Published : 10 May 2021 10:36 AM
Last Updated : 10 May 2021 10:36 AM

திரைப்படச்சோலை 30: புவனா ஒரு கேள்விக்குறி

நண்பர்கள் மோதல்

சிவகுமார்

திரைப்படத்தில், நல்லவனாக, ஒழுக்கசீலனாக, கொடை வள்ளலாக, அறிவாளியாக, ஏழைப்பங்காளனாக, இத்தனை தகுதிகளுடன் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்ட பிறகும், நம் நடிப்புத் திறமையைக் காட்ட, வித்தியாசமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று வில்லன் வேடங்களில் நடித்தால் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அப்படங்களை ஏற்றுக் கொள்வதில்லை. பெரும்பாலும் அவை தோல்விப் படங்கள் ஆகி விடுகின்றன.

சிவாஜி நடித்த ‘அந்த நாள்’, ‘திரும்பிப் பார்’, கூண்டுக்கிளி, துளி விஷம், பெண்ணின் பெருமை -படங்களில், எந்த வேடத்திலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று அவர் காட்டியிருந்தாலும் அவை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பி.எஸ். வீரப்பா அவர்களைப் போல ஒரு ஏகபத்தினி விரதன், எந்த கெட்டபழக்கமும் இல்லாத, யாரைப் பற்றியும் தரக்குறைவாக பேசாத சாதுவான நடிகர் யாருமில்லை. ஆனால் அது ரசிகர்கள் எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. தங்கள் வீட்டுத் திருமண விழாவுக்கு, கடை திறப்பு விழாவுக்கு எந்த ரசிகனாவது அவரை அழைத்திருக்கிறானா?

நாசர் வில்லனாக நடித்த மருதுபாண்டி படத்திற்கு செங்கல்பட்டில் தன் தாயாரை அழைத்துப் போய் காட்டினாராம். படத்தில் காந்திமதி தெரு மண்ணை வாரித்தூற்றி ‘நாசமாய்ப்போக’ என்று நாசரை திட்டி நடித்த காட்சியின்போது தாயார் கேவிக்கேவி அழுதாராம். நடிப்புத்தானேம்மா என்று இவர் சமாதானம் செய்ய -அது என் மகன்பா - அவங்க அப்படி சபிக்கறதை தாங்க முடியலே என்று சொன்னாராம்.

நாகராஜ் வலையில் புவனா

இந்த வலியை எல்லாம் தவிர்க்க, நாசரே சொந்தமாக டைரக்ட் செய்து அவதாரம்- தேவதை படங்களை உருவாக்கினார். ஹீரோவாக ஒரே பாணியில் நடித்த நான் ஒரு மாற்றம் வேண்டும் என்று பஞ்சு அருணாசலத்திடம் கூறி புவனா ஒரு கேள்விக்குறியில் பெண் பித்தன் நாகராஜ் வேடத்தை ஏற்றுக் கொண்டு தியாகி வேடத்தை ரஜினிகாந்துக்கு விட்டுக் கொடுத்தேன்.

அப்போது வில்லனாக கொடிகட்டிப் பறந்தவர், நல்ல வேடத்திலும், மக்களை கவர முடியும் என்று நிரூபித்த முதல் படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’தான். 1977 -ஏப்ரல் 14-ந்தேதி பூஜை போடப்பட்டது. ஏவிஎம் நிறுவனத்தில் புரொடக்ஷ்ன் மானேஜராக இருந்த எம்.ஏ.மணி தயாரிக்கும் முதல் படம். எஸ்.பி. முத்துராமன் -ஒளிப்பதிவாளர் பாபு, இசையமைப்பாளர் இளையராஜா இணைந்து பணியாற்றிய இன்னொரு படம்.

இதன் அவுட்டோர் படப்பிடிப்பு நாகர்கோயில், கன்யாகுமரி பகுதிகளில் 10 நாள் படமாக்கினோம்.. முதல் நாளே பக்கம் பக்கமாக வசனம் கொடுத்து ரஜினியை திக்குமுக்காட வைத்து விட்டார்கள். மறுநாள் தெலுங்கு படத்திற்கு வந்தே ஆகவேண்டுமென்று கே.பாலச்சந்தர் அசோசியேட் சர்மா போனில் கெடுபிடி செய்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து என் காரில்தான் ரஜினி வந்தார். என் வீட்டில் அன்று சிற்றுண்டி அருந்தினார். மனசே சரியில்லை சார். தமிழும் வரமாட்டேங்குது. தெலுங்கு படத்திலும் கமிட் பண்ணீட்டேன். விட்டுட்டு ஓடிடலாம்ன்னு தோணுது சார்!’ என்றார்.

குழந்தைக்காக ஏக்கம்

‘ஆரம்பத்தில் இதெல்லாம் சகஜம் ரஜினி. டேய்! டான்ஸ் ஆடச்சொன்னா என்னடா சாணி மிதிக்கிறே?’ என்று 500 பேர் கூட்டத்தில் கொடைக்கானலில் திட்டு வாங்கியவன் நான். அதே டைரக்டர் இன்னொரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் உதவி இயக்குநர் வந்து வசனம் எனக்கு சொல்லிக் கொண்டிருந்தபோது, ‘இந்த டைலாக்குக்கு வேதனை, விரக்தி, வெறுப்பு மூணும் வரணும். உம் மூஞ்சிக்கு எதுவுமே வராது!’ என்று எம்.ஜி.ஆர், மஞ்சுளா, லட்சுமி செட்டில் இருக்கும் போது திட்டி அவமானப்படுத்தினார்.

நமக்கு பெயர், புகழ் வரும்போது இவர்களெல்லாம் நான் அறிமுகப்படுத்தின ஹீரோன்னு பெருமையா ஊருக்குள்ளே சொல்லுவாங்க. தைரியமா நடிங்க. காலம் நமக்கு வழிகாட்டும்!’ என்றேன்.

நாகராஜன் (சிவகுமார்) அழகிகளின் அணைப்பில் சுகம் காண்பவன். அவர்கள் தன்னை மறந்த விநாடி, நண்டு ஒன்றைப் பிடித்து ஜாக்கெட்டுக்குள் போட்டு, அவர்களை பதறவிட்டு உடைகளைக் களையும்போது அவர்களைத்

துய்த்து விடுவான். இதில் ஏமாந்த பெண்களில் புவனாவும் (சுமித்ரா) ஒருத்தி. கல்யாணத்துக்கு முன்பே வயிற்றில் குழந்தை கொடுத்து விட்டு தாலிகட்டாமல் ஏமாற்றுவான். கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டுவான். அவள் பணியவில்லை. குழைந்தையைப் பெற்று விடுகிறாள். நாகராஜ் நண்பன் சம்பத் (ரஜினி) காதல் தோல்வியடைந்த அப்பாவி. அவன் அடைக்கலம் தருகிறான் அவளுக்கு.

நாகராஜ் திருமணமான பின், அவன் மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை. டாக்டரிடம் கூட்டிச் சென்று காட்டி விட்டு, மனைவியை மலடி என்று அவன் குற்றம்சாட்ட, ‘உண்மையில் நீதான் ஆண்மையற்றவர் என்று டாக்டர் சொன்னார்’ என்கிறாள் மனைவி (ஜெயா). கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை குடுத்தவன் நான் என்று உணர்ச்சிவசப்பட்டு உளற, மனைவியோ அந்தக் குழந்தை எங்கிருந்தாலும் என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள். நான் வளர்த்துக் கொள்கிறேன்!’ என்கிறாள்.

நாகராஜா கோயில்

குழந்தையை அவனிடம் தர புவனாவும், சம்பத்தும் மறுத்து விடுகின்றனர். நாகராஜ் தயவில் வாழ்க்கை நடத்தி வரும் புவனாவும், சம்பத்தும் ஊரறிய புவனாவை மனைவியாக ஏற்க, நாகராஜ் மறுத்ததால், கடைசி வரை பிள்ளை பாசத்தால் அவன் ஏங்கட்டும் என்று குழந்தையை தர மறுத்து விடுகிறார்கள். கடைசியில் சம்பத்தும் அவளும் ஒன்று சேர்வதாக முதலில் திட்டமிட்டனர்.

வியாபார ரீதியில் அந்த முடிவு பெரும்பான்மை மக்களை கவராது என்று புரிந்து கொண்டு, உடல் நலம் குன்றிய குழந்தை பாபுவுக்கு மெடிக்கல் ஸ்டோரில் மருந்து வாங்கிக் கொண்டு வரும்போது, வழியில் விபத்தில் அடிபட்டு வந்த சம்பத்- குழந்தைக்கு மருந்து கொடுத்து காப்பாற்றி விட்டு -இறந்து விடுகிறான்.

ஊர் உலகத்துக்கு கணவன்ங்கற அந்தஸ்தை கொடுத்து விட்டு, வீட்டுக்குள்ளே தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து மறைந்த சம்பத்துக்காக வெள்ளை ஆடை அணிந்து விதவைக்கோலம் ஏற்கிறாள் புவனா என்று படத்தை முடித்து வெளியிட்டார்கள்.

குழந்தை செத்தாலும் சரி, அவன் என் மகன் என்று சம்பத் நீ சொல்லாத வரை அவனுக்கு மருந்து மாத்திரை தர மாட்டேன் என்று நாகராஜ் மெடிக்கல் ஸ்டோரில் சொல்லும் காட்சி திரையில் ஓடியபோது -சென்னை பாரகன் தியேட்டரில், ஐந்தாறு கெட்ட வார்த்தைகள் சொல்லி என்னைத் திட்டி, ‘டேய் சிவகுமாரா, மாத்திரையை குடுடா!’ என்று திட்டி ரசிகர்கள் கூச்சல் போட்டிருக்கிறார்கள்.

படம் பார்த்த என் மானேஜர் திருப்பூர் மணி சோத்துக்கு இல்லாம பட்டினி கிடந்து செத்தாலும் சரி இது மாதிரி நீங்க வில்லன் வேஷம் இனிமே போடக்கூடாதுன்னு கத்தீட்டார்.

இது புவனா ஒரு கேள்விக்குறியில் நான் வில்லனாக நடித்த கதை. அடுத்து கதாநாயகனாக நடித்த கதை.

குழந்தை பேரம்

கணவன் கல்லூரிப் பேராசிரியர். காதலித்து கல்யாணம் செய்து கொண்ட மனைவி, கணவன் மீது உயிரையே வைத்திருப்பவள். குழந்தையை குளிப்பாட்டுவது போல கணவனைக் குளிப்பாட்டி, உடையணிவித்து, ஊட்டி விட்டு, கன்னத்தில் முத்தமிட்டு கல்லூரிக்கு அனுப்பி வைப்பாள்

தான் போன் செய்தால் உடனே கணவன் போன் எடுத்துப் பேச வேண்டும். 2 நிமிடம் தாமதமானாலும் தாங்க மாட்டாள். கல்லூரி முடிந்ததும் சரியாக அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விட வேண்டும். உலகத்தோடு தொடர்பு இல்லாமல், உல்லாசமாக இருவரும் இருக்க, கொடைக்கானல், ஊட்டி சென்று பெடலிங் போட் சவாரி செல்ல வேண்டும். தோளில் கைபோட்டு நடுங்கும் குளிரில் தொட்டபெட்டா சிகரம் நடந்தே போயாக வேண்டும்.

தான் மட்டக்குதிரையில் ஏறிக் கொள்ள கணவன், அந்த குதிரையை கையில் பிடித்து நடக்க வேண்டும். ஒரே கூல் டிரிங் இரண்டு ஸ்ட்ரா போட்டு இருவரும் உறிஞ்ச வேண்டும்.

ஊட்டி கால்ஃப் காட்டேஜ் பகுதியில், பசும்புல் மேடுகளில் கணவன் உப்பு மூட்டை போட்டு தன்னை தூக்கி நடக்க வேண்டும். தன் காலைத் தூக்கி அவன் மடியில் வைத்து நகங்கள் வெட்டி விட வேண்டும். வாசலில் அவள் கோலம் போடும் அழகைக்கூட இருந்து பார்க்க வேண்டும். தன்னைக் கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் பேராசைக்காரி.

விவேகாநந்தர் மண்டபம்

கல்லூரியில் முதல்வருடன் நடக்கும் மீட்டிங்கின் போது உடனே மனைவியுடன் போனில் பேச முடியாது. ஆண்டு விழா கலைநிகழ்ச்சிக்கு கல்லூரியில் ஏற்பாடுகளைக் கவனிக்கும்போது முன் போல சரியான நேரத்தில் வீட்டுக்கு வர முடியாது. விரும்பினாலும், விரும்பா விட்டாலும், கல்லூரியில் பணிபுரியும் சக பெண் பேராசிரியர்களோடு பேசித்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை விளக்கித்தான் ஆக வேண்டும்.

காலப்போக்கில் கணவனுக்கு பெண் பேராசிரியை யாராவது வீட்டுக்குப் போன் செய்தால் புயல் அடிக்க ஆரம்பித்து விடும். திரைப்படம் பார்த்து வெளியே வரும்போது எந்த மாணவியோ, பெண் பேராசிரியரோ தப்பித்தவறி ஒரு வார்த்தை பேசி விடக்கூடாது.

இந்த அதீத காதல், அளவுக்கதிமான கெடுபிடி ஒரு கட்டத்தில் வெறுப்பை ஏற்படுத்தி விபரீத விளைவுகளை உண்டாக்கி விடும்.

நானும், படாபட் ஜெயலட்சுமியும் இந்த கதாபாத்திரங்களில் நடித்தோம். சொர்க்கம் -நரகம் படத்தின் பெயர்.

நல்ல மனைவி அமைந்தும் அது நரக வாழ்க்கையாக மாறிவிட்ட அவலத்தை கதாநாயகன், தன்னந்தனியே பாடி புண்ணுக்கு புனுகு தடவுவதாக ஒரு பாடலை படத்தில் சேர்க்க வேண்டும் என்று தேவர் அண்ணனிடம் கூறினேன்.

தேவர் -கவிஞர்

ஆஸ்தான பாடலாசிரியர் கண்ணதாசனை அழைத்தார். பாசமான மனைவி, அன்பான துணைவி அளவுக்கு அதிகமாக கணவனை நேசிச்சு -அதனாலேயே சந்தேகம் ஏற்பட்டு சந்தேகம் அவர்கள் வாழ்க்கையை எப்படி குதறிப்போட்டது என்பதை விளக்கும் பாடல் வேண்டும் என்று கவிஞரிடம் சொன்னோம்.

சொர்க்கம் நரகம்

கம்பருக்கு சடையப்ப வள்ளல் -கவியரசருக்கு சின்னப்பா தேவர்.

‘தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள்

கண்ணீரைக் காணாமல் ஓய்ந்ததும் இல்லை- அவர்கள்

கண்மூடி கண்மூடி தலையணையில் சாய்ந்ததுமில்லை,

சந்தேகக்கோடு- இது சந்தோஷக்கேடு,

இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு.

வாழ்க்கையிலே ஒன்று பட்டாள்; வழி நெடுக கூட வந்தாள்;

வார்த்தையிலே கொன்று விட்டாள் என்னையே -தன்

வாயாலே கெடுத்துக் கொண்டாள் தன்னையே.

உண்மையிலே வாழ்ந்தவனை ஒரு மனதாய் நின்றவனை

ஊர் சிரிக்க வைத்ததடி- சந்தேகம் - இனி

உனக்குக்கூட சொந்தமில்லை; என் தேகம்-

இப்படி 40 பக்கங்களில் விளக்கிச் சொல்ல முடியாத விஷயத்தை 4- வரிகளில் ஆழமாகச் சொல்லும் ஆற்றலை கவிஞரிடம் கண்டு பலமுறை மலைத்திருக்கிறேன்.

---

அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x