Last Updated : 29 Dec, 2015 06:42 PM

 

Published : 29 Dec 2015 06:42 PM
Last Updated : 29 Dec 2015 06:42 PM

மான்டேஜ் மனசு 11: ஆனந்தியும் அவனும் தனித்துவ காதலும்!

என் மௌனத்தைப் புரிந்துகொள்கிறாய்

என் அமைதியையும்

மகிழ்ச்சியையும்

ரசிக்கிறாய்



என் அழுகையைச் செவிமடுக்கிறாய்



என் விம்மலைக்

கூர்ந்து கவனிக்கிறாய்

என் பதற்றத்தை

உணர்ந்து கொள்கிறாய்



நிராகரிக்கப்பட்டு

வலியில் துடிப்பதை உணர்ந்து

பதறுகிறாய்



ஒவ்வொரு முறையும்

நேசித்தவர்களால்

நேசிக்கப்பட்டவர்களால்

கைவிடப்படுகையில்

எனக்காக

கண்ணீர் சிந்துகிறாய்.



எல்லாமும் நிகழ்ந்தேறுகிறது

வெகுதூரத்தில் இருந்தபடியே.



நிச்சயமாகச் சொல்கிறேன்

என் வார்த்தைகளை

உன்னால் மட்டுமே

புரிந்து கொள்ள முடியும்.



நான் பரிபூரணமாக நம்புகிறேன்

என் ஆன்மாவை

உன்னால் மட்டுமே

முத்தமிட முடியும்.



- மனுஷி



மழை ஓய்ந்த மாலை நேரம். அலுவலக வேலை முடிந்து அறைக்குக் கிளம்பத் தயாராகும் தருணத்தில் தற்செயலாக நண்பனின் பதவி உயர்வு ஸ்டேட்டஸை முகநூலில் பார்த்து மகிழ்ந்தேன். செல்பேசியில் அழைத்து வாழ்த்து சொன்னேன்.

அவனைப் பார்த்தே சில ஆண்டுகள் ஆனதை பேசும்போதுதான் உணர முடிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகே இருவருக்கும் அலைவரிசை ஒத்துப்போனதும் சரளமாக பேசத் தொடங்கினோம்.

பொறுப்பான பதவி, 50 ஆயிரம் சம்பளம், இத்தனை வருட உழைப்புக்குப் பிறகு கிடைத்த நியாயமான அங்கீகாரம் என்று நண்பன் உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தான். ஆனந்தியைப் பற்றி கேட்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் அந்த நேரத்தில் வந்து தொலைத்தது. தவறாக எதுவும் எடுத்துக்கொள்ளமாட்டான் என்ற எண்ணத்தை நானாக வரவழைத்துக்கொண்டு கேட்டேவிட்டேன்.

சின்ன மௌனத்துக்குப் பிறகு அவனே தொடர்ந்தான்.

''மிரட்டுற மழையில சென்னையே மூழ்குதுன்னு டிவியில பார்த்ததும் போன் பண்ணிப் பேசுனா. ரெண்டு நாளா போன் பண்ணிக்கிட்டே இருந்தாளாம். நெட்வொர்க் பிரச்சினை இருந்ததால எந்த அழைப்பும் போகலைன்னு சொன்னா. அப்புறம் நலம் விசாரிச்சுட்டு வெச்சிட்டா.''

''ஏன் மச்சான். அதுக்குப் பிறகு நீ எதுவும் கேட்கலையா.''

''இல்லை.''

''அதான் ஏன்?''

''என்னோட டீச்சர் வேலைக்கு இன்னொரு கல்யாணம் செட்டாகாதுன்னு ஏற்கெனவே சொல்லிட்டா மச்சி''

''அது தெரிஞ்சுதானே லவ் பண்ணா.''

''முடியும், முடியாது ரெண்டு பதில்தான் டா இருக்கு. உணர்வுபூர்வமான விஷயங்கள்ல லாஜிக் பார்க்க கூடாது. விவாதமும் பண்ண முடியாது டா.''

''சரி மச்சான். வேலையை நல்லா பாரு'' என்று சம்பிரதாயமாகப் பேசி வைத்துவிட்டேன்.

பேசி முடித்த பிறகும் அவன் குறித்த நினைவுகள் கரையைத் தொடும் அலை போல மீண்டும் மீண்டும் வந்து போனது.

சூழலும் சூழல் நிமித்தமுமாக திருமணத்துக்குப் பின் மலரும் புது பந்தம் குறித்த பல கேள்விகளையும் பதில்களையும் சொல்லும் இந்த அத்தியாயம் என்று நம்புகிறேன்.

முதலில் அவனை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

அவனை நான் ஒரு கல்லூரிப் பேச்சுப் போட்டியில்தான் சந்தித்தேன். தமிழிலக்கியம் படிக்கும் மாணவனாக அறிமுகமானான். போட்டிகளில் எப்போதும் வெற்றி அவனுக்குதான் அதிகம் கிடைக்கும். புத்தகமோ, கோப்பையோ, பணமோ எல்லா பரிசுகளும் என்னை எடுத்துக்கோ எடுத்துக்கோ என அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும். அவம் அதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் எளிமையாகப் பழகுவான். அவன் கள்ளம் கபடமில்லாத சிரிப்பே எங்களை நண்பர்களாக்கியது.

என்னை விட வயதில் மூத்தவன்தான். ஆனாலும், மச்சான், மாமா என்று அழைத்தால் போதும். அலாதி பிரியத்துடன் அன்பைக் கொட்டுவான்.

பேராசிரியராகப் போக வேண்டியவன் எதிர்பாராத விதமாக யு டர்ன் அடித்து பத்திரிகைத் துறையில் சேர்ந்துவிட்டான். என்னாச்சு என கேட்டால், எழுத்தின் மீதான காதலும் சமூகம் மீதான பிரக்ஞையுமே இந்த மடைமாற்றத்துக்குக் காரணம் என்று விளக்கம் சொல்லி கண் சிமிட்டினான்.

எத்தனையோ பேரின் இதயங்களைக் கொள்ளை கொண்ட அவன் பேச்சாற்றல் அவன் மனைவியிடம் எடுபடவே இல்லை என்பதுதான் ஆகப் பெரிய சோகம். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மனைவிக்கும், அவனுக்குமான புரிதல் மிகப் பெரிய பள்ளத்தாக்காக விரிந்து கிடந்தது.

யாரையும் புண்படுத்தக்கூடாது, அதட்டிப் பேசக்கூடாது, இருக்குறதை பகிர்ந்துக்கணும், இல்லாதவங்களுக்கு உதவணும், இலவச நூலகம் அமைக்கணும், உச்சபட்சமாக இலவச கல்லூரிக் கல்வி தரும் அளவுக்கு உயரணும் என்று தன் மனைவியிடம் எதிர்கால திட்டங்களை அடுக்கினான். ஆரம்பத்தில் எந்த மறுப்பும் சொல்லாத அவன் மனைவி தேவி அதற்குப் பிறகு விமர்சனம் செய்ய ஆரம்பித்ததில் தொடங்கியது பிரச்சினை.

''தனக்கு மிஞ்சின பிறகுதான் தானமும் தருமமும். முதல்ல நாம பெருசா வளர்வோம். நிறைய சம்பாதிப்போம்'' என்றாள்.

''நம்ம மனசு சீக்கிரம் எதுலயும் திருப்தி அடையாது. காசு சேர்க்க ஆரம்பிச்சிட்டா இன்னும் இன்னும் சேர்க்கணும்னு ராட்சத பூதம் மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கும். நல்ல விஷயத்தை இப்போ தள்ளிப்போட்டா எப்பவும் பண்ண முடியாது'' என்றான்.

அப்போது ஆரம்பித்த சின்ன சின்ன சங்கடங்களும், பிரச்சினைகளும் பிரிவுக்கே வழிவகுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை.

நானும், நண்பர்களும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் நண்பனின் மனைவி பிறந்தகம் சென்றுவிட்டாள்.

நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் தேவி கேட்கவேயில்லை.

''உங்க ஃப்ரண்ட் எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா? அவர் பிராக்டிகலாவே இல்லை. ஏதோ பழைய காலத்து மனுஷன் மாதிரி சிந்திக்குறார். பேசுறார். என்னோட ஆட்டிடியூட் வேற. இது சரியாகும்னு தோணலை. ஆறு மாசத்துல கணக்கே இல்லாம சண்டை போட்டிருக்கோம். அவர் கூட சண்டை போட்ட பிறகு அவரை நினைச்சா பாவமா இருக்கும். ஆனா, நான் நினைச்ச வாழ்க்கை எனக்குக் கிடைக்கலையே. அவர் மாற வேணாம். நானும் மாறத் தயாரா இல்லை. பிரிவுதான் சரியானது'' என்று சொல்லிவிட்டாள்.

நண்பனின் மாமனாரை சந்தித்துப் பேசலாம் என நினைத்தோம். அவர் முகத்தைப் பார்க்கும் சக்தி எங்களுக்கில்லை.

தேவியின் அப்பா தான் நண்பனுக்கு தன் பெண்ணை கொடுக்க மனமுவந்து முன்வந்தார். காரணம், ஊரில் நடந்த திருவிழாவில் நண்பன் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தான். அதில் அவன் தான் நடுவர். எங்கள் குழுதான் பேசியது. அவன் பேச்சைக் கேட்டு சிலாகித்தார். டி.ராஜேந்தர் மாதிரி வரணும்ப்பா என்று வாழ்த்தினார். அப்போதுதான் தெரிந்தது அவர் டி.ஆரின் பரம ரசிகன் என்று. ஞாயிற்றுக்கிழமை ஆனால், சன்டிவி அரட்டை அரங்கத்தைப் பார்க்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டாராம்.

பேச்சாளர் என்பதாலேயே எந்த ஸ்டேடஸும் பார்க்காமல் பெண் கொடுத்தார். ஆனால், இப்படி முடியும் என்று எந்த தகப்பன் தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

மனைவிக்காக பொறுத்துப் பார்த்தவன் பக்கத்து ஊருக்கு குடிபெயர்ந்தான். அம்மாவும், அப்பாவும் சொந்த ஊரிலேயே இருப்பதாக சொல்லிவிட்டதால் அவர்களை கட்டாயப்படுத்தாமல் தனியாக வந்தான். பத்திரிகைத் துறையில் சில சிக்கல்களை கடந்து கொஞ்சம் அவனுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டான். அப்போதுதான் பக்கத்து வீட்டுக்கு ஓர் ஆசிரியை குடிவந்தார்.

ஆசிரியை ஆனந்தி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது.

ஆசிரியர் தின விழா வந்தது. எல்லா மாணவர்களையும் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆனந்திக்கு. வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலேயே பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாதே? அதுவும் பேச்சுப்போட்டி போன்ற என்றால் ஆனந்திக்கு ரொம்ப தூரம். ஆனாலும், மாணவர்களை தயார்படுத்தி பரிசு வாங்க வைப்பதன் மூலம் தன்னை நிரூபித்துவிடலாம் என்ற எண்ணம்.

என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தவள் ஹவுஸ் ஓனர் ஆலோசனைப்படி பக்கத்து வீட்டு பத்திரிகையாளனின் கதவைத் தட்டினாள். அவன் உதவினான். மாணவர்கள் பேச எழுதிக் கொடுத்தான். மாணவர்கள் நன்றாகப் பேசியதாகவும், ஆனந்தியின் உழைப்பு பாராட்டுக்குரியது என்றும் பள்ளிக்கூடத்தில் பேசிக்கொண்டார்கள். ஆனந்தி அவனுக்கு நன்றி சொன்னாள்.

எதேச்சையாக வேலை முடித்து திரும்ப வரும்போதோ, உணவருந்தி விட்டு வரும்போதோ ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் சினேகமாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் சிரிப்பு பேச்சாக, உரையாடலாக, விவாதமாக பரிமாணம் அடைந்தது.

குழந்தைகள் தின விழாவுக்கு மாணவர்களை ஆனந்தியே தயார்படுத்தினாள். ஆனால், இந்த முறை சிக்கல் சிறப்பு விருந்தினர் வழியாக எட்டிப்பார்த்தது. உடல் நலக் குறைவால் சிறப்பு விருந்தினர் வர இயலவில்லை என்று கையை விரித்துவிட்டார். ஒரு மணி நேரத்தில் அவசர விருந்தினர் தேவை. ஆனந்திக்குதான் அந்த பொறுப்பு என்பதால் கையைப் பிசைந்துகொண்டு இருந்தாள்.

அவன் முகம் நினைவுக்கு வரவே, ஹவுஸ் ஓனரிடம் அவன் செல் நம்பர் வாங்கி பேசினாள்.

அவன் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கூடத்தை அலங்கரித்தான். குழந்தைகள் அந்த நாளை அழகாக்கினர்.

சிக்கலான சமயங்களில் ஆனந்தியின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து தலைமை ஆசிரியர் பாராட்டினார். சக ஆசிரியர்கள் ஆனந்தியை மெச்சிப் பேசினர். குழந்தைகள் ஆனந்தியைக் கொண்டாட ஆரம்பித்தனர்.

ஆனந்திக்கும் அவனுக்குமான காதல் மெல்ல அரும்பியது.

ஒரு மாலை வேளையில் காபி ஷாப்பில் தன் காதலைச் சொன்னான். ஆனந்தி அழுது வெடித்தாள்.

திருமணம் ஆகிவிட்டது. கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். அவருக்கு நான் வேலை செய்வது பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிடச் சொன்னார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். சின்ன சின்ன சண்டைகள், தொடர் சந்தேகங்கள் நீண்டன. என்னால் அவருடன் இருக்க முடியவில்லை. பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். இரண்டு வருட வலியை சில நிமிடங்களில் சொல்லி முடித்தாள். கண்கள் கலங்கியிருந்தன.

அவன் எதுவும் பேசாமல் வீட்டுக்கு வந்துவிட்டான்.

ஒரு வாரம் கழிந்தது.

அடுத்த சந்திப்பில் அவனைப் பற்றி ஆனந்தி கேட்டாள். தனிமையும், வெறுமையும் மட்டுமே என் நண்பர்கள் என்று சொன்னான். கடந்த கால வாழ்க்கையை விவரித்தான்.

''நிஜமாத்தான் சொல்றீங்களா?'' என கேட்டாள்.

'கற்றது தமிழ்' ஆனந்தி போல கேட்பது அவ்வளவு சுலபமில்லை. ஆனால், இந்த ஆனந்தியின் கேள்வியில் அப்படி ஒரு மனைவி அவனுக்கு இருந்துவிடக்கூடாது என்ற சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. அதனாலேயே அப்படிக் கேட்டாள்.

அவன் திருமணம் குறித்துப் பேசினான்.

''வேண்டாம்.''

''உன் கணவன் திருந்தி வர வேண்டும் என காத்திருக்கிறாயா?''

''இல்லை. அது முடிந்து போனதா, இனி தொடருமா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஆனால், அதை நான் யோசிக்கவில்லை.''

''வேறென்ன தடை?''

சொல்லத் தயங்கினாள்.

''தயக்கம் இல்லாம பேசு.''

''நீங்க பத்திரிகையாளர். உங்க வட்டத்துல இன்னொரு காதல், இன்னொரு திருமணம் எல்லாம் சகஜம். அதை யாரும் தப்பா பேசமாட்டாங்க. உங்களைச் சுற்றி இருக்குறவங்களும் எந்த கேள்வியும் கேட்காம ஏத்துக்குவாங்க. நான் பாடம் சொல்லித்தர்ற டீச்சர். சின்னதா கீறல் விழுந்தாலும் பெருசு பண்ண்டுவாங்க. ரோல்மாடலாக இருக்க வேண்டிய நீயே இப்படி செய்யலாமான்னு கேட்பாங்க. எனக்காக இல்லாவிட்டாலும், அந்த தப்பான பேச்சுகளைக் கேட்காம இருக்க நான் இப்படிதான் இருக்கணும். மீறினா காயங்களும், வலிகளும் மட்டுமே மிஞ்சும். அதை தாங்கிக்கிற சக்தியும், பலமும் எனக்கில்ல.''

வேலையை விட்டுடு என்று சொல்லத் துடித்தான். ஆனால், சொல்லவில்லை. அவள் முன்னாள் கணவனுக்கும், இவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்று நினைத்து சொல்லாமல்விட்டான்.

கொஞ்சம் விம்மல், நிறைய கண்ணீரோடு பிரிந்தார்கள். ஆனந்தியிடம் எதுவும் சொல்லாமல் டெல்லிக்கு செல்ல தயாரானான். அவன் கிளம்ப இரண்டு நாட்கள் இருந்த இடைவெளியில்தான் நீர் இரவில் இதைப் பகிர்ந்துகொண்டான். அவனை என்ன சொல்லியும் என்னால் தேற்ற முடியவில்லை.

டெல்லியில் இரண்டாண்டுகள் வேலை செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்தான். வந்து ஆறு மாதங்களில் பதவி உயர்வு. இந்த சூழலில்தான் அந்த முகநூல் ஸ்டேட்டஸ்.

அவனும் ஆனந்தியும் இணையவே மாட்டார்களா? என்ற கேள்வி மட்டும் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது.

இந்த இடைவெளியில் தோழி உமாஷக்தி கொடுத்த டிவிடியில் 'இன் தி மூட் ஃபார் லவ்' படம் பார்த்தேன். மிக தாமதமாக படம் பார்த்ததற்காக வருத்தப்பட்ட அதே நேரத்தில் ஆனந்தியும், அவனும் என் மனசுக்குள் வந்துபோனார்கள்.

வாங் கார் வா இயக்கத்தில் வெளியான சீனப் படம் 'இன் தி மூட் ஃபார் லவ்'. திருமணமான ஆணுக்கும், திருமணமான பெண்ணுக்கும் இன்னொருவர் மீது வரும் காதல்தான் கதைக்களம். ஆனால், அதில் எந்த சங்கடமும், ஆபாசமும் இல்லாமல் உன்னதமாகக் காட்சிப்படுத்திய விதத்தில் வாங் கார் வா முக்கியத்துவம் பெறுகிறார். இருவரும் கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுப்பதோ கூட இல்லாமல் தூய்மையான உணர்வுகளின் பிரதிபலிப்பாக காதல் படத்தைப் பார்க்க விரும்பினால் நீங்கள் 'இன் தி மூட் ஃபார் லவ்' படம் பார்க்கலாம்.

1962-ம் ஆண்டு. ஹாங்காங்கில் உள்ளூர் செய்தித்தாளில் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார் சௌ. எக்ஸ்போர்ட் கம்பெனியில் செயலாளராகப் பணிபுரிகிறார் சான். இருவரும் ஒரே நாளில் புதிய வாடகை வீட்டுக்கு குடிபெயர்கிறார்கள். ஒரே சமயத்தில் இருவரும் புதிய வீட்டுக்கு பொருட்களை எடுத்துவருவதால், எந்தப் பொருள் யாருடையது? என்பதில் பணியாளர்களுக்கு குழப்பம் வருகிறது. மாறி மாறி 'இது என் பொருள் இல்லை'. 'இது உங்க பொருள்' என மாற்றிக்கொள்கிறார்கள்.

இரவு நேரத்தில் சாப்பிட நூடுல்ஸ் வாங்க செல்கிறார் சான். சௌவும் அந்த வழியைக் கடக்கிறார். ஒரு நாள் இருவரும் ஒரே சமயத்தில் வீட்டுக் கதவை திறக்கும்போது சினேகமாக புன்னகைத்துக் கொள்கிறார்கள். சௌ சானின் கணவன் பற்றி விசாரிக்கிறார்.

''ஜப்பான் கம்பெனிக்கு வேலை செய்யும் விற்பனைப் பிரதிநிதி. என் கணவர் அடிக்கடி வெளியூர் பயணத்திலேயே இருப்பார்'' என சான் சொல்கிறார்.

''என் மனைவிக்கும், எனக்குமான வேலை நேரம் வேறு வேறு. அவர் பின்னிரவில்தன் வருவார்'' என்று சௌ சொல்கிறார்.

ஒரு நாள் ஒரே உணவு விடுதியில் சௌவும், சானும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

''இந்த ஹேண்ட்பேக் நல்லா இருக்கு. என் மனைவிக்கு வாங்கித்தரலாம்னு இருக்கேன். எங்க கிடைக்கும்?''

''மனைவி மேல அவ்ளோ பிரியமா?''

''இல்லை. ரெண்டு நாள்ல அவங்களுக்கு பிறந்த நாள் வருது.''

''என் கணவர் வெளிநாட்ல இருந்து வாங்கிட்டு வந்தார். இங்கே எங்க கிடைக்கும்னு தெரியலை.''

''சும்மாதான் கேட்டேன்.''

''இந்த டை உங்களுக்கு நல்லா இருக்கு''.

''என் மனைவி வெளிநாடு போனப்போ வாங்கிட்டு வந்தா.''

''இந்த மாதிரி ஒரு டை என் கணவர்கிட்டயும் இருக்கு.''

''உங்ககிட்ட இருக்குற மாதிரி ஒரு பேக் என் மனைவி கிட்டயும் இருக்கு''.

''தெரியும்.''



சௌவின் மனைவியும், சானின் கணவனும் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை மிக நாகரீகமாக இதை விட வேறெப்படி சொல்ல முடியும்?

அதற்குப் பிறகு சௌவும், சானும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள்.

''உங்களுக்கு நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா''.

''இல்லை.''

''உண்மையை சொல்லுங்க.''

''ஆமாம்.''

ஆனால், சௌ இல்லை என்று சொல்ல வேண்டும். அது பொய்யாக இருக்க வேண்டும் என்று சான் ஆசைப்படுகிறாள்.

தனிமையைப் போக்க தற்காப்புக் கலை குறித்த தொடர் எழுத உள்ளதாகவும், அதற்கு உதவ வேண்டும் என்றும் சானிடம் சொல்கிறார் சௌ. சானும் சம்மதிக்கிறாள். தொடருக்கான வேலைகள் நடக்கின்றன. வதந்திகள் தவிர்க்க வேறு இடத்துலயே தங்கலாம் என்கிறார் சௌ.

நான் வரவேணாம்னா அப்படியே எழுதுங்க என்கிறாள் சான். சௌவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அதை அறிந்துகொண்டு சௌ தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள்.

''நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கல'' என்கிறார் சௌ.

''அவங்க எப்படியாவது இருந்துட்டுப் போகட்டும். நாம அப்படி இருக்க வேணாம்'' என்கிறாள் சான்.

சில நாட்கள் இரவு நேரமாவதால் சான் தாமதமாக வருவதை வீட்டு உரிமையாளரான வயதான பெண்மணி இனி இப்படி லேட்டா வராதேம்மா. உன் கணவரை வெளியூருக்கு அனுப்பாதே. சேர்ந்து வாழ்றதுதான் வாழ்க்கை என்கிறார்.

கலங்கிய கண்களுடன் வீட்டுக்கு வரும் சான் அடுத்த நாள் இனி ஹோட்டலில் சந்திக்க வரமாட்டேன் என்கிறாள்.

இரவு மழையில் தெரு முனையில் வழக்கமான இடத்தில் சௌவும், சானும் சந்திக்கிறார்கள்.

''வேலைக்காக சிங்கப்பூர் போறேன்.''

''இப்போ எதுக்கு அங்கே போகணும்?''

''நம்மை தப்பா பேசுறாங்களே''

''அவங்க பேசினா அது உண்மை ஆகிடுமா? அது போய்னு நமக்கு தெரியுமே?''

''நான் கட்டுப்பாடானவன் தான். ஆனா, உன் கணவர் திரும்ப வரக்கூடாதுன்னு நினைக்கிறேன் நான் எவ்ளோ பெரிய மோசம்?''

''நீங்க இவ்ளோ சீக்கிரம் காதல்ல விழுவீங்கன்னு எதிர்பார்க்கல.''

''எங்கே எப்படி ஆரம்பிச்சதுன்னு எனக்கே தெரியலை. எப்படியும் உங்க கணவரை விட்டு நீங்க வரபோறதில்லை. அவரை நல்லா கவனிச்சுக்குங்க. நான் சிங்கப்பூர் கிளம்புறேன்.''

சான் சௌ தோளில் சாய்ந்து குலுங்கி அழுகிறாள்.

சௌ சானுக்காக ஹோட்டல் அறையில் காத்திருக்கிறான். சான் அந்த அறைக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர முடியவில்லை. சௌ தனியாக செல்கிறான்.

சௌ சிங்கப்பூரில் சானின் நினைவுகளோடு இருக்கிறான். ஒரு நாள் அலுவலக தொலைபேசி ஒலிக்கிறது. சௌ பேசுகிறான். சான் சௌவின் குரல் கேட்டுவிட்டு பேசாமலேயே ரிசீவரை வைத்து விடுகிறாள்.

சௌ தன் அறைக்கு யாரோ வந்து போனதை உணர்கிறான். ஆஷ்டிரேவில் உள்ள சிகரெட்டில் லிப்ஸ்டிக் கறை கண்டு சான் வந்து போனதை கண்டுகொள்கிறான்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு வீட்டைக் காலி செய்துவிட்டுப் போன சான் எதேச்சையாக தான் தங்கியிருந்த பழைய வீட்டுக்கு வருகிறாள். சௌ இருந்த வீட்டை கவனிக்கிறாள். அங்கு வேறு ஒருவர் இருப்பதால் கலங்குகிறாள். வீட்டு உரிமையாளரான வயதான பெண்மணி அந்த வீட்டை விற்றுவிட்டு வெளிநாடு போகப்போவதாக சொல்கிறார். விற்கப் போவதாகச் சொன்னதும் சான் தான் அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக விருப்பம் தெரிவிக்கிறாள். அந்த வீடு சானுக்கு சொந்தமாகிறது.

சௌவும் பழைய வாடகை வீட்டுக்கு வருகிறான். தான் தங்கியிருந்த வீட்டில் இன்னொருவர் இருப்பதைப் பார்த்து தன்னிடம் இருக்கும் பரிசுப்பொருளைத் தருகிறார். பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்? என அவன் கண்கள் தேடுகின்றன. குழந்தையுடன் ஒரு அம்மா இருக்கிறார் என்றதும் பார்க்காமலேயே சென்று விடுகிறார். அங்கே இருப்பது சான் தான் என்பது சௌவுக்குத் தெரியாது.

பழைய புத்த மடாலயத்துக்கு சென்று தன் காதல் ரகசியத்தை துளை இருக்கும் சுவரில் சொல்லிவிட்டு அதை புற்களால் மூடிவிட்டு வருகிறான். சௌ, சானை மறக்க முடியாமல் இல்லை. மறக்க விரும்பவில்லை.

சௌ கதாபாத்திரத்தில் டோனி லீங், சான் கதாபாத்திரத்தில் மேகி சங் நடித்துள்ளனர். மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபலித்த விதத்தில் மிக முக்கிய பங்கு இருவருக்குமே உண்டு.

சௌ, சான் அடிக்கடி சந்திக்கும் அந்த மாடிப் படிக்கட்டுகள், ஒளி மங்கிய தெரு, தெரு முனையில் இருக்கும் சுவர், ஒரே மாதிரி ஒலிக்கும் வயலின் இசை இவை யாவும் இருவரின் தனிமையையும், வெறுமையையும் பேசுகின்றன. அதுவும் அந்த வயலின் இசை தனிமையின் கழிவிரக்கத்தை உரக்கச் சொல்கிறது.

இந்தப் படத்துக்கு முடிவு தெரிந்துவிட்டது.

ஆனந்திக்கும், அவனுக்கும் முடிவு தெரியவில்லை. ஆனந்தி இப்போது ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் பட்டதாரி ஆசிரியை. அவன் பத்திரிகையின் துணை ஆசிரியர்.

இன்று வரை இருவருக்கும் தனிமைதான் துணையாக இருக்கிறது.

*

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x