

'தி இந்து' நிவாரண முகாமில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் பாரத். சென்னை அண்ணா சாலையில் ஜி.பி.சாலை பின்புறம் இன்டிரியர் டிசைன் தொழிலை சொந்தமாக நடத்திவருபவர்.
கடந்த 15 வருடங்களாக தனது கடையை நடத்திவரும் பரத் ரினோவேஷன், மால்கள், வீட்டு கட்டுமானத்தில் உள் வடிவமைப்புகள், பஸ்கள், ஆடை வடிவமைப்பு, பொம்மைகள், போட்டோஷாப் வேலைகள் என பல்வேறு பணிகள் இணைந்தது இவருடைய இன்டிரீயர் டிசைன் பணி.
ஆனால் தற்போது கடை மூடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் மழை மட்டுமல்ல நிவாரணப் பணிகளில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு. அதில் பணியாற்றிவரும் 22 பேருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் இவரால் அளிக்கப்பட்டுள்ளது. முகாம் தொடங்கிய நாளிலிருந்தே இங்கே வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
''தினமும் விடியற்காலை 3,4 மணிக்கு எழுந்துருவேன். வாகனங்கள்ல வந்து இறங்கும் நிவாரணப் பொருட்களை எடுத்துவைப்பது, பிரித்து அடுக்குவது, மக்களுக்கு தரவேண்டிய பேஸ்ட்,பிரஸ் டிரஸ், பிஸ்கட் ஆகியவற்றை பேக் செய்து போடுவது போன்ற வேலைகளை செய்வோம். மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கும் செல்வோம். அதுமட்டுமின்றி, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களிலிருந்து வந்த காய்கறிகளையும் கொண்டுபோய் கொடுத்துள்ளோம்.
வேளச்சேரி ராம்நகர், கிழக்குத் தாம்பரம், முடிச்சூர், கோட்டூர்புரம், அடையாறு, கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், புதுப்பேட்டை போன்ற பகுதிகளுக்கெல்லாம் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளோம்.
எனக்கு தனியா உதவிசெய்யறதைவிட இப்படி' தி இந்து' போன்ற அமைப்புகளோடு சேர்ந்துசெய்வது மிகவும் பயனுள்ளதாகவும் பெரிய அளவில் பணிகளை செய்யமுடிவதையும் உணர்ந்தேன். இது மிக மகிழ்ச்சியாக உள்ளது.'' என்று உற்சாகத்தோடு கூறுகிறார்.