Published : 28 Jun 2021 09:59 AM
Last Updated : 28 Jun 2021 09:59 AM

திரைப்படச்சோலை 44: உன்னை நான் சந்தித்தேன்

சிவகுமார்

1984 -ஜூன் 18-ந்தேதி தயாரி்ப்பாளர் கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ், விஜயா கார்டனில் உன்னை நான் சந்தித்தேன் -படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பை ஆரம்பித்தது.

டைரக்டர் கே.ரங்கராஜ் வசனம் E. ராமதாஸ் ஒளிப்பதிவு தினேஷ்பாபு, இசை இளையராஜா.

கொடைக்கானலில் உள்ள ஒரு கல்லூரியில் புரொபசர் வேலையில் சேர வருகிறான் ரகுராமன் (சிவகுமார்), கல்லூரியின் கரஸ்பாண்டண்ட் மகன் முரளி (சுரேஷ்) பஸ் நிலையத்தில் அவரை வரவேற்று வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.

விளையாட்டு உணர்வு மிக்க கல்லூரி மாணவர்களை அவர்கள் போக்கிலேயே சென்று பாடம் நடத்தி, தன் அன்பால் கவர்ந்து நல்ல புரொபசர் என்று பெயர் எடுக்கிறான் ரகுராமன்.

முரளி, இந்துமதி என்ற மாணவியைக் காதலிக்கிறான்- தன் காதலிக்கு டியூசன் சொல்லித்தர இந்துமதி வீட்டுக்கு புரொபசரை அழைத்துப் போகிறான் முரளி.

இந்துவை அவள் வீட்டில் சந்தித்து தான் டியூஷன் எடுக்கப்போகும் விஷயத்தை ரகுராமன் சொல்கிறார். ஹாலில் பெரிய மாலையுடன் சட்டம்போட்டு ஒரு படம் (சரத்பாபு) வைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் என் தந்தை கேப்டன் ஜகதீஷ் என்று சொல்கிறாள் இந்து. நான் குழந்தையாக இருந்தபோதே அவர் இறந்து விட்டார் என்ற விவரத்தையும் சொல்கிறாள்.

இவனா கல்லூரித்தோழன்

தன் தாயாருக்கு குரல் கொடுத்து, மாஸ்டர் வந்துள்ள செய்தியைச் சொல்லி விட்டு, பாடப் புத்தகங்களை எடுத்து வர மாடிக்கு ஓடுகிறாள் இந்து. கையில் காபி கப்புடன் மாஸ்டரை வரவேற்க அம்மா வருகிறாள். ரகுராமனும் அம்மா ஜானகியும் (சுஜாதா) ஒருவரை ஒருவர் பார்க்க பூகம்பம் இருவருக்குள்ளே வெடிக்கிறது.

இந்துவின் தாயார் வேறு யாருமல்ல. ரகுராமனின் வாழ்க்கைத் துணைவி ஜானகி. அதிர்ச்சியிலிருந்து மீண்டு ரகுராமன் எதுவும் பேசாமல் வெளியேறி விடுகிறான். வீட்டுக்குச் சென்று தன் கல்யாண் ஆல்பத்தைப் புரட்டுகிறான். பழைய நினைவுகள் திரைப்படமாக விரிகிறது.

அளவுக்கு அதிகமாக மனைவியை நேசிக்கும் ரகுராமன் மார்க்கட்டிற்கு கறிகாய் வாங்கக்கூட மனைவியை அனுப்ப மாட்டான். மற்றவர்கள் எவரும் மனைவியைப் பார்த்து விடக்கூடாது என்ற சுயநலம்.

தனக்கே அவள் சொந்தம். மனதால் கூட அவள் வேறு யாரையும் நினைக்கக் கூடாது. எந்த ஆளையும் புகழ்ந்து பேசக்கூடாது என்று நினைக்கும் பேராசைக்காரன்.

ஒருநாள் கடற்கரையில் ஜானகியோடு, அவள் கல்லூரித் தோழன் விஜி (மோகன்) பேசுவதைப் பார்க்கிறான். அவனை தன் கணவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு, அவனது அழகையும், விளையாட்டு திறமையையும் சிலாகித்து பேசுகிறாள் ஜானகி. ரகுராமனுக்கு இது பிடிக்கவில்லை.

இரவில் தூங்கும்போது, விஜிக்கும் தன் மனைவிக்கும் நெருங்கிய நட்பு இருந்திருக்குமோ என்று சந்தேகப்படுகிறான்.

கட்டிலுக்கடியிலிருந்து வேவு

அடுத்த 3 நாட்களில் தன் வீட்டில் விஜி பிடிக்கும் பில்டர் வில்ஸ் சிகரெட் துண்டுகள் கிடப்பதைப் பார்க்கிறான். மனைவியிடம் விசாரிக்க இன்று யாரும் உங்களையோ, என்னையோ தேடி இங்கு வரவில்லை என்கிறாள். அடுத்தநாள் ரகுராமன் கல்லூரிக்கு புறப்படும்போது விஜியிடமிருந்து போன் கால். மனைவி பேசினாள். கணவன் மாலை 5 மணிக்குத்தான் வருவார் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிறாள்.

இதைக் கேட்டபின் அவனால் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை.

படுக்கை அறைக்கு சென்று என்னதான் நடக்கப்போகிறது என்று பார்க்க ஒளிந்து கொள்கிறான்.

திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஜானகி புடவைத் தலைப்பு பட்டு, கீழே விழுந்து விடுகிறது. அதை எடுக்க கீழே குனிந்த போது கணவன் படுக்கைக்கு அடியில் படுத்திருப்பது கண்டு திடுக்கிறாள் ஜானகி.

வாக்குவாதத்தின் முடிவில் கட்டிலுக்கு அடியில் படுத்து வேவுபார்க்கும் கணவனிடம் கட்டிலுக்கு மேல் ஒரு பெண் என்ன சுகத்தை அனுபவித்து விட முடியும். இனிமேல் உங்களோடு சேர்ந்து வாழ்ந்தால் அது போலி வாழ்க்கை - என்று கூறி விட்டு அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்கிறான்.

தனிமையில் பொட்டு வச்சு

மறுநாள் கதவு தட்டியபோது அது திறந்திருந்தது. உள்ளே ஜானகி இல்லை. கிளி பறந்து விட்டது. இனியாவது நிம்மதியாக இருங்கள் என்று கண்ணாடியில் எழுதி வைத்து விட்டு அவள் காணாமல் போய் விட்டாள்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் அவளை முதன் முதலாகச் சந்திக்கிறான் ரகுராமன். டியூஷனுக்கு மீண்டும் இந்து வீட்டுக்குச் சென்ற போது, மாலையுடன் தந்தை படம் -தாய் விதவைக் கோலம். மகளுக்கு 16 வயதாகிறது. இதை வைத்து தன் கணவர் சந்தேகப்பட்டிருப்பார் என்று ஜானகி புழுங்கித் தவித்தாள்.

ஒரு நாள் அவனிடம் கேட்டும் விட்டாள். ஆனால் அவனோ, ஒரு முறை ஜானகியை சந்தேகித்ததற்கு 14 ஆண்டுகள் பிரிந்து வாழ நேரிட்டது. இனியும் நான் சந்தேகப்பட வேண்டுமா? என்று திருப்பிக் கேட்டான்.

அவன் கேட்க விரும்பாத போதும் ஜானகி சொல்லி விடுகிறாள். மனைவியை இழந்த பணக்காரன். கேப்டன் ஜகதீஷ் - மகள் இந்து மனைவியின் பிரிவால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, இறக்கும் தருவாயில் அத்தனை சொத்துக்களுக்கும், கார்டியனாக ஜானகியை நியமித்து, ‘இனி. நீங்கள்தான் தாயும், தந்தையுமாக இருந்து குழந்தை இந்துவை வளர்த்து ஆளாக்கி, அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார் ஜகதீஷ்.

திருமணமான புதிதில் அனாவசியமாக ரகுராமன் சந்தேகப்பட்டது. முன்பின் யோசிக்காமல் கோபத்தில் ஜானகி வீட்டை விட்டு வெளியேறியது இரண்டுமே தவறு என்று இருவரும் வருந்துகிறார்கள்.

ஒத்த காலில் நின்னாலும்

கணவன் உயிரோடு இருக்கும்போதே பொட்டை அழித்துக் கொண்டு இந்துவுடன் நடமாடி, தனிமையில் பொட்டு வைத்து கண்ணீரில் அதைக்கழுவ நேர்ந்த கொடுமையை, ரகுராமனிடம் சொல்லி நெகிழ்கிறாள் ஜானகி.

இந்துவுக்கு டியூஷன் எடுக்கும் நேரத்தில் -ஜானகியை அவன் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. அவளுக்கும் கணவனுக்கு அரையும், குறையுமாக பணி விடை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

மனத்தளவில் இருவரும் நெருங்கி விட்டனர். ரகுராமன் ஒரு நாள் அழகிய மலர் ஒன்றை ஜானகிக்குத் தருவதை முரளி பார்த்து விடுகிறான். புரொபசருக்கும் இந்துவின் தாயாருக்கும் தவறான தொடர்பு இருப்பதாக இந்துவிடம் சொல்கிறான்.

தாயாரைப் பற்றி அவதூறாகப் பேசின முரளி கன்னத்தில் அறைந்து விடுகிறாள் இந்து.

ஆனால், ரகுராமன் ஜானகி திருமண நாளன்று, விதவைக் கோலத்தில் வாழும் ஜானகிக்கு பொட்டிட்டு ஆனந்தக்கண்ணீருடன் ரகுராமன் அவளை அணைப்பதை இந்து பார்த்து விடுகிறாள்.

ஜானகி என் மனைவி

அந்த அதிர்ச்சியில், இனி நடத்தை கெட்ட இந்த தாயாருடன் வாழ வேண்டாம் என்று காதலன் முரளி வீட்டுக்கு ஓடி விடுகிறாள் இந்து.

அவர்களின் திருமண நாளில் -இந்துவின் தந்தை எழுதி வைத்த உயிலைக்காட்டி, இந்துவின் உண்மையான தாய் அவளல்ல. ஜானகி, ரகுராமன் மனைவியே தவிர நடத்தை கெட்டவள் அல்ல என்ற உண்மையை உடைக்கிறான் ரகுராமன்.

ஜானகி இந்துவைப் பெற்ற தாயில்லை. வளர்த்த தாய் என்ற உண்மை வெளியான போது, ஜானகி உயிர் பிரிந்து விடுகிறது.

இந்தப் படத்திற்கு வசனம் எழுதிய இளைஞர் E. ராமதாஸ் பின்னாளில் எழுத்தாளர்/ இயக்குநராக பல படங்கள் செய்தார்.

1973-ல் ‘கண்மணிராஜா’- படப்பிடிப்புக்கு வந்த பின் 11 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கொடைக்கானல் வருகிறேன். ஊட்டி அளவுக்கு மக்கள் தொகைப் பெருக்கமும், அதிகமான கட்டடங்களும் இங்கு இல்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.

நீ விதவை அல்ல

வீட்டை விட்டு வெளியேறியபின் என்ன நடந்தது என்பதை ஜானகி கொடைக்கானல் கால்ஃப் மைதானத்தில் ரகுராமனிடம் விளக்குவதாக படமாக்கினார்கள்.

ஜானகி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த ரகுராமன் ஒரு வசனம் சொல்வான். ‘ராமபிரான் சந்தேகப்பட்டான்னு தெரிஞ்சவுடனே தீக்குளிச்சுத்தான்தான், பத்தினின்னு சீதை நிரூபிச்சாளே தவிர, இன்னொருவனோடு ஓடிப் போகவில்லை. என்னுடைய ஜானகி, அந்த சீதையைப் போன்றவள் என்பது எனக்குத் தெரியும்’ என்பான்.

‘நெருப்பை நம்பின ராமனை விட, உங்களை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கு!’ என்று பதில் சொல்வாள் ஜானகி.

E. ராமதாஸ் -சிவா -கே. ரங்கராஜ்

இந்துவுக்கு ட்யூஷன் எடுக்க வந்த ரகுராமன், பூந்தோட்டத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது, ஜானகி பூவாளியில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருப்பாள். எதிர்பாராமல் வாளித்தண்ணீர் ரகுராமன் மேல் தெறித்து அவன் உடைகளை நனைத்து விடும்.

பதறிப்போன ஜானகி ஓடி வந்து அவன் உடைமீது இருந்த தண்ணீரை துடைத்து விடும்போது இந்துவின் காதலன் முரளி அதைப் பார்த்து மேலும் சந்தேகப்படுகிறான். ஜானகி நடத்தை கெட்டவள் என்று அவள் சொல்லக்காரணமான காட்சி இது.

சுஜாதாவும் நானும் நடித்த எல்லாப் படங்களுமே அழுத்தமான கதையும், உணர்வுப் பூர்வமான காட்சிகளும் உள்ள படங்கள்தான். இது அவற்றில் மிகச் சிறந்த படம்.

----

அனுபவிக்கலாம்..

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x