Last Updated : 25 Jun, 2014 03:24 PM

 

Published : 25 Jun 2014 03:24 PM
Last Updated : 25 Jun 2014 03:24 PM

வண்டியை இரவல் கொடுத்த நண்பருக்கும் அபராதம்!

#வாகன விதிமீறல் தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் ஈரோடு மண்டல துணை போக்குவரத்து ஆணையர் எஸ். வேலுசாமி.

#ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவருக்கு எவ்வளவு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது?

#ஒருவருக்கு வாகனம் ஓட்டத் தெரியும் என்பதை உறுதி செய்வதே வாகன ஓட்டுநர் உரிமம்தான். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 181, விதி 3 மற்றும் 4-ன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

#நண்பர் அல்லது பிறரது வாகனங்களை இரவல் வாங்கி சிலர் ஓட்டுவார்கள். அப்படி ஓட்டுபவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பிடிபட்டால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் இல்லாதவருக்கு வாகனம் வழங்கியதற்காக அதன் உரிமையாளருக்கும் ரூ.500 என மொத்தம் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.

#வாகனக் காப்பீடு சான்று இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுமா?

#வாகனக் காப்பீடு மிக அவசியம். விபத்துக் காலங்களில் நமக்கு அல்லது வாகனங்கள் சேதமடைந்தால் காப்பீடு நடப்பில் இருந்தால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெறமுடியும். அதற்காகவே காப்பீடு சான்று இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. காப்பீடு சான்று இல்லாமல் வாகனங்களை இயக்குவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 146, 196-ன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

#இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருந்தால், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படுமா?

விபத்து நேரிடும்போது வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வலியுறுத்தப்படுகிறது. இதைப் பின்பற்றாமல் இருப்பது விதிமீறலாகும். இதற்கு மோட்டார் வாகனச் சட்டம் 177-ன்படி ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை அபராதம் விதிக்கலாம்.

#பேருந்தில் பயணிக்கும்போது சலுகை விலை கட்டண அட்டை (பாஸ்) அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கு என்ன தண்டனை?

#போக்குவரத்து துறையினர் மட்டுமின்றி வட்டார போக்குவரத்து துறையினரும் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளலாம். அந்த ஆய்வின்போது டிக்கெட் அல்லது சலுகை விலை கட்டண அட்டை இல்லாமல் பயணிப்போருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 178-ன் கீழ் ரூ.200 வரை அபராதம் விதிக்க முடியும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x