

ஒரு குறும்படம் ஒரே சமயத்தில் பொழுதுபோக்கையும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சனையொன்றையும் சரிவிகிதத்தில் பேசியுள்ளது என்றால் அது எப்படிங்க என்றுதான் முதலில் கேட்கத் தோன்றும்..
நெசந்தாங்க... வாழ்வின் அங்கீகரத்திற்காக கிராமம் உள்ளிட்ட விளிம்புநிலையிலிருந்து வந்து ஹைடைக் நிறுவனங்களில் வேலைதேடும் இளைஞர்கள் நேர்காணல்களுக்கு வருவதை நாம்தான் தினம் தினம் பார்க்கிறோமே அதைத்தாங்க 'தங்கிலீஷ்' குறும்படத்தில் கிண்டி கிளறியிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் பலரும் ஆங்கிலம் சரியாக தெரியாத காரணத்தாலேயே தகுதி குறைவு முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்படுகிறார்கள். தன்னை ஹீரோவாக கற்பனை செய்துகொள்ளும் பலரும் கூட ஆங்கிலம் தெரியாது என்ற தாழ்வுமனப்பான்மையிலும் அவமானத்திலும் அவர்கள் அலைக்கழியப்படுவதை ஸ்மார்ட்போனை கீழே தரையில்போட்டு தூள்தூளாக்கியது போல பளார் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
பங்கேற்றுள்ள கலைஞர்களின் பங்களிப்பில்தான் இப்படத்தின் மையம் பார்வையாளனை கவ்விப்பிடிக்கிறது. காதலை மட்டுமல்ல வாழ்க்கையையும் ஒரு கை பார்க்கவேண்டிய இடத்திற்கு தள்ளப்படும் நாயகன் எப்படி வெல்கிறான் என்பதை தனது சிறந்த நடிப்பாற்றலால் மின்னித் தெறிக்கிறார் லிங்கா... அவருக்கு ஈடுகொடுத்து விவேக் பிரசன்னா, தீபா நடராஜன், அபிராம், ஜெயா கணேஷ் உள்ளிட்ட பலரும் நன்றாகவே தங்களது சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள்.
கேமரா பாலாஜி சுப்ரமணியன் கேமராவும் மரியா ஜெரால்டுவின் இசையும் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை நம்முள் ஏற்றிவிடுகிறது. இங்கிலிஷ் என்கிற அரக்கியையும் எதிர்கொள்ள அழகான பெண்ணின் துணையோடு நாயகன் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறான். நட்பையும் காதலையும் அளவோடு கலந்து இந்தக் குறும்பட ஜாங்கிரியை சுவைபட சுட்டுத் தந்திருக்கிறார் இயக்குநர் துவாரகா ராஜா.
ஹைடெக் மன்னர்கள் மட்டுமல்ல யாரும்கூட வெற்றிவாழ்க்கைக்கு தேவையான ஆங்கிலத்தை ஜாலியாகவே கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் தந்தவிதத்தில் தரமான திரைப்படத்திற்குண்டான நல்ல குணாம்சங்களை தாங்கிவந்துள்ளது இப்படம்.
விறுவிறுப்புக்காக வேண்டி தேவையில்லாத காட்சிகளை சேர்க்க வாய்ப்புகள் பல இருந்தும் எள்ளளவும் அந்த மாதிரியெல்லாம் சறுக்கிவிடவில்லை. ஒரு குறும்படத்திற்கு இவ்வளவு அதகளமா! என வியக்கும்படியான கதையம்சத்தைக் கூறி பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குநர் துவாரகா ராஜாவுக்கு மட்டுமல்ல இதில் பங்கேற்றுள்ள பல கலைஞர்களுக்கும் பளிச்சிடும் எதிர்காலத்தைத் தரப்போகிறது இக் குறும்படத் துருப்புச்சீட்டு. அப்படி என்ன பரவசமான கதையம்சம் என்பதை தெரிந்துகொள்ள துருப்புச்சீட்டை நீங்களும் பிரித்துப் பார்க்கலாம்.
</p>