Published : 02 Jul 2021 09:40 AM
Last Updated : 02 Jul 2021 09:40 AM

திரைப்படச்சோலை 45: பெளர்ணமி அலைகள்

சிவகுமார்

ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னை - மெர்சி ஹோம் அனாதை இல்லம். கருணை வள்ளல், எளிய மக்கள் ஆராதிக்கும் இமயம், நடமாடும் தெய்வம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட முன்னாள் மேயர் ஞானராஜ் கொடியேற்ற வருகிறார். கொடிக்கம்பத்தை நெருங்கும் முன் மின்னலாகத் தெறித்து, தோட்டாக்கள் அவர் உடம்பைத் துளைக்க ரத்த வெள்ளத்தில் சாய்ந்து மடிகிறார்.

சுட்டவள் தீபா என்ற இளம்பெண். ஞானராஜாக சிவச்சந்திரனும், தீபாவாக ரேவதியும் நடித்தனர்.

பள்ளியில் இந்த களேபரம் நடக்கும்போது பதட்டமில்லாமல் தீபா போலீஸ் ஸ்டேஷன் சென்று இன்ஸ்பெக்டரை சந்தித்து, ‘என் பெயர் தீபா. ஞானராஜ் என்ற தொழிலதிபரை நான்தான் சுட்டுக் கொன்றேன். இது ரிவால்வர். என்னைக் கைது செய்து சீக்கிரம் தூக்கிலிடுங்கள்’ என்கிறாள். இன்ஸ்பெக்டர் பதறி அவளைக் கைது செய்து லாக்கப்பில் வைக்கிறார்.

சர்ச்சிலிருந்து பாதிரியார் ஸ்டேஷன் வந்து தீபாவை ஜாமீனில் எடுக்கும் முன்பு, ‘இந்த தீபா 14 வருஷத்துக்கு முன்பு மெர்சிஹோமில் டீச்சரா இருந்தாங்களே அவங்க பொண்ணு. தற்கொலை கேஸூன்னு நீங்க ஃபைலை குளோஸ் பண்ணினீங்களே அந்த மேரி பொண்ணு. அவகிட்ட நான் பேசணும்!’ என்கிறார் பாதிரியார். கொலைக்குற்றவாளிகிட்ட சம்மந்தமில்லாதவங்க பேச சட்டம் இடம் தராது. ஒரு வக்கீலைக்கூட்டிகிட்டு வாங்க!’ என இன்ஸ்பெக்டர் சொல்கிறார்.

உங்களுக்கு நான் அடிமை

ஊரில் பிரபல கிரிமினல் லாயர் எத்திராஜை (மேஜர் சுந்தரராஜன்) பாதிரி சந்திக்கிறார்.

‘‘ஞானராஜ் என் நெருங்கிய நண்பர்ங்கறதுக்காகச் சொல்லலே ஃபாதர். பட்டப்பகல்ல நூற்றுக்கணக்கான குழந்தைங்க, டீச்சங்க முன்னாடி தீபா ஞானராஜை சுட்டுக் கொன்னிருக்கா. போலீஸ் ஸ்டேஷன் போயி நான்தான் இந்தக் கொலை பண்ணினேன். இதுதான் ரிவால்வர், கைரேகை எடுத்துக்குங்கன்னு சொல்லியிருக்கா. இதுக்கப்புறம் இந்தக் கேஸை ஒருத்தன் எடுத்து நடத்தினா வடிகட்டின வாத்துமடையனாத்தான் அவன் இருப்பான்!’’ என்று முகத்திலடித்த மாதிரி சொல்லி அனுப்பி விடுகிறார்.

மறுநாள் காலை சர்ச் வாசலில் ஹீரோ ராஜேஷ் (சிவகுமார்) நிற்கிறான். எத்திராஜூடைய ஜூனியர் மட்டுமல்ல, அவர் மகள் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் ராதாவின் (அம்பிகா) கணவருமான ராஜேஷ்- வாழ்க்கையில் பெரிய வக்கீலாக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் வந்து எத்திராஜிடம் சேர்ந்து, அவர் மகளையும் மணந்து, இருவருக்கும் வழக்குக்கான பேப்பர் டைப்படிக்கும் பரிதாபகரமான வேலை செய்து கொண்டிருந்தவன்.

‘மிகப்பெரிய வக்கீல் -உன் மாமனாரே வேண்டாமென்று ஒதுக்கிய வழக்கை, என்ன தைரியத்தில் எடுத்து நடத்த வந்திருக்கே’- என்று பாதிரியார் கேட்க, ‘இந்த வழக்கில் தோற்றால் இழக்க ஒன்றுமில்லை. ஜெயித்தால் எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும்!’ என்கிறான் ராஜேஷ். அவனை ஆசீர்வதித்து சர்ச் பின்னால் அவனை அழைத்துப் போய், குப்பைகள் மண்டிக்கிடந்த ஒரு கல்லறையில் -ஞானராஜை கொல்வேன் - என்று சிமெண்ட்டில் எழுதப்பட்ட வாசகத்தை பாதிரியார் காட்டுகிறார்.

அது மேரியோட கல்லறை. 14 வருஷத்துக்கு முந்தி தீபா 10 வயசுப் பொண்ணா இருக்கறப்போ அம்மா சமாதி மேல அவ கிறுக்கி வச்சது இது.

உன் கணவன் இல்லையா

தீபாவை ஜாமீனில் எடுக்க மைக்கேல் பாதிரியார் வக்கீல் ராஜேஷைக் கூட்டிப் போகிறார். ‘கொடுமையான என் இறந்த கால வாழ்க்கைக்கு உயிர் குடுக்க வந்திருக்கீங்களா -நான் சந்தோஷமாக சாக விரும்புகிறேன். விட்டுருங்க’ என்கிறாள் தீபா.

டீச்சரா இருந்த மேரி திடீர்ன்னு தற்கொலை பண்ணீட்டான்னு சேதி வர தீபாவை நான் சர்ச்சுக்கு கூட்டிட்டு வந்திட்டேன். செய்தி அறிஞ்ச ஞானராஜ் டிரைவரை அனுப்பி, தீபாவை நான் வளர்க்கிறேன் கூட்டிட்டு வான்னு சொல்லியிருக்கார்- ஆனா தீபாவுக்கு அவரோட போக இஷ்டமில்லே. திருச்சியில அவ சித்தி வீட்டுக்கு அனுப்பி வச்சேன் -என்று விளக்கினார் பாதிரியார்.

மனநல மருத்துவர்கிட்ட போலீஸ் ரிப்போர்ட்டை குடுத்து தீபாவை கூட அனுப்பறார் இன்ஸ்பெக்டர். தீபா சின்ன

வயசிலேயே மனநலம் பாதிக்கப்பட்டிருக்கா. -கல்யாணமாகி 4 வருஷமாகியும் கணவனோட முழுசா சந்தோஷமா இருக்க முடியலே என்பது தெரிகிறது.

கோர்ட் தீபா கணவரை விசாரிக்கும்போது, ‘அவள் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள முனையும் போது -ஹிஸ்டரிக்கலா கத்துவா, அப்புறம் மயக்கம் போட்டு விழுந்திடுவா. பல நாட்கள் தனிமையில் உட்கார்ந்து எதையோ சிந்திச்சிட்டிருப்பா. வழக்கமா ரிவால்வரை பீரோவுக்குள்ளே வச்சு பூட்டற நான் அன்னிக்கு இரவு டேபிள்ளேயே வச்சுட்டுப் போயிட்டேன். ஆகஸ்ட் 15 -ஞானராஜ் சுடப்பட்டபோதுதான் புரிஞ்சுகிட்டேன்; கொலையும் செய்வாள் பத்தினி’ என்று!’ இப்படி கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தான் கணவன்.

தீபா மனசில் ஏற்பட்ட காயங்கள் பிற்காலத்தில் அவ தாம்பத்ய உறவு கொள்ள தடையாக இருக்க வாய்ப்பு உண்டு என்று மனோதத்துவ டாக்டர் மூலம் உறுதிப்படுத்துகிறான் ராஜேஷ்.

அமெச்சூர் வக்கீல் இவர்

‘மனநலம் பாதிக்கப்பட்டு பைத்தியமாயிட்ட மனைவியோடு வாழ விரும்பவில்லை. விவாகரத்து வாங்கப் போகிறேன் என திருச்சி கோர்ட்ல மனுதாக்கல் செய்துள்ளேன்’ என்கிறான் லாரன்ஸ்.

கோர்ட் வராண்டாவில் ஓடி வந்து கணவனைத் தடுத்த தீபா, ‘தூக்கு தண்டனையைக்கூட சந்தோஷமா ஏத்துக்குவேன். ஆனா நீங்க தர்ற தண்டனையை தாங்க முடியாது லாரன்ஸ்!’ என்று கதறி மயங்கி விழுகிறாள்.

அவளைத்தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறான் ராஜேஷ். மருத்துவமனையில் தீபாவோடு இருந்த ராஜேஷ் அவள் மீது இனம் புரியாத பரிவும் பாசமும் ஏற்பட்டிருப்பதாக டாக்டரிடம் கூறுகிறான்.

‘இப்படிப்பட்ட உணர்வு தீபா வழக்கை நடத்துபவருக்கு வரக்கூடாது; வாழ்க்கை நடத்தறவருக்குத்தான் வரணும்!’ என்கிறார் மனோதத்துவ டாக்டர் சாரதா.

வீட்டுக்கு கார்ப்பெட் தூக்கி வந்த ஆள் -தன் கணவர் தீபாவைத் தூக்கி வந்ததை நினைவுபடுத்த- அவர் கன்னத்தில் அறைந்து விடுகிறாள் சாரதா.

கோர்ட்ல அப்பா எதிர்த்து வாதாடினாலே உனக்குப் பிடிக்காது. புருஷன் எதிர்த்து வாதாடறதை எப்படி பொறுக்க முடியும். அந்த ஆத்திரந்தான் இது! ’என்கிறார் அப்பா எத்திராஜ்.

கண்ணுக்கெதிர்ல அந்த கொலைகாரி தீபாவை அவர் தூக்கிட்டு போறது தப்புன்னு உங்களுக்கு தெரியலியா? எவ்வளவு சொல்லியும் கேக்காம வீட்டை விட்டுப் போயிட்டாரு. அவரா திரும்பி வர்ற வரைக்கும் நான் வலிய போய் பேச மாட்டேன் என்கிறாள்.

பரிதாபத்துக்குரியவள்

என் வீட்டு வேலைக்காரி கூட என் மகளை வாழா வெட்டின்னு சொல்லி அவமானப்படுத்தறா என்று வருத்தப்பட, ‘எத்திராஜ். மகள் மீதுள்ள அளவு கடந்த பாசத்தினால அவளை உங்க கூடவே வச்சிகிட்டீங்க. ராதா அம்மா இருந்திருந்தா நிச்சயமா அவளை கணவன் கூடத்தான் அனுப்பி இருப்பாங்க!’ என்கிறார் சாரதா டாக்டர்.

கல்யாண நாளுக்கு கெளரவம் பார்க்காம, ராதா போய் கணவனை வீட்டுக்குக் கூப்பிடட்டும் என்கிறார் டாக்டர்.

ராதா சர்ச்சுக்குப் போனபோது -ஃபாதர் மைக்கேல் ராஜேஷ் உடைகளை தோட்டத்தில் துவைத்துக் கொண்டிருந்தார்.

‘என்ன ஃபாதர், இந்த வேலையெல்லாம் நீங்க செய்யறீங்க?’ என்று ராதா கேட்க - என்ன சொல்றது பத்தினிங்க செய்ய வேண்டிய வேலைகளை ஃபாதர் செய்யறேன்!’ என்கிறார்.

‘நாளைக்கு எங்க கல்யாண நாள். அவரை வீட்டுக்கு வரச்சொல்லுங்க!’ என்றாள். தீபா வழக்கு முடியும் வரை ராஜேஷ் எதிலயும் கவனம் செலுத்துவான்னு எனக்குத் தோணலை!’ என்கிறார்.

மறுநாள் கோர்ட் வாசலில், ராஜேஷை சந்தித்த ராதா ‘கணவன் மனைவியா இணை பிரியாது நாம வாழணும்னு கோயில்ல வேண்டிகிட்டு வந்தேன். இந்தாங்க பிரசாதம்!’ என்கிறாள்.

உங்க கூட இனிமே நான் வாழ ஆசைப்படலே. அதனால ஆசீர்வாதம் பண்றதில் அர்த்தமில்லை என்கிறான் ராஜேஷ்.

உங்க திறமையை சந்தேகப்பட்டது தப்புத்தான். அதுக்காக நம்ம உறவையே தப்புன்னு ஒதறித் தள்ளறது நியாயமா -யோசிச்சுப் பாருங்க அரசாங்க வக்கீல்ங்கற அந்தஸ்து வேணாம். உங்க மனைவிங்கிற பெருமை கிடைச்சா போதும்-னு கெஞ்சுகிறாள்.

உனக்கு நானிருக்கிறேன்

கோர்ட்டில் 20 வருஷமா ஞானராஜின் டிரைவரா இருந்தவன் சாட்சி சொல்ல வருகிறான். ‘16 வருஷத்துக்கு முந்தி மேரியை அடைய ஞானராஜ் ஆசைப்பட்டு, அவங்களை கொலை செஞ்சதை நான் கண்ணால பார்த்தேன். தீபா சின்னப் பொண்ணு அது இந்த கோரக்காட்சியை பார்த்து அழுதது. நான் சொல்றது சத்தியம். நான் அப்பவே போலீஸ்ல இதைச் சொல்லியிருக்கணும். நான் செஞ்ச பாவத்துக்கு எனக்கு இப்ப புற்றுநோய் வந்திருச்சு. சாகறதுக்குள்ளே ஒரு அப்பாவி ஜீவனை காப்பாத்தத்தான் கோர்ட்டுக்கு வந்தேன்!’ என்பான்.

கோர்ட்டில் இறுதி வாதம் நடக்கும்.

அரசாங்க வக்கீல் ராதா வாதிடும்போது, ‘அம்மாவைக் கொன்றவனை பழி தீர்க்க தீபா சுட்டாள். பழிக்குப் பழி வாங்குவதை நீதிமன்றம் ஒப்புக் கொள்ளக்கூடாது. கொலைகளை ஏதாவது ரூபத்தில் நியாயப்படுத்த விரும்பினால் இந்த நாடே கொலைக்களமாகி விடும். தீபா 14 வருடம் திட்டமிட்டு செய்த கொலை இது. கொலை எதற்காக செய்தாலும் அதர்மம்தான். உணர்ச்சிகள் நீதியை மறைக்கக்கூடாது என்பதற்காகத்தான் நீதி தேவதை கண்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே தீபாவுக்கு அதிகபட்சி தண்டனை வழங்குமாறு கனம் நீதிபதி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று ராதா வாதம் செய்வாள்.

இதற்குப் பதிலாக ராஜேஷ் எப்படி வாதிட்டான். இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி என்ன தீர்ப்பளித்தார்? தீபாவுக்கு விடுதலை கிடைத்ததா? தூக்கு தண்டனை கிடைத்ததா? ராதாவும் ராஜேஷூம் திரும்பவும் இணைந்து குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்களா? விவாகரத்து பெற்றார்களா? என்று சொல்வது மீதிக்கதை.

இனி பிரியவே கூடாது

வாகினி ஸ்டுடியோவில் ஒவ்வொரு தளமாக -சாப்ட்வேர் கம்பெனிக்கும், மருத்துவமனைக்கும், கல்யாண மண்டபம் கட்டவும், வரிசையாக 14 தளங்கள் இடிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம். நீதி மன்றம் செட் ஒரே ஒரு தளத்தில் இருந்தது. மற்ற தளங்கள் இடிக்கப்பட்டு விட்டன. வாஹினி அதிபர் நாகிரெட்டி அவர்கள் எங்கள் வேண்டுகோளை ஏற்று ஒருவாரம் ஒதுக்கித் தந்தார். பெளர்ணமி அலைகள் -படத்தில் நீதிமன்றக் காட்சிகள் 60 சதவீதம் வரும். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த ரத்னவேல் பாண்டியன் அவர்கள் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டைப் படித்து அற்புதம் என்று பாராட்டினார்.

படத்தின் மொத்த நீதிமன்றக்காட்சி வசனங்களையும் என் கைப்பட நானே எழுதி மனப்பாடம் செய்து காலை 7 மணியிலிருந்து 1 மணி வரை ஒரு கால்ஷீட். மதியம் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை ஒரு கால்ஷீட் தினம் 2 கால்ஷீட் வீதம் 14 கால்ஷீட்டில் 60 சதவீத நீதிமன்ற காட்சிகளையும் படம் பிடித்து விட்டு நாகிரெட்டியாருக்கு நன்றி சொன்னோம்.

நீதிபதி மோகனுடன்

தமிழ்நாட்டில் 8 சென்டரில் 100 நாட்கள் ஓடி நியூ உட்லண்ட்ஸில் நீதியரசர் மோகன் தலைமையில் விழா. படத்தைப் பார்த்த நீதிபதி -இன்றைய கோர்ட்டில் இவ்வளவு சரளமாக தமிழ் பேசி வாதம் செய்யும் வக்கீல்களை தேட வேண்டும். அவர்களுக்கு ஆங்கிலத்திலும் புலமை இல்லை. தமிழும் தடுமாற்றம். வெல்டன் சிவகுமார் என்று வாழ்த்தினார்.

இந்த படம் வந்து 36 ஆண்டுகள் ஓடி விட்டன. எம் பாஸ்கர் போல ஆணித்தரமான வாதங்களுடன் உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையை இப்படி படமாக எடுக்க இன்று யாரிடம் போவது?

----

அனுபவிப்போம்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x