Published : 15 Dec 2015 08:20 AM
Last Updated : 15 Dec 2015 08:20 AM

சுவாமி ரங்கநாதானந்தா 10

ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவர்

ராமகிருஷ்ண மடத்தின் 13-வது தலைவராகப் பணியாற்றிய சுவாமி ரங்கநாதானந்தா (Swami Ranganathananda) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள திரிக்கூர் கிராமத்தில் (1908) பிறந்தார். இயற்பெயர் சங்கரன். சிறு வயதில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தோட்ட வேலை, நீச்சல், கபடி, கோலி என்றால் நேரம் போவது தெரியாமல் ஈடுபடுவார்.

# இவருக்கு 9 வயது இருக்கும்போது, பயங்கர வெள்ளம் வந்ததில் ஊர் மிகவும் பாதிக்கப்பட்டது. தன் வயதுப் பிள்ளைகளைத் திரட்டி சாலையை சீராக்கினாராம். 14 வயதில் ‘தி காஸ்பல் ஆஃப் ராமகிருஷ்ணா’ என்ற நூலை வாசித்தது, வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

# விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் நூல்களைப் படித்தார். பெற்றோர், உடன் பிறந்தோரைத் துறந்து 1926-ல் மைசூரு ராமகிருஷ்ண மடத்தில் இணைந்தார். சுவாமி சித்தேஸ்வரானந்தாவிடம் 6 ஆண்டுகள் சேவை புரிந்தார். ஆசிரமத்தில் சமையல், துணி துவைப்பது, சுத்தம் செய்வது, தோட்ட வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்தார்.

# பெங்களூருவில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். 1929-ல் பிரம்மச்சர்ய விரதம் பூண்ட பிறகு, ‘யதி சைதன்யா’ என்றும், 1933-ல் ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி சிவானந்தாவிடம் சன்னியாசம் பெற்ற பிறகு, ‘ரங்கநாதானந்தா’ என்றும் இவரது பெயர் மாற்றப்பட்டது.

#

மடத்தின் ரங்கூன் கிளையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். கராச்சியில் இருந்த மையத்தில் தலைமைப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். அப்போது, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இவரது கீதை சொற்பொழிவைக் கேட்க வருவார்.

# ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராதாகிருஷ்ணன், சுகர்னோ, தலாய்லாமா, இந்திரா காந்தி, மன்மோகன் சிங், ஐ.கே.குஜ்ரால், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அமிர்தலிங்கம் சின்னதம்பி, பண்டிட் ரவிசங்கர், சி.வி.ராமன், பி.சி.அலெக்சாண்டர் உள்ளிட்ட பலரும் இவரிடம் ஈடுபாடு கொண்டவர்கள்.

# வங்கத்தில் 1943-ல் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமாக நிதி, உணவுப் பொருட்களைத் திரட்டி வழங்கினார். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கராச்சி மையம் மூடப்பட்டதால், நாடு திரும்பினார். டெல்லி மடத்தின் செயலராகப் பணியாற்றினார். வானொலியில் ஏராளமான உரைகள் ஆற்றியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

# 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மடத்தின் மாதாந்திர இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டார். 1973-ல் ஹைதராபாத் கிளையின் தலைமைப் பொறுப்பேற்றார். அங்கு விவேகானந்தா வாணி ஸ்கூல் ஆஃப் லாங்வேஜஸ், கோயில், நூலகம் ஆகியவற்றை நிறுவினார். பெங்களூரு, மைசூரு சிறைகளில் கைதிகளுக்கு ஆன்மிக வகுப்புகள் நடத்தினார்.

# ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவராக 1988-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ல் தலைவரானார். 1987-ல் தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது, 1999-ல் காந்தி அமைதிப் பரிசு ஆகியவற்றை மிஷன் சார்பாக பெற்றுக்கொண்டார். தனி மனிதரை கவுரவித்து வழங்கப்படுவது என்பதால் 2000-ல் பத்மவிபூஷண் விருதை ஏற்க மறுத்துவிட்டார்.

# இறைவனையும் மனித இனத்தையும் ஒன்றுபோல நேசித்து சேவை செய்துவந்த ரங்கநாதானந்தா 97-வது வயதில் (2005) மறைந்தார். இவரது நினைவாக மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x