

பிரபல பத்திரிகை உலகில் தனி முத்திரை பதித்தவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான எஸ்.பாலசுப்ரமணியன் (S.Balasubramanian) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l சென்னையில் (1935) பிறந்தவர். திரை யுலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த எஸ்.எஸ்.வாசன் இவரது தந்தை. பிரசன்டேஷன் கான்வென்ட், பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். லயோலா கல்லூரியில் பி.காம். படித்தார்.
l கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தவர், பல போட்டிகளில் பங்கேற்றார். 12-வது வயதில் ‘சந்திரிகா’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். சேவற்கொடியோன் என்ற புனைப்பெயரில் நாவல், சிறுகதைகள் எழுதினார்.
l ஜெமினி ஸ்டுடியோ, விகடன் பத்திரிகை நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநராக 1956-ல் இவரை நியமித்தார் தந்தை. 1969-ல் தந்தையின் மறைவுக்குப் பிறகு, இந்நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார்.
l தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி, திரைத் துறையிலும் முத்திரை பதித்தார். எம்ஜிஆர், சிவாஜி, அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா உள்ளிட்ட பிரபலங்களை வைத்து பல வெற்றிப் படங்கள் தயாரித்துள்ளார்.
l மீன் பிடிப்பதில் வல்லவர். கர்நாடகா கூர்க் மீன்பிடி சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர். மீன் பிடிக்கும் போட்டியில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றவர். விவசாயத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். படப்பையில் பண்ணை அமைத்து புதிய விவசாய உத்திகளை அறிமுகப்படுத்தினார். பறவைகளை நேசித்தார். ஏராளமான அரிய வகைப் பறவைகளை வளர்த்து வந்தார்.
l ஆனந்த விகடனில் 1987-ல் வெளியான நகைச்சுவை துணுக்குக்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னை கைது செய்தது தவறு என்று 1 ரூபாய் அடையாள நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கில் வென்ற இவருக்கு ரூ.1000 நஷ்டஈடு வழங்கப்பட்டது.
l சிறையில் இருந்து இவர் கம்பீரமாக நடைபோட்டு வருவதுபோல ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கார்ட்டூன் வரைந்தார் ஆர்.கே.லஷ்மண். அது இவருக்கு மிகவும் பிடித்துவிடவே ஒரிஜினல் கார்ட்டூன் ஓவியத்தை கேட்டு வாங்கினார். ஆர்.கே.லஷ்மண் கையெழுத்துடன் கூடிய அந்த கார்ட்டூனையும், நஷ்டஈடாக கிடைத்த 1000 ரூபாயையும் ப்ரேம் போட்டு தன் அலுவலகத்தில் மாட்டினார்.
l பத்திரிகைகளில் சிகரெட் விளம்பரம் வெளியிடக்கூடாது என்று சட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, விகடனில் சிகரெட் விளம்பரம் வெளியிடுவதில்லை என கொள்கை முடிவெடுத்து, உறுதியுடன் பின்பற்றினார். தந்தை கொண்டுவந்த மாணவ பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தை மெருகூட்டி, ஏராளமான இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கினார்.
l இவரால் பட்டை தீட்டப்பட்ட பல இளம் பத்திரிகையாளர்கள் இன்று பத்திரிகை உலகில் முக்கிய பொறுப்பு வகித்து தங்கள் குருவுக்குப் பெருமை சேர்க்கின்றனர். மணியன், சிவசங்கரி, சுஜாதா, பாலகுமாரன், கிரேஸி மோகன், மதன், ராஜேஷ்குமார் என ஏராளமான எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். ‘‘எனது 50 ஆண்டு பத்திரிகை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அன்றுதான் பொறுப்பு ஏற்றதுபோல செயல்படுவேன்’’ என்று தன்னடக்கத்துடன் கூறுவார்.
l தமிழ் இதழியலின் அபூர்வ மனிதர், இதழியல் பிதாமகர் என்று போற்றப்பட்டவர். திரைத் துறையினரால் எஸ்.எஸ்.பாலன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.பாலசுப்ரமணியன் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி 79-வது வயதில் மறைந்தார். இவர் விரும்பியபடி, மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.