Published : 20 Dec 2015 01:00 PM
Last Updated : 20 Dec 2015 01:00 PM

ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் 7

குறள்

தனக்குவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது (7)

பொருள்:

நமக்கு ஏதேனும் மனக் கவலை ஏற்படும்போது, அதில் சிலவற்றை மற்றவரிடம் கூறலாம். ஆனால், சில மனக் கவலைகளை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. அந்த நேரத்தில் இறைவன் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தால், நம் கவலைகளை கடவுளிடம் ஒப்படைத்துவிடலாம். யாரோடும், எதனோடும் உவமித்து கூறமுடியாதவனாகிய கடவுளால் மட்டுமே நமக்கு தாராளமாக மன அமைதி வழங்க முடியும்.

விளக்கம்:

என் வாழ்வில் ஒரு சம்பவம். நான் விமானப் படை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அதிக மனவருத்தத்துடன் இருந்த காலகட்டம் அது. அப்போது ரிஷிகேசம் சென்று கங்கை நதியில் நீராடினேன். அதைத் தொடர்ந்து சிவானந்தர் ஆசிரமத்துக்குச் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தேன். எனக்கு என்ன வருத்தம் என்று கேட்டறிந்த சுவாமிஜி ’’முடிவை ஏற்றுக் கொள். தொடர்ந்து செல். விமானப் பணியில் சேர்வது உனக்கு விதிக்கப்படாமல் இருக்கலாம். அதற்காக கவலைப்படாதே. உனது உயர்வு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதன்படி நல்லது நடக்கும். தோல்வியை மறக்க முயற்ச்சி செய். புதிய வழியில் வேறு பாதையில் மீண்டும் உனது பயணத்தைத் தொடங்கு. தேங்கிவிடாதே. நீ நீயாகவே இரு. உன் ஆசைகளை ஆண்டவனிடம் சொல்” என்று எனக்கு அருளினார்.

நமது ஆசைகள், எண்ணங்கள், லட்சியங்கள் நிறைவேறாமல் போகும்போது நாம் மிகவும் துயரப்படுகிறோம். அவ்வேளையில் நாம் இறைவனிடம் சரணடந்தால் நமது துயரத்தின் கனம் குறைந்து மனம் லேசாகும் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். இந்தத் திருக்குறளும் இதைத்தான் வலியுறுத்துகிறது.



குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை (12)

பொருள்:

எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீரே ஆதார சக்தியாக விளங்குகிறது. வானத்தில் இருந்து மழை பொழிவதன் காரணமாக பூமிப் பரப்பில் நிலவளம் பெருகி, நாள்தோறும் மக்கள் ஏராளமானப் பயன்களை அனுபவிக்க நேரிடுகிறது.

ஏராளமான நல்ல உணவுப் பொருட்களை விளைய வைத்து, உண்பவர்கள் மகிழ்ச்சி அடைய தண்ணீர் பெரிதும் உதவுகிறது. மேலும் நான் உண்ணும் பொருளாக குடிநீரை பெறவும் மழையே உதவுகிறது.

விளக்கம்:

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது தமிழர்களின் ஒப்பற்ற பழமொழி. ‘சிறுதுளி’ என்கிற ஒரு மாபெரும் சமூக இயக்கம் உள்ளது. இந்த இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தும் திருமதி வனிதா மோகன் அவர்களும், திரு. எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்களும் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்கள் தங்களுடைய பெரும் முயற்சியாலும், திடமான மன உறுதியாலும் இந்த மக்கள் திட்டத்தைத் தொடர்ந்து மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களது ‘சிறுதுளி’ திட்டத்தின் மூலமாக, கடந்த சில வருடங்களாக கோவை பகுதி மக்கள் தண்ணீர் பிரச்சினை இன்றி வாழ்வதை நினைக்கும்போது இந்தத் திட்டத்தின் மாட்சிமை நன்கு விளங்குகிறது. இந்த ‘சிறுதுளி’ என்கிற மக்கள் திட்டம் அந்த ஊர் மக்களுக்கு மட்டுமல்லாமல்; தமிழ்நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களுடைய சேவை மக்களுக்குரிய அன்றாடத் தேவைகளையும், மரங்களையும், மக்கள் வாழும் இடங்களில் நல்ல காற்றையும் மற்றும் வயல்வெளிகளுக்குத் தேவையான தண்ணீரையும் கிடைக்க உதவுகிறது.

- நல்வழி நீளும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x