Published : 24 May 2021 09:48 AM
Last Updated : 24 May 2021 09:48 AM

திரைப்படச்சோலை 34: ரோசாப்பூ ரவிக்கைக்காரி

சிவகுமார்

‘வண்டிச்சக்கரம்‘ படக்கதையை வினுசக்கரவர்த்தி விவேகாநந்தா பிக்சர்ஸ் திருப்பூர் மணி நிறுவனத்தில் சொன்னபோது- மார்க்கட்டில் தண்டல் வசூலிக்கும் ஹீரோ-சாப்பாட்டுக்கூடை தூக்கும் ஹீரோயின் -இருவரையும் மையமாக வைத்த அந்தக் கதை எல்லோரையும் கவர்ந்தது.

ஜார்ஜ் டவுன் கொத்தவால்சாவடி, சென்னையில் பெரிய மார்க்கட். ஆனால் அது இண்டு இடுக்கில், சந்து பொந்தில் அதிக ஜன நெருக்கடி உள்ள பகுதி என்பதால் விசாலமான, அழகான மார்க்கட் மைசூரில்தான் உள்ளது என்று அதைப் பார்த்து வர டைரக்டர் தேவராஜ், சத்யராஜ் இருவரும் புறப்பட்டு போனார்கள். சத்யராஜ் அப்போது புரொடக்சன் மானேஜராக கெளரவ வேலை பார்த்து வந்த நேரம். பெங்களூருவில் இறங்கி மைசூருக்கு ரயில் ஏற வேண்டும். அவர்களை வரவேற்ற பெங்களூரு நண்பர் அமுதவன் -இங்கு முகுந்தா தியேட்டரில் ஒரு படம் மிகுந்த வரவேற்பு பெற்று ஓடுகிறது. அதைப் பார்க்கலாமா என்று கேட்டிருக்கிறார். மூவரும் அந்தப் படத்தைப் பார்த்ததும் -வினுசக்கரவர்த்தி கதையில், வில்லன் சுபாவமுள்ள கதாநாயகன். அதைச் செய்யும் முன், இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும். சிவகுமாருக்கு டெய்லர் மேட் ரோல் என்று முடிவு செய்து அந்தப் படத்தின் உரிமையை எழுதி வாங்கி வந்தனர். அப்படத்தின் பெயர், ‘பரசங்கத கெண்டே திம்மா’ என்பது. நம்மூர் ஜெயகாந்தன் மாதிரி ஆலனஹள்ளி கிருஷ்ணா என்ற எழுத்தாளர் எழுதியது.

வெத்தல வெத்தல வெத்தலையோ

படத்தின் திரைக்கதை வசனம் எழுத கொங்கு மண்ணில் பிறந்த நாடகாசிரியர் தம்பி விஜயகிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்தோம். தேவராஜ்-மோகன் இயக்கம். ஆர்.என்.கே பிரசாத் ஒளிப்பதிவு. இளையராஜா இசை. கதையில் வரும் விதவைத்தாய் கம்பீரமானவள் -மகன், மருமகள், பேரக்குழந்தைகளை, பிரம்பை வைத்து மிரட்டும் வாத்தியார் போல, தன் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாக வைத்திருப்பார்.

ஆவுடையம்மாள் என்ற என் தாயார் பெயரை அந்த கதாபாத்திரத்திற்கு சூட்டினோம். என் தாயார் மெளனமாக நினைத்ததை சாதிப்பவர். இந்த கதாபாத்திரம் எல்லோரையும் மிரட்டி சாதிக்க வைப்பது. பெங்களூரு குப்பி வீரண்ணா நாடகக்குழுவில் ஆண் வேடம் போட்டு நடித்த நாகரத்தினம்மா என்ற அம்மையாரை ஒப்பந்தம் செய்தோம்.

கதாநாயகி அழகு, இளமை, கவர்ச்சி, குழந்தை மனம் உள்ளவளாக தீபாவை ஒப்பந்தம் செய்தோம்.

மற்ற எல்லா வேடங்களுக்கும் நாடக நடிகர்கள், துணை நடிகர்களை ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஒரே மாதத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டதால் மற்ற பாப்புலர் நடிகர்கள் தேதி, சேர்ந்தாற்போல ஒரு மாதம் கிடைக்காது. கிடைத்தாலும், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டக் கதை என்பதால் அழகான, சிவப்பான ஆண் பெண்கள் தேவைப்படவில்லை. காடுகரையில் உழைக்கும், கறுத்த நிற மக்கள் வேடத்தில் நடிக்க துணை நடிகர்களே போதும் என்று முடிவு செய்தோம்.

‘லூஸ் மோகன்’ என்றொரு காமெடி நடிகர், முத்துராமன் மனோரமா காலத்து நாடக நடிகர் மணி, இருவரையும் எனது சீடர்களாக நடிக்க வைத்தோம். ஒருவன் பெயர் கொன்னவாயன்(திக்கித்திக்கி பேசுபவன்), அடுத்தவன் சட்டித்தலையன் (தலைமுடி சட்டி கவிழ்த்த மாதிரி வெட்டிக் கொண்டிருப்பான்).

ரோசாப்பூ திருமணம்

பெண்களின் அழகு சாதனமான சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர், வளையல், உள்பாடி, கண்மை எல்லாவற்றையும் கூடையில் அடுக்கி, அதைத் தலையில் சுமந்து கிராமம், கிராமமாகப் போய் வியாபாரம் செய்பவன் செம்பட்டை, அவனுக்கு ஒரு அண்ணன் (ஹெரான் ராமசாமி), அண்ணி, 7 வயசு மகள். செம்பட்டையின் தாய் மாமன் பட்டணத்தில் வசிப்பவர். அவருக்கு நந்தினி என்று அழகும், கவர்ச்சியும் உள்ள ஒரு மகள். உறவு விட்டுப் போகக்கூடாது என்று அக்கா மகன் செம்பட்டைக்கு மணம் முடித்து வைக்கிறார்.

இவன் எழுத்து வாசனை, நாகரீக வாசனை இல்லாத காட்டுமிராண்டி. முதுல் இரவு முடிந்து வெளியே வந்து அடுப்புக்கரியை வாயில் போட்டு நறநறவெனக்கடித்து பல் விளக்கும் லட்சணத்தைப் பார்த்ததால் எந்தப் பொண்ணும் சொல்லாமல் ஓடி விடுவாள்.

கிராமத்துப் பெண்கள் அதிகாலை எழுந்து வாசல் பெருக்கி, சாணித்தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, ஆடு,மாடுகளுக்கு தீனி வைத்து, அடுப்படி வேலை கவனிக்கப்போவார்கள். ஆனால் பட்டணத்து சொகுசான

வாழ்க்கைக்கு பழகிப்போன நந்தினி, சூரியன் உதித்து 8 மணி அளவுக்கு மேலே வந்த போதுதான் மெதுவாக எழுந்து கொட்டாவி விட்டவாறு வெளியே வருவாள்.

செம்பட்டை சந்தைக்கு கிளம்புவான். ‘என்னங்க! காபித்தூள் ஒரு பொட்டலம் வாங்கிட்டு வாங்க!’ என்பாள். அந்தப் பக்கம் அம்மா உடனே ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். காலையில சோத்துத் தண்ணி குடிக்கிறதுதான் உடம்புக்கு நல்லது!’ என்பாள். ‘எனக்குக் காபி பொடி வேணும்’ -சரி. ‘அதெல்லாம் வேண்டாம்’- சரி.

‘‘என்னடா அவ கேட்டாலும் சரிங்கறே, நான் கேட்டாலும் சரிங்கறே! ஆம்பிளையாடா நீ? தூ!’’ காறி மகன் முகத்தில் தாய் துப்புகிறாள். அம்மாவையும் எதிர்த்துப் பேச முடியாது. மனைவியையும் ஒதுக்க முடியாது. தன் வலியை, கோபத்தை, ஆற்றாமையை வாசலில் குறுக்கே வந்த நாய்க்குட்டி மீது காட்டி -‘சள்ளெ’ன்று அதை எட்டி உதைக்க, ‘அவ் அவ் அவ்’ - என்று அது கத்திக் கொண்டே போகும்.

மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ

ஏற்காடு மலை உச்சியில் சேர்வராய் ஓட்டல் பகுதியிலிருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் மலைகள் சூழ்ந்த பின்னணியில் வாழவந்தி என்ற சிறுகிராமம். மலைப்பகுதியில் விளைந்த ஒரு வகைப்புல்லைக் கொண்டு கூம்பு போன்ற வடிவத்தில் கூரை வேய்ந்த வீடுகள். அந்தக் கூரை வீடுகளில் பள்ளிக்கூட வாசனை இல்லாத ஆதிவாசி மக்களைப் போல -எளிமையான மக்கள். ஆடு, மாடு, கோழிகள், நாய், பூனை இவற்றுடன் ஆனந்தமாக வசிக்கிறார்கள். அந்தப் பின்னணியில் படப்பிடிப்பைத் தொடர்ந்தோம்.

‘வெத்தலை வெத்தலை வெத்தலையோ’- மலேசியா வாசுதேவன் அற்புதமாக பாடிய பாடல், தொங்கான் ஓட்டம் ஓடிக் கொண்டே சீடர்கள் பின்னால் நாய்க்குட்டி போல ஓடி வர -பாக்கட்டில் உள்ள பொறி கடலையை ஒரு வாய் மென்று கொண்டே செம்பட்டை ஓடுவது அவ்வளவு இயற்கையாக இருக்கும்.

பாட்டி வழியில் வடை சுட்டுக் கொண்டிருப்பாள். தன் கண்ணால சேதியை அவரிடம் சொல்வான். ‘சந்தைக்கு போறேன் என்ன வாங்கி வரட்டும்!’ என்று கேட்பான். ‘ஏலக்கா -பத்தமடைப்பாயி- சின்னக்கருப்பட்டி அரை வீசை, அப்படியே ஒரு மூக்குப் பொடி டப்பி’ என்பாள் கிழவி.

தண்ணிப் பந்தல் தாத்தாவிடம் கல்யாண சேதி சொல்வான். ஓமக்குச்சி நரசிம்மன். பிரம்பு போல ஒல்லியான மனிதர்- ஓட்டைப் பற்களுக்கிடையில் சிரித்து- ‘செம்பட்டை கல்யாணமானா முதல் ராத்திரி, முதல் ஆசீர்வாதம் - உம் பொண்டாட்டிக்கு நான்தான் பண்ணுவேன்!’ என்பார். இவன் கேணத்தனமாகச் சிரித்துக் கொண்டே சரி என்பான்.

ராசிபுரத்துக்கு முன்னால் 3 மைல் தூரத்தில் அத்தனூர்- மல்லூர் உள்ளது. விஜயகிருஷ்ணா மாமனார் தோட்டம் அங்குள்ளது. வெண்ணத்தூர் -ஆட்டையாம்பட்டிக்கு இடையே உள்ள ஏரியில் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான் -பாடலில் மாங்காத்தோப்போரம், நான் மறுநா போனேனாம். தேங்கா பூவாட்டம் நான் சிரிச்சுகிட்டிருந்தேனாம். அடி ஆத்தாடி.. என் ஓரமா... என் மாமன் வந்தான் அங்கே.. ஒரு மாங்கா தந்தா திங்க. எனத்துக்குன்னேன், ஏதுக்குன்னான்- சின்னபுள்ளை நான்.. ஆசையில மதிய மயங்கி வாங்கிட்டனாம்... தின்னுபுட்டனாம் -பகுதியை வசனகர்த்தா கிருஷ்ணாராஜையே நடிக்க வைத்து படமாக்கினோம்.

வயலோரத்தில் எலி பிடிக்க புகைமூட்டம் போடுது- கவலை பூட்டி நீர் இறைப்பது- மாட்டுக்கு லாடம் அடிப்பது, சிறுவர்கள் சடுகுடு விளையாடுவது -போன்ற கிராமிய நிகழ்வுகளைப் படமாக்கினோம்.

சடுகுடு விளையாட்டில் எதிராளியை தொட்டு விட்டு ஒரு சிறுவன் திரும்பி ஓடி வரும்போது, அவர்கள் இவன் கோவணத்துணியை பிடித்து இழுப்பார்கள். போனால் போகட்டும் என்று கோவணத்தை அவிழ்த்த விட்டு அம்மணத்தோடு ஓடி வந்து நடுக்கோட்டைச் சிறுவன் தொட்டபோது கூட்டமே கரவொலி எழுப்பிச் சிரித்தது.

மனைவி தொடையில் அம்மா சூடு

அந்த ஊருக்கு வரும் வேட்டைக்காரன் மாணிக்கம் (சிவச்சந்திரன்) போட்டிருந்த மிலிட்டரி யூனிபாரமும், கையில் துப்பாக்கியுடன் நின்ற அவனின் கம்பீரத்தோற்றமும் நந்தினியை கவர்ந்து விடுகிறது.

செம்பட்டையின் அப்பாவித் தனத்தைச் சாக்காக எடுத்துக் கொண்டு பார்வையாலேயே நந்தனிக்கு வலை விரிக்கிறான் மாணிக்கம்.

ஊருக்குள் மாணிக்கம் -நந்தினி பற்றி கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் மனைவி மீது செம்பட்டைக்கு சந்தேகம் எழவில்லை. என்றபோதிலும் மனம் சஞ்சலப்படுகிறது. ‘இந்த சூழலுக்கு புலமைப்பித்தன் அவர்கள் எழுதிக்

கொடுத்த, ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சகிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க. மேயுதுன்னு சொன்னதில நாயமில்ல கண்ணாத்தா- என்று பாடல் படத்தின் உயிர்நாடி.

படம் துவங்குவதற்கு இரண்டு மாதங்கள் முன்பே இளையராஜா இசையில் இந்தப்பாடல் ஒலிப்பதிவாகி, என்னிடம் அனுப்பி இருந்தார்கள். வார்த்தையும், அதில் சொல்லப்பட்ட வலியும், எஸ்.பி.பி குரலும் அப்படியே உறைந்து போக வைத்து விட்டன.

இந்தப் பாடலை படத்தின் கடைசி நாட்களில்தான் படமாக்க வேண்டும் என்று டைரக்டரிடம் அப்போதே சொல்லி விட்டேன். 35 நாட்களில் காலையில் பனி, பகலில் வெயில், இரவில் கடுங்குளிர் -இதில் காய்ந்து, கருத்து உதடெல்லாம் வெடித்து ரத்தம் கசியும் நிலை.

பிப்ரவரியில் ஒரு நடு இரவில் படமெடுத்துக் கொண்டிருந்தபோது காமிராமேன் ஆர்.என்.கே. பிரசாத் குளிர்தாங்காமல் நடுங்க ஆரம்பித்து விட்டார்.

100-வது பட விழா எம்ஜிஆர்

மறுநாள் பகல் படப்பிடிப்பு முடிந்து அத்தனூர் பகுதிக்கு மாலையில் காமிரா, லைட், மைக் எல்லாம் வேன்களில் ஏற்றி அனுப்பியாயிற்று. ஏற்காட்டிலிருந்து கீழே போக எனக்கு ஒரு ஓட்டை வேன் கிடைத்தது. அதில் மத்தியானம் சாப்பிட்ட பிளேட்டுகள், டிபன் காரியர்கள், தண்ணி கேன்கள் ஏற்றியாயிற்று. வேன் ஊறிக் கொண்டு சென்றது. ‘ஏம்பா கொஞ்சம் வேகமாப் போகலாமே!’ என்றேன். ‘பிரேக் சரியா புடிக்க மாட்டேங்குது சார். மலையிலிருந்து கீழே இறங்கறோம். வேகமா போனா பிரேக் புடிக்காட்டி பாதாளத்துல உழுந்திருவோம்!’ என்றார். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் -கதவைத் திறந்து வைத்துக் கொண்டே பயணம் செய்தேன். மலையிலிருந்து இறங்கி மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்கு அருகே வரும்போது வேன் குலுங்கியது.

‘என்னாச்சு?’

‘கிளட்சு பிளேட் ஒடைஞ்சிருச்சு. வண்டி நகராது...!’

இரவு 11.30 மணி. நடந்தே 4 ரோடு வந்து டாக்ஸி பிடித்து என்னோடு ஓட்டை வேனில் வந்தவர்களுக்கு டிபன் வாங்கிக் கொடுத்து விட்டு கோகுலம் போனேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. யூனிட் ஆட்களுக்கு ஸ்பெஷல் பேட்டா. இரவு 12 மணி தாண்டினால் இன்னொரு பேட்டா எல்லோருக்கும் தர வேண்டும்.

படப்பிடிப்பை ரத்து செய்யச் சொல்லி நான் அனுப்பின ஆள் போவதற்குள் 12 மணி தாண்டி ஜெனரேட்டர் ‘ஆன்’ பண்ணி விட்டார்கள். அடுத்த பேட்டா மீட்டர் விழுந்து விட்டது. அந்த ஆள் கோகுலம் ஓட்டலுக்கு ஓடி வந்து, ‘சார், லைட்ஸ் ஆன் பண்ணீட்டாங்க. வேற வழியில்லே. வாங்க!’ என்றார். அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு 40 மைல் போய் விடியற்காலை முதல் ஷாட் எடுத்தோம்.

கண்களெல்லாம் குழி விழுந்து முகமெல்லாம் வறண்டு போய், உதட்டிலிருந்து வெடிப்பு வழி, ரத்தம் கசிய கிழிந்து போன சட்டை, அரை டிராயரில் குத்த வைத்து உட்கார்ந்து நான் நடித்ததை -அந்த நேரத்திலும் கூடியிருந்த கூட்டத்தில் ஒரு குறும்புக்கார இளைஞன் -போன வாரம் ‘முதல் இரவு’ படம் பார்த்தேன். சிவகுமார் செக்கச்செவேல்ன்னு இருந்தார். நேர்ல கரிச்சட்டி மாதிரி இருக்காரு. நாம சினிமாவுல நடிச்சா, இவரை விட நல்லா இருப்போம் மாப்ளே!’ என்றார். மெளனமாகக் கேட்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

சிவாஜி தலைமையில் 100வது நாள் விழா

படத்தின் கிளைமேக்ஸ் வேட்டைக்கார மாணிக்கம்(சிவச்சந்திரன்) வலையில் நந்தினி (தீபா) விழுந்து விடுவாள். ஒரு மாலைப் பொழுதில் சந்தையிலிருந்து தன் குடிசைக்கு திரும்பிய செம்பட்டை, மாணிக்கமும், நந்தினியும் அணைத்தவாறு குடிசைக்குள் படுத்திருப்பதை ஜன்னல் வழியே பார்த்து அதிர்ந்து பைத்தியம் பிடித்தவன் போல், நடந்து போய் ஏரித்தண்ணியில் மூழ்கி இறந்து விடுவான். குப்புறப்படுத்த நிலையில் மிதந்து கொண்டிருந்த பிணத்தை திருப்பிப் பார்த்த கொன்னவாயனும், சட்டித்தலையனும், ‘அண்ணே! எங்களை இப்படித் தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டீங்களே!’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுவார்கள்.

படம் சூப்பர் ஹிட். என்னுடைய 100-வது படம் அதன் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் எம்ஜிஆர் தலைமை தாங்கினார். நூறாவது படத்தின் 100-வது நாள் விழாவுக்கு சிவாஜி தலைமை ஏற்று எல்லோருக்கும் கேடயங்கள் வழங்கினார்.என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம்.

ஆனால் என் சின்னம்மா மகன் முருகசாமி அண்ணா படம் பார்த்து விட்டு, ‘ஏம்பா. 100-வது படம்கிறது எவ்வளவு

பெருமைப்படற விஷயம். உனக்கு வேற நல்ல கதையே கிடைக்கலியா? பொண்டாட்டி அவுசேரியா போறா. நீ குட்டையில உழுந்து தற்கொலை பண்ணிக்கிறே. சே! என்ன படம்யா இது!’ என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

-----------------

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x