Published : 23 Dec 2015 02:24 PM
Last Updated : 23 Dec 2015 02:24 PM

யூடியூப் பகிர்வு: நிஜ கத்தியை குத்திக் காட்டும் குறும்படம்!

ஒவ்வொரு தனிமனித விருப்பங்களும், தேர்வுகளும் சமூகத்தில் வாழும் அனைவரையுமே பாதிக்கிறது.

அலுவலகத்துக்குச் செல்லும் அவசரத்தில், 2 நிமிட நூடுல்ஸையோ, துரித உணவுகளையோ ஆவலாக அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றிருக்கிறீர்களா? முக்கியமாக நீங்கள்தான் இந்தக் குறும்படத்தைப் பார்க்க வேண்டும்.

பேச்சு சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி ஒன்றைப் படம் பிடிக்கும் கேமராவில் தொடங்குகிறது குறும்படம். அதில் விவசாயிகளின் தற்கொலை பற்றிய புள்ளிவிவரங்களோடு, விவசாயி ஒருவர் பேச ஆரம்பிக்கிறார்.

அடுத்தடுத்த காட்சிகளில், விவசாயிகளின் வலியை நகரத்தில் இருக்கும் மக்கள், ஐயோ பாவம் என்று கடந்து செல்கின்றனர். தண்ணீர்ப் பற்றாக்குறையைப் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வருவதற்காக இளைஞர்கள் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கின்றனர். தண்ணீர்ப் பிரச்சனையைப் போக்கி விவசாயிகளைக் காப்பாற்றச் சொல்லி இளைஞர்களின் குரல், சமூக ஊடகங்களில் உரத்து ஒலிக்கிறது.

பேச்சு சுதந்திரம் நிகழ்ச்சியில், நிகழ்ச்சி இயக்குநர் 'உங்க தண்ணீர்ப் பிரச்சனையைப் போக்க என்னதான் வழி' என்று கேட்க, 'தண்ணீர் ஒரு பிரச்சனையே இல்லை' என்கிறார் அந்த விவசாயி. இந்திய விவசாயிகளுக்காக, ஓயாது குரல் கொடுப்பவர்களால்தான் பிரச்சனை என்று அதிர்ச்சித் தகவலை அளிக்கிறார். விவசாயிகளின் பிரச்சனைக்கு என்னதான் காரணம்? விடை இதோ குறும்படத்தில்.