Published : 04 Jun 2021 10:40 AM
Last Updated : 04 Jun 2021 10:40 AM

திரைப்படச்சோலை 37: மாடர்ன் தியேட்டர்ஸ்

சிவகுமார்

தமிழ் சினிமாவை அகில இந்திய அளவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஜெமினி ஸ்டுடியோ வாசனும், ஏவிஎம் செட்டியாரும் என்று சொல்லலாம் என்றால், இந்த மண்ணில் சென்னையை விட்டு 200 மைல் தொலைவில் உள்ள சேலத்தில் 1935-லேயே மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவை உருவாக்க ஆரம்பித்து 1937-ல் இலங்கையில் கவர்ச்சி நடிகையாக இருந்த தவமணிதேவியை அழைத்து வந்து புராணக்கதையில் பத்தினியான ‘சதி அகல்யா’-வாக நடிக்க வைத்து வெற்றி கண்டவர் டி.ஆர்.எஸ் அவர்கள்.

திருச்செங்கோட்டில் மில் அதிபர் பரம்பரையில் பிறந்து சென்னை பிரசிடென்சி காலேஜில் பட்டம் பெற்று, டெக்ஸ்டைல் தொழில் நுட்பம் கற்க லண்டன் சென்றவர் -படிப்பு முடியும் முன் காதல் வயப்பட்டு லண்டன் பெண்மணியை துணிந்து திருமணம் செய்து தாய்நாடு திரும்பியவர்.

1933-ல் சேலம் ‘ஏஞ்சல் பிலிம்ஸுடன் கூட்டு சேர்ந்து 2 படங்கள் தயாரித்தார். படம் தயாரிக்க கல்கத்தா, பம்பாய் என்று அலைவதைத் தடுக்க சொந்தத்தில் உருவாக்கியதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ.

‘சதி அகல்யா’ வந்த ஆண்டிலேயே ‘புரந்தரதாஸ்!’ என்ற படத்தை தமிழ், கன்னடம் இரண்டு மொழிகளிலும் தயாரித்தார்.

உத்தம புத்திரன் -1941

1938-ல் முதல் மலையாளப் படம் ‘பாலன்’ -இந்த ஸ்டுடியோவில்தான் தயாரிக்கப்பட்டது. அதே ஆண்டு முதல் ஸ்டண்ட் படம் ‘மாயா மாயவன்’- இங்கு தயாரானதுதான். அதேபோல 1956-ல் முதல் வண்ணப்படம் எம்.ஜி.ஆர் -பானுமதி நடிக்க -‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ தயாரித்ததும் டி.ஆர்.எஸ்-தான்.

மாடர்ன் தியேட்டர்ஸுக்குள் ஒரு தயாரிப்பாளர் வந்தால் முழுப்படத்தையும் எடுத்துப் போட்டுப் பார்த்து விடும் அளவுக்கு அடிப்படையான -படப்பிடிப்புத் தளங்கள், கேமரா, லைட், மைக் வசதிகள், லேபராட்டரி, ஒலிப்பதிவு செய்ய ரிக்கார்டிங் தியேட்டர், படத்தைப் போட்டுப் பார்க்க ப்ரிவியூ தியேட்டர் - என அனைத்து வசதிகளும் அந்த ஸ்டுடியோவில் செய்து விட்டார்.

திரைப்படத்தொழிலில் கண்போன்றவர்கள் காமிராமேன்கள். ஜெர்மனியிலிருந்து ‘போடோ கூச் வாக்கர், பேய்ஸ் ’ என இரண்டு ஒளிப்பதிவாளர்களை அழைத்து வந்தார்.

பின்னாளில் கட்டபொம்மன், கர்ணன் படங்களின் ஒளிப்பதிவாளர்களான டபிள்யு. ஆர்.சுப்பாராவ், கர்ணன் போன்றவர்கள் அந்த ஜெர்மானியர்களின் சீடர்களே.

1960-களில் புகழ்பெற்ற கேமராமேன்களாக இருந்த ஜி.ஆர்.நாதன், மஸ்தான், ஆர்.எம். கிருஷ்ணசாமி ஆகியோரும் ஜெர்மானியர்களின் சீடர்களே.

ஆயிரம் தலைவாங்கி -1947

மாடர்ன் தியேட்டர்ஸைச் சுற்றியுள்ள 3 கிராமங்களில் இருந்து ஸ்டுடியோவுக்கு ஆட்களைச் சேர்த்தார். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை. அப்படியே ஒரு மணி நேரம் ஆசிரியரை வைத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடங்கள் சொல்லித் தர ஏற்பாடு செய்தார்.

டைரக்டர், கேமராமேன், எடிட்டர் என்று டெக்னீஷியன்களுக்கு பொழுதுபோக ஸ்டுடியோக்களுக்குள்ளேயே -டென்னிஸ் கோர்ட், பேட்மின்டன் கோர்ட், வாலிபால் கிரவுண்ட், டென்னிகாய்ட், டேபிள் டென்னிஸ், கேரம் போர்டு, சடுகுடு விளையாட இடம் - என்று அவர்கள் ஸ்டுடியோவை விட்டு எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லாமல் எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் கிடைக்கும்படி செய்தார் டி.ஆர்.எஸ்.

லைட்பாஸ், மற்றும் உடல் உழைப்பு சம்பந்தப்பட்டோருக்கு சத்துணவாக தினம் ஒவ்வொருவருக்கும் 2 மலைவாழைப்பழம் தரப்பட்டது. டிராயிங் மாஸ்டர், ஒருவரை ஏற்பாடு செய்து ஆர்ட் டைரக்டர், பெயிண்ட்டர், காஸ்ட்யூமர், மேக்கப்மேன் - எல்லோருக்கும் படம் வரைய பயிற்சி கொடுத்தார்.

படப்பிடிப்பு நாட்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவுதான். கதாநாயகி, கதாநாயகன் போன்றோர் வேறு உணவு வேண்டுமென்று கேட்டால் அவர்கள் செலவில் வாங்கித்தருவார்கள்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘குமுதம்’ படத்திற்கு வசனகர்த்தாவாகச் சென்றிருந்தார். மாலைவேளைகளில் எல்லோருக்கும் தவறாமல் மிக்சரும், காபி-டீ ஏதோ ஒன்று வரும். ‘ஒரு ஸ்வீட்டும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்குமே!’ என்றார் கே.எஸ்.ஜி.

ஸ்வீட் வாங்கும் காசுதானப்பா இந்தப் படத்தில் எனக்கு லாபம்- அதாவது ஸ்வீட் தரமுடியாது என்பதை நாசூக்காக சொல்லிவிட்டார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்கும் படங்கள் பற்றி செய்திகளைத் தாங்கி வர ‘சண்டமாருதம்’ என்ற மாதம் இருமுறை இதழைத் தொடங்கி அதில் புகைப்படங்கள், கதைச்சுருக்கம், பேட்டிகள் வெளியிட ஏற்பாடு செய்தார். கவியரசு கண்ணதாசன் மாதம் 130 ரூபாய் சம்பளத்தில் அதில் வேலை பார்த்தார்.

ஆங்கிலக் கதைகள் மீது மோகம் இருந்ததால் அலெக்ஸாண்டர் டூமாஸ் எனும் எழுத்தாளரின் ‘மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ கதையை தழுவி பி.யு. சின்னப்பாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து 1941-ல் 'உத்தமபுத்திரன்' படத்தை உருவாக்கினார்.

மந்திரிகுமாரி -1950

மனோன்மணியம் சுந்தரனாரின் கவிதை நாடகமான ‘மனோன்மணியம்’ படமாக்கப்பட்டது. பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி நடிக்க, படமாகத் தயாரித்து வெளியிட்டார். ஏற்காடு மலையடிவாரத்தில் சேரன், பாண்டிய மன்னருக்கு இடையே நடக்கும் போரை படமாக்கக் குறைந்தது 1500 வீரர்கள், ஒரு நாள் சம்பளம் 3 அணாவீதம் 1943-ல் ஏற்பாடு செய்தார்.

2000 பேருக்கும் சாம்பார் சாதம், தயிர்சாதம்தான், ஹீரோ ஹீரோயின் மட்டுமல்ல, டி.ஆர்.எஸ்ஸும் அவர்களோடு அமர்ந்து அதையே சாப்பிடுவார்.

1939-45 இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலம். எல்லாத் தயாரிப்பாளர்களும் ஆங்கிலேயே அரசாங்கத்தை ஆதரித்து ஒரு யுத்த படம் எடுக்க வேண்டும் என்று உத்தரவு வந்தது. இவரே ‘பர்மா ராணி’ என்ற பெயரில் படத்தை எடுத்து ஆங்கிலேயேர் -ஜப்பான் ராணுவம் இடையே நடக்கும் போரைப் படமாக்கினார். ஆங்கிலேயேருக்கு எதிரான ஜப்பான் ராணுவத் தளபதியாக டி.ஆர்.எஸ்., அவர்களே நடித்துப் படமாக்கினார். கதாநாயகன் ஹொன்னப்பா பாகவதர் -கதாநாயகி வசந்தா.

கவிஞர் பாரதிதாசனின், ‘எதிர்பாராத முத்தம்’ நாவல் ‘பொன்முடி’ என்ற பெயரில் படமாக வடிவெடுத்தது. எல்லீஸ் ஆர் டங்கன். ஆங்கிலேயர் அவருக்கு தமிழ் சரிவரத் தெரியாததால் கே.சோமு உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இப்படி உதவி இயக்குநராக அங்கு வேலை பார்த்தவர்கள் முக்தா சீனிவாசன், கே.எஸ்.சேதுமாதவன். உதவி ஒளிப்பதிவாளராக ஏ.பி.நாகராஜன் இங்கு வேலை பார்த்தார்.

ராஜகுரு நம்பியார்

‘குண்டலகேசி’ என்ற பாத்திரத்தை தழுவி, ‘மந்திரி குமாரி’-நாடகத்தை கலைஞர் எழுதி கே.என்.ரத்தினம் நாடகக்குழுவில் அரங்கேற்றி நடத்திக் கொண்டிருந்தார்கள். மாயவரத்தில் அந்த நாடகத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் பார்க்கப் போனபோது முக்தா சீனிவாசன் உடன் சென்று ஆங்கிலத்தில் கதையை விளக்கிச் சொன்னார்.

டைரக்டருக்குக் கதை பிடித்துப் போய் 1.12.1949-ல் ஒப்பந்தம் போட்டு மாடர்ன் தியேட்டர்ஸ் கதையை வாங்கிக் கொண்டது.

'மந்திரிகுமாரி' பட டைட்டிலில்தான் முதன் முதல் கதை வசனம் மு.கருணாநிதி என்று போடப்பட்டது.

‘திகம்பர சாமியார்’ துப்பறியும் கதை. இதில் நம்பியார் கதாநாயகனாக 13 வேடங்களில் நடித்தார். அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது.

தியாகராஜ பாகவதரை வைத்து ‘பில்ஹணன்’ படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு, எந்த நடிகருக்கும் செய்து தராத தனி மேக்கப் ரூம் - தனி டாய்லட் வசதிகள் எல்லாம் செய்து விட்டார்.

இல்லறஜோதி -1954

படப்பிடிப்புக்கான நாள் நெருங்கியபோது திடீரென்று லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைதாகி சிறை சென்றதால் அந்த திட்டமே நிறைவேறாமல் போய்விட்டது.

1952-ல் செளகார் ஜானகி மாடர்ன் தியேட்டர்ஸில் நடித்த ‘வளையாபதி’ படமாயிற்று. இல்லறஜோதி 1954-ல் வெளிவந்தது. படம் முழுக்க கவியரசர் கண்ணதாசன் வசனம் எழுதிட, ‘அனார்கலி’- ஓரங்க நாடகம் மட்டும் கலைஞர் எழுதித் தந்தார். ‘வண்ணக்கிளி’ படத்தில் ஆர்.எஸ்.மனோகரை ஹீரோவாக உயர்த்தினார்.

‘கைதி கண்ணாயிரம்’ படமும் மனோகர் புகழைக் கூட்டிய படம். அதேபோல மனோரமாவைக் கதாநாயகியாக வைத்து ‘கொஞ்சும் குமரி’ படத்தை 1963-ல் உருவாக்கியதோடு உலகை விட்டு மறைந்து விட்டார். டி.ஆர்.எஸ். 85 படங்கள் அவரால் உருவாக்கப்பட்டவை.

அதன் பிறகு அவரது மகன் ராமசுந்தரம் இயக்கத்தில் ஜெய் நடித்து வரவேற்பைப் பெற்றவைதான் 'வல்லவன் ஒருவன்', 'இரு வல்லவர்கள்', 'சிஐடி சங்கர்' போன்றவை.

மாடர்ன் தியேட்டர்ஸில் நான் 1980-ல் 'துணிவே தோழன்' என்ற படமும் 1981-ல் அன்று முதல் இன்று வரை என இரண்டு படங்களில் நடித்தேன்.

. துணிவே தோழன் -1980

2-வது படத்தில் ஸ்டண்ட், மசாலா படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையை ஷண்முகப்ரியன் எழுதியிருந்தார்.

கீழ்மட்டத்திலிருந்து புறப்படும் ஒருவன் நியாயமான வழியில் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடத் தொடங்கினால் என்ன மாதிரி சிரமங்களை, பிரச்சினைகளை, சோதனைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை நாம் வாழ்க்கையில் யதார்த்தமாக பார்க்கும் சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட உணர்வுபூர்வமான கதை.

நெடுஞ்சாலையோரம், லாரிகளில், பஸ்களில் பயணிப்போருக்கு உணவளிக்க பரோட்டா கடை நடத்தும் ஹீரோ. பெற்றோர் சொந்த ஊரில் ஒரு மில்லில் பர்மனன்ட் வேலை செய்கிறார்கள். தம்பியும், தங்கையும் உள்ளூர் பள்ளியில் இறுதி ஆண்டில் படித்து வருகின்றனர். ஹீரோவுக்கு அவர்கள் மீது கொள்ளைப் பிரியம்.

விடுமுறை நாளில் ஹீரோ சொந்த ஊர் போனார். தன் செல்லத்தம்பி மஞ்சள் காமாலையில் இறந்து போனதாக பெற்றோர் அதிர்ச்சியான செய்தியை தெரிவித்தனர். உண்மையில் ஜிடிஆர் மில் முதலாளி தன் மகளுக்கு இந்தத் தம்பி காதல் கடிதம் எழுதினான் என்று சந்தேகப்பட்டு அடியாட்களை வைத்து அவனை மரத்தில் கட்டி வைத்து சவக்கால் அடித்தே கொன்றுவிட்டார்கள். அப்பா அம்மாவுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து வாயை அடைத்து விட்டார்கள் என்று பின்னால் தெரியவருகிறது.

ஹீரோ எரிமலையாகப் பொங்கி போலீஸ் ஸ்டேஷன் சென்று ஜிடிஆர் முதலாளி மீது புகார் கொடுத்தான். ஆனால் அவனை கேலி செய்து, மிரட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டது போலீஸ்.

ஜிடிஆர் முதலாளிகள் அண்ணன் தம்பி இரண்டு பேர். தம்பி ஆண்மையில்லாதவன். ஆனாலும் அந்நியப் பெண்களைப் படுக்கையில் அணைக்கும் வெறி பிடித்தவன்.

பள்ளி ஆசிரியை ஒருத்தியின் மகளை பலவந்தமாகத் திருமணம் செய்கிறான் தம்பி. பெயருக்குத்தான் அவன் கணவன். அண்ணன் அவளை அனுபவிப்பவன்.

சி.ஐ.டி.சங்கர் -1968

மணமக்களின் தாய்க்கு இந்தக் கொடுமை தெரிந்து அதிர்ச்சியில் உயிரை விடுகிறாள்.

மகளோ -புகுந்த வீட்டின் அக்கிரமங்களை, அநியாயங்களை உலகத்திற்கு தோலுரித்துக் காட்டாமல் நான் சாக மாட்டேன் என்று சபதம் செய்கிறாள்.

ஜிடிஆர் மில்லை விஸ்தரிக்க முனிசிபாலிட்டி அங்கத்தினர்களுக்கு ‘மால்’ வெட்டி சரிக்கட்டி மில்லைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலத்தை வளைத்து முள்வேலி போடுகிறார் முதலாளி.

பொதுமக்களுக்கு கழிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்ட அந்த இடத்தை அநியாயமாக அபகரித்ததை தட்டிக் கேட்க ஊர் மக்களைத் திரட்டிப் போகிறான். முதலாளியை நேரில் பார்த்த மக்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.

கடைசியில் ஹீரோவின் மனைவி ஆபரேசனுக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை முதலாளியே கட்டி -தொழிலாளர்கள் நன்கொடை வசூலித்ததாகப் பொய் சொல்லி லட்சம் செலவு செய்து வீடும் வாங்கிக் கொடுத்து அவனைக் குடிகாரனாக்கி -ஹீரோவே முதலாளியைக் கொலை செய்யும் நிலைக்கு எப்படி தள்ளப்படுகிறான் என்பது கதை.

ஸ்டண்ட் படங்களையே எடுத்தவர்கள் சென்டிமென்ட் படம் எடுக்கலாம் என்று இதைப் படமாக்கினார்கள். எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

30 ஆண்டு இமயமலையில் கொடி பறக்க விட்டவனும் இல்லை; 30 ஆண்டு தெருவில் பிச்சை எடுத்தவனும் இல்லை; மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனாலும் மாடர்ன் தியேட்டர்ஸ் 45 ஆண்டுகளில் 116 படங்கள் தயாரித்து வெளியிட்டது சரித்திர சாதனைதான்.

---

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x