Published : 02 Jul 2021 09:51 AM
Last Updated : 02 Jul 2021 09:51 AM

இன்னும் என்னென்ன சொல்லியிருப்பார் சின்னம்மா?

சானா

எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை சொன்னதுண்டு என்று சசிகலா தனது லேட்டஸ்ட் ஆடியோவில் அள்ளிவிட்டாலும் விட்டார். அவர் இன்னும் என்ன யோசனைகளை யாராராக்குத் தந்து அன்னார்களின் அரசியல் பாதையை வெற்றிபெறச் செய்திருப்பார் என்று ஆளாளுக்கு ஊகங்களை அள்ளித் தெளித்துவருகிறார்கள். நம் பங்குக்குச் சில உத்தேச உபதேசங்கள்.

இப்போதுதான் ஆடியோ புகழ் சின்னம்மாக இருக்கிறார் சசிகலா. முன்பெல்லாம் வீடியோ கேசட் மூலமே அறியப்பட்டார். முன்னுக்கும் வந்தார். அம்மாவின் அன்புக்குப் பாத்திரமாகி அதிமுகவின் சகுனி… சாரி, சாணக்கியர் ஆனார். அந்த வகையில் விசிஆர் எனப்படும் டெக் சமாச்சாரங்களின் மார்க்கெட்டிங் உத்தி தொடர்பாக பிலிப்ஸ், சோனி போன்ற நிறுவனங்களின் நிறுவனர்களுக்கே சின்னம்மா சிலபல யோசனைகளைச் சொல்லியிருக்கலாம். பி.ஆர்.ஓ-வாக இருந்த தனது கணவர் நடராஜனுக்கு ஆடியோ, வீடியோ முறையில் மக்களை அணுகும் வித்தைகளைக் கற்றுத் தந்திருக்கலாம்.

அவரது ஆலோசனைகளை எம்ஜிஆரே காதுகொடுத்துக் கேட்டிருக்கிறார் என்றால், அவருக்கு முன்னோடியாக இருந்த அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும்கூட சசிகலா ஏதேனும் அரசியல் ஆலோசனை சொல்லியிருக்கலாம். யார் கண்டார்! டைம் மிஷின் புழக்கத்தில் வந்த பின்பு காலாவதியான காலப் பயணங்கள் இனி காட்சிப்படுத்தப்படலாம். கண்ணீர் துளிகள் என்று திமுகவினரைத் திட்ட பெரியாருக்கே பாயின்ட் எடுத்துக் கொடுத்திருக்கலாம். கொஞ்சம் முன்னால் சென்றால், காந்தியைத் தென்னாப்பிரிக்காவிலிருந்து தேசம் திரும்ப டிக்கெட் கூட எடுத்துக் கொடுத்திருக்கலாம்.

விட்டால் அதற்கும் முந்தைய காலகட்டத்துக்குச் செல்வீர்கள் போல என்கிறீர்களா? சென்றால் என்ன தப்புங்குறேன்? சான்று என்று எந்தச் சான்றோர் கேட்டு வரப்போகிறார்? எல்லாம் வெறும் வாய் வார்த்தைதானே?

ஆம், அப்படியே கிழக்கிந்திய கம்பெனியின் காலகட்டத்துக்குச் செல்லலாம். பார்வைக்குப் பளிச்சென இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பட்டாசிட்டா இல்லாமல் பாக்கெட்டில் போடுவது எப்படி என்று ராபர்ட் கிளைவுக்குக்கூட ரகசிய ஆலோசனை சொல்லியிருக்கலாம். அதற்கு முன்பு டெல்லிக்குச் சென்று அவுரங்கசீபுக்கு அரண்மனை சதி குறித்து எச்சரிக்கை செய்திருக்கலாம். அக்பர் என்ன பாவம் செய்தார்? அவருக்கும் பானிபட் போரில் படையெடுப்பு குறித்துப் பாடம் நடத்தியிருக்கலாம். என்ன சிரிக்கிறீர்கள்? என்னாங்க… பெங்களூருவிலிருந்து சென்னை வரை கார் படையை வைத்தே அணிவகுப்பு நடாத்திக் (நெடில்தான்!) காட்டியவருக்கு வெறும் கால்நடைப் படைகள்… சாரி காலாட்படைகள், குதிரைப் படைகள் எம்மாத்திரம்?

இவ்வளவுதூரம் வந்துவிட்டோம். கொஞ்சம் சங்ககாலத்துக்கும் சென்றுவரலாமே. சசிகலா சந்தோஷப்படுவார். அந்தக்கால அரசர்களின் ஆடிட்டர்கள் ஏதேனும் சச்சரவு தந்தால், தங்கக் காலணியால் தக்கப் பாடம் புகட்ட யோசனை தெரிவித்திருக்கலாம். புகழ்ந்துபாடும் புலவர்களுக்கு நிரந்தரப் புரவலர்களை அரசு காசிலேயே நியமிக்க வழி சொல்லியிருக்கலாம். அந்தக் கால டெக்னிக்குகளைப் பயன்படுத்தி, சொன்னதைச் சொல்லும் கிளிப்பயபுள்ளைகளுக்கு அரசியல் சேதிகளைப் பயிற்றுவித்து பக்குவமாக அட்ரஸ் சொல்லி அனுப்பிவைக்கவும் ஏற்பாடு செய்திருக்கலாம். ஆடியோ அரசியலின் முன்னோடி என்பதால் இப்படி ஏதாவது செய்திருக்கலாம் என்று ஊகிப்பதில் ஒரு சிரமமும் இல்லைதானே?

அப்படியே டைனோசர் காலத்துக்கும் செல்லலாம்தான். ஆனால், அங்கு ஜெயலலிதாவை ஏதேனும் ஒரு குட்டி டைனோசர் முட்டி, அதன் காரணமாகத்தான் டைனோசர் இனமே அழிந்துபட்டது எனும் அவச்சொல் சின்னம்மா மூலம் அம்மாவுக்கு வந்து சேரும். ஏன் அந்தப் பழிச்சொல்? எனவே… இத்தோட நிறுத்திக்கிருவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x