில் விதைக்கப்பட்டார். நல்ல விதையானதால், அறுவடையும் அமோகமாக இருந்தது. அது ரசிகர்களுக்கு அறுசுவையாய் அமைந்தது.

எந்தக் கலை வடிவமும் மக்‍களைச் சென்றடைய வேண்டுமானால் அது மக்‍களின் மொழியில் இருக்‍க வேண்டும். துணியில் பொத்தி வைத்திருந்தாலும், துளிர்விடும் மல்லிகையின் மணத்தைப்போல கலை எந்த வடிவில் இருந்தாலும் தன்னை கம்பீரமாய் வெளிப்படுத்திக்‍ கொள்ள வேண்டும். இயல், இசை, கூத்து என்ற முத்தமிழில், முதலிடத்தில் இயல் இருந்தாலும், மொழி தோன்றுவதற்கு முன் சைகையால் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் முறை இருந்ததால், இந்த உலகில் முதன் முதலாக நாடகக் கலைதான் தோன்றியிருக்‍க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது.

நாடகங்கள், நாட்டுப்பற்றை வளர்த்தன. நாடகங்கள், பாட்டு சொல்லிக்‍ கொடுத்தன. நாடகங்கள், நடனக்‍ கலையை வளர்த்தன. ஆரம்பக்கால நாடக மேடைகள், வறுமைக்‍கு வாழ்க்‍கைப்பட்ட கலைஞனின் மூன்று நேரப் பட்டினியை ஒருபொழுதாகக் குறைத்தன. அப்படிப்பட்ட நாடகங்கள்தான் சினிமாவின் தாய்வீடு.

சினிமாவின் தாய் வீடான, நாடகம்தான் பாலசந்தர் என்ற கலைஞனுக்‍கும் பிறந்த வீடு. பிறந்த வீட்டில் கற்றுக்கொண்ட பாடங்கள், பெற்ற நெறிமுறைகள், வரைமுறைகள், வழிமுறைகள்தான் புகுந்த வீடெனும் சினிமாவில் அவரை மெச்சத்தகுந்த கலைமகனாக்கியது.

நாடகங்கள் எனும் தாய்வீட்டிலிருந்து வந்ததால், பாலசந்தரின் ஆரம்பக் கால படங்களில் நாடகத்தின் சாயல் தெரிந்தது, தாயிடம் பால்குடித்து முடித்த குழந்தை வாயில் பால்வாசம் வீசுவதுபோல். பின்னர் கற்றுத்தேர்ந்த ஒரு மேதையைப்போல திரைப்படங்களை அவர் கையாண்ட விதம் எந்தப் பாடசாலையோ, பல்கலைக்‍கழகமோ பயிற்றுவிக்‍காத கலையாய் ஒளிர்ந்தது.

சென்னை ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் மத்திய அரசு பணியில் இருந்த பாலசந்தருக்‍கு இருந்த கலை தாகத்தை நாடகங்கள் ஓரளவு தணித்தன. தொடர்ச்சியாக நாடகங்கள் நடத்தினார். பின்னாளில், திரைத்துறையில் பிரபலங்களாக மின்னியவர்கள் எல்லாம் அவரால் நாடகத்தில் வார்க்‍கப்பட்டவர்கள். பிரபல நடிகர்கள் ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ் போன்றவர்கள் எல்லாம் பாலசந்தரின் நாடகங்களில் மேடை ஏறியவர்கள் என்பதை மேற்கோள் காட்டாமல் இருக்‍க முடியாது.

'மேஜர் சந்திரகாந்த்', நடிகை ஜெயலலிதாவை வைத்து பாலசந்தர் இயக்‍கிய ஒரே படம்.

நாடகங்கள் நடத்திக்‍ கொண்டிருந்தாலும் சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசை பரவிக்‍கிடந்தது, பாலசந்தரின் மனசு முழுவதும். நரம்புகளில் ஓடிக்‍கொண்டிருக்‍கும் குருதியைப்போல. சின்ன வயதில் ரசித்த ஒரு காட்சி.

''என்னாது நெத்தியில் நாமம்''
''அது பெருமாள் பாதமுங்க''

''அப்ப, பெருமாள் நெத்தியில இருக்‍குதே, அது என்னா''

அவருக்‍கே உரிய கீச்சுக்‍ குரலில் இந்தக்‍ கேள்வியைக்‍ கேட்டதும், எதிரே நின்றவர் வாயடைத்துப் போனார். ஆனால், நாடகக்‍ கொட்டகை அதிர்ந்தது.

அவர்தான் நடிகவேள் எம்.ஆர். ராதா.

எம்.ஆர்.ராதாதான் பாலசந்தருக்‍கு பெரிய உந்துசக்‍தி. 12 வயதில் பள்ளிக்‍கூடத்தில் மாறுவேடப் போட்டி. விக்‍டர் ​ஹ்யூகோவின் ''The Hunchback of Notre Dame'' நாவலிலிருந்து ஒரு சித்தரிப்பைக்‍ காட்டி முதல் பரிசு வாங்கினார் பாலசந்தர். அதுவே அவர் வாங்கிய முதல் பரிசு. பின்னாளில் பல பரிசுகள் வாங்க இந்த முதல் பரிசுதான், முதல்படி. செயலில் ஒழுக்‍கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, நூறு சதவீதம் தயார் நிலை, ஒருமுகப்பட்ட கவனம். இதுதான் கே.பி. என்று அழைக்‍கப்படும் கே.பாலசந்தர்.

நாடகங்கள் நடத்திக்‍கொண்டு சினிமா தாகத்தில் தவித்துக்‍ கொண்டிருந்த பாலசந்தருக்‍கு முன்பணம் கொடுத்து முதன் முதலாகத் திரைத்துறைக்‍கு அறிமுகப்படுத்தியவர் இராம. வீரப்பன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இணைந்து நடித்த 'தெய்வத்தாய்' என்ற திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக வரப்பெற்றார், வரம்பெற்றார்.

எம்.ஜி.ஆர். என்ற மிகப்பெரிய மக்கள் சக்தியின் ஃபார்முலா பாதிக்கப்படாமல், ஆனால் அதேசமயம் தன் அறிவின் அகலத்தையும் குறைத்துக்கொள்ளாமல், வசனங்களைத் தீட்டினார் பாலசந்தர். படம் வெற்றி பெற்றது. தமிழ்த் திரையுலகம் சிறந்த வசனகர்த்தாவைப் பெற்றுக்கொண்டது. பின்னாளில் தலைசிறந்த இயக்குநராக கம்பீரமாக வலம்வர "தெய்வத்தாய்" ஆசிர்வாதம் அளித்தார். பின்னர் 'நீலவானம்' என்றொரு திரைப்படத்திற்கு பாலசந்தர் வசனம் எழுதினார். மாதவன் இயக்‍கத்தில் வெளியான அந்தப் படமும் வெற்றி பெற்றது.

புகழைத் தலையிலும், விமர்சனத்தை நெஞ்சிலும் சுமப்பவர் அல்ல கே.பி. துக்‍ளக்‍ பத்திரிகை அவரது 'பத்தாம் பசலி' படத்தைத் தீவிரமாக விமர்சித்து இயக்‍குநரின் பதிலையும் கேட்டிருந்தது. ஒரே வரியில் பதில் எழுதினார் கே.பி, 'I PLEAD GUILTY' என்று.

நாடகப் படிக்‍கட்டுகளில் வேகமாக ஏறி சினிமா என்ற மாடியை அடைய சிரமங்கள் பட்டாலும், பாலசந்தரின் தகுதி, திறமை, சினிமாவையும் ஒரு கை பார்க்‍க வைத்தது. பாலசந்தரின் முதல் படம், பகுத்தறிவு பேசிவிட்டு, படியேறி சாமி கும்பிடும் பகல் வேடக்‍காரர்களுக்‍கு சம்மட்டி அடி கொடுத்தது.

முதல் வசனம் நல்ல வார்த்தைகளில் வரவேண்டும். படத்தின் பெயர் 8 எழுத்துகளில் வந்துவிடக்‍கூடாது என சகுனங்களுக்‍கு சல்யூட் அடிக்‍கிற சினிமா உலகில், தான் முதன்முதலாக இயக்‍கிய படத்திற்கு கே.பி. வைத்த பெயர் 'நீர்க்குமிழி'. அதில் தொடங்கிய அவரது திரையுலக வாழ்வு, நாளடைவில் நயாகரா நீர்வீழ்ச்சியாய் பலரையும் பரபரப்பாக பார்க்‍க வைத்தது. கலையுலகில் கற்பனை வறட்சியாளர்கள் ஒருசிலர் வலம் வந்த காலத்தில், கம்பீரப் புரட்சியாளராகத் திகழ்ந்தார் பாலசந்தர்.

'நீர்க்குமிழி' படத்தில் மட்டுமல்ல, பாடலிலும் புரட்சி செய்தது. வாழ்க்கையின் நிலையாமையை நிலைகுலையாமல் சொன்னது.

பின்பு 'எதிர்நீச்சல்', 'நவக்‍கிரகம்' என்ற நாடகங்கள் எல்லாம் பாலசந்தரின் கற்பனை வளத்தில் சினிமா என்ற செல்லுலாய்டில் செதுக்‍கிய சிற்பங்களாய் மிளிர்ந்தன.

'காவியத்தலைவி' என்றொரு படம். 1963-ம் ஆண்டு வங்க மொழியில் உருவான 'Uttar Falguni' என்ற படத்தின் தழுவல். நடிகை சவுகார் ஜானகி தயாரித்த படம். ஜெமினி கணேசனுக்‍கு, தமிழகத்தின் சிறந்த நடிகருக்‍கான மாநில விருதை கிடைக்‍கச் செய்த படம். இந்தப் படத்தை பாலசந்தர்தான் இயக்‍கியிருந்தார். அந்தப் படத்தில் ஒரு பாடல். பெண்ணின் உணர்வை வார்த்தைகளில் வடித்திருப்பார் கவியரசு கண்ணதாசன்.

சுயநல இச்சைகளால் சூறையாடப்பட்ட பெண் குலத்தில் தோன்றிய பொன் விளக்‍கு ஒன்று, தன் கல்யாணக்‍ கனவைப் பதிவு செய்யும் பாடல் இது. அவளும் பெண்தானே? பசி, தூக்‍கம், காதல் போன்ற உணர்வுகள் எல்லோருக்‍கும் பொதுதானே? இந்தப் பாடல் சந்தர்ப்பவசத்தால் தவறிப்போகும் பெண் குலத்தின் குறியீடு. முற்போக்‍கு பேசும் இளைஞர்களிடம் வைக்‍கப்படும் முறையீடு.

பெண்ணின் வலியை ஒரு ஆணால் அறிந்துகொள்ள முடியுமா?. ஆனால், கண்ணதாசன் கம்பீரமான ஆண் கவிஞன். அந்தக்‍ கவிஞன், வஞ்சிக்‍கப்பட்ட பெண்ணின் வலியை இப்படிச் சொல்கிறார். பாலசந்தரோ அதை அப்படியே படமாக்‍குகிறார். அந்தப் பாடல்தான் "பெண் பார்த்த மாப்பிள்ளைக்‍குக் கண்ணீரும் தெரியவில்லை" என்ற பாடல்.

கூட்டலும், கூட்டலும் சேர்ந்தால் கூட்டல்தான், கணிதத்தில். ஆனால், நடிகர் திலகம் என்ற கூட்டல் குறியீடும், இயக்‍குநர் சிகரம் என்ற கூட்டல் குறியீடும் ஒரே படத்தில் மட்டும் இணைந்தன. ஆனால், கணித விதியை இந்தப் படம் காப்பாற்றவில்லை. இருபெரு இமயங்களும் சேர்ந்து பணியாற்றிய 'எதிரொலி' ரசிகர்கள் மனங்களில் சரியாக எதிரொலிக்‍கவில்லை.

இதேபோல் பாலசந்தர் இயக்‍கத்தில் தோல்வியைத் தழுவிய மற்றொரு படம் 'நான்கு சுவர்கள்'. 1971-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், வியாபாரத்தில் சறுக்‍கியது. நாலாபக்‍கமும் பரவாமல் நான்கு சுவர்களுக்‍குள் ஒடுங்கியது.

'நூற்றுக்‍கு நூறு' படம், ரசிகர்களிடம் நூற்றுக்‍கு நூறு மதிப்பெண் வாங்கியது. எழுபதுகளில் பாலசந்தர் விஸ்வரூபம் எடுத்தார். தமிழ் சினிமா வழக்‍கமான பாதையைவிட்டு, வேறு வழியில் பயணிக்‍கத் தொடங்கியது. 'இரு கோடுகள்', 'பூவா தலையா?', 'பாமா விஜயம்', 'தாமரைநெஞ்சம்', 'புன்னகை', 'சொல்லத்தான் நினைக்‍கிறேன்', 'அரங்கேற்றம்', 'அவள் ஒரு தொடர்கதை' உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்களின் தரத்தை உயர்த்தின.

பாலசந்தர் படங்களின் நாயகிகள் எல்லோரும் புத்திசாலிகள், சுமைதாங்கிகள், சோகம்தாங்கிகள். ஆனால், சூழ்நிலையை வென்றெடுக்கும் போராளிகள்.

'இருகோடுகள்' ஜானகி, பலவீனமாக இருந்த பெண்களின் மன வயல்களில் தன்னம்பிக்‍கை உரம் தெளித்தாள். குடும்பத்தின் குத்துவிளக்‍காய் ஒளி வீசவேண்டிய 'அரங்கேற்றம்' லலிதாவோ தன் உடலை வருத்தி குடும்பத்துக்‍காகவே குற்றுயிரும், குலை உயிருமாக ஆனாள்.

'அவள் ஒரு தொடர்கதை' கவிதா குடும்பத்தின் சுமை தாங்கிய புத்திசாலி. இயற்கையின் சூழ்ச்சியால், இல்லற வாழ்க்‍கை கனவாய்ப் போன, முதிர்கன்னி. 'அவள் ஒரு தொடர்கதை' கவிதாவை நகல் எடுத்த 'மனதில் உறுதி வேண்டும்' நந்தினி.

பாலசந்தர் படங்களில் தன்னம்பிக்‍கை நாயகிகளின் பட்டியல் நீளும். இந்தக் கதாபாத்திரங்கள் பெண்களின் மனங்களை எப்போதும் ஆளும்.

முக்கோணக் காதல் கதையின் முக்கியக் கதாநாயகனான இளமை இயக்குநர் ஸ்ரீதரைப்போல, பாலசந்தரும் பலரைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்த ஆசான். 50 ஆண்டுகால கலை வாழ்வில், கமல், ரஜினி, சுஜாதா, சரிதா, விவேக்‍, பிரகாஷ்ராஜ் எனக் கலைஞர்களின் நீண்ட பட்டியலை அறிமுகம் செய்து வைத்த பெருமை பாலசந்தரை சேரும்.

பாலசந்தர் இயக்கத்தில் வந்த 'அவர்கள்' படத்தில் 'இப்படி ஓர் தாலாட்டு பாடவா' பாடல் தாயின் நிலையை குழந்தைக்‍கு உணர்த்தும் தாலாட்டு இலக்‍கியம். பாலசந்தர்... வாலி... வி. குமார் வெற்றிக் கூட்டணியில் மனது மறக்காத பல பாடல்கள் வந்தன. அவை, அழுதுகொண்டிருந்த மனங்களுக்கு ஆறுதல் தந்தன.

பல படங்களில் க்ளைமாக்ஸ் காட்சி சண்டை, சோகம், மகிழ்ச்சி அல்லது வண்டி நிறைய வசனங்களோடு முடியும். ஆனால், பாலசந்தர் அதிலும் வித்தியாசமானவர். அவரது பல படங்களில் க்ளைமாக்ஸ் காட்சியைப் பாடல்கள்தான் தீர்மானிக்கும். காட்சிகளுக்குப் பொருத்தமாகப் பாடல்களை இணைப்பதில் கே.பி.க்கு இணையாக வேறு யாரும் இருக்க முடியுமா? இதை யாராலும் மறுக்க முடியுமா?

மக்களுக்கான ஒப்பற்ற அரசியலை ஒப்பனையில்லாமல் கண்முன் நிறுத்தினார், பாலசந்தர் தனது 'தண்ணீர் தண்ணீர்' படத்தில். கோமல் சுவாமிநாதனின் நாடகத்திற்கு திரை வடிவம் தந்த பாலசந்தருக்கு, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை தேடித் தந்தது இந்தப் படம்.

'மேஜர் சந்திரகாந்த்', 'நீர்க்‍குமிழி', 'தாமரை நெஞ்சம்' போன்ற நாடாகப்பாணி படங்களை எடுத்து வெற்றிகண்ட பாலசந்தர், 'அனுபவி ராஜா அனுபவி', 'பூவா தலையா?', 'பாமா விஜயம்' போன்ற நகைச்சுவையான படங்களையும் எடுத்து தனது பரந்து விரிந்த பட்டறிவை வெளிக்காண்பித்தார். கதவு மூடி, விளக்‍கணைத்து, இருட்டில் காட்டப்படும் சினிமா, பாலசந்தரின் பன்முகத் திறமையை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.

'நினைத்தாலே இனிக்‍கும்' என்ற படம் ஒரு தேனிசை விருந்தாக அமைந்தது தமிழ் ரசிகர்களுக்‍கு.

'பட்டினப்பிரவேசம்', 'மன்மதலீலை' என எல்லாப் படங்களிலுமே பாலசந்தரின் கலையுலக வாழ்வை சிறப்படைய செய்தது. பாலசந்தர் படங்களின் பாடல்கள், மனிதனின் சிக்கலான உறவுகளை, உணர்வுகளை, ஒப்பனையில்லாமல் பிரதிபலித்தன.

'நான் அவனில்லை' ஜெமினி கணேசன் நடிப்பில் 1974-ம் ஆண்டு வெளியான படம் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், ஜெமினி கணேசனின் மற்றொரு பரிணாமத்தை இந்தப் படம் காட்டியது.

'வறுமையின் நிறம் சிவப்பு', 'அக்‍னி சாட்சி' எனத் தமிழில் கொடிகட்டிப் பறந்த பாலசந்தர் தெலுங்கில் 'மரோசரித்திரா' படத்தில் வானம் தொட்டார். அதே படத்தை சில நாட்கள் கழித்து இந்தியில் 'ஏக்‍துஜே கேலியே' என்றார். படம் சக்‍கை போடுபோட்டது. கமலின் பாலிவுட் கனவை மெய்ப்படச் செய்தது.

காட்சிகள் அமைப்பதிலும் பாலசந்தர் எப்போதுமே வித்தியாசமானவர். எதார்த்தத்தை வேட்டியாகவும், சினிமாவைத் துண்டாகவும் பயன்படுத்தியவர். துண்டுக்‍காக வேட்டியை இழந்தவர் அல்ல, பாலசந்தர். 'அழகன்' படத்தில் ஒரு பாடல். காதலனும், காதலியும் மணிக்‍கணக்‍கில் பேசிக்‍ கொள்ளும் ''Sweet Nothings'' தான் அது. அதை அவர் படமாக்‍கியிருக்‍கும் விதம் ஒரு கவிதை. பாடலுக்‍குள் கவிதை இருக்‍கும். ஒரு கவிதையே பாடலாக இருக்‍கும். ஆனால், இந்தக்‍ காட்சியே கவிதையாக இருக்‍கும்.

இத்தனை வெற்றிகளையும் பாலசந்தரால் எப்படிப் பெற முடிந்தது? அவரே விடையளிக்‍கிறார். "வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்" வெற்றியின் தாரக மந்திரத்தைப் பாடல் வாயிலாக ஓதுகிறார் பாலசந்தர்.

'சிந்து பைரவி' இளையராஜாவுக்‍கு தேசிய விருது வாங்கித் தந்த படம். கலைமாமணி விருது, தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது எனத் தொடங்கி, சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது எனப் பல்வேறு விருதுகள் பாலசந்தருக்கு அளிக்கப்பட்டதால், விருதுகள் பெருமை பெற்றன. எந்த விருதும் அவரை கர்வப்படுத்தியதில்லை.

காரணம் பாலசந்தர் ஒரு சிகரம். வானமே அவருக்‍கு எல்லை.

(இயக்‍குநர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்த நாள் ஜூலை 9, 1930)

-லாரன்ஸ் விஜயன்,
மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: vijayanlawrence64@gmail.com.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x