Published : 31 May 2021 10:25 AM
Last Updated : 31 May 2021 10:25 AM

திரைப்படச்சோலை 36: தீர்ப்புகள் திருத்தப்படலாம்

சிவகுமார்

ராஜேஷ் ஒரு கம்பெனியின் லீகல் அட்வைஸர். அவன் மனைவி ராதா மனநலம் பாதிக்கப்பட்டவள். பிரியா என்று 5 வயதில் அவர்களுக்கு ஒரு மகள்.

ஓர் இரவு அவன் வீடு திரும்பியபோது -ஆடைகள் கலைந்த நிலையில் -நெற்றிப்பொட்டு அழிந்திருக்க -காதில் ஒரு தோடு கழன்று தரையில் கிடக்க, ராதா படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். 2 காபி கப்கள் டீபயாயில்- ரிக்கார்டு பிளேயர் ஓடிக் கொண்டிருக்கிறது... பிளேயரை நிறுத்தப்போனவன் காலில் ஏதோ இடற பேரதிர்ச்சி. 6 அடி தாண்டிய ஒரு தாடிக்கார இளைஞன் கழுத்து அறுபட்டு ரத்த விளாறியில் திறந்த வாயுடன், மூடாத கண்களுடன் மல்லாக்க கிடக்கிறான். நீண்ட வாள் ரத்தக்கறையுடன் பக்கத்தில் கிடக்கிறது.

அவன் பேண்ட் பாக்கட்டில் ராஜேஷ் கை விட்டான். ஒரு விசிட்டிங் கார்டு. லாரன்ஸ் என்ற பெயரில்.. உடனே பழைய நினைவு. டூ இன் ஒன் டேப்ரிக்கார்டர், ரேடியோ ஒன்றை ராதா ராஜேஷிடம் காட்டி, ‘இது என்னுடைய லாரன்ஸ் அண்டு கோவில் வாங்கியது!’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

கள்ளக்காதலனுடன் நான் இல்லாத நேரத்தில் உறவு வைத்திருக்கிறாள் ராதா. ஏதோ ஒரு பிரச்சனையில் அவனை வெட்டி விட்டாள். கொலையும் செய்வாள் பத்தினி- என்று தோன்ற போலீஸிற்கு போன் செய்கிறான். ராதா அப்பாவிப் பெண். அவளை ஏமாற்றிக் கெடுக்க வந்தவனை அவள் வெட்டியிருக்கக் கூடும். அவசரப்பட்டு போலீசுக்கு போன் செய்து அவள் வாழ்க்கையை நாசமாக்கி -நம் வாழ்க்கையை பாலைவனமாக்க வேண்டாம் என்று போனை ‘கட்’ பண்ணுகிறான்.

6 அடி தாண்டிய சத்யராஜ் தோளில்

ரத்தக்கறைபட்ட தரையை துடைத்து விட்டு கைகளுக்கு ‘க்ளவுஸ்’ மாட்டி இறந்த சடலத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துப் போய், இறந்தவன் காரில் கிடத்தி, அந்தக் காரை ஒரு மலை உச்சியில் கொண்டு சென்று கீழே உருட்டி விட்டு வந்து விடுகிறான்.

ஜோதி தியேட்டரில் முதல் காட்சி முடிந்து மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று இவன் தோளில் ஒரு கை. அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தால் படம் பார்த்து விட்டு வந்த ஒரு நண்பர்.. இங்கே எப்படி ராஜேஷ் என்கிறான் அவன். படம் பார்க்க வந்தேன் என்று பொய் சொல்கிறான். கார் எங்கே? சர்வீசுக்கு விட்டிருக்கிறேன். ‘சரி வாங்க. என் காரில் டிராப் பண்ணுகிறேன்!’ என்கிறான் நண்பன்.

வீட்டுக்குப் போனால் அதிர்ச்சி. வாசலில் இரண்டு கான்ஸ்டபிள்கள். ‘படிச்ச நீங்களே இப்படி செய்யலாமா சார்?’ மீண்டும் அதிர்ச்சி. ‘பீட்’ புக்கை எங்க சார் எடுத்து வச்சிருக்கீங்க?’ அவ்வளவுதானா? ‘இதோ எடுத்துத் தருகிறேன்!’

காலை பேப்பரில் மலையுச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட காரில் பிணம். அது தற்கொலையல்ல, கொலை. கார் மலையில் உருள்வதற்கு முன்பே உடலிலிருந்து உயிர் பிரிந்திருக்க வேண்டும். போலீஸ் துப்பு துலக்குகிறது...

லாரன்ஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போனால், சேல்ஸ்மேன் மூலம் லாரன்ஸ் ஒரு பெண் பித்தன். ஆசைகாட்டி அவன் வலையில் வீழ்த்திய பெண்கள் ஏராளம் என்கிறான் அவன்.

மகிழ்வான தருணம்

வீட்டுக்கு வந்தால் மனைவி ஒரு கதை சொல்கிறாள். கல்யாணமான ஒரு பெண்ணுக்குக் கள்ளக்காதல். ஒரு நாள் இருவருக்குமிடையே வாக்கு வாதம் வந்து அந்தக் காதலனை வெட்டி விட்டாள் அவள்- என்கிறாள். இது கதையா? ராதா உண்மையில் செய்த கொலையைச் சொல்கிறாளா? இப்படி ‘டிவிஸ்ட்’ மேல் ‘டிவிஸ்ட்’ வைத்த 2 மணி நேரம் 5 நிமிடம் ஓடும் படத்தில் கடைசி காட்சி வரை குற்றவாளி யார் என்று ஊகிக்க முடியாமல் ஒரு திரில்லர் படத்தை எடுத்திருக்கிறார் எம். பாஸ்கர், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்.

ராஜேஷாக நானும், ராதாவாக அம்பிகாவும், பிரியா குட்டியாக மீனாவும், லாரன்ஸாக புதுமுகம் சத்யராஜூம்- அவர் மனைவி ஷீலாவாக சத்யகலாவும், இன்ஸ்பெக்டராக வி.கோபாலகிருஷ்ணனும், மனோத்துவ டாக்டராக எஸ் ஆர். வீரராகவனும் நடித்துள்ளோம். நகைச்சுவைக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், வனிதா.

ஒரு காட்சி, ஒரு வசனம் அனாவசியம் என்று சொல்ல முடியாது. சீவி, சீவி எழுதி 6 மாதம் முன்பே கதை - 3 மாதங்கள் முன்பே திரைக்கதை வசனம் எழுதி -ஹீரோவுக்கு எத்தனை காட்சிகள் -என்னென்ன உடைகள்,

எந்த காட்சியில் என்ன டிரஸ் போட வேண்டும் என்பதையெல்லாம் துல்லியமாக குறிப்பிட்டு, ஹாலிவுட் பாணியில், ஒரு அடி பிலிமை கூட வீணாக்காமல் படமெடுத்த அற்புதமான டைரக்டர் பாஸ்கர்.

கணவன் குழந்தையாக

பேசிய சம்பளத்தை பைசா பாக்கியில்லாமல் கொடுக்கும் பழக்கமுள்ளவர். என்ன கொஞ்சம் முன்கோபி. வார்த்தைகளை சூடாக பிரயோகிப்பார். கொடுத்த தேதியில் நடிகை நடிக்க வராவிட்டால் வக்கீல் நோட்டீஸ் விடுவார்.

படத்தை எடுத்து முடித்து, எடிட்டிங், ரீ ரிக்கார்டிங் எல்லாம் முடித்து முதல் பிரதி எடுத்து விநியோகிஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினார்.

முந்தைய படம் ‘சூலம்’ -சரியாகப் போகாததனால், புதுமை டைரக்டரின் இந்தப் படம் எபு்படிப் போகுமோ என்று அவர்களுக்கு சந்தேகம்.

படம் நன்றாக இல்லை என்று சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. ஏதாவது சொல்லி வைத்து, படம் நன்றாக ஓடி விட்டால், அவர் முகத்தைப் பார்க்க முடியாது போய் விடும் என்று மெளனமாக வெளியேறினார்கள்.

ஒரு பிரிண்ட், விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டே கிழிந்து போய் விட்டது. பின்னர் துணிந்து தானே தமிழகமெங்கும் திரையிட்டார். படம் ரேஸ்குதிரை வேகத்தில் திரையிட்ட இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு. மெளனமாகப் போன விநியோகஸ்தர்கள் அந்தந்த ஏரியாவுக்கு, இப்போது பாஸ்கர் வைத்த விலைக்கு வாங்கிப் போனார்கள்.

கொலை செய்தி அதிர்ச்சி

எல்லா ஊர்களிலும் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிற்று. சென்னை சஃபையர் தியேட்டர் காம்ப்ளக்ஸில் எமரால்டு தியேட்டரில் 25 வாரங்களுக்கு மேல் நிச்சயம் ஓடும் என்றார் மானேஜர்.

ஆனால் திடீரென்று ‘நிழல்தேடும் நெஞ்சங்கள்’ படம் தீபாவளி முதல் எமரால்டு தியேட்டரில் வெளியாகிறது என்று தினத்தந்தி இதழில் விளம்பரம் வந்தது.

அப்படத்தைத் தயாரித்தவர் ஒரு அரசியல் பிரமுகர். ஒரு காலத்தில் திருப்பூர் பொருட்காட்சியை மணிமாறன் கான்ட்ராக்ட் எடுத்திருந்த போது அவருக்கு நாடகம் போட்டுக் கொடுத்தேன். அதெல்லாம் இப்போது நியாபகத்தில் வைத்திருப்பார்களா?

உத்தமியை சந்தேகிக்கலாமா

எம்.ஜி.ஆர் அவர்களின் உறவினர் குஞ்சப்பனைச் சந்தித்து நன்றாக ஓடும் படத்தை மாற்றி, அதன் வெற்றியைத் தடை செய்ய வேண்டாம்; அவர்கள் படத்தை வேறு தியேட்டரில் வெளியிட உதவி செய்கிறோம். எமரால்டை விட்டுத்தரும்படி அவரிடம் கேட்கச் சொன்னேன்.

அது ஒன்றும் சரிப்படவில்லை. தீபாவளிக்கு எங்கள் படம் ப்ளூ டைமண்ட்-க்கு அதே காம்ப்ளக்ஸில் மாற்றப்பட்டது. விதி வலியது. பிடிவாதமாக எமரால்டை பறித்து வெளியிட்ட படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ப்ளூ டைமண்ட்டிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தீர்ப்புகள் திருத்தப்படலாம் 200 நாட்கள் தாண்டி ஓடியது.

கொலைகாரன் நானா

1983-ஜனவரி 30-ந்தேதி உட்லண்ட்ஸ் ஓட்டலில் சட்டப்பேரவைத் தலைவர் க.ராஜாராம், ஏவிஎம். சரவணன், டைரக்டர் கே. பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், டி.ராமானுஜம், வலம்புரி சோமநாதன் போன்றோர் வாழ்த்திப் பேச 100-வது நாள் விழா ஜாம், ஜாம் என்று நடந்தது.

லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிக்கு என் மொத்த சம்பளம் பணம் ரூ. 25 ஆயிரத்தில் ரூ.15 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினேன்.

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x