

வானுயரக் கட்டிடங்களின் முன்னோடி பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம். இரும்புத் துண்டுகளை வைத்து 984 அடிக்கு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட அமைப்பு அது. ஆனால் பொறியாளரான குஸ்தேவ் ஈபிள் இதன் வடிவமைப்பைப் பரிந்துரைத்தபோது அது அவலட்சணமான கட்டுமானத் திட்டமாக பலரால் மறுக்கப்பட்டது. 1832 டிசம்பர் 15-ல் பிரான்சில் அலெக்சாண்டர் குஸ்தேவ் ஈபிள் பிறந்தார்.
அறிவாற்றல் மிக்க குஸ்தேவ், இரும்புக் கட்டுமான நிபுணரானார். இரும்பைக் கொண்டு புதுவிதமான பாலங்களைக் கட்டிப் பிரபலமடைந்தார். சுதந்திர தேவி சிலையின் முதன்மைப் பொறியாளரான யூகின் வயலட் 1879-ல் எதிர்பாராமல் மரணமடைந்தார். அதைக் கட்டி முடிக்கும் பொறுப்பு குஸ்தேவுக்குக் கொடுக்கப்பட்டது. பிரான்சில் செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிலையைப் பிரித்து பின்னர் நியூயார்க் நகரில் இணைக்கும் விதமாக நூதனமான கட்டுமான முறையில் சிலையை உருவாக்கினார். ஆனால் இன்றுவரை அவர் பெயரைத் தாங்கி நிற்பது ஈபிள் கோபுரம்தான்.