Published : 23 Apr 2021 10:34 AM
Last Updated : 23 Apr 2021 10:34 AM

திரைப்படச்சோலை 25: ராஜேந்திர சோழனின் குதிரையேற்றம்

கி.பி.1006-லிருந்து 1010 வரையிலான காலகட்டத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது தஞ்சை பிருகதீஸ்வரர் ஆலயம்.

ராஜராஜ சோழன் வரலாற்றை அரு.ராமநாதன் நாடகமாக்கித் தர டி.கே.எஸ்.குழு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கம்பீரமாக மேடையேற்றினார்கள். 1955 முதல் 68 வரை 13 ஆண்டுகள் அமோகமான மக்கள் வரவேற்பைப் பெற்றது அது.

சென்னை, ஆனந்த் தியேட்டர்ஸ் அதிபர் ஜி.உமாபதி திரைப்படமாக அதைத் தயாரிக்க முன்வந்தார். ஏ.பி.நாகராஜன் அதை இயக்கினார். சிவாஜி-ராஜராஜ சோழன், முத்துராமன்-விமலாதித்தன், சிவகுமாராகிய நான் ராஜேந்திர சோழன், லட்சுமி-குந்தவையாக நடித்தனர். எம்.என்.நம்பியார், சகஸ்ரநாமம், எஸ்.வரலட்சுமி, விஜயகுமாரி போன்ற நட்சத்திரப் பட்டாளம் அந்தப் படத்தில் இடம் பெற்றது.

முதலில் 70 எம்.எம். படமாகத் தயாரிக்கலாம் என்று ஆசைப்பட்டார்கள். அப்படி படமாக்க 70 எம்.எம். கேமரா வசதி அப்போது இந்தியாவில் இல்லை. பிலிம் சைஸும் பெரியது. அதற்கான ‘லேப்’ வசதியும் இந்தியாவில் இல்லை. அதனால் சினிமாஸ்கோப் என்று முடிவு செய்தனர்.

ராஜராஜனாக - சிவாஜி

சினிமாஸ்கோப் -திரைக்கு விசேஷ லென்ஸ்- ‘அடாப்டர்’ இணைத்துப் படமாக்க வேண்டும். 35 எம்எம் பிலிமில் உருவங்கள் படமாகும். சாதாரணமாகத் திரையிட்டால், நடிக, நடிகையர் பனைமரம் போல் குச்சி, குச்சியாய் தெரிவார்கள். திரையிடும் அத்தனை தியேட்டர்களுக்கும், விசேஷ லென்ஸ் ‘அடாப்டர்’ அனுப்புவார்கள். புரொஜக்டர் முன் அதைப் பொருத்தினால் சினிமாஸ்கோப் திரையில் -அகண்ட திரையில் படம் நன்றாகத் தெரியும்.

வடபழனியில் ‘பரணி ஸ்டுடியோவுக்கு மேற்குப் பக்கம்- சாரதா ஸ்டுடியோவுக்கு எதிர்பக்கம்’ வாசு ஸ்டுடியோஸ் இருந்தது. தஞ்சை கோயிலின் நீள அகலத்தை அளந்து வந்து அதே சைஸில் ‘செட்’ போட்டார்கள். கோபுரம் கலசம் இரண்டும், அந்தக் கட்டிடத்தின் மேல், அசலாக இருப்பது போல, ஆர்ட் டைரக்டர் கங்கா- கேமரா முன்னால், ஒரு கண்ணாடியை ஸ்டேண்டில் பொருத்தி -கோயில் கட்டிடத்தின் மேல் கோபுரம், கலசம் இருப்பது போல் கண்ணாடியில் ஓவியமாக வரைந்து முடித்தார்.

ராஜேந்திரனாக

கேமரா வழியே பார்க்கும்போது, புதிதாக தஞ்சை கோயில், அதன் மேல் கோபுரம் இப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டது போலத் தோன்றும். கோயில் கும்பாபிஷேகம், சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் திரளாக ஊர் மக்கள் கூடிக் கொண்டாடுவதைப் படமாக்கினார்கள்.

1972 -மார்ச்சில் தொடங்கிய படத்தின் யுத்த காட்சிகள் 1973 -ஜனவரியில் கிரஸண்ட் இன்ஜினீயரிங் கல்லூரியை ஒட்டிய வண்டலூர்-கோவளம் பாதையில் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது.

தலையில் 3 கிலோ கனமுள்ள கிரீடம், உடம்பில் ஜரிகைத் துணியில் ஆடை. அதன் மேல் போர்க்கவசம், இடுப்பில் உடைவாள், காலில் கனமான ஜடா போன்ற செருப்பு. இதையெல்லாம் மாட்டிக்கொண்டு மே மாத வெயில் -பகல் 12 மணிக்கு யுத்தக் காட்சியில் நடிக்க வேண்டும். அதை விட தண்டனை வேறு வேண்டாம்.

ராஜேந்திர சோழனான - எனக்கென்று ஜிம்கானாவிலிருந்து அதி உயரமான கருப்புக்குதிரையைக் கொண்டு வந்திருந்தார்கள். நான் ஐந்தரை அடி உயரம். கிரீடம் அரை அடி. குதிரையின் முதுகு 6 அடிக்கு மேல் இருந்தது. பொதுவாக குதிரை மீது ஏற வேண்டும் என்றால் அதன் முகத்தருகே போய், கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு- சேடல் (SADDLE) என்ற மெத்தை மீது ஏற STIRRUP என்கிற -SADDLE-லிலிருந்து கீழே ஒரு அடி உயரத்தில் தொங்கும் லாடம் போன்ற வடிவுள்ள இரும்பு வளையத்திற்குள் இடது கால் பாதத்தை விட வேண்டும். பின் அதில் முழு பலத்தையும் போட்டுத் தாவி ஏறி சேடல் மீது அடுத்த காலை வீசி ஜம்மென்று உட்கார்ந்து கடிவாளத்தைப் பிடறியோடு சேர்த்து அணைத்துப் பிடிக்க வேண்டும்.

நான் போட்டிருந்த ராஜ உடை இப்படியெல்லாம் செய்து குதிரை மேல் ஏற அனுமதிக்கவில்லை. 4 அடி ஸ்டூல் கொண்டுவந்து போட்டு அதன் மீது ஏறி STIRRUP-ல் காலை விடச்சொன்னார்கள். ராஜாவின் பாதுகையில் முன்னால் சேவலின் பூப்போல சுருண்டிருந்த தோல் பகுதி STIRRUP-க்குள் நுழையவில்லை. பெரும்பாடு பட்டு திணித்து என்னை குதிரை மேல் ஒரு வழியாக ஏற்றி விட்டார்கள். டென்ஷனில் வியர்வை -ஆறாக உடைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் வந்தார். ‘சார்! கடிவாளத்தை லூசாக விட்டு அடி வயிற்றைக் காலால் தட்டினால் குதிரை ஓட ஆரம்பித்துவிடும். நிற்க வேண்டுமென்றால் இரண்டு பக்க கடிவாளத்தையும் பிடரியுடன் சேர்த்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்!’ என்றார்

எல்லோரும் நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறார்கள். சிவாஜி உன்னிப்பாக கவனித்தார். என் போறாத நேரம். ஒரு ஈ வந்து குதிரையின் மூக்கு துவாரத்தில் நுழைந்தது. ‘ஆச்’சென்று குதிரை தும்மல் போட, தலையைக் கீழே கொண்டு போனபோது இறுக்கமாகப் பிடித்திருந்த நான் குப்புற குதிரை மேல் விழுந்தேன். அதிர்ச்சியில் கிரீடம் குதித்து தரையில் விழுந்தது. சிவாஜி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க- படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் ‘கொல்’ லென்று சிரித்தனர்.

குந்தவையுடன் மோதல்.

ஈ விடவில்லை. மறுபடியும் குதிரையின் மூக்கில் நுழைய முயன்றது. மீண்டும் ஒரு தும்மல். குதிரையின் தலை மேலே இருந்து அதன் முழங்கால் வரை போய் வந்தது. நான் நிலைகுலைந்து குதிரையின் பக்கவாட்டில் சரிந்தேன்.

ஓடிவந்து பிடித்து இறக்கிவிட்டனர். சிவாஜி வரச்சொன்னார். போனேன். ‘‘நம்மளுக்கு என்ன தொழிலுங்க?’’ என்று கேட்டார். ‘‘நடிப்பதுதான்!’’ என்றேன். ‘‘ஙொப்பன் மகனே! அப்புறம் இதெல்லாம் எப்படா கத்துக்கப் போறே?’’ என்றவர், ‘‘ஜிம்கானா கிளப்புக்கு போன் பண்ணிச் சொல்றேன். போயி ஒழுங்கா குதிரை ஓட்டக் கத்துக்க!’ என்று விரட்டிவிட்டார்.

ஜிம்கானா கிளப்பில் மெம்பராக - ஒரு ஆள் சிபாரிசு பிடித்து - அங்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டுமென்று விசாரித்துச் செய்வதெல்லாம் நமக்குச் சரிப்படாது என்று திரைப்படங்களில் ஸ்டண்ட் காட்சிக்கு குதிரைகள் சப்ளை செய்யும் கோவிந்தராஜன் வீட்டைத் தேடிப் பிடித்தேன்.

‘‘நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. பூ மாதிரி சிரமமில்லாம குதிரை ஓட்டக் கத்துத் தர்றேன்!’’ என்றார்.

அதிகாலை 4 மணிக்கு செயிண்ட் பீட்ஸ் பள்ளியை ஒட்டிய கடற்கரைக்குச் சென்றேன். கோவேறு கழுதையை விட கொஞ்சம் பெரிய ரகம்- சாதாரணமாக வண்டி இழுக்கும் குதிரை ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். மேலே ஏறி உட்கார்ந்ததும் முதுகு வில் மாதிரி வளைந்தது. ‘என்ன மாஸ்டர்!’ என்றேன். ‘பொதுவா ஜாக்கிகள் எடை 40- 50 கிலோவுக்குள்தான் இருக்கும். நீங்க கொஞ்சம் கனம் ஜாஸ்தி. அதனால குதிரை நெளியுது!’ என்றார். வடக்கே காந்தி சிலை உள்ள பகுதி வரைக்கும் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.

வாள் சண்டை

எல்கேஜி வகுப்பில் சேர குஷியாகப் போன குழந்தை -வகுப்பில் முதல் நாள் டீச்சர் செய்கிற கெடுபிடி - கைகட்டி, வாய் பொத்தி உட்கார வேண்டிய கொடுமையெல்லாம் பார்த்து, - 2-ம் நாள் பள்ளிக்குப் புறப்படச் சொன்னால், ‘அம்மா! நான் குறும்பு எதுவும் செய்யமாட்டேன். நீ சொல்றபடியெல்லாம் கேட்கறேன். பள்ளிக்கூடம் மட்டும் வேண்டாம்மா!’ என்று அடம்பிடித்து அழும்.

அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு இழுத்துப் போவது எப்படி கொடுமையோ -அப்படி காந்தி சிலை வரை ‘தம்’ பிடித்து குதிரையை இழுத்துப் போனார் உதவியாளர். காந்தி சிலையிலிருந்து தெற்கு நோக்கி திருப்பி விரட்டினால் தேசிங்கு ராஜன் குதிரை மாதிரி குதித்துக் குதித்து ஓடியது. மறுபடியும் திருப்பி காந்தி சிலை பக்கம் இழுத்தால் வர மறுக்கிறது.

‘என்ன மாஸ்டர்! தெற்கே திருப்பினால் மட்டும் சிட்டாப் பறக்குதே. எப்படி?’ என்றேன்.

‘‘தெற்கேதானே குதிரை லாயம் இருக்கு. குதிரை தங்கற வீடு இருக்கு. வீட்டுக்குப் போக யாருக்குத்தான் ஆசை இருக்காது?’’ என்றார்.

4-வது நாள் கொஞ்சம் பெரிய குதிரையாக வெள்ளை கலரில் உடம்பில் அங்கங்கே கரும்புள்ளிகளோடு ஒன்றைக் கொண்டுவந்தார். ‘ஒயிட் லில்லி’ என்பது அதனுடைய பெயர்.

அந்தக் குதிரைக்கு ஏனோ என்னைப் பிடிக்கவில்லை. கடிவாளத்தை பிடிக்கப்போனால் கனைத்துக் கொண்டு 4 அடி தள்ளி நின்றது. மீண்டும் கிட்டப்போனால் ஏறவிடமால் நகர்ந்து நின்றது.

‘என்னய்யா?’ என்றேன்.

‘நீங்க கறுப்பு டிரஸ் போட்டு வந்திருக்கறதால பயப்படுது. கொடைக்கானல் ஷூட்டிங் போன எடத்தில ஏதோ பயந்துட்டுது போல!’ என்றார்.

குந்தவை காதல்

மறுநாள் ‘ஒயிட் அண்ட் ஒயிட்’ -பேண்ட், டீ சர்ட்ல போனேன். மீண்டும் அதே நிலைமைதான். வேறு வழியில்லாமல் குதிரையின் கண்களை மஃப்ளர் துண்டால் கட்டி மறைத்து பின்னர் என்னை ஏற்றிவிட்டார்.

தரமான குதிரை என்பதால் கம்பீரமாக ஓடியது. குதிரை ஓடும் முறைக்கு TROT-CANTER - GALLOP என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘டக், டக்.. டக் டக்... டக் டக் டக்...! ’என்று குதித்துச் செல்வது த்ராட் (TROT), டடக், டடக், டடக்.. டடக்.. -என்று குதித்துக் குதித்துச் செல்வது CANTER, நாலு கால்களை நீட்டித் தாவிப் பாய்வது GALLOP . குதிரை இப்படி தொங்கான் ஓட்டம் ஓடும்போதும், குதித்து ஓடும்போதும், அதன் முதுகுப் பகுதி மேல் பக்கமாகத் தூக்கி அடிக்கும் நம் பிருஷ்டம். இடுப்புப் பகுதி அதிரும். அதனால் குதிரை முதுகு மேல் நோக்கி அடிக்கும் போது STIRRUP-களின் துணையுடன் லேசாக எழுந்து கொண்டால் அடிபடாது.

கடற்கரை மணலில் குதிரை ஓடுவதால் நம் உடம்பில் அதிர்வுகள் அதிகம் ஏற்படாது. தார் ரோட்டில் ஓட்டும்போது அதிர்ச்சி அதிகம் இருக்கும்.

12-வது நாள் ரத்னமாலா என்ற குதிரையைக் கொண்டு வந்தார்கள். பழுத்த வாழைப்பழத்தைத் தொண்டைக்குள் வைத்து விழுங்குவது போன்ற சுகம். அதை ஓட்டும்போது அனுபவித்தேன்.

குதிரை சவாரி

HORSE POWER- என்று மின்சாரத்திற்கு, மோட்டருக்கு ஏன் பெயர் வைத்தார்கள்? என்று அதுபோன வேகத்தைப் பார்த்து உணர்ந்துகொண்டேன். நல்ல குதிரை வேகமாகப் போகும்போது ஜாக்கி வழுக்கி ஒரு பக்கமாகச் சாய்ந்தால் உடனே நின்று விடும்.

குதிரை கீழே தள்ளியதும் இல்லாமல் குழியும் பறிக்கும் என்ற பழமொழி கேட்டிருப்பீர்கள். எனக்கு குதிரை ஓட்டக் கற்றுக் கொடுத்த ஜாக்கி கணேஷ் ஒருநாள் முழங்கால் வரை தோல் உரிந்து ரத்த விளாரியாக வந்தார். ‘எப்படி ஆயிற்று’ என்று கேட்டேன். ‘என் குதிரை இன்று மூட் அவுட். அதனால் முள்வேலியோரம் சென்று கோபத்தில் என் உடம்பு முள்ளில் உரசும் வண்ணம் நெருக்கமாக நடந்து இப்படிப் பழி வாங்கிவிட்டது!’ என்றார்.

சுலபமாக எந்த வித்தையையும் கற்றுக்கொள்ள முடியாதோ?

---

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x