Published : 06 Jul 2021 07:14 PM
Last Updated : 06 Jul 2021 07:14 PM

காடுகளில் ஓடி ஒளிந்து, மரங்களில் ஏறி, அரிவாளால் மிரட்டி?- பழங்குடி மக்களின் தடுப்பூசி பயம்

கோவை, நீலகிரி மாவட்டத்தில் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது அரசு. மாநகரப் பகுதிகளில் தடுப்பூசி கிடைக்காமல் அல்லாடும் நிலையில் மலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேடித்தேடிப் பிடித்து, தடுப்பூசி செலுத்தும் சுகாதாரப் பணியாளர்களை ஆயுதம் ஏந்தி மக்கள் விரட்டிவிடும் சம்பவங்களும், காடுகளுக்குள் அவர்கள் ஓடி ஒளியும் நிகழ்வுகளும் நடந்தபடி உள்ளன. உதாரணத்திற்கு சில சம்பவங்கள்.

சம்பவம் 1: அரிவாளை எடுத்து மிரட்டி...

நீலகிரி மாவட்டம், புத்தூர் வயல் பகுதி பழங்குடி கிராமத்தில் வசிக்கும் 10 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதனை செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சென்றனர் அப்பகுதி சுகாதாரத் துறை அலுவலர்கள். தவிர காய்ச்சல் இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி போடவும் ஏற்பாடு நடந்தது. இதையறிந்த இப்பகுதி மக்கள் அலுவலர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அதில் ஒரு நபரோ, கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு, ‘ஊருக்குள் வராதீங்க. வந்தா வெட்டிடுவேன்!’ என பகிரங்கமாக மிரட்டி வெளியே அனுப்பிய சம்பவம் நடந்தது. இது வீடியோக்களில் பதிவாகி, வைரலானது.

சம்பவம் 2: மரத்தில் ஏறி ஒளிந்துகொண்டு...

இதேபோல் கோவை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் பழங்குடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டியதால் அந்த கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று அதைச் செலுத்த முயன்றனர் சுகாதாரத் துறையினர். இதற்காகத் தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் போரத்தி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு 500 தடுப்பூசிகளுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஜூலை 2-ம் தேதி சென்றனர்.

இதைத் தெரிந்துகொண்ட பழங்குடி மக்களில் பலர் தோட்டப் பகுதிகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டனர். இளைஞர்கள் சிலரோ, தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டனர். முதியவர்கள் தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்கள் உள்ளதாகக் கூறி தடுப்பூசி வேண்டாமென சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த பின்னர், சிலருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சம்பவம் 3: மருத்துவமனைக்கு வர மறுத்து...

வால்பாறை, திருமூர்த்தி மலைக்காடுகளின் அப்பர் ஆழியார் மலைப் பள்ளத்தாக்கு பகுதிகளில் மாவடப்பூ, கருமுட்டி, குழிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த 2 மாத காலமாக மக்கள் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தனர். தன்னார்வலர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொண்டுசென்ற நிலையில் இவர்களைப் பரிசோதிக்க வந்த சுகாதாரத் துறையினர் ஸ்வாப் டெஸ்ட் எடுத்ததோடு, காய்ச்சலில் அவதிப்பட்ட 40 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதன் தொடர்ச்சியாக டெஸ்ட் எடுக்கப்பட்டவர்களில் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்ல சுகாதாரப் பிரிவினர் முயன்றனர்.

இதற்காக ஆம்புலன்ஸை அப்பர் ஆழியாறு பகுதியில் கொண்டுபோய் நிறுத்திக்கொண்டு, நோய்த் தொற்று உள்ளவர்களை ஊருக்குள்ளிருந்து (11 கிலோ மீட்டர் நடந்து வரவேண்டும்) வருமாறு, ஊர்ப் பெரியவர்கள் வாயிலாக அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர்கள் யாரும் வர மறுத்ததோடு, காடுகளுக்குள் போய் ஒளிந்து கொண்டனர். இதனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் இப்பகுதி தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினரிடம், ‘எப்படியாவது அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள்!’ என கெஞ்சிக் கேட்டது செய்தியானது. தவிர இப்பகுதியில் மக்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகத் தகவல்கள் வெளியானாலும், நிறையப் பேர் தடுப்பூசிக்கு பயந்து காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டதாகவே தெரிவிக்கின்றனர் மக்கள்.

ஏன் இப்படி நடக்கிறது?

இந்த மூன்று சம்பவங்கள் நம் பார்வைக்கு வந்தவை மட்டுமே. இதுபோலப் பல சம்பவங்கள் காடுகளுக்குள் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் பழங்குடியினர்களுடன் நெருக்கமாகப் பழகும் தன்னார்வலர்கள். நகர்ப் புறத்தில் தடுப்பூசி கிடைக்காதா, கரோனா சிகிச்சைக்கு மருத்துவமனையில் படுக்கை தரமாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க, காடுகளில் உள்ள பழங்குடிகள் வலியத் தடுப்பூசி வந்தாலும், தேடி சிகிச்சை அளித்தாலும், அதை ஏற்க மறுத்து ஏன் இப்படி ஓடி ஒளிகிறார்கள்?

எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் இவர்களுக்கு விழிப்புணர்வே வராது. பழங்குடி மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என மேலோட்டமாகவே இதைப் பலரும் பார்க்கிறார்கள். அது தவறு. இவர்களை இப்படி வைத்திருப்பதற்கு முழுப் பொறுப்பு படித்த சமூகத்தவருக்கும், அரசுக்கும் இருக்கிறது என்கிறார்கள் பழங்குடியினச் செயற்பாட்டாளர்கள். இதுகுறித்து பொள்ளாச்சி ஏக்நாத் அமைப்பின் மூலம் இயங்கும் பழங்குடியினச் செயற்பாட்டாளர் தன்ராஜ் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அரசும், சமூகமும்தான் பொறுப்பு

‘‘பழங்குடி மக்களின் அறியாமை குறித்து அவர்கள் வேதனைப்பட ஒன்றுமே இல்லை. படித்த மக்களும், நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான் இதற்காக வெட்கப்பட வேண்டும். சுகாதாரத்துறை என்ற ஒன்று இதுவரை இந்த மக்களிடம் முறையாகப் போய்ச் சேரவில்லை. இம்மக்களுக்கு நம்பிக்கையும் அளிக்கவில்லை.

குறிப்பாக மக்களின் வரிப் பணத்தில் நல்ல ஊதியம் பெறும் மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் எங்கே குரலற்ற மக்கள் இருக்கிறார்கள்? விளிம்புநிலை மக்கள் எங்கே இருக்கிறார்கள்? எங்கே ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட, சக்தியற்ற மக்கள் இருக்கிறார்கள்? எங்கே பழங்குடி மக்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளும், திட்டங்களும் சென்றடைகின்றனவா? பலனளிக்கின்றனவா? என்பதைப் பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பது இல்லை. மருத்துவப் பணியாளர்கள் அந்த கிராமங்களுக்கு முறையாகச் செல்வதில்லை.

தேவைப்படும் சிகிச்சை, நல வாழ்வு உதவிகள் செய்வதில்லை என்பதினால்தானே அவர்களின் நம்பிக்கையைப் பெற இயலவில்லை? மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், கட்டாய நிர்பந்தத்தினால் தடுப்பூசி போடுவதற்காக / இலக்கை நிறைவேற்ற மட்டுமே அங்கே போனதால்தானே உங்களைப் பழங்குடிகள் அந்நியராகப் பார்க்கிறார்கள். ஏன் இந்த நம்பிக்கையை அரசு அமைப்பு பெற முடியவில்லை என்பதை நினைத்துத்தான் என்னால் பரிதாபப்பட முடியும்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக- கேரளக் காடுகளில் வாழ்ந்த ஒரு பழங்குடி மக்களிடம் அரசு இதுபோன்ற மருத்துவ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதனைத் தங்கள் பழமையான மூடநம்பிக்கையோடு இறுகப் பிடித்துக்கொண்ட இச்சமூகம் இன்று வாரிசுகள் இல்லாமல் வனத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றது. அங்கே வனத் துறையும், சுகாதாரத் துறையும் இன்னமும் அம்மக்களிடம் இருந்து ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறது’’ என்று தன்ராஜ் தெரிவித்தார்.

ஏன் மிரட்ட வேண்டும்?

ஈரோடு மாவட்டம், அந்தியூர், கடம்பூர், பர்கூர், சத்தியமங்கலம் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காகப் பாடுபடும் சுடர் அமைப்பின் நிறுவனர் நடராஜனிடம் இதுகுறித்துப் பேசியபோது, ‘‘தடுப்பூசி போடுவதும், போடாததும் தனி மனிதனின் விருப்பம். உரிமை. தடுப்பூசி போடலைன்னா ரேஷன் கார்டு கட், பேருந்தில் ஏற முடியாது; ரயிலில் போக முடியாது இப்படியெல்லாம் எச்சரிப்பதும் கூட மிரட்டுவது போல ஆகும். இதை நாட்டு மக்களிடமே திணிக்கக்கூடாத நிலை இருக்கும்போது காட்டில் வாழும் மனிதர்களிடம் ஏன் திணிக்க வேண்டும்?

அவர்களை இந்தச் சூழ்நிலைக்கு ஏற்பக் கற்றுக் கொடுப்பதும், அதை அவர்களுக்குப் புரிய வைப்பதும், பிறகு அதற்குச் செயலாக்கம் தருவதுமே சரியானதாகும். அதற்கு அன்பும், மாசற்ற கல்வியுமே ஒரே வழி. இதை உணராமல் வெறுமனே பழங்குடிகளைப் படிக்காதவர்கள், காட்டு மனிதர்கள், அவ்வளவுதான் அவர்களுக்கு அறிவு என விளம்புவது படித்தவர்களுக்கும், பதவியில் இருப்போருக்கும் அழகில்லை!’’ எனத் தெரிவித்தார்.

தேன் தடவித்தான் மருந்து

கூடலூர் பழங்குடிகள், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜிடம் பேசினேன்:

‘‘கூடலூர் ஆதிவாசித் தலைவர் ஒருவர் போன் செய்தார். சார் எங்க ஊருக்குத் தடுப்பூசி போட வர்றாங்க. அவங்க போடற ஊசி ஆளைக் கொல்லுது. அவங்க வரவிடாம நிறுத்துங்க!’ன்னு கேட்டுகிட்டார். நான் அப்போதைக்கு அமைதியா கேட்டுக்கிட்டு, கொஞ்ச நேரம் கழித்து அவர் லைனுக்கே போனேன். ‘அவங்க போடற ஊசி ஆளைக் கொல்றதில்லை. நம்மாளுக எல்லாம் சத்துக் குறைவா இருக்காங்க. காட்டுக்குள்ளே, மிருகங்களுக்குள்ளே போகும்போது நம்ம எத்தனையோ பேர் பூச்சிக் கடியால சாகறோம்.

அப்படிச் சாகாம தடுக்கற சத்து ஊசிதான் இப்ப போடறாங்க. அதை நம்ம ஜனங்க போட்டுக்கறது நல்லது. அதை முதல்ல நீங்க போடுங்க. அப்புறம் மக்கள் எல்லாம் போட்டுக்குவாங்க!’ன்னு பொறுப்பா எடுத்துச் சொன்னேன். அவரும் கேட்டுக்கிட்டு ஊசி போட்டுக்கிட்டார். இப்ப அந்த ஊரில் அத்தனை பேருமே ஊசி போட்டுக்கிட்டாங்க. குழந்தைகள் மருந்து, ஊசி என்றாலே பயப்படும். அதைத் தேன் தடவித்தான் கொடுக்க வேண்டும். முரட்டுத்தனமா பழங்குடிகள்கிட்ட ஊசியத் தூக்கிட்டுப் போகக் கூடாது..!’’ என்று எம்.எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x