

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர்
உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது வென்றவருமான சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 11). அவரைப் பற்றிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் சிகாகோ நகரில் (1917) பிறந்தார். தந்தை நகைக்கடை மேலாளர். இளம் வயதில் மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார். மன அழுத்தம் காரணமாக கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அபார எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், கல்லூரி நாடகக் குழுவினருக்காக நாடகங்கள் எழுதிக் கொடுத்தார்.
l இரண்டாம் உலகப் போரின்போது ராணுவத்தில் பைலட்டாகப் பணியாற்றினார். 1937-ல் ஹாலிவுட்டில் குடியேறினார். அங்கு திரைக்கதை, வசனங்களை மதிப்பீடு செய்தும், திரைக்கதைகள் எழுதியும் வந்தார். எம்ஜிஎம், பாரமவுன்ட் ஸ்டுடியோஸ் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றினார்.
l ‘தி பேச்சுலர் அண்ட் தி பாபி சாக்ஸர்’ என்ற திரைப்படத்துக்கு முதல்முறையாக திரைக்கதை எழுதினார். அந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
l தொலைக்காட்சித் தொடர்களை எழுதத் தொடங்கினார். தொடர்ந்து 20 ஆண்டுகள் இதில் பணிபுரிந்தார். மூன்றே ஆண்டுகளில் 78 தொடர்களுக்கான கதைகளை எழுதி சாதனை படைத்தவர். பிரபல எம்மி, டோனி விருதுகளையும் பெற்றுள்ளார்.
l இவர் 1969-ல் எழுதிய ‘நேக்கட் ஃபேஸ்’ என்ற முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது. அடுத்த நாவலான ‘தி அதர் சைட் ஆஃப் தி மிட்நைட்’ மிக அதிக அளவில் விற்பனையாகி பல விருதுகளைக் குவித்தது. நியூயார்க் டைம்ஸ் விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் பட்டியலில் தொடர்ந்து 52 வாரங்கள் முதலிடம் பெற்று, அதுவரையிலான அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.
l கிட்டத்தட்ட இவரது அனைத்து நாவல்களுமே நியூயார்க் டைம்ஸின் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றன. தொடர்ந்து ‘எ ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிரர்’, ‘பிளட்லைன்’, ‘ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ்’, ‘மாஸ்டர் ஆஃப் தி கேம்’, ‘இஃப் டுமாரோ கம்ஸ்’ உள்ளிட்ட நாவல்களும் விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தன.
l இவரது நாவல்களின் கதை சாதுர்யமான ஒரு பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்டிருக்கும். எனவே, இவருக்கு ஆண் வாசகர்களைவிட பெண் வாசகர்கள் எண்ணிக்கையே அதிகம்.
l ‘திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், நாடகம் எழுதினாலும், நாவல் எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும். அதில்தான் முழு சுதந்திரமாக செயல்பட முடியும். என் நாவல்களில் எனக்கு நன்றாகத் தெரிந்த, நான் போய் வந்த ஒரு இடத்தைப் பற்றிதான் எழுதுவேன். நான் சுவைத்துள்ள உணவு குறித்துதான் விவரிப்பேன். அனுபவத்தின் அடிப்படையில் எழுதுவதையே விரும்புகிறேன்’ என்று கூறுவார்.
l 1997-ல் உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். மொத்தம் 18 நாவல்களை எழுதியுள்ளார். ஏறக்குறைய 30 கோடி நூல்கள் விற்பனையாகின. ‘தி அதர் சைட் ஆஃப் மீ’ என்ற சுயசரிதையை 2005-ல் எழுதினார்.
l 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று போற்றப்பட்ட சாதனை நாயகர் சிட்னி ஷெல்டன் 90-வது வயதில் (2007) மறைந்தார்.