Published : 17 May 2021 05:57 PM
Last Updated : 17 May 2021 05:57 PM

‘பசித்தால் எடுத்துக் கொள்ளலாம்; பணம் வேண்டாம்’: சாலையோரக் கடை வாசலில் சாப்பாடும், குடிநீரும் வைத்துச் செல்லும் மதுரை படிக்கட்டுகள் அமைப்பினர்

மதுரை

மதுரையில் ஊரடங்கால் சாப்பாடு இல்லாமல் பசியால் வாடுவோருக்காக சாலையோரத்தில் ஒரு மேசை போட்டு அதில் பார்சல் சாப்பாடுகளையும், குடிநீர் பாட்டில்களையும் மதுரை படிக்கட்டுகள் அமைப்பு இளைஞர்கள் வைத்துச் செல்கின்றனர்.

அவர்களின் இந்தச் சேவை பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ‘கரோனா’ தொற்றின் பரவுலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காததுபோல், இறந்தவர்கள் உடல்களை மயானங்களில் உடனடியாக எரிக்க முடியாமல் அங்கும் வரிசை முறை பின்பற்றப்படுகிறது.

மற்றொருபுறம் ஊரடங்கால் வேலையிழந்த அடித்தட்டு மக்கள் அன்றாட சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடுகின்றனர். ஹோட்டல்களும் அடைக்கப்பட்டதால் நகர்ப்புறங்களில் தங்கியிருந்து பணிபுரியும் திருமணமாகாத இளைஞர்கள், கையில் பணமிருந்தும் அன்றாட சாப்பாட்டிற்காக சிரமப்படுகின்றனர்.

அதனால், மதுரையில் ஊரடங்கால் சாப்பாடு இல்லாமல் பசியால் வாடுவோருக்காக முழுக்க முழுக்க இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் படிக்கட்டுகள் அமைப்பினர், சாலையோரத்தில் பார்சல் சாப்பாடுகளையும், குடிநீர் பாட்டில்களையும் கடைகள் முன் வைத்துச் செல்கின்றனர்.

அந்த பார்சல் சாப்பாடுகள் வைத்து செல்லும் இடங்களில் ஒரு பேனர் கட்டி அதில், ‘‘பசித்தால் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம், ’’ என்ற வாசகத்தையும் வைத்துச் செல்கின்றனர்.

ஒரு நபர் ஒரு பார்சல் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டாலே நிறைவாகச் சாப்பிடலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு பார்சலிலும் ஒரு நபர் முழுமையாக சாப்பிடும் அளவிற்கு சாப்பாடுகளை படிக்கட்டுகள் அமைப்பினர் சாலையோரங்களில் வைத்துச் செல்லும் இந்த ஊரடங்கு சேவை பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து படிக்கட்டுகள் அமைப்பைச் சேர்ந்த கிஷோர், மலைசாமி கூறுகையில், ‘‘படிக்கட்டுகள் அமைப்பை மதுரை மக்கள் நன்றாகவே அறிவார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த நெருக்கடியான காலத்தில் மக்களுக்கான தேவைகள் அதிகமாகவும், அதற்கான பொருளாதாரமும் இல்லாமலும் கஷ்டப்படுகிறார். அவர்களுக்கான தேவையில் அத்தியாவசியமான பசியை போக்க நாங்கள் முடிவெடுத்து இன்று முதல் பழங்காநத்தம், வசந்தநகர் பகுதியில் 100 சாப்பாடுகள், குடிநீர் பாட்டில்களை வைத்தோம்.

100 நாள் வேலைக்குச் சென்ற பெண்கள், எடிஎம் காவலாளிகள், சாலையோரத்தில் வசிப்பவர்கள், இந்த பார்சல் சாப்பாடுகளை எடுத்துச் சென்று சாப்பிட்டனர்.

சாப்பாடுகளை எடுத்த பல இளைஞர்கள், அவர்களும் இந்தச் சேவையில் இணைவதாக கூறி அடுத்தடுத்த நாட்கள் இதுபோல் சாப்பாடுகள் வழங்குவதற்காக நன்கொடையை வழங்கிச் சென்றது மனநிறைவைத் தந்தது.

ஊரடங்கு முடிந்த பின்னரும் இந்த சேவையை தொடர முடிவு செய்துளோம். தற்போது தக்காளி சாதம், உருளைகிழங்கு பொறியல் மற்றும் குடி தண்ணீர் பாட்டில் வைத்தோம். அடுத்தடுத்த நாட்கள் சாப்பாடுகள் எண்ணிக்கையும், அவை வைக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உள்ளோம், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x