

ஆழிப் பேரலை, புயல், வெள்ளம், கரோனா பெருந்தொற்றுப் பேரிடர் என அச்சுறுத்தும் எது வந்தாலும் நாங்களும் பொதுச் சமூகத்தில்தான் இருக்கிறோம். எங்களுக்கும் பொறுப்புகள் உண்டு... என்று வீதியில் இறங்கிப் போராடுவது முதல் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு அளிப்பதற்குத் தயங்காதவர்கள் மாற்றுப் பாலினத்தவரான திருநங்கை சமூகத்தினர்.
கரோனா இரண்டாவது அலையின் அலைக்கழிப்பில் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்திருந்தாலும், கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக அரசு நடத்திவரும் போரில் தங்களின் பங்களிப்பையும் முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். சென்னையில் இருக்கும் 50 திருநங்கைகள் தலா ஆயிரம் ரூபாய் வீதம், 50 ஆயிரம் ரூபாயை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு அளித்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, உதவுவதில் மட்டும் அல்ல கரோனாவை விரட்டுவதிலும் நாங்கள் முன்னணியில் நிற்போம் என்பதை நிரூபித்துள்ளனர். கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி நம் கையில் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்னும் விழிப்புணர்வை திருநங்கைகளுக்கு ஏற்படுத்தும் விதத்தில் 20 திருநங்கைகள் சென்னை, சூளைமேட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கரோனா தடுப்பூசி முதல் தவணையைப் போட்டுக் கொண்டனர்.