Published : 28 Dec 2015 02:55 PM
Last Updated : 28 Dec 2015 02:55 PM

வெள்ள மீட்பு: தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

சிக்கித்தவித்த பெரும் மழையில் இருந்து மக்களைக் காப்பாற்றிய மககளை மீட்டதில் தன்னார்வலர்களின் பங்கு பாராட்டப்பட வேண்டியது.

தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல் ஆளாக இறங்கி, களப்பணியாற்றியவர்களில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒருவர். அவருடன் நடிகர் சித்தார்த்தும் கைகோக்க, இளைஞர் படை சென்னை மற்றும் கடலூர் நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் இயங்கியது.

நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றிய தன்னார்வலர்கள் #Chennaimicro என்னும் ஹேஷ்டேகில் தங்கள் தேவைகளையும், இருப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, கடந்த சனிக்கிழமை மாலை, சென்னையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் பேசிய நடிகர் சித்தார்த், "பாலாஜியுடன் இணைந்து என்னால் செய்ய முடிந்த அனைத்து வெள்ள நிவாரணப் பணிகளுக்கும், தன்னார்வலர்களாகிய நீங்கள்தான் காரணம். உங்களுக்காகத்தான் இந்த விழா" என்றார்.

ஆர்.ஜே.பாலாஜி, "சுமார் 5,600 தன்னார்வலர்கள் களத்திலும், 24,000 பேர் ஆன்லைனிலும் வேலை பார்த்தோம். சுமார் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டு வழங்கப்பட்டன.

சுமார் 3.39 கோடி ரூபாய் சேகரிக்கப்பட்டு, எய்ட் இந்தியா மற்றும் பூமிகா அறக்கட்டளையுடன் இணைந்து நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன" என்றார்.

தெலுங்கு திரையலகம்

#ManaMadrasKosam என்ற பெயரில் தெலுங்கு திரையலகம், பெங்களூரு மற்றும் கேரளாவில் இருந்து நிவாரணப் பொருட்களைச் சேகரித்து தமிழ்நாடு மக்களுக்கு வழங்கியது. இதில் முக்கியப் பங்கு வகித்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதி விழாவில் கவுரவிக்கப்பட்டார்.

நடிகர் விக்ரம்

விழாவில் பேசிய நடிகர் விக்ரம், "சென்னையின் மனநிலை என்ற பெயரில், திரையுலகைச் சேர்ந்த 25 பாடகர்களைக் கொண்டு பாடல்கள் பாடப்பட்டு வீடியோ வெளியிடப்படும்; இதன் மூலம் எப்படி மற்றவர்களுக்கு உதவும் மனம் வந்தது என்பதை வெளிப்படுத்த முடியும் என்றார்.

தன் குழுவினருடன் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பாடகி சின்மயி, கல்பாக்கம் மற்றும் கடலூரில் இருக்கும் 50 கிராமங்களுக்கு, எய்ட் இந்தியா நிறுவனம் நிவாரணப் பொருட்களை வழங்கியது என்று கூறினார்.

விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் ஆர்.ஜே.பாலாஜி, தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களின் பதிவேற்றினார். இதற்கும் இளைஞர்களின் லைக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x