

புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு வேலையைத் துறந்து, விடுதலைப் போராட்டக் களத்தில் முழு மூச்சாக இறங்கியவர் ராஜேந்திர பிரசாத்.
பிஹாரில் பிறந்து கொல்கத்தாவில் படித்துச் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். விவசாயச் சட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனையைக் கொண்டுவந்தார். 1934-ல் பிஹார் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து கிடந்தபோது மீட்பு பணிக்காக ரூ.38 லட்சம் திரட்டினார். காங்கிரஸ் தலைவர் பதவியை மூன்று முறை வகித்தார். அரசியல் சாசனம் வகுக்கும் பணிக் குழுவுக்குத் தலைமை ஏற்றார்.
1950-ல் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இரு முறை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த பெருமைக்கு உரியவர். 1962-ல் அவருடைய சமூக அரசியல் பங்களிப்புகளைப் போற்றும் விதமாக ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. முத்தாய்ப்பாக, அவர் பிறந்த நாளான 3 டிசம்பர் (1884) தேசிய வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.