

டெம்பிள் ஸ்டீல் மோட்டார் எனும் வெளிநாட்டு நிறுவனத்தில் பெயின்டராகப் பணிபுரிபவர் சீனிவாசன். பாடர் தோட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு அஜீத்குமார், ரவிக்குமார் எனும் இரண்டு மகன்கள். இருவரும் 11வது, 12வது படித்துக்கொண்டிருப்பவர்கள். மனைவியைப் பிரிந்துவாழும் இவருக்கு சமூகப் பணியில் மிகுந்த ஆர்வம். அதுவே தனக்கு மிகுந்த மனநிறைவு தருவதாகக் கூறுகிறார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போவதாகக் கூறி 15 நாள் விடுப்பு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார். மழைநேரத்தில் பெயின்டருக்கு வேலை இருக்காது, சரி செல்லுங்கள் என அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
'தி இந்து' நிவாரணப் பணியியின் முதல் நாளிலிருந்தே பணியாற்றிவரும் சீனிவாசன் கூறும் வீட்டில் தனியே சிக்கிக்கொண்ட மூதாட்டியை மீட்ட அனுபவத்தை இங்கே கூறுகிறார்.
''கனமழைக்குப் பிறகு சைதாப்பேட்டை, முடிச்சூர், கிஷ்கிந்தா, மைலாப்பூர், ராயப்புரம், கூடுவாஞ்சேரி, தி நகர் பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுக்கச் சென்றோம். தி.நகர் அனுபவம் மிகவும் வித்தியாசமானது.
ஒரு அப்பார்ட்மென்ட் பகுதி. கழுத்தளவு தண்ணீர் வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஒவ்வொரு ஃபிளாட்டாகச் சென்று உணவுப் பொட்டலம் கொடுக்கச் சென்றபோது நிறைய ஃபிளாட்டுகள் பூட்டியிருந்தன. முதல் மாடியில் உள்ளடங்கியஃபிளாட் ஒன்றில் ஒரு வயதான மூதாட்டி பயந்து நடுங்கிக்கொண்டு தனியே இருந்தார்.
எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் அந்த மூதாட்டிக்குப் பாதிப்பு ஏற்படாதவண்ணம் அவரை தண்ணீரில் தூக்கிக்கொண்டு வந்தோம். அவர் மகனிடம் சேர்த்துவிட்டோம். இந்த மாதிரி பாதிப்பு எல்லாருக்கும் வரத்தான் செய்யும்.
அப்படியிருக்கும்போது இந்த மாதிரி நேரங்களில் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டிய மனப்பக்குவம் எல்லோருக்கும் வரவேண்டும். இந்த நிவாரணப் பணி முகாமில் இணைந்து பணியாற்றுவது மனநிறைவைத் தருகிறது'' என்கிறார்.