Published : 21 May 2021 10:11 AM
Last Updated : 21 May 2021 10:11 AM

திரைப்படச்சோலை 33: வெள்ளிக்கிழமை விரதம்

முதல் நாள் கிளைமாக்ஸ்

சிவகுமார்

‘லைட்ஸ் ஆன்... ஸ்டார்ட் சவுண்ட் - ஸ்டார்ட் காமிரா- கிளாப்.. ஆக்சன்!’

‘பைத்தியக்காரி! நீ வெள்ளிக்கிழமை மட்டும்தான் விரதம் இருந்தே. ஆனா எங்கம்மா ஒவ்வாரு நாளும் உதயத்திலிருந்து அஸ்தமனம் வரைக்கும் கடுமையான விரதம் இருந்து ஒரு கருநாகத்தை வளர்த்தாங்க. அப்புறம் நான் பொறந்தேன்...!

தன்னோட பாலை அந்த நாகத்துக்கும், பசுவோட பாலை எனக்கும் குடுத்து வளர்த்தாங்க.

ஒரு நாள் நான் காலேஜூக்கு போயிட்டு வரும்போது ஹால்ல எங்கம்மா பிணமா கிடந்தாங்க. பக்கத்தில அந்த கருநாகம். எந்த நாகத்தை கடவுளா நினைச்சாங்களோ, அந்த நாகம் அம்மாவைக் கொன்னுடுச்சு. படத்தில் நாமமும் பல்லில் விஷமுள்ள அந்தப் பாம்பு அம்மாவோட பாலைக்குடிச்சு வளர்ந்த அந்த நாகம், கடைசில அம்மாவோட உசிரையே குடிச்சிருச்சு. அந்த நொடியிலிருந்து பாம்பு வர்க்கத்துக்கு நான் எதிரி. அந்த பாம்புக்கு பால் வார்க்கற உன்னை மன்னிக்க முடியாது... இதோ, வந்திட்டேன்’ ஓடிப்போய் டபிள் பாரல் துப்பாக்கியை எடுத்து வந்து அந்த பாம்பைச் சுடப்போகிறான் ஹீரோ. தடுக்கிறாள் ஹீரோயின்.

பாம்பு என் எதிரி

‘கட்’ -என்றார் டைரக்டர். ஷாட் ஓகே என்று எல்லோரும் சொன்னதை ஒப்புக் கொள்ளாமல், ஓகே ஆன ஷாட்டை 4 தடவை திரும்ப எடுக்கச் சொன்னார் தேவர் அண்ணா. 4 ஷாட்டும் ஓகே. படத்தின் முதல்நாள் படப்பிடிப்பிலேயே கிளைமாக்ஸ் காட்சியில் வரும் உணர்ச்சிகரமான வசனங்களை பேசி நடித்தேன்.

படப்பிடிப்புக் குழுவினரை வெற்றிப் புன்னகையுடன் அலட்சியமாகப் பார்த்தார் தேவர். ‘சிவகுமார் ஹீரோவா பண்ண முடியுமான்னுதானே கேட்டீங்க. 4 டேக்கும் ஓகே. பைத்தியக்காரங்களா. 2 நாள் முந்தி, ‘பெண்ணை நம்புங்கள்’ -படத்தை குளோப் தியேட்டர்ல பார்த்தேன். அதில மாமனார் எம்.ஆர்.ஆர்.வாசுவை சிவகுமார் பழிவாங்கற காட்சில ரசிகர்கள் ஆரவாரமா கைதட்டி ரசிச்சாங்க. அப்பவே அடுத்த படத்தில சிவாதான் ஹீரோன்னு முடிவு பண்ணீட்டேன்!’ என்று வெள்ளிக்கிழமை விரதம் படத்தின் நாயகனாக என்னை ஒப்பந்தம் செய்த காரணத்தை விளக்கினார்.

அந்தக் காட்சியின் தொடர்ச்சியில் ஹீரோயின் ஜெயசித்ரா - ‘நிச்சயமா அந்த கருநாகம் உங்கம்மாவைக் கடிச்சிருக்காது. டேய்! நாகராஜா’ என்று கத்துகிறாள்.

நாகம் வந்து படம் எடுக்கிறது. ‘இவங்க அம்மாவைக் கொன்றது அந்த கருநாகமா? என்று கேட்க, ‘இல்லை’ என்று பாம்பு தலையாட்டுகிறது. ‘அப்படின்னா குற்றவாளி யாருன்னு கண்டு பிடி. பாம்புக்கு பால் வார்க்கறது பாவம். அது தெய்வமில்லை. விஷ ஜந்துன்னு சொல்ற என் கணவரோட எண்ணத்தை மாத்து. இல்லாட்டி வளர்த்த நானே உன்னை சுட்டுக் கொன்னுட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன் போ!’ என்கிறாள்.

ஊட்டியில் காதல்

குற்றவாளியை பாம்பு எப்படி கண்டுபிடிக்கிறது என்பதுதான் சுவாரஸ்யமான கதை. நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமா என்றெ்லலாம் கேள்வி கேட்கக்கூடாது. படம் ஹிட்.

தேவர் பிலிம்ஸின் சாதனை, பூஜைபோடும் அன்றைக்கே இந்த படம் இந்த தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்து 3 மாதங்களுக்குள் அதே தேதியில் படத்தை எப்பாடு பட்டாவது எடுத்து வெளியிட்டு விடுவார்கள்.

எம்ஜிஆர் தேவர் பிலிம்ஸில் 16 படங்கள் நடித்திருக்கிறார். பெரும்பாலானவை 100 நாள் படங்கள். ‘விவசாயி’ படத்தை ஸ்டுடியோ தளத்துக்குள், சேற்று வயலை, செயற்கையாக உருவாக்கி, நெற்பயிரை வயலிலிருந்து வேரோடு எடுத்து வந்து அந்த வயலில் பதித்து -எம்ஜிஆரை வைத்து சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடித்தது இன்று வரை ரிக்கார்டு.

பாம்பு பக்தையான ஜெயசித்ரா, நாகராஜன் புண்ணியத்தில் நமக்கு திருமணமாயிருக்குன்னு சந்தோஷப்படறா. கல்யாணத் தம்பதியை ஆசீர்வதிக்க மணவறை மேல வாழை மரத்தில் பாம்பு வந்திருக்கு. தாலி கட்டி முடிந்து மணவறையை சுற்றி வரும்போது பாம்பைப் பார்த்த ஹீரோ (சிவகுமார்) வேகமாகப் போய் துப்பாக்கியை எடுத்து வந்து குறி வைக்கிறான். துப்பாக்கி சத்தம் கூட்டத்தை அதிர வைக்கிறது.

முதலிரவில் தன் இஷ்ட தெய்வம் நாகராஜன் கல்யாண மேடையில் சுடப்பட்டு இறந்த துக்கத்தில் அவள் படுத்திருக்கிறாள். ஆனால் கணவன் பக்கத்து படுக்கையில் உறங்கும் நேரத்தில், கதவு துவாரம் வழியாக, நாகம் வீட்டுக்குள் வந்து கதாநாயகனை ஒரு பார்வை பார்த்து விட்டு ஜெயசித்ரா கட்டிலுக்கு வந்து மேலே ஏறி அவள் வயிற்றுப் புகுதியில் சுருண்டு, படம் எடுக்கிறது.

நாகேஷுடன்

உறக்கத்திலிருந்து விழித்த ஜெயசித்ரா, ‘நாகராஜா வந்திட்டியா? நீ செத்துப் போயிட்டேன்னு கவலைப்பட்டிருந்தேன்!’ என்று மெலிதான குரலில் நன்றி தெரிவிக்கிறார்.

இந்தப் படம் எடுக்கும்போது ஜெயசித்ராவுக்கு பள்ளி இறுதிப்படிப்பு முடிந்து 17 வயது இருக்கலாம்.

பாம்புக்கு பக்கத்தில் கண்களை விழித்தால், பாம்பு சீறி அந்த கண்களின் ஒளியைப் பார்த்து கொத்தி விடும் என்று பயமுறுத்தி இருந்தார்கள். என்ன சொன்னாலும் மல்லாந்து படுத்து 3 கிலோ எடையுள்ள பாம்பை சுருட்டி வயிற்றின் மீது வைத்து 2 அடி உயரத்திற்கு படமெடுத்தவாறு அது, ‘உஸ்.. உஸ்..!’ என்று சத்தமிடும்போது பயப்படாமல் வசனம் பேசி நடிக்க வேண்டுமே!

குளோஸ் அப் ஷாட்டில், மனதில் பயம் இருந்தால் கண்ணில் தெரிந்து விடும். ஜெயசித்ராவுக்கு தைரியம் வர, தேவர் அண்ணா தரையில் பாம்பை படமெடுத்து நிற்க வைத்து பின்பக்கமாக அவர் போய் பாம்பின் தலைப்பகுதியை தட்டி விட்டு நகர்ந்து விட்டார்.

‘பாத்தியா. ஒண்ணும் பண்ணலே. தைரியமா படுத்துக்க!’ என்று சொல்லி -பாம்மை பிடித்து வயிற்றின் மீது வைத்து காமிராவை ஓட விட்டார்கள். தைரியமாக சிரித்துக் கொண்டே ஜெயசித்ரா வசனம் பேசி ஷாட், ஓகே ஆனதும், செட்டில் எல்லோருமே கைதட்டினோம்.

‘வெள்ளிக்கிழமை விரதம்’-படத்தின் போஸ்டரில் அந்த புகைப்படம்தான் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு நடந்த மறுநாளே தேவர் அண்ணா ஆறடி உயரம், நாலடி அகலம், அந்த படத்தை பிரிண்ட் போட்டு பிரேம் பண்ணி ஜெயசித்ராவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

சசிகுமார் -ஶ்ரீகாந்த்-ஜெய்சுதா

பொதுவாக மனித சுபாவமே, நம் வீட்டில் எந்த சேரில் தினம் உட்காருகிறோமோ அதே சேரில்தான் போய் உட்காருவோம். படுக்கையில் எந்த இடத்தில் படுத்தோமோ, அதே இடத்தில்தான் படுப்போம். நாம் எந்த பிளேட்டில் சாப்பிடுகிறோமோ, எந்த டம்ளரில் தண்ணீர் குடிக்கிறமோ அதைத்தான் பயன்படுத்துவோம். போடும் சட்டை, காலில் மாட்டும் மிதியடி உள்பட அடுத்தவர் உடையை மாட்டிக் கொள்ள மாட்டோம். பூனை, நாய் கூட தினம் படுக்கும் இடத்தில்தான் படுக்கும்.

அதுபோல செட்டுக்கு வெளியே இருந்து பாம்பாட்டி பாம்பை ஓட்டை வழியே தலையைத் திணித்து உள்ளே அனுப்புகிறான். அது காமிராவுக்கு வலது புறமாகப் போனால்தான் ஜெயசித்ரா படுக்கை நோக்கிப் போவதாக காட்ட முடியும்.

ஆனால் இந்தப் பாம்பு செட்டுக்குள் நுழைந்ததும் இடதுபுறமாகவே போயிற்று. ஷாட் கட். அடுத்த முறையும் காமிரா ஓட, உள்ளே வந்த பாம்பு மீண்டும் அதே இடதுபக்கம் போயிற்று. தேவர் அண்ணா பொறுமை இழந்து, ‘டேய் ராமா! ஒழுங்க விடுடா, இல்லாட்டி உன்னை வெட்டிப் போடுவேன்!’ என்று கத்தினார். 16 தடவையும் அது இடதுபக்கமே போய்ச் சேர்ந்தது.

ஒரு வழியாக 17-வது தடவை பாம்பு உள்ளே நுழைந்து வலதுபக்கம் 6 அடி ஊர்ந்து சென்று, தலையைத் தூக்கி, பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு ஜெயசித்ரா கட்டிலில் ஏறியதுதான் தாமதம். ‘முருகா, முருகா!’ என உணர்ச்சிவசப்பட்டு கத்தி விட்டார் தேவர் அண்ணா. பாம்பு நம் இஷ்டப்படி நடிக்காதில்லியா? அதுவாக அப்படி போனது -படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

அடுத்து ஊட்டியில் டூயட் பாடல் காட்சி. தங்கப்பன் மாஸ்டர் டான்ஸ் கம்போஸ் பண்ணி, கமல்ஹாசனை உதவியாளராக அழைத்து வந்து ஒவ்வொரு ஷாட்டுக்கும் அவரை ஆடிக்காட்டச் சொல்லி படமாக்கினார்.

ஊட்டி சுற்றுலா பங்களா ஒன்றில் முன் பின் அறிமுகமில்லாத ஹீரோ, ஹீரோயின் மாட்டிக் கொள்வார்கள். விடியும் வரை அங்கேதான் இருந்தாக வேண்டும். ஹீரோவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தூக்க மாத்திரையை அவள் அவனுக்குத் தந்து உறங்க வைத்து விடுவாள்.

காட்டுக்குள்ளிருந்து ஒரு ஆண் குரங்கு வெண்டிலேட்டர் வழி அந்த அறைக்குள் நுழைந்து விடுகிறது. பொதுவாக ஆண் குரங்குக்கு பெண்களை பிடிக்காது போலும். உண்மையிலேயே பல்லைக் காட்டி ஜெயசித்ராவை எல்லா ஷாட்டிலும், கட்டிலை சுற்றிச்சுற்றி விரட்டியது. ஒரு கட்டத்தில் குரங்கிடமிருந்து தப்பிக்க ஹீரோவை எழுப்ப முயல்கிறாள். அவன் போதையில் நன்றாக உறங்குகிறான். படுத்திருந்தவனை நிமிர்த்தி, தோளில் கை போட்டுத் தூக்கி முகத்தை கைகளால் பிடித்துக் குலுக்கி, அவன் மீது படுத்துப் புரண்டு எப்படியாவது அவனை எழுப்ப முயற்சிக்கும் காட்சி. ‘சந்திரலேகா’ படத்தில் ரஞ்சன் (வில்லன்) தரையில் துவண்டு கிடக்கும் கதாநாயகி ராஜகுமாரியை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் காட்சி போல, மறைமுகமாக செக்ஸியாக படமாக்கப்பட்டது. படத்தில் ஜெயசித்ராவும் நானும் இளமைத்துள்ளலுடன் ஆடல்,பாடல் காட்சிகளில் நடித்திருந்தோம். விறுவிறுப்பான கமர்ஷியல் படம். எல்லா ஊர்களிலும் நன்றாக ஓடி 100 நாட்கள் கடந்து வெற்றி வாகை சூடியது.

தேவரும் மேஜரும்

திருமணமான புதிதில் சினிமா பார்க்க என் சகோதரி மகள் ஜானகியடன். என் துணைவியாரை வெலிங்டன் தியேட்டர் படம் பார்க்க அனுப்பியிருந்தேன்.

ஒரு முக்கியமான விஷயம். என் மனைவி கோவை அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவி. ரொம்பவும் கட்டுப்பாடான ஹாஸ்டல். பெற்றோர் தவிர யாரும் போய் மாணவிகளைச் சந்திக்க முடியாது. சினிமா பார்ப்பது எல்லாம் அபூர்வம்.

விடுமுறையில் சொந்த ஊருக்குப் போனால் அவர் பெரியப்பா சினிமா பார்க்க அழைத்துப் போவார். சுருக்கமாகச் சொன்னால் திருமணத்திற்கு முன்பு திரைப்படத்தில் என்னைப் பார்த்திருக்க சந்தர்ப்பமில்லை.

இப்படியே காலம் 18 ஆண்டுகள் ஓடி விட்டன. ஒரு நாள் ஆசுவாசமாக இருக்கும்போது -‘உன் வீட்டுக்காரர் படம்- முதல் படம்- எங்கே பார்த்தே? என்ன படம்?’ என்று கேட்டேன்.

‘முதமுதல்ல பார்த்தது வெள்ளிக்கிழமை விரதம். ஜானகியுடன் சென்னையில்தான் பார்த்தேன்!’

‘எப்படியிருந்திச்சு?’

‘ஜெயசித்ரா உங்கமேல படுத்துப் புரண்டு லூட்டியடிச்சதைப் பார்த்தப்போ -நிலக்கரிக்கு தீ மூட்டி, செக்கச்செவேல்னு ஆனதுக்கப்புறம் அதை வாணாச்சட்டியில் எடுத்து நெஞ்சு மேல கொட்டின மாதிரி இருந்துச்சு!’ என்றார்.

நான் உறைந்து போய் விட்டேன். இன்னமும் என் காதுகளில் என் மனைவியின் அந்தக் குரல் அவ்வப்போது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

---

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x