Published : 27 Dec 2015 12:19 PM
Last Updated : 27 Dec 2015 12:19 PM

ஜோகன்னஸ் கெப்ளர் 10

ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளர், வானியலாளர், ஜோதிடரான ஜோகன்னஸ் கெப்ளர் (Johannes Kepler) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் (1571) பிறந்தார். இவரது தந்தை ஒரு வணிகர். சிறு வயது முதலே வானியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். 6 வயதிலேயே வான்வெளியை உற்றுநோக்கி பல விவரங்களைக் கூறுவாராம். 9 வயதில் சந்திர கிரகணம் குறித்து விளக்கியுள்ளார்.

* உள்ளூரில் உள்ள இலக்கண பாடசாலை, லியோன்பெர்க்கில் உள்ள லத்தீன் பாடசாலை, மால்ப்ரோன் குருத்துவப் பாடசாலையில் கல்வி பயின்றார். சிறந்த மாணவராக விளங்கினார். கல்வி உதவித் தொகை பெற்று தூபிங்கர் பல்கலைக்கழகத்தில் தத்துவம், இறையியல் கற்றார்.

* இறையியலாளராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் இவரது விருப்பம். ஆனால், கணிதம், வானியலில் அதைவிட அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், நட்சத்திரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். மாணவராக இருந்தபோது சூரிய மையக் கோட்பாடு தவறு என்று வாதிட்டவர், பிறகு அதை ஏற்றுக்கொண்டார்.

* வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் ‘மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்’ என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இதன் பிரதிகளை தனது ஆதரவாளர்கள், பிரபல வானியலாளர்களுக்கு அனுப்பிவைத்தார். 1596-ல் இந்நூல் வெளிவந்த பிறகு, திறன்வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார்.

* இவரது வானியல் ஆராய்ச்சிகள் குறித்து அறிந்த தைக்கோ பிராஹே என்ற வானியலாளர் தனது ஆராய்ச்சிகளுக்கு உதவுமாறு கூறினார். அவரிடம் 1600-ல் உதவியாளராக சேர்ந்தார். கிராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். கோள்களின் இயக்கங்கள் தொடர்பான கோபர்நிகஸ் உட்பட பலரது கோட்பாடுகளையும் கற்றறிந்தார்.

* இரண்டாம் ருடால்ஃப் மன்னரின் அரசவைக் கணிதவியலாளராகவும், ஜெனரல் வாலன்ஸ்டைனின் அரசவை ஜோதிடராகவும் பணியாற்றினார். ‘ஆஸ்ட்ரோநோமியா நோவா’, ‘ஹார்மோனிஸ் முன்டி’ ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக இவர் கூறிய கருத்துகள் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றன. அதனால் பேரும் புகழும் பெற்றார்.

* கோள் இயக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இதுதொடர்பாக 3 விதிகளைக் கண்டறிந்தார். முதல் இரண்டு விதிகள் பிரத்யேகமாக ஒற்றைக் கோளின் இயக்கம் குறித்து இருந்தன. 3-வது விதி 2 கோள்களின் சுற்றுப்பாதைகள் குறித்த ஒப்பீடாக இருந்தது.

* அறிவியல் துறையிலும் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். கண்களால் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதற்கு சரியான விளக்கம் தந்தார். கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளைக் கண்டறிந்தார். ‘எபிடோமி அஸ்ட்ரோநோமியா’ என்ற புகழ்பெற்ற நூலை 1621-ல் வெளியிட்டார்.

* தொலைநோக்கி வேலை செய்யும் விதத்தை விளக்கினார். முதன்முதலில் ‘சாட்டிலைட்’ என்ற வார்த்தையை உருவாக்கியவர். நட்சத்திரங்களின் தொலைவைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். கிறிஸ்து பிறந்த ஆண்டை கணக்கிட்டுக் கூறினார்.

* கணிதவியலாளர், கோட்பாட்டு வானியற்பியலாளர், அறிவியல் ஜோதிடர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோகன்னஸ் கெப்ளர் 59-வது வயதில் (1630) மறைந்தார். கோள்களைக் கண்டறியும் நாசாவின் தொலைநோக்கிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x