Published : 06 Jul 2021 04:58 PM
Last Updated : 06 Jul 2021 04:58 PM

நீரா பானம் விற்பனை செய்வதுகூடத் தவறா?- கோவையில் காவல்துறைக்கு எதிராகப் பொங்கும் விவசாயிகள்

ஊர்வலமாக வந்த விவசாயிகள்.

கோவை

‘‘நீரா இறக்கினா கள்ளு வழக்குப் போடுது போலீஸ். நீராவுக்கும் கள்ளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? நீரா புளிச்சா கள்ளு; இது தெரியாதா போலீஸுக்கு. அதுக்கு வேணும்ணா வழக்குப் போடட்டும்; தப்பில்லை. அதை கோர்ட்ல சட்டரீதியா எதிர்கொள்றோம். ஆனா, விவசாயிகளைக் குடும்பத்தோட மிரட்டறது. இதுவரைக்கும் இல்லாத விதமா போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அடிக்கிறது, சித்ரவதை செய்யறது எல்லாம் நடக்குது. இனியும் இப்படி செஞ்சா தெருவில் இறங்கிப் போராடுவோம்!’’ எனக் கொந்தளிக்கிறார்கள் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் இருக்கும் தென்னை விவசாயிகள். இதையொட்டி கோவை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் போலீஸிற்கு எதிராகவே புகார் மனுவும் அளித்துள்ளனர்.

மதுபானக் கடைகள் திறந்திருந்தாலும் தமிழகத்தில் தென்னை மற்றும் பனையிலிருந்து கள் இறக்குவதற்கு நீண்ட காலமாகத் தடை நீடிக்கிறது. நம் பக்கத்து மாநிலமான கேரளத்திலோ கள்ளுக் கடைகள் வியாபாரம்தான் அங்கே அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டித் தருகிறது. அதேபோல் தமிழகத்திலும் கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும்; தென்னை, பனையில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்; வெளிநாட்டு மதுவைப் போல்- சாராயத்தைப் போல் உடலுக்குக் கெடுதல் விளைவிப்பதல்ல கள்; அது உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்காத பானம்!’ என்றெல்லாம் தொடர்ந்து பனை, தென்னை விவசாயிகள் போராடி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் தடையை மீறிக் கள் இறக்கவும் துணிந்தனர். ‘எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். அதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்கிறோம்!’ என்று அரசுக்கு எதிராகவே சவாலும் விடுத்தனர். கோவை மாவட்டத்தில் மட்டும் இப்படி நூற்றுக்கணக்கான தோப்புகளில் கள் இறக்கி ஏராளமான விவசாயிகள் சிறை சென்றனர். இவர்களில் பலர் மீது நீதிமன்றங்களில் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் கள் இறக்க அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை; நீரா (தெளுவு, பதநீர்) இறக்கவாவது அனுமதி வேண்டும் என்று விவசாயிகளில் ஒரு சாரார் போராடி வந்தனர். அதையடுத்து இதற்குச் செவிசாய்த்த முந்தைய அரசு, நீரா பானம் தயாரிப்பு தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டது. தென்னை உற்பத்தியாளர்கள் நீரா பானம் எடுப்பதற்குக் கொச்சி தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். நீரா தயாரிப்பு மற்றும் விநியோகத்தை ஆய்வு செய்யும் அலுவலராகக் கலால் உதவி ஆணையர், தாசில்தார்கள் இருப்பர். ஒரு விவசாயி 5 மரங்களில் மட்டுமே நீரா எடுக்க அனுமதிக்கப்படுவர். நீரா பானம் எடுக்கும்போது தென்னையில் காய்ப்புத் தன்மை குறைந்துவிடும். அதைத் தவிர்க்கவே இந்தக் கட்டுப்பாடு. நீரா இறக்குதல், விநியோகம், எடுத்து செல்லுதல் மற்றும் விற்பனைக்கான அனுமதி அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்படும் என்றெல்லாம் இதற்கு விதிமுறைகள் கூறப்பட்டன.

ஒரு மரத்தில் தினமும் 1.5 லிட்டர் நீரா எடுக்கலாம். விவசாயிகள் தாங்கள் சேகரிக்கும் நீரா பானத்தைத் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும். அவர்கள் நீராவை சுத்திகரிப்பு செய்து, குளிர வைத்து மக்கள் அருந்தும் வகையில் தயார் செய்வர். நொதித்தல் தடுப்பு முறையில் தயாராகும் நீராவை 5 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்கலாம் என்றும் அதில் ஷரத்துக்கள் நீண்டன. இதையடுத்துத் தமிழகமெங்கும் தென்னை மரங்களில் நீரா எடுப்பது தீவிரப்படுத்தப்பட்டது. மார்க்கெட்டுகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கூட டென்ட் அமைத்து விவசாயிகள் நீரா பானம் விற்பனை செய்வதைக் காண முடிந்தது. கோவை மாவட்டத்திலும் நீரா பானம் இறக்குவது நிறைய தென்னந்தோப்புகளில் நடந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு, ‘நீராவை இறக்கும் விவசாயிகளைக் கைது செய்யும் போலீஸைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சென்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய புகார் மனுவை அளித்தனர்.

இவர்களில் போராட்டத்திற்குத் தலைமை வகித்து வந்த நாராயணசாமி என்ற விவசாயி கூறும்போது, ‘‘நாங்கள் கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள். தொடர்ந்து கள் இறக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறோம். அதற்காகப் பல்வேறு வழக்குகளையும் சந்தித்துள்ளோம். தடையை மீறி கள் இறக்குபவர்கள் பலர் மீது வழக்கும் உள்ளது. நீரா இறக்கச் சென்ற ஆட்சியில் அரசு அனுமதித்த பின்பு அதை இறக்கி விற்பனை செய்கிறோம். அதை இறக்கும் விவசாயிகளைக் கூட கைது செய்து, குடும்பத்தையே மிரட்டி சித்திரவதை செய்கிறார் உள்ளூர் காவல் ஆய்வாளர். நாங்கள் தோப்பில் நீராவுக்காகக் கட்டியுள்ள பானைகளை எல்லாம் போலீஸாரை விட்டு உடைக்கிறார்.

விவசாயிகளைக் குடும்பத்தோடு காவல் நிலையத்துக்குக் கொண்டுபோவோம் என்று மிரட்டுகிறார். நாங்கள் இறக்கியது தெளுவுதான் (நீரா) என்று சொன்னாலும் காது கொடுத்துக் கேட்பதில்லை. தெளுவுக்கும் கள்ளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? தெளுவு புளிச்சா கள்ளு. இது தெரியாதா போலீஸிற்கு. அப்படி புளித்துப் போன தெளுவு (நீரா) கள்ளாக மாறிடுச்சுன்னா, அதுக்கு எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடட்டும்.

ஆனா, தென்னைல கட்டிருக்கற பானைகளை உடைப்பதற்கும், விவசாயிகளைக் குடும்பத்தோட மிரட்டுவதற்கும் இந்த போலீஸிற்கு யார் அதிகாரம் கொடுத்தது? போன ஆட்சி வரை பேசாம இருந்த போலீஸ் இப்ப மட்டும் ஏன் இப்படி வந்து எங்களைப் பாடாப்படுத்துது. அதுக்கு ஒரு நியாயம் வேணும். இப்ப எஸ்.பி.கிட்ட புகார் கொடுத்திருக்கோம். இதுமேல நடவடிக்கை எடுத்தா பார்ப்போம். இல்லைன்னா அத்தனை விவசாயிகளும் ரோட்டுக்கு வந்து போராடுவோம்!’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x