

பெற்றவர்களின் சம்மதத்துடன் வீட்டுக்கு வெளியே மாலையில் சந்தித்துக் கொண்டனர் அருணும், ரட்சிதாவும். அருண் ரட்சிதாவைப் பெண் பார்த்து இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத்தான் இந்தச் சந்திப்பு.
மெரினா பீச்சில் இருவரும் மணல் வெளியில் அமர்ந்திருந்தனர், சுண்டல் விற்கும் பையன் ‘அம்மா சுண்டல்’ என்றான், இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கி ஒன்றை ரட்சிதாவிடம் நீட்டினான் அருண். “ச்சீ.. ஹைஜினிக் இல்லாத இதை யாரு சாப்பிடுவா?” என்று பொட்டலத்தைத் தூர எறிந்தாள் ரட்சிதா.
சற்று நேரம் பேசிவிட்டு காரில் புறப்பட்டனர். அருண் கேட்டான், “ஏன் ரட்சிதா ஓட்டலுக்குப் போய் டிபன் சாப்பிட்டு போலாமா?”
“வேண்டாம் அருண், வண்டியை பீட்சா ஹட்டுக்கு விடுங்க. பீட்சா சாப்பிட்டுட்டு ஜூஸ் குடிச்சுட்டு போவோம்.”
பீட்சா ஹட்டுக்குச் சென்று பீட்சாவையும் ஜூஸையும் உள்ளே தள்ளிவிட்டு ரட்சிதாவை வீட்டில் டிராப் செய்துவிட்டு கிளம்பினான் அருண்.
வீட்டில்...
“அம்மா அருணை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குது. ரொம்ப தன்மையா நடந்துக்கறார். நான் சொன்னபடி கேட்டு நடக்கிற கேரக்டரா தெரியுது. ஐயாம் லக்கி” என்றாள் ரட்சிதா.
அருண்
வீடு...
“அம்மா நாம பார்த்த ரட்சிதா எனக்கு வேண்டாம் வேற பொண்ணைப் பாருங்க” என்றான் அருண்.
அருணின் தாயார் அதிர்ந்தாள்.
“ஏண்டா அழகான படிச்ச பொண்ணு. அவளைப் போய் வேண்டாங்கற?”
“அம்மா பயங்கர மேற்கத்திய மோகத்துல மூழ்கிக் கிடக்கற பொண்ணு அவ, என்னதான் நான் படிச்சு சாஃப்ட்வேர் இஞ்ஜினீயரா இருந்தாலும் நாம கிராமத்துல இருந்து வந்தவங்க, எனக்குள்ள ஒளிஞ்சிருக்கற கிராமத்தானுக்கும் அவளுக்கும் செட்டாகாது, புரோக்கரை அழைச்சு பாந்தமா இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடுங்க” என்றான் அருண்.
புரோக்கருக்கு போன் செய்ய செல்லை எடுத்தாள் அருணின் தாய்.