

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி (U.R.Ananthamurthy) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத் தில் தீர்த்தஹள்ளி அடுத்த மெலிகே கிராமத்தில் (1932) பிறந்தார். உள்ளூர் சமஸ்கிருதப் பள்ளியில் ஆரம்பக் கல்வி யும், தீர்த்தஹள்ளியில் மேல்நிலைக் கல்வியும் பயின்றார்.
l மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். காமன்வெல்த் உதவித்தொகை பெற்று இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1970-ல் மைசூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, 17 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.
l கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலைக்கழகத் துணைவேந்தர், கர்நாடக மத்திய பல்கலைக்கழக வேந்தராகவும் பணியாற்றியவர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
l ஆரம்பத்தில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார். இளம் வயதில் இவர் எழுதிய ‘சம்ஸ்காரா’ நாவல் உன்னதமான படைப்பாக கருதப்படுகிறது. இது இலக்கிய உலகில் மிகப் பெரிய எழுச்சி, சிந்தனை மாற்றத்தோடு, விவாதங்களையும் எழுப்பியது. 1990-களில் ஆங்கிலத்தில் சமூக, அரசியல் விமர்சனங்கள் எழுதிவந்தார்.
l திரைக்கதை ஆசிரியராகவும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தவர். சாகித்ய அகாடமி தலைவராக 1993-ல் தேர்ந்தெடுக் கப்பட்டார். இளம் எழுத்தாளர்கள் மீது அன்பு காட்டி, அவர்களை ஊக்குவித்தார். புதினம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை என இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர்.
l பல நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘சம்ஸ்காரா’, ‘பவ’, ‘திவ்ய’, ‘அவஸ்தே’, ‘மவுனி’ உள்ளிட்ட இவரது பல படைப்புகள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிவந்த கட்டுரைகள் 8 தொகுதிகளாக வெளிவந்தன. இவரது நூல்கள் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மரபு என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் போலித்தனங்களை இவரது படைப்புகள் சாடின.
l தமிழ் மொழி, தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு, அபிமானம் கொண்டவர். ‘தமிழ் தனித்துவம் வாய்ந்தது. தமிழரின் கலாச்சார வேர்கள் வலிமையானவை’ என்பார். குழந்தைகளுக்குப் பள்ளியில் பயிற்று மொழியாகத் தாய்மொழி இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியவர். கர்நாடக அரசு பள்ளிகளில் தமிழுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தார்.
l சமூக அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள் குறித்த கருத்துகளை துணிச்சலாக கூறுவார். நல்ல பேச்சாளரும்கூட. கர்நாடகா மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளிலும் பல இலக்கிய கூட்டங்கள், சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். ‘பெங்களூரூ’ என்று பெயர் மாற்றும் கோரிக்கையை முன்வைத்தவர்.
l 1994-ல் ஞானபீட விருது பெற்றார். ராஜ்யோத்சவா, பத்மபூஷண் விருதுகளையும் இலக்கிய சாதனைக்காக பல முக்கிய விருதுகள், பரிசுகளையும் பெற்றவர். 2011-ல் இவரது ‘பாரதிபுரா’ படைப்பு ‘தி இந்து’ இலக்கியப் பரிசுக்காகவும், 2013-ல் இவரது பெயர் புக்கர் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.
l உலக அளவில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளரும், கன்னட இலக்கிய உலகில் ‘நவ்ய’ எனப்பிடப்படும் நவீன இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவருமான யு.ஆர்.அனந்தமூர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 82-வது வயதில் மறைந்தார்.