ஒரு நிமிடக் கதை: மணமகன் தேவை

ஒரு நிமிடக் கதை: மணமகன் தேவை
Updated on
2 min read

அந்த தினசரியில் மண மகன் தேவை விளம் பரத்தில் தன் மகனுக்கு தோதானதாக தோன்றும் மண மகளின் தொடர்பு எண்ணைக் கண்டதும் அதற்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தார் முகுந்தன்.

“எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் சிவராஜ், எம்சிஏ படிச்சிருக்கான். ஐடி கம்பெனி யில் 25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறான். எனக்கு அரசு உத்தியோகம். 60 ஆயிரம் சம்பளம். உங்க மணமகன் தேவை விளம்பரத்தைப் பார்த்தேன். நீங்களும் என்னைப்போல அரசு உத்தியோகஸ்தர் என்று தெரிந்து கொண்டேன். நீங்க விருப்பப் பட்டா பெண்ணோட ஜாதகத்தை, புகைப்படத்தை அனுப்புங்க. நாங்களும் அனுப்பறோம்!’’

என பேசிக் கொண்டே போன வரை இடைமறித்தது எதிர் முனைக்குரல்.

“ஐயா. உங்க உத்தியோகம் எல்லாம் சரி. உங்கள் மகன் சம்பளத்தை வச்சு குடும்பம் நடத்தமுடியுமா? நாளைக்கு பொண்ணு கண்ணை கசக்கிட்டு வந்து நின்னா என்ன செய்ய முடியும்? நாங்க எதிர்பார்க்கிறது. 40 ஆயிரத்துக்கு மேல மாப்பிள்ளைக்கு சம்பளம் வரணும். அரசு வேலையா இருக்கணும். சொந்த வீடு இருக்கணும். மாப்பிள்ளை தண்ணியடிக்கக்கூடாது.

பைய னுக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் இருக்கணும். கூடப் பிறந்த ஒரு சகோதரி, சகோதர னாவது இருக்கணும். நாளைக்கு நல்லது கெட்டது செய்ய உறவு கள் வேணும் இல்லீங்களா? இது மாதிரி நிறைய விஷயங் கள் இருக்கு. உங்க மகன் சம் பளம்ங்கிற முதல் விஷயத்தி லேயே அடிபட்டு போயிட்டார். தேவைப்பட்டா உங்களை இந்த எண்ணுக்கு கூப்பிடறேன்!’’

எதிர்முனை போன் துண்டிக்கப்பட்டது.

முகுந்தனின் முகத்தில் பெரிய மலர்ச்சி.

‘‘இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!’’ என்றார்.

அவனுக்கு எதிரில் வந்த மனைவி ஹரிணி கணவனை விநோதமாக பார்த்தாள்.

25 வயதான தன் மூத்த பெண் புவனா இருக்க, அவளுக்கு 1 வயது இளையவனான சத்திய னுக்கு பெண் கேட்டு கணவன் அணுகுவது இவளுக்கு புரியாத புதிராக இருந்தது.

‘‘நான் பெண்ணுக்கு மாப் பிள்ளை தேடுங்கன்னு தலை, தலையா அடிச்சிக்கறேன். நீங்க என்னடான்னா இப்படி பையனுக்கு பெண் தேடறீங்களே. நல்லாவா இருக்கு? நாலு பேர் பார்த்தா சிரிக்கப் போறாங்க! அதுல வேற இதை, இதைத்தான் எதிர்பார்த்தாராம்!’’

ஹரிணி கோபத்துடன் கூற, அதற்கு பெரிதாக சிரித்தார் முகுந்தன்.

‘‘நீதான் புரியாம பேசறே ஹரிணி. நம்ம பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப்போறோம். நம்ம மகளுக்கு புருஷனா, நமக்கு மாப்பிள்ளையா வர்ற வர் எப்படியிருக்கணும்? எதை யெல்லாம் ஒரு மாப் பிள்ளையா வர்றவங்ககிட்ட எதிர்பார்க்கணும். புகுந்த வீட்டுல எது, எது இருந்தா நம் பொண்ணு கண்கலங்காம இருக்க முடியும்? இதற்கு ஓர் அனுபவம் வேணும். இதை நாம் திடீர்ன்னு பெற முடியுமா? உணரத்தான் முடியுமா?

நம்மளைப் போலவே பொண்ணை பெத்து மாப்பிள்ளை தேடறவங்க நாலுபேருகிட்ட பேசிப் பார்த்தாத்தானே தெரியும். அப்படித்தான் என் பையனுக்கு பெண் கேட்கிற மாதிரி இந்த காலத்துல நம்ம போலவே பெண்ணைப் பெத்து படிக்க வச்சு ஆளாக்கினவங்க எப்படிப் பட்ட மாப்பிள்ளையை தேட றாங்கிறதை தெரிஞ்சுக்கறேன். இனி தாராளமா நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடலாம்!” என்றார் முகுந்தன்.

அவரை ஆச்சரியம் ததும்ப பார்த்தாள் ஹரிணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in