மழை முகங்கள்: ட்விட்டரில் இருந்து நிவாரண கிட்ஸுக்கு தாவிய ரிங்கு குப்தா விரல்கள்!

மழை முகங்கள்: ட்விட்டரில் இருந்து நிவாரண கிட்ஸுக்கு தாவிய ரிங்கு குப்தா விரல்கள்!
Updated on
2 min read

உட்கார்ந்த இடத்தில் ஓயாமல் பைகளில் கிட்ஸ் பொருட்களை போட்டுக்கொண்டிருக்கும் ரிங்கு குப்தாவுக்கு சேத்பட்டில் வீடு. சினிமா பத்திரிகையாளர். முழுபொழுதும் ட்விட்டரிலேயே வாசம்.

அன்று அவர் குடியிருக்கும் சாலையில் பெருக்கெடுத்து வந்தது மழைவெள்ளம். டிரைனேஜ் கழிவுநீருடன் கலந்து வீட்டுக்குள்ளேயே வந்துவிட அங்கே ஒரு அந்நியத்தன்மை உருவாகிவிட்டது.

அந்த பெரிய வீட்டில் உடனடியாக சரிசெய்வது அவ்வளவு சாதாரணம் இல்லை என்றாலும், அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. உலக மக்களோடு ட்வீட்டிக்கொண்டிருந்தார் ரிங்கு. மழைச்செய்திகளை உடனுக்குடன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பரபரப்பு அவரது விரல்களில்.

''டிவி, சோசியல் மீடியா கனமழை செய்திகளைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தேன். எந்த நேரத்திலும் பேட்டரி சார்ஜ் போய்விடும் நிலை. அவசர அவசரமாக நிலைமைகளை ட்விட்டரில் வெளியிட்டேன். இப்போ என்றில்லை. வழக்கமாவே நான் வானிலை நிலவரங்கள், நாட்டில் நடக்கும் பல்வேறு முக்கிய செய்திகளை ட்விட்டரில் போடுவேன்.

அதன் தொடர்ச்சியாகவே மழை வெள்ள நிலவரத்தையும் போடவேண்டியதாகியது. எனக்கு எந்த செய்தி வந்தாலும் அதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்திக் கொண்டுதான் வெளியிடுவேன். அதனாலேயே எனக்கு இன்று ஐம்பத்தி ஏழாயிரத்து அறுநூறு ஃபாலோயர்ஸ் ட்விட்டர்ல இருக்காங்க.

அன்னிக்கு பவர் இருக்கும்வரை மாறிவரும் நிலைமைகளை எல்லாருக்கும் இன்ஃபாம் செய்தோம். ஆர்.ஜெ.பாலாஜி, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட நாங்கள் ட்விட்டரில் வெள்ள செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொண்டோம். டிவிட்டரில் இரவு 2.30 வரை இப்பணிகளை தொடரமுடிந்தது. அதன்பிறகு ஒன்றும் செய்ய முடியவில்லை. திடீர் பவர் கட். பேட்டரி, மொபைல் சர்வீஸ், டிவி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது.

கனமழைக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்தேன். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் ஆன உதவிகள் செய்ய விரும்பினேன். அதனால் நிவாரண உதவிப் பணிகளிலும் ஈடுபட்டேன். லேடி ஆண்டாள் பள்ளியில் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், வரலட்சுமி, கார்த்தி, நந்தா தவிர, பப்ளிக்ஸ், லாயர்ஸ், ஹோம் மேக்கர்னு நெறைய பேரு வாலென்டியராக இருந்தாங்க. நானும் அவங்களோட 4, 5 நாள் வேலை செஞ்சிட்டுத்தான் இங்கே வந்திருக்கேன்.

நான் பார்த்தவரை சேப்பாக்கம் முகாம்ல நடக்கற இந்த நிவாரணப் பணிகள் ரொம்ப ரொம்ப அருமையா செய்யறாங்க. மாற்றத்தை உருவாக்கணும்னு நெனச்சி செய்யக்கூடிய நம்மோட இந்த முயற்சி நிச்சயம் பெரிய பயனை உண்டாக்கும்.

இந்த நிவாரண முகாம்ல எல்லாம் கிளீனா இருக்கு. நீட்டா இருக்கு. சிஸ்டமேடிக்கா செய்யறாங்க. முக்கியமா பெண்கள் அன்ஃபார்மலா இருக்காங்க. அது எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. இங்கே ஒரு முக்கியமான விஷயம் டைம் இஸ் வெரி வெரி ஃபிளக்சிபிள். ஒரு மணிநேரம் ரெண்டுமணிநேரம்கூட வீட்டுவேலைய முடிச்சிட்டுவந்து முகாம் வேலைல இணைஞ்சிக்கலாம். நம்மால முடிஞ்சதை செய்யலாம்.

இங்க நான் வந்து பாத்த இன்னொரு முக்கியமான விஷயம் எல்லாவித மக்களும் எல்லா மதத்தைச் சேந்தவங்களும் வந்திருக்காங்க. அவங்க எல்லாருக்கும் ஒரே நோக்கம்தான் பாதிக்கப்பட்டவங்களை சிரமத்திலிருந்து மீட்க உதவிகள் செய்யணும். அது இங்க சிறப்பாவே நடக்குது...'' என்று புன்னகைத்தவாறே கூறிவிட்டு கிட்ஸ் பேக்கிங் போடும் இடத்திற்கே மீண்டும் திரும்பினார். சக மகளிர்குழுவோடு இணைந்து பணிகளைத் தொடர்ந்தன சதா ட்விட்டரை மீட்டிக்கொண்டிருந்த ரிங்கு குப்தாவின் அந்த விரல்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in