பீப் பாடல்: எவ்வளவோ கேட்டுட்டோம், இதையும்..!

பீப் பாடல்: எவ்வளவோ கேட்டுட்டோம், இதையும்..!
Updated on
3 min read

தற்போது புது வியாதி ஒன்று பரவியுள்ளது. கண்கள் சிவப்பாகும், ரத்த அழுத்தம் அதிகமாகும், கண்கள் விரியும், பிறரின் தலையைக் கடித்து துப்ப வேண்டும் என தோன்றும், இதெல்லாம் அந்த வியாதிக்கான அறிகுறிகள். வியாதியின் பெயர் (அனைத்தையும்) காயப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளுதல் / புண்படுத்துவதாக எடுத்துக் கொள்ளுதல்.

இந்தியாவில் தற்போது இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. அண்மையில் நடுத்தர வயது பெண்கள் சிலர் அனிருத் மற்றும் சிம்புவின் 'பீப் சாங்'கை எதிர்த்து, அவர்களது போஸ்டர்களை எரித்து போராட்டம் நடத்தியபோது அந்த நோய் பொதுவெளிக்கு வந்தது.

எனவே நானும் அந்த அருவருப்பான வக்கிரம் பிடித்தப் பாடலை கேட்டேன். இவ்வளவு எதிர்ப்புகள் வராவிட்டால் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் ஆச்சரியம்.. அந்தப் பாடல் ஆபாசம் என்பதற்கு வெகு தூரத்தில் இருந்ததாகத்தான் எனக்குப் பட்டது.

அந்தப் பாடல் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுகிறது என ஒருவர் சொல்லியிருந்தார், இன்னொருவர் அந்தப் பாடல் பெண்களை தவறாக சித்தரிக்கிறது என்றார், இன்னொருவர் அந்தப் பாடல் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை ஆபாசமாக வர்ணிக்கிறது என்றார். ஒருவரை பழம் என்று திட்டினால், பழம் என்ற வார்த்தையை திட்டுவதற்காக பயன்படுத்திவிட்டீர்கள் என பழ வியாபாரிகள் சங்கத்திலிருந்து வழக்கு போட முடியுமா?

இந்தப் பாடலில் சிம்பு சில உபயோகமான விஷயங்களை சொல்லியிருக்கிறார். பெண்களை சாட வேண்டாம், தவறான பெண்ணைக் காதலித்ததற்காக உங்களை நீங்களே குற்றம் சொல்லிக் கொள்ளுங்கள் என்கிறார். ஒரு பெண் காதலிக்க மறுத்துவிட்டால், குடிப்பது, திட்டுவது, வன்முறையில் இறங்குவது போன்ற வழக்கங்கள் நம்மை சுற்றி இருக்கும்போது, சிம்பு இப்படி பாடுவது ஒரு முன்னேற்றம் என்றே நினைக்கிறேன். அனைத்து கெட்ட வார்த்தைகளும் பீப் ஒலியால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிவி சானல்களில் கூட இதைத் தானே செய்கிறார்கள்.

கைகளில் வாசகங்கள் ஏந்தி கோபத்தோடு போராடும் இந்த பெண்களில் எத்தனை பேர் இந்தப் பாடலை நிஜமாகவே கேட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. பாட்டின் இரண்டு வரிகள் தான் என்னை சற்று நெளியவைத்தன. ஒன்று, பெண்களை காதலிக்க வேண்டாம், ஓர் இரவு போதும் என்று சொல்லும் வரி, இன்னொன்று பெண்கள் காதலிப்பதே ஆண்களை அழவைக்கத் தான் என்று சொல்லும் வரி. கண்டிப்பாக இது ஒரு பிற்போக்குத்தனமான புலம்பல் தான். ஆனால் கண்டிக்கத்தக்கதா என்ன?

கடந்த வருடங்களில் இதை விட மோசமானவற்றை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கடந்து வந்துள்ளோம். 'மயக்கம் என்ன' படத்தில் வரும் 'காதல் என் காதல் பாடலில்', வெறுப்பாக இருக்கும் நாயகன் பெண்களை 'அடிடா, உதைடா' எனப் பாடுவார். ரஜினி நடித்த 'தங்கமகன்' படத்தில் வரும் 'ராத்திரியில் பூத்திருக்கும்' பாடலில் வரும் வரி 'மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே’ என்றும். இதற்கு பெண் குரலின் பதில், ’மன்னவனின் பசியாற மாலையிலே பறிமாற' என்றும் வரும்.

இந்த தூய தமிழின் மறைமுகப் பொருள் உங்களுக்கு புரியவில்லை என்றால், 'பிரதாப்' படத்தில் பிரபுதேவா ஆடும் 'மாங்கா மாங்கா' பாடலின் வரி உங்களுக்கு நேரடியாக புரியவைக்கும். (தைரியம் இருந்தால் அந்த பாடலைப் பாருங்கள், ஆனால் வேலை செய்யும் இடத்தில் பார்க்க உகந்ததல்ல என்பதை மனதில் கொள்க). எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் கூட சில பாடல்கள் பெண்களைப் போற்றும் கவிதைகள் என்று சொல்லமுடியாது. ஆனால் 'பீப் சாங்' என்பது, தனது காதல் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஒரு நட்சத்திரம் தான் தேர்ந்தெடுத்த பெண்களைப் பற்றிய புலம்பலாக அதைப் பாடியுள்ளார்.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'விவசாயி' படத்தில் வரும் ஒரு பாடலில், 'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள' என்று பெண்களின் நடத்தைக்கு பாடம் எடுக்கப்பட்டிருக்கும். அதில் சில வரிகள், 'உடுப்புகளை இடுப்பு தெரிய மாட்டக் கூடாது' என்றும் 'உதட்டு மேலே சிவப்பு சாயம் பூசக் கூடாது' என்றும் வரும். இவையெல்லாம் எனக்கு சட்டென தோன்றும் சில பாடல் வரிகள். நாம் கடந்த கால வீழ்ச்சிகளை மறந்து விட்டு நிகழ் காலத்தில் இருப்பது தான் மோசமான ஒன்று என நம்புவது வழக்கமாகிவிட்டது இல்லையா?

நான் சொல்ல வந்தது போராட வேண்டிய, பொங்கி எழ வேண்டிய சந்தர்ப்பங்களை தவற விட்டோம் என்பதை அல்ல. இன்றைய காலத்தில் நாம் ஒருவரது (கருத்து) வெளிப்பாட்டை - அது நன்றாக இல்லையென்றாலும் - எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம். கலை, சமுதாயத்தின் நெருக்குதலால் மூச்சு திணறி பெரிய ஆபத்தில் இருக்கிறது என்பதையே சொல்ல முயற்சிக்கிறேன்.

அனைவரும் ஏற்கக் கூடிய வகையிலேயே படைப்புகள் வந்தால் அது நம் மனங்களை மரத்துப் போகச் செய்யாதா? ஒரு நட்சத்திரம் ஒரே மாதிரியான பதில்களையே அளித்தால் அது போரடிக்கிறது என்று புகார் சொல்லும் கூட்டம் தானே நாம்? நகைச்சுவையைப் போல கலைக்கும் எல்லைகள் இருக்கக் கூடாது. பொது மக்கள் எதிர்ப்பார்கள், சிறையில் அடைப்பார்கள் என கலைஞர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களின் நிழலில் வாழக்கூடாது.

இந்த வருட துவக்கத்தில் வெர்சாய் என்ற இடத்தில், ஒரு சிற்பி, பெண்ணின் பிறப்புறப்பு ஒன்றை சிலையாக வடித்து வைத்தார். அது அந்த நாட்டின் பழைய அரசியின் சிற்பம் என்பது கூடுதல் தகவல். சில கண்டனங்கள் எழுந்தாலும் அந்த சிற்பி சுதந்திரமாக தான் இருக்கிறார். தனது அடுத்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதற்கான அர்த்தம் கலை நலிந்துவிட்டது என்பதல்ல. சகிப்புத்தன்மை என்பதே.

இதில் நான் கண்ட சுவாரசியம் என்னவென்றால், சாதாரண மக்கள் யாரும் இது போன்ற படைப்புகளைக் கண்டு பொங்குவதில்லை. எனக்குத் தெரிந்த பலர், 'பீப் சாங்க்' வேடிக்கையாக இருக்கிறது என்றும், சிறுபிள்ளைத்தனமான ஒரு நடிகரின் புலம்பல் என்றும் அதைக் கடந்து விடுகின்றனர். ஆனால் போராட்டத்தில் இருப்பவர்கள்?

போராடும் பெண்களில் சிலர், சிம்பு மற்றும் அனிருத் சிறை செல்லும் வரை ஓயமாட்டர்கள் போல இருக்கிறது. அவர்கள் நிஜமாகவே நமது பிரதிநிதியா? இல்லையென்றால் அவர்களுக்கு அரசியல் நோக்கங்கள் உள்ளதா? சினிமாவைச் சார்ந்த எந்த கண்டனமாக இருந்தாலும் அது அரசியல் கட்சிகளின் புகழைப் பரப்பும் என்பது காரணமா? கடந்த காலத்தில், புகைபிடிக்கும் காட்சிகளை எதிர்த்து, மது அருந்தும் காட்சிகளை எதிர்த்து, படத்தின் தலைப்புகளை எதிர்த்து இதே போன்ற அரசியல் கட்சிப் போராட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம் தானே? இவர்கள் எல்லாம் தன்னலமற்ற, தீயதை களையெடுக்கும் முனைப்புடன் வேலைசெய்பவர்கள் என்பது என்ன நிச்சயம்?

தற்போது இன்னொரு சர்ச்சை உருவாகியுள்ளது. அடுத்த 'எக்ஸ் மென்' படத்தின் ட்ரெய்லரில், படத்தின் வில்லன் தன்னை, ரா, கிருஷ்ணா, யேவோன் என்றும் சொல்லிக் கொள்கிறான். ஆம், நீங்கள் நினைப்பதைப் போல எகிப்து மக்களும், இஸ்ரேல் மக்களும் தங்கள் கடவுள்களின் பெயர்களை ’தவறாக பயன்படுத்தியதாக’ போராடவில்லை. நாம் தான் போராடுகிறோம்.

வெள்ள நீர் வடிந்துவிட்டது. சகஜ நிலை திரும்பிவிட்டது.

© 'தி இந்து' ஆங்கிலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in