

ஜோதி குமாரி என்ற பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. சென்ற ஆண்டு பொதுமுடக்கக் காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி, கால்நடையாகவே பயணித்தனர்.
அவர்களில் ஒருவர் ஹரியாணாவின் குருகிராமில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த மோகன் பாஸ்வான். 2020 ஜனவரியில் இவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது. தந்தையைக் கவனிப்பதற்காக பிஹாரிலிருந்து குருகிராமுக்கு வந்திருந்தார் ஜோதி குமாரி. திடீரென்று அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் ஆட்டோ ஓட்ட முடியவில்லை. வருமானம் இல்லாமல் இங்கே இருப்பதற்கு பதில் சொந்த ஊருக்குச் சென்றுவிட முடிவெடுத்தார்கள் தந்தையும் மகளும். கையில் இருந்த 600 ரூபாயில் 500 ரூபாய்க்கு ஒரு சைக்கிளை வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள்.
15 வயதேயான மெல்லிய தேகம் கொண்ட இந்த இளம்பெண், தந்தையைப் பின்னால் அமர வைத்து இரவு, பகல் பாராமல் பிஹார் நோக்கிப் பயணம் செய்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இடைவிடாமல் பெடலை மிதித்து, சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். 1200 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணித்த ஜோதி குமாரியைப் பற்றிய செய்தி இந்திய அளவிலும் உலக அளவிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஜோதி குமாரியின் மன வலிமையையும் தந்தை மீது அவர் வைத்திருந்த அன்பையும் இவான்கா ட்ரம்ப் உட்படப் பலரும் பாராட்டினார்கள்.
ஓராண்டுக்குப் பிறகு மோகன் பாஸ்வான் மாரடைப்பால் மறைந்துவிட்டார். ஜோதி குமாரியின் அத்தனை உழைப்பும் வீணாகிவிட்டன.
பெருந்தொற்றுக் காலத்தில் ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயர் துடைக்காததும் ஓர் இளம் பெண்ணை நீண்ட தூரம் பயணம் செய்ய வைத்ததும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களா? இவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை அல்லவா? இன்னும் எத்தனை மகள்கள் தந்தைக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்களோ! எத்தனை தந்தைகள் உயிரை விட்டிருக்கிறார்களோ?