

திருவல்லிக்கேணி தேரடி தெருவில் அகோபிலமடம் வாசலில் உள்ள பழக்கடைக்கு ஏற்கெனவே ஒரு பெருமை உண்டு. பாரம்பரியமான மூன்றுதலைமுறை கடை என்பது. இப்போது இன்னொன்றும் சேர்ந்துகொண்டது. வெள்ளநிவாரணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியாற்றிய பழக்கடை என்னும் பெருமைதான் அது.
கடை உரிமையாளரான பழக்கடைச் சந்திரனிடமே இதுபற்றி கேட்டோம்.
''பழக்கடை சந்திரன் என்று என்னை சொல்வாங்க. ஆனால் கடையை நடத்துவது என்னுடைய அப்பாதான் சார். எனறு தன்னடக்கத்தோடு பேச ஆரம்பித்தார் சந்திரன். தாத்தாவுக்கு அப்புறம் இப்போ அப்பா நடத்தறாரு. நான்தான் வேன்ல சரக்கு கொண்டுவந்து கொடுக்கறேன். எனக்கு ரெண்டும் பொண்குழந்தைங்க. வெள்ளத்துல பாதிக்கப்பட்ட ஜனங்களுக்கு கொடுக்க ஒரு தார் வாழப்பழம் வேணும்னு நண்பர்கள் கேட்டாங்க.
ஒரு தார் வாழப்பழம் எந்தமூலைக்குன்னு நான் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு பழத்தை என்னோட வேன்ல கொண்டுவந்து கொடுத்தேன். அதை வெள்ளத்துல மாட்டிகிட்டிருக்கிற வேளச்சேரி பகுதிவாழ் மக்களுக்குப் போய் கொடுத்தோம். காலைல ஏழரை மணிக்கு குழந்தை பசியைத் தீர்த்தது நான் கொண்டு போன பழம். பெருமைக்காக இதை செய்யல. பெருமைக்காக இத சொல்லலை. நீங்க கேட்டதால சொல்ல வேண்டியிருக்கு.
எனக்கு ஒரு குடும்பம் இருக்கு குழந்தைங்க இருக்கு. பாதிக்கப்பட்ட மக்களோட கஷ்டத்தைப் பாக்கும்போது நம்ம மாதிரி குடும்பங்கள்தானேன்னு ஒரு ஃபீலிங் வந்துடிச்சி. கண்டிப்பா நம்மால ஆன உதவிய செய்யணும்னு தோணிச்சி.
என் நண்பன் பிரகாஷ்ஷோட அப்பா (பாக்கியராஜ்) சொல்லித்தான் இங்கே வந்தேன். இங்க வந்ததும் நிறைய நண்பர்களை சந்திச்சேன். இந்த முகாமுக்கு நான் வந்தாலே என்னோட வண்டியோடதான் வந்துர்றேன். பத்துநாள்ல ரெண்டொரு நாள் வராம இருந்திருப்பேன். மத்தபடி ரொம்ப சந்தோஷமா இருக்கு.
எங்கெங்கே கொண்டுபோய் சேக்கணுமோ அங்கங்க கொண்டுபோய் சேத்துட்டு கிட்டிருக்கோம். பொருட்கள் வந்துசேர்றதைவிட கொண்டுபோய் சேக்கறதுக்காக இதை எடுத்து செய்யறவங்களோட வேலையை நான் பெரிய விஷயமா பாக்கறேன்.
என்னைப் பொறுத்தவரைக்கும் தினமும் நான் இங்க வர்றது கோவிலுக்கு போற மாதிரி. சொல்லப்போனா கோவிலுக்குப் போறதைவிட புண்ணியமான காரியமா இதை நெனைக்கறேன். இதுவரைக்கும் லட்சக்கணக்குல பொருட்கள் போய் சேர்ந்துருக்கு. இரவும் பகலும் பாரதிசார் கஷ்டப்பட்டு செய்யறாரு. இவ்வளவு சிறந்த மனிதரை பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அவருக்கு இந்த வேலைகளை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணி செய்யறதுல ஒரு மனசந்தோஷம் அவருக்கு.
எங்க அப்பா ஆரம்பத்துல கடை வேலை கெட்டுப் போகுதுன்ன்னாரு. அப்புறம் விவரமா எடுத்து சொன்னேன். இருக்கப்பட்டவங்க இல்லாத பட்டவங்க எல்லாம்கூட நிர்க்கதியா நிக்கறாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு சொன்னேன்.
அப்பா, அம்மா, அண்ணன் அய்யனார், அண்ணி ஜெயசுதா, அப்புறம் என்னோட மனைவி எல்லாரும் மனமுவந்து என்னை வேன் எடுத்துகிட்டு கிளம்புன்னு சொல்றாங்க. வீட்ல இருக்கறவங்களும் இப்போ இந்த வேலையோட முக்கியத்துவத்தை புரிஞ்சிகிட்டாங்க.'' என்கிறார் நிவாரணப் பொருட்களை வழங்கும் கரங்களின் உருவில் கடவுளைக் காணும் பழக்கழடைச் சந்திரன்.