

குறள்
பொருள்:
தீ விபத்து காரணமாக ஏற்படுகிற புண்ணானது உடலில் சில துன்பத்தைக் கொடுக்கும். அந்தப் புண்ணுக்கு மருந்திட்டால் அந்தப் புண் எளிதில் ஆறிவிடும். ஆனால் அந்தப் புண்ணினால் ஏற்பட்ட வடு உடம்பில் இருந்துகொண்டே இருக்கும்.
விளக்கம்:
நாவைக் கட்டுப்படுத்துதல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான பண்பாகும். கட்டுப்படுத்தாத சொற்கள், பிறருக்கு மட்டுமல்லாமல் அந்த சொல்லை பயன்படுத்தியவருக்கும் எல்லையற்ற தீமையைத் தந்துவிடும்.
என் தந்தை ராமேசுவரம் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். ஒருநாள் அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் ஒரு பிரச்சினைக்காக கூடியிருந்தார்கள். ஊர் பெரியவர்கள் அனைவரும் அங்கே இருந்தனர்.
அங்கு வந்திருந்த சிலர் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல், வீண் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டனர். என் தந்தை அவர்களைப் பார்த்து ‘‘ஏதாவது ஒரு நல்ல முடிவை எடுப் பதற்கு அனுமதியுங்கள். உங்களுடைய கோபத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை’’ என்றார். ஆனாலும் அதை அவர்கள் கேட்பதாக இல்லை. வார்த்தைகள் தடித்து மீண்டும் சண்டை போட ஆரம்பித்தார்கள். உடனே என் தந்தை அவர்களிடம் ‘‘நீங்கள் அனைவரும் நாளை வாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பிவைத்தார். என் தந்தையுடன் வந்திருந்தவர்களுக்கு ஒரே குழப்பம். அவர்களிடம் என் தந்தை சொன்னார்: ‘‘இவர்கள் இன்று இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள விரும்பவில்லை.
அதைப் பெரிதாக்கிக் கொள்வதுதான் அவர்களின் விருப்பம். அவர்களுடைய வார்த்தைகள் மிகவும் மோசமாகவும், அடுத்தவர்களைப் புண்படுத்துவதாகவும் இருந்தது. இந்தக் கூட்டம் இன்று தொடர்ந்தால் மேலும் மேலும் அந்தப் புண் பெரிதாகிக்கொண்டே போகும். அந்தப் பிரச்சினை என்றைக்கும் தீர்க்க முடியாத நிலையை அடைந்துவிடும். அதனால்தான் அவர்களை நாளை வரச் சொன்னேன்’’ என்றார். அடுத்த நாள் அவர்கள் வந்தபோது அவர்களை அமைதியாக பேச வைத்து ஊர் பிரச்சினைக்கு நல்ல ஒரு தீர்வு கண்டார்.
குறள்
பொருள்:
மிகுந்த பயன்களை ஆராய்ந்து அறியும் ஆற்றல் உடையவர்கள், யாருக்கும் எப்போதும் சிறிதளவுகூட பயன் தராதச் சொற்களைப் பேச மாட்டார்கள். அவர்கள் எப்போதும், எந்த நிலைகளிலும் பயன்தரக்கூடியச் சொற்களை மட்டுமே பேசுவார்கள்.
விளக்கம்:
இந்தத் திருக்குறளுக்கு என் வாழ்வில் மிக முக்கியமான தருணத்தை நினைவில் கொண்டு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். SLV - 3 என்கிற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் விஞ்ஞானப் பணியில் நானும், என் நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். விண்ணில் செலுத்தும் வகையில் செயற்கைக்கோளின் எல்லா நிலைகளையும் உறுதிபடுத்தினோம். இதைத் தொடர்ந்து ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்து தனது பாதையில் முதல் கட் டத்தை வெற்றிகரமாகக் கடந்தது. அடுத்து ராக்கெட் தன்னு டைய இரண்டாவது கட்டத்தை நோக்கி அதிவேகத்தில் செல்லும் போது, அது தன்னுடைய பாதையில் இருந்து விலகிப் பயணிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் ராக்கெட் தன்னுடைய செயல்பாட்டை இழந்து, அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
அந்த நேரத்தில் தோல்வியின் விமர்சனங்கள் என்னை வேதனையின் உச்சத்துக்குக் கொண்டுச் சென்றன. எங்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் மற்றும் டாக்டர் பிரம்ம பிரகாஷ் ஆகியோர் என்னிடம் நெருங்கி வந்து, மிகவும் அன்புடன் ஆறுதலாக ‘‘உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் பக்கபலமாக இருப்போம். மேலும் இந்த விண்வெளி மையத்தைச் சேர்ந்த நம் நண்பர்கள் எல்லாம் என்றைக்கும் உங்களுடன் இருப்பார்கள். மீண்டும் விண்ணில் நாம் நம் ராக்கெட்டை பறக்கவிடுவோம், வாருங்கள்’’ என்றனர்.
அவர்களுடைய ஆறுதலான அந்த வார்த்தைகள் எனக்குள் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. மேலும் சில சோதனைகளுக்குப் பிறகு, ரோகிணி செயற்கைக் கோளை மீண்டும் விண்ணில் செலுத்தி வெற்றிகண்டோம். அந்த வெற்றி செயற்கைக் கோளை ஏவும் திறன்கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் இடம்பெறச் செய்தது.
- நல்வழி நீளும்…