Published : 07 Jun 2021 10:37 AM
Last Updated : 07 Jun 2021 10:37 AM

திரைப்படச்சோலை 38: சொல்லத்தான் நினைக்கிறேன்

சிவகுமார்

ஒரு ஏற்றுமதி இறக்குமதி செய்யற கம்பெனி. அதில் மானேஜர் வேலை பார்த்தவர் சிவராமன் (எஸ்.வி.சுப்பையா). நேர்மை, கண்டிப்புக்கு பெயர் போனவர். அதனாலேயே பொறாமை பிடித்த சிலபேர் அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் செஞ்சதோட- பைத்தியம்னு பட்டம் சுமத்தி- வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிடறாங்க.

ஆபீசே கதின்னு வாழ்ந்தவர். எப்பவெல்லாம் ஆபீஸ் நினைவு வருதோ அப்ப நேரா ஆபீஸ் வந்து மானேஜர் சீட்ல உட்கார்ந்து கிளார்க், பியூன்களையெல்லாம் அதிகாரம் பண்ணுவார். உடனே டீச்சரா இருக்கிற அவர் மகள் மஞ்சுவுக்கு(சுபா) போன் போகும். அவர் வந்து சமாளிச்சு அவரை வீட்டுக்கு கூட்டிகிட்டுப் போவாங்க.

புதுமானேஜர் ராகவன் (சிவகுமார்) வந்த அன்னிக்கும் இதே கலாட்டா. மஞ்சு வந்து ராகவனிடம் வருத்தம் தெரிவித்து, அப்பாவை அழைத்துப் போவாள்.

இரண்டு நாள் கழித்து, சிவராமன் மீண்டும் ஆபீஸ் வந்தார். பழையதெல்லாம் சுத்தமா மறந்திட்டு -புது மானேஜரைக் கும்பிட்டு, வருஷப் பிறப்பன்னிக்கு ஆபீஸ் மானேஜரை வீட்டுக்கு அழைத்து விருந்து குடுக்கறது வழக்கம். பெரிய மனசு பண்ணி இந்த ஆண்டு நீங்க வரணும் என்பார் -ராகவன் வருகிறேன் என்பார்.

எங்கிட்ட மோதாதேடா

கமல்(கமல்ஹாசன்) ஒரு ரோமியோ காரெக்டர். பதினைந்து வயது தம்பியை பெட்டிக்கடைக்கு அனுப்பி, கருத்தடை சாதனம் 15 பைசாவுக்கு 3 வாங்கி வரச்சொல்வான். கிளப்பில் ராகவனை கமல் சந்திக்கிறான். இருவரும் நண்பர்கள். இப்போது என்னப்பா செய்யறேன்னு கேட்டதற்கு, ஆடுவேன், பாடுவேன் -‘டிலைட் அதர்ஸ்’ என்பான். ஆடிக் கொண்டே ஒரு அழகியை கணக்குப் பண்ணி நாளை இரவு 10 மணிக்கு கிளப் வாசலில் காத்திரு என்று பேசுவான்.

வருஷப்பிறப்பன்னிக்கு கிவராமன் வீட்டுக்கு சாப்பிடப் போகும் ராகவனை சமையல்காரன் ஆனா ரூனா கோபித்துக் கொண்டு நீங்களே வெளியே போனதுக்கப்புறம் எனக்கு இங்கே என்ன வேலை. என் வீட்டுக்காரி சமையலை சாப்பிட நானும் கிளம்பறேன் என்பான். புறப்படும் சமயம், கமல் வந்து இன்னிக்கு ஆபீஸ்ல ஏகப்பட்ட வேலை, வீட்டில் ஒரே கூட்டம், நிம்மதியா ரெஸ்ட் எடுக்க முடியலை என்பான். நான் வெளியே போறேன்; நாளை காலைதான் வருவேன். நீ வேணும்னா இங்கே ரெஸ்ட் எடுத்துக்கன்னு ராகவன் வீட்டு சாவியை கொடுத்துச் செல்வான்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் விடியும் வரை அந்தப் பெண்ணோடு, குடித்து, புகைத்து, கும்மாளமடித்து, குளியல் அறையையும் அசிங்கம் செய்து போயிருப்பதை காலையில் வந்து பார்த்த ஆனா ரூனா அதிர்ச்சியடைந்து, எப்படிப்பட்ட ஆளை தங்க விட்டிருக்கீங்க என கண்டிப்பான்.

விருந்துக்குப் போன இடத்தில், வருஷப்பிறப்பும் அதுவுமா வலது காலை எடுத்து வச்சு வாங்க சார் என்பாள் சிவராமனின் கடைசி மகள் ரெட்டைவால் புஷ்பா (ஜெயசித்ரா). சமையல் வேலை பார்க்கும் கமலா (ஸ்ரீவித்யா) சடைந்து கொண்டே சமைத்தாலும், ஹீரோ மீது அவளுக்கும் ஒரு கண். விடைபெற்றுச் செல்லும்போது ஜன்னல் மீது காலி டம்ளரை தட்டி சத்தம் செய்து -ஹீரோ தன்னைப் பார்த்து ‘பை பை’ சொல்ல வைப்பாள்.

கமல் அடித்த லூட்டி பற்றி ஹீரோவிடம் ஆனா ரூனா விளக்கியதும் இவ்வளவு பெரிய வீட்டை சும்மா போட்டு வைக்காமல் கீழ் போர்ஷனை சிவராமன் குடும்பத்திற்கு வாடகைக்குத்தர விருப்பம் தெரிவிப்பான் ஹீரோ ராகவன். இந்த திருவல்லிக்கேணி வீட்டுக்கு என்ன வாடகை தருகிறீர்களோ, அதையே கொடுத்தால் போதும், வீடு சுத்தமாக இருக்கும் என்று வேண்டுகோள் வைப்பான்.

மஞ்சு, கமலா, புஷ்பா மூன்று பேருக்கும் ஹீரோவின் குணம், அழகு பிடித்திருக்கிறது. சொர்க்க புரியில் இருப்பதாக உணர்கிறார்கள்.

நான் தோத்திட்டேன் ஹீரோ

ரொம்ப சந்தோஷப்படாதீங்க. நாளைக்கு ஹீரோவுக்கு கல்யாணமானா வர்றவ நம்ம எல்லோரையும் பழையபடி துரத்தி விட்டுடுவா என்கிறாள் புஷ்பா. பொண்ணு பார்த்திட்டாங்களா? யாரு அந்தப் பொண்ணு? வேற யாரு நம்ம மூணுபேர்ல ஒருத்தரா இருக்கலாம்- மூணு பேருமாவே இருக்கலாம் என்று கிண்டலடிப்பாள் புஷ்பா.

ஆளாளுக்கு கனவு காண ஆரம்பிச்சுடுவாங்க. மஞ்சு கனவுல பால் பொங்கி சட்டிலருந்து வடிஞ்சு அடுப்புல விழுகும்.

கமலா (வித்யா) கனவுல சாம்பிராணிப் புகை, மேக மண்டலமா ரூம் பூராவும் வியாபிக்கும்.

வீட்டு வாடகை தரும் சாக்கில் மஞ்சு வருவாள். மாளிகை மாதிரி இவ்வளவு பெரிய வீட்டை ரூ. 100 வாடகைக்கு விடறீங்களே. உங்க போட்டோவைக் குடுங்க. பூஜை அறையில் வச்சு தெய்வமா கும்பிடணும் என்று கேட்பாள்.

‘நேத்து கைமாத்தா வாங்கின சர்க்கரையை கொடுக்க வந்தேன்’ என்று ஹீரோவைப் பார்க்க வந்த கமலா -‘நீங்க இனிமேல் எங்க வீட்டில் சாப்பிடுங்க’ என்பாள். ‘சமையல்காரன் இருக்கானே!’ -‘அவரும் சாப்பிடட்டும்’ என்று சொல்லி விட்டு அக்கா விட்டுப்போன ஹீரோ போட்டோவை நைசாக இவள் லவட்டிகிட்டுப் போய் விடுவாள்.

ஆபீசுக்கு ராகவன் போன பிறகு, மாடிக்குச் சென்று திருட்டுத்தனமாக போன் செய்து- அந்தப் பக்கம் ஹீரோ ஹலோ -என்று குரல் கொடுக்க, மெளனமாக ரிசீவரை மூடிக் கொண்டு சிரித்து ரசிப்பாள் கமலா.

மறுநாள் ராகவன் ஆபீஸ் கிளம்பும்போது தூணை ஸ்பூனால் தட்டி, என் பிரண்டுக்கு ஒரு லெட்டர் எழுதியிருக்கேன். அதுக்கு ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணனும் என்பாள் கமலா.

குடுங்க என்று ஹீரோ அதை வாங்கிப் போவான். ஆபீஸில் அந்த லெட்டரை -காதல் வரிகளை -திருட்டுத்தனமாக ஹீரோ படிப்பதாக கற்பனை செய்து ரசிப்பாள். ஆனால் அவனோ ஸ்டாம்பு ஒட்டி கடிதத்தை கவரில் வைத்து பியூனிடம் தந்து போஸ்ட் பண்ணச் செய்து விடுவான்.

புஷ்பா காட்டிய புகைப்படங்களில் கண்ணடிப்பது போன்ற குறும்பான படத்தை நைசாக எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்வான் ஹீரோ.

குளித்து விட்டு ஈர டவலோடு ஈஸி சேரில் படுத்து ஹீரோ கனவுலகில் மிதப்பதைப் பார்த்த ஆனா ரூனா, ‘நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு தெரியுது. பொண்ணு யாருன்னு சொல்லீடுங்க!’ என்பான். மெளனமாக புன்னகைப்பான் ஹீரோ ராகவன்.

திருட்டுத்தனமாக என் லெட்டரைப் படிச்சுட்டுத்தான் ஹீரோ காதல் கனவு காணறாரு என்று நினைத்துக் கொள்வான் கமலா.

புஷ்பாவின் புகைப்படத்தை வைத்து தன் மாடி அறையில் ஓவியம் தீட்டுவான் ஹீரோ. ஒரு நாள் அவன் அறையில் போன் மணி அடிக்க, அதை எடுத்துப் பேச கமலா ஓடுவாள். அதற்குள் பெல் அடிப்பது நின்று விடும். மாடிப்படிக்கு திரும்பியவள் எதிர்பாராமல் திரைச்சீலை வழியே பார்ப்பாள். அதிர்ச்சி. தன்னைக் காதலிப்பதாக நினைத்திருந்த ஹீரோ புஷ்பா படத்தை வரைந்து கொண்டிருக்கிறான். ஒடிந்து போய் விடுகிறாள். மறுநாள் ஹீரோ ஆபீஸ் கிளம்புவான். தூணில் ஸ்பூன் தட்டப்படும் ஓசை. திரும்பிப் பார்ப்பான். கமலா- கையில் கவர்.

‘என்ன போஸ்ட் பண்ணனுமா?’

’இல்லை இதுவரைக்கும் தபாலுக்கு நீங்க செஞ்ச செலவு 4 ரூபாய் 40 பைசா. ஏன் சார்! என் பிரண்டுக்குன்னு சொல்லி 22 லெட்டர் எழுதிக் குடுத்தனே. அதுல ஒண்ணைக்கூடவா நீங்க படிக்கலே?’

‘அடுத்தவங்களுக்கு போடற லெட்டரைப் படிக்கறது தப்பில்லையா?’

‘உண்மையிலேயே நீங்க ஹீரோதான் சார்!’ என்பாள்.

சிவராமன் வீடு வீடாக காலையில் பேப்பர் போடும் காட்சியை ஆபீஸ் போய்க் கொண்டிருந்த ஹீரோ பார்த்து விடுகிறான். குழந்தைகளுக்கு பாரமா இருக்க விரும்பவில்லை. கைச்செலவுக்கு ஆகுமேன்னுதான் இந்த வேலையைச் செய்யறேன். பொண்ணுங்ககிட்ட சொல்லீடாதீங்கன்னு கையெடுத்து கும்பிட்டுக் கெஞ்சுவார் சிவராமன்.

முதலாளிக்கு இங்க நான் சமைச்சுப்போட்டாலும், வீட்டுக்குப்போய் என் சம்சாரம் சமைச்சதைத்தான் நான் சாப்பிடுவேன் என்பான் ஆனாரூனா. சம்சாரத்து மேல அவ்வளவு பக்தியா? ஒரு நாள் அவங்களை கூட்டீட்டு

வாங்க என்பாள் மஞ்சு. அவ வரமாட்டா. இங்கெல்லாம் அவ வரமாட்டா -என்று சொல்லிப்போவான் அவன்.

‘ஏன் புஷ்பா, காதலிக்கிறது உனக்குப் புடிக்காதா?’

‘புடிக்காதுன்னு இல்லே. தெரியாது. தோணும் போது அதைச் சொல்லிக் கொடுக்க நம்ம வீட்லயே ஆள் இருக்காரு’

‘யாரு புஷ்பா?’

‘அதுதான் சஸ்பென்ஸ். ராமர்கிட்ட சீதைக்கு மட்டும் அன்பில்ல. அனுமானுக்கும் அன்பு உண்டு. நான் அனுமார் ஜாதி!’ என்பாள் புஷ்பா கமலாவிடம்.

கமல் ஏமாற்றிய பெண் ஒருத்தி கருவுற்றிருப்பாள். புஷ்பா இதை அறிந்து நேரே கமல் வீட்டுக்குப் போய் -அவன் தாயாரிடம் சண்டை போடுவாள். பையன் செய்யற தப்புக்கு பணத்தைக் கொடுத்து சரிக்கட்டாம -பையனை திருத்த முயற்சி பண்ணுங்க. நானும் கூட இருக்கிறேன் என்பாள் புஷ்பா.

புஷ்பா அன்றிரவு லேட்டாக வீட்டுக்குப் போவாள். தடிமாடு மாதிரி 3 பொண்ணுங்க. கல்யாணமாகாமல் வீட்டில் இருக்காங்களேன்னு கவலைப்படாம இந்த மனுஷன் தனியா உட்கார்ந்து எதையோ சிந்திச்சிட்டிருக்காரேன்னு அப்பாவை பற்றி அங்கலாய்ப்பாள் மஞ்சு.

உங்க பொண்ணுகளுக்கு மாப்பிள்ளை பாக்கற வேலையை இன்னியிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன் என்பான் ஹீரோ.- கையில் ரூபாய் 10 ஆயிரம்தான் இருக்கு. இதை வச்சு 3 பேருக்கும் எப்படி கல்யாணம் நடத்த முடியும் என்பார் அப்பா. 3 கல்யாணத்தையும் ஒரே மேடையில் வச்சுக்கலாம் என்பான் ஹீரோ.

முதல்ல மஞ்சுவுக்கு மாப்பிள்ளை பாக்கறேன்னு சொன்னதும் தெய்வமா நினைச்ச ஹீரோ நமக்கில்லை என்றதும் பொங்கிய பால் மீண்டும் ரிவர்சில் சட்டிக்குள்ளேயே போய் அடங்கி விடும்.

கமல்-புஷ்பா சந்திப்பு- ‘உன் காமக்களியாட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வந்திருக்கேன். பெண்களை தாயாக நினைக்க பழகிக்க’

‘ஆண்டவன் பெண்களை படைச்சதே அவங்களை அனுபவிக்கத்தான். ஒரு லிஸ்ட் வச்சிருக்கேன். லிஸ்ட் ஆப் யங் கேர்ள்ஸ்- அதுல கடைசில உன் பேரும் இருக்கு. இப்ப ஆர்டரை மாத்திப் போட்டுக்கறேன். கமான் ஹனி!’ என்பான்- பளார் என்று கன்னத்தில் அறைவாள் புஷ்பா.

‘என் படுக்கை அறைக்கு வந்து என்னையே பயமுறுத்தீட்டு போற உன்னை படுக்கை அறையிலேயே சந்திக்கிறேன்!’

‘என் கழுத்தில நீ தாலியக் கட்டினத்துக்கப்புறந்தாண்டா அப்படி என்னை நீ சந்திக்க முடியும்!’ என்று கூறிப் போவாள்.

‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்கப்பா. நீங்க அங்க வந்து ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசி என்று காரியத்தை கெடுத்திராதீங்க. பேசாம இந்த ரூம்லயே உட்கார்ந்திருங்க’ என்று அப்பாவிடம் சொல்வாள் புஷ்பா. மூணே மூணு வார்த்தை மட்டும் பேசறேம்மா என்பார் அவர்.

இந்தக் காலத்தில பையன் மட்டும் சம்பாதிச்சா போதாது. பொண்ணுங்களும் வேலைக்குப் போறதுதான் நல்லது. எங்கே பொண்ணோட அப்பாவைக் காணோம்?’ என்று கேட்பார் மாப்பிள்ளையின் அப்பா. -இதோ வந்திட்டேன்- அப்பா போய் கும்பிடுவார். இவரா அப்பா? -தெருத்தெருவா பேப்பர் போடற ஆளா உங்கப்பா- பெண்களுக்கு அதிர்ச்சி -இனிமே பேப்பர் போடறதை உட்டுடறேன்.

‘பரவால்லே. பையனுக்கு கார் வாங்கித் தந்தா கல்யாணம்!’

‘அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை..!’

‘அப்போ இந்த கல்யாணம் நடக்காது!’’

‘எழுந்து போங்கடா முண்டங்களா!’

மூன்று வார்த்தையால் அவர்களை அனுப்பி வைத்து விட்டார் அப்பா.

ஹீரோவின் நண்பன் கதிரேசன் கல்கத்தாவிலிருந்து மாற்றலாகி சென்னை வந்திருப்பான். பில்லியட்ஸ் ஆடும் போது, பெண் தேடி அலைகிறேன் என்பான் கதிரேசன். மகாலட்சுமி மாதிரி பொண்ணு இருக்கு. வரதட்சணை, அது இதெல்லாம் கேட்க மாட்டேன்னா, கூட்டீட்டுப் போறேன்.

மஞ்சுவை பெண் பார்த்தான் கதிரேசன். பாடச்சொன்னான். பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி -என்று பாடியவளுக்கு இடையில் திக்கி நின்று விட்டது. மீதி பாட்டை கமலா பாடி முடித்தாள்.

மஞ்சுவுக்கு வேற மாப்பிள்ளை பாருங்க. கமலாவை நான் கட்டிக்கிறேன் என்றான் கதிரேசன். சிவராமன் இரண்டே வார்த்தை. ‘பொண்ணா பொறக்கக்கூடாது’ என்பார்.

ஒருநாள் மழையில் நனைந்து கொண்டு வந்த மஞ்சுவுக்கு ஒரு ஏழைச்சிறுமி குடை பிடிப்பாள். குடிசை வீட்டுக்குள் போன மஞ்சு, அம்மா எங்கே என்பாள்.- சாமிகிட்ட போயிட்டாங்க -வரமாட்டாங்க என்பாள் சிறுமி. ஆனா ரூனா குடிசை அது. ஒரு நாள் மஞ்சு குடிசையில் சமைத்து குழந்தைக்கு ஊட்டி விட்டு, ஆனா ரூனா சாப்பிட எல்லாம் எடுத்து வைத்திருப்பாள். ஆனா ரூனா வந்து விடுவான்.

‘பொய்தானே சொன்னீங்க?’ என்பாள். ‘இல்லம்மா அவ இந்த வீடு முழுக்க இருக்கா. என் நெஞ்சில் இன்னமும் குடியிருக்கா. அப்படியிருக்கப்ப, நான் எப்படி வேற பொண்ணை நினைக்க முடியும்?’ என்பான்.

‘ராமாயணத்தை படிச்சிருக்கேன். ராமரை இப்ப நேர்ல பார்க்கிறேன்!’ என்று கலங்கிய கண்களோடு சொல்லி விட்டு போவாள் மஞ்சு.

கார்களை நேசிக்கும் பூர்ணம் விஸ்வநாதன் மனைவி இளம் வயது சுதா. அவள் உடல் தேவையை பூர்த்தி செய்ய பம்பாய்க்கு கடத்த 2 டிக்கட் வாங்கி புறப்படத் தயார் ஆவான் கமல். புஷ்பாவிடம் பூர்ணம் கண்ணீர் விட -தன் கற்பை இழந்து தோழியை காப்பாற்றி பூரணத்திடம் ஒப்படைப்பாள்.

புஷ்பா கற்பில் கறை படியும் நேரம். காற்றடித்து புஷ்பா ஓவியம் தரையில் விழ -டீபாய் மீதிருந்த இங்க் பாட்டிலிலிருந்து மை வடிந்து ஓவியத்தின் மீது விழுந்து கறை உண்டாக்கி விடும்.

பிறந்தநாளன்று உருக்குலைந்த ஓவியமாய் வீடு திரும்புவாள் புஷ்பா. ‘புஷ்பாவுக்கு பரிசு குடுக்கறதை விட -புஷ்பாவையே பரிசா கேக்கறேன். அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!’ -ஹீரோ.

‘அன்னிக்கு ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுப் பாக்கற போட்டில உங்களை தோற்கடிச்சேன். இன்னிக்கு நான் தோத்துப் போயிட்டேன் ஹீரோ. நான் ஒருத்தன்கிட்ட என்னை பறி கொடுத்துட்டேன். அவனையே கட்டிக்கப் போறேன். என்ன எனக்கு வரப்போற மாப்பிள்ளையை பெருமையா ஊர்வலத்தில அழைச்சிட்டுப் போக முடியாது. போனா தெருவுல உள்ளவங்க காறித்துப்புவாங்க. வேற வழியில்லை!’ என்பாள் புஷ்பா.

‘கதிரேசனை கல்யாணம் பண்ணிக்க கமலா சம்மதிச்சிட்டா. புஷ்பா-கமல் ரெடி. மூணாவதா முடிவு செஞ்ச முதல் மாப்பிள்ளையா நான் இருக்கேன் சார். உங்க பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கேளுங்க!’ என்பான் ஹீரோ.

பாலச்சந்தர் ஓவியம்

மனைவியை நெஞ்சில் சுமந்து வாழும் ஆனாரூனாவுக்கு மனைவியாக, ஏற்கனவே தான் முடிவு செய்து விட்டதாக மஞ்சு கூறுவாள்.

மூன்று பெண்களும் மாறி மாறி ஹீரோவைக் காதலித்தார்கள். ஆனால் யாருமே அவனுக்கு மனைவியாக வாய்க்கவில்லை. ஒரே முகூர்த்தத்தில் 3 திருமணத்தையும் முடித்து வைத்தான் ஹீரோ. அடுத்தநாள் அவ்வளவு பெரிய வீடு அமைதியில் உறைந்து இருந்தது.

‘உங்க புண்ணியத்தில் பழையபடி நான் மானேஜர் வேலைக்குப் போறேன். தியாகத்தால் உயர்ந்த ஹீரோ!’ என்பார் சிவராமன்.

‘தயவு செய்து என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க!’

‘ஏன்?’

‘உங்க மூணு பெண்கள்ளே யாரு ஹீரோயின்?’

‘மூணு பேருமேதான்!’

‘அவங்கள்ளே யாரையுமே நான் கல்யாணம் பண்ணிக்கலியே- நான் ஹீரோவா? ஹா ஹா...!’ சிரிப்பு.- படம் நிறைவு.

படம் சூப்பர் ஹிட். இளம்பிறைக்கு வயது 16 என்று டைரக்டரை குமுதம் பாராட்டியிருந்தது.

அவினாசிமணி என்ற கவிஞர், இயக்குநர் கடிதம் எழுதியிருந்தார்.

‘எம்ஜிஆர் என்ற மகாகலைஞன் இமேஜை ‘பூஸ்ட்’ பண்ண 20 கதாசிரியர்கள், இரவு பகலாக மண்டையை உடைத்து காட்சிகளை உருவாக்குவோம்.

ஆனால் சிவகுமார் என்ற வளரும் கலைஞனை இந்த ஒரே படத்தில் எவரெஸ்ட்டின் உச்சிக்கு கொண்டு போய் உட்கார வைத்து விட்டார் டைரக்டர் கே. பாலச்சந்தர். வாழ்க, வளர்க!’ என பாராட்டியிருந்தார்.

---

அனுபவிப்போம்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x