Published : 16 Apr 2021 10:24 AM
Last Updated : 16 Apr 2021 10:24 AM

திரைப்படச்சோலை 23: அன்னக்கிளி

அன்னக்கிளியில்

சிவகுமார்

கதாசிரியர் ஆர். செல்வராஜ் சொன்ன மருத்துவச்சி கதை பஞ்சு அருணாசலத்திற்கு பிடித்துப் போக அதற்கு திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பித்துவிட்டார்.

ராசையா என்ற மேதையைக் கண்டுபிடித்து இளையராஜா என்ற பெயரில், அந்தப் படத்தில் இசையமைப்பாளராக அவரை அறிமுகப்படுத்த பாடல்களை ஒளிப்பதிவு செய்தார்.

'உறவு சொல்ல ஒருவன்' படத்தின் 50-வது நாள் விழா கோவை ஷண்முகா தியேட்டரில் நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசன் தலைமை ஏற்று முத்துராமன், சுஜாதா, டைரக்டர்கள் தேவராஜ் மோகன் ஆகியோருக்கும் எனக்கும் கேடயம் கொடுத்து பாராட்டிப் பேசினார்.

வட்டிக்கடை நடத்தும் செட்டியார் இனத்தைச் சேர்ந்த ஒருவன் கவிஞனாவதும், கலப்பை பிடிக்கும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த ஒருவன் நடிகனாவதும் உலக அதிசயங்களில் ஒன்று என்று அவர் பேசியதை என்னால் மறக்கவே முடியாது.

நிகழ்ச்சி முடிந்து கலைஞர்கள் சென்னை கிளம்பிவிட்டனர். 'அன்னக்கிளி' படத்துக்கு பசுமையான வயல்வெளிகள், தோப்புகள், நீலமலைகள் சூழ்ந்த பின்னணியில் ஒரு லொக்கேஷன் பாருங்கள் என்று பஞ்சு அண்ணன் சொன்னதால் முதலில் கோபி, சத்தியமங்கலம் பகுதிக்கு தேவராஜ், மோகன், பஞ்சு தம்பி லட்சுமணன் ஆகியோரைக் கூட்டிக்கொண்டு சென்றேன்.

‘அன்னக்கிளி’யில்

பவானி அணை, கராச்சிக் கொரை கிராமம், தொட்டபாளையம், சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம் அனைத்தையும் சுற்றிப் பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து கிழக்கே கெம்மநாயக்கன்பாளையம், வாணிபுத்தூர், கொங்கர்பாளையம், வினோபாஜி நகர் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம்.

மறுநாள் கோவை பேரூர், மாதம்பட்டி, கரடிமடை, மத்திபாளையம், நரசீபுரம், தொண்டாமுத்தூர், செம்மேடு, சிறுவாணி பகுதிகளில் இடம் தேடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

தெற்கே பொள்ளாச்சி, ஆழியாறு, ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை, அதையொட்டி மலையடிவாரம் எல்லாம் சென்று இடங்களைத் தேடினோம்.

தேடாதே. தேடினால் காணாமல் போய்விடும் என்று ஒரு பழமொழி உண்டு. அப்படி கொங்குநாடு முழுக்க தேடி நாங்கள் தேடி ஓய்ந்தபோது, ஆர்ட் டைரக்டர் பாபு தெங்குமரஹாடா பற்றிச் சொன்னார்.

பண்ணாரியிலிருந்து மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் கராச்சிக்கொரை கிராமம் உள்ளது. அங்கிருந்து மலைக்காட்டுப் பாதையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தெங்குமரஹாடா. தென்னை மரங்கள் சூழ்ந்த பிரதேசம் என்று பெயர்.

காட்டுவழிப்பாதை, யானைகளும், மான்களும், மயில்களும் பறவைகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. ஒற்றை யானையைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ‘ஹார்ன்’ அடிக்காமல் இன்ஜினை, ‘ஆஃப்’ செய்து பொறுமையாக இருந்தால் 5 நிமிடங்களில் அதுவே பாதையை விட்டு உள்ளே போய்விடும்.

தெங்குமரஹாடா, பச்சைப் பசேல் என்ற, எல்லைகள் அற்ற வயல்வெளி. ஆங்காங்கே தென்னந்தோப்புகள், சுற்றிலும் நீலகிரி மலை. எந்த மாதிரி இடம் வேண்டுமென்று ஒரு வாரம் முழுக்க தேடி அலைந்தோமோ அது தானாகக் கிடைத்துவிட்டது.

இளையராஜாவுடன்...

தெங்குமரஹாடா மக்கள் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள். கூட்டுறவு முறையில் விவசாயம் இங்கு நடைபெறுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 10 ஏக்கர், 15 ஏக்கர் நிலமிருப்பினும் ஒரே டிராக்டர், 100 ஏக்கரையும் உழுது, அறுவடை செய்யும் வேலையையும் ஒரே குழுவின் ஆட்கள் செய்கிறார்கள்.

திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு இங்கு இல்லை. காட்டுப் பகுதியைத் தாண்டி பட்டணத்தில் ஏதாவது காரியமாகப் போகின்றவர்கள் அங்கு தியேட்டரில் படம் பார்த்தால்தான் உண்டு.

இந்த கிராமத்தில் வயதானவர்கள், வயசுப் பெண்கள், சிறார்கள் யாரும் சினிமா பார்த்ததாகத் தெரியவில்லை. சுஜாதா, எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், செந்தாமரை, ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் போன்று எத்தனை பேர் வந்தாலும் யாரையும் அவர்களுக்குத் தெரியாது. ஹீரோவாக நான் நடிக்க ஆரம்பித்து 4 வருடமாகிவிட்டது. அதற்கு முன் 38 படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் ஒரு சிலர் என்னை அடையாளம் கண்டு சிரித்தார்கள்.

படப்பிடிப்பு தங்கள் கிராமத்தில் முதன்முதலில் நடப்பதறிந்து அந்த கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளையும் காலி செய்து படப்பிடிப்புக் குழுவினர் தங்கக் கொடுத்துவிட்டு, மேல்கோத்தகிரியில் உள்ள தங்கள் சொந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட அந்த மக்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, எம்.என்.ராஜம் போன்ற பெண்கள் தங்க, டாய்லட் வசதியுள்ள ஓட்டு வீடுகளை ஒதுக்கிவிட்டு, காலைக் கடனைக் கழிக்க காட்டுக்குள் செல்லும் பழக்கமுள்ள என் போன்ற ஆண்கள் சாதாரண வீடுகளில் தங்கிக் கொண்டோம்.

வெளியூரிலிருந்து இந்த கிராமத்திற்கு ஆசிரியராக வரும் கதாநாயகன் உள்ளூரில் மருத்துவச்சி வேலை பார்க்கும் கிராமத்துப் பெண் அன்னம். ஆற்று நிறைய தண்ணீர் போக, சொம்பு வைத்துக்கொண்டு கரையோரம் அமர்ந்து குளிக்கும் ஹீரோவைக் கிண்டல் செய்கிறாள் அன்னம். அவளே அவனுக்கு ஆற்று நீரில் நீச்சல் அடிக்கக் கற்றுக் கொடுக்கிறாள். ஆற்றுமீனைப் பிடித்து கரையிலேயே அடுப்பு மூட்டி அதைச் சுட்டு அவனுக்குத் தருகிறாள்.

மெலிதான காதல் அவர்களுக்குள் அரும்புகிறது. வயதான தன் சகோதரிக்கு கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில், அக்காவுக்குக் கல்யாணமாக வேண்டுமென்றால் என் மகளை ஹீரோ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார் பண்ணையார்.

வேறு வழியின்றி அவன் இசைவு தருகிறான்.

நிலைமையை அன்னத்திடம் விளக்குகிறான். அன்னத்துக்கும் வாத்தியாருக்கும் கள்ளத்தொடர்பு என்று பஞ்சாயத்து கூட்டி விசாரித்து அன்னம் நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது.

இந்த ஊரில் இனி இருக்க வேண்டாமென்று மனைவி சொல்ல, அன்னத்திடமிருந்து விடைபெற வருகிறான் ஹீரோ.

ஒரு வினாடி இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கட்டி அணைக்க, வாய்க்கால் தண்ணீர் பாத்தியில் நிரம்பி கடைபோவதை ‘சிம்பாலிக்’ ஆகக் காட்டுவார்கள்.

ஆண்கள் உணர்ச்சி வசப்படலாம். பெண்கள் உணர்ச்சி வசப்பட்டால் பூமி தாங்காது, தர்மம் அழிந்து விடும் என்று அன்னம் சொல்லி அவனை அனுப்பி வைக்கிறாள். இப்படிப் போகும் கதை...

ஒரே ஷெட்யூலில் கிளைமாக்ஸ் தவிர பெரும்பகுதியை இங்கு முடித்து சென்னை கிளம்பி, மீதியை சேலம் ரத்னா ஸ்டுடியோவில் முடித்து 1976-மே மாதம் 14-ம் தேதி, அன்னக்கிளியை வெளியிட்டனர்.

இளையராஜாவின், ‘மச்சானைப் பார்த்தீங்களா?’, ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே!’, ‘சுத்தச்சம்பா நெல்லு குத்தி..!’, ‘சொந்தமில்லை, பந்தமில்லை வாடுது ஒரு பறவை’ என அத்தனை பாடல்களும் படத்தின் வெற்றிக்கு 50 சதவீதம் துணை நின்றன.

படம் சென்னையில் என் வீட்டருகே பாண்டி பஜாரில் ராஜகுமாரி தியேட்டரிலும் வெளியாகியிருந்தது. முதல் 2 காட்சிகளில் திருப்தியான வரவேற்பில்லை. 3-வது நாளில் படம் பிக் அப் ஆகி விட்டது. ‘தினம் ஒரு ஆள் மூக்குப் பொடி போட்டுக் கொண்டு, ஒல்லியாக தலையில் தொப்பியுடன் தியேட்டர் உள்ளே ஓரமாக நின்று படம் பார்க்கிறாரே; அது யார்?’ என்று மேனேஜர் கேட்டார். ‘அவர்தான் டைரக்டர் தேவராஜ் (மோகன்) என்று தெரிந்து ‘அய்யய்யோ, என்ன சார், நிக்கறீங்க!’ என்று தினமும் அவருக்கு ஒரு சீட் ஒதுக்கித் தந்தார்கள்.

இடைவேளை முடிந்து அடுத்த ரீலில், ‘சொந்தமில்லை பந்தமில்லை!’ பாடல் வரும். உண்மையிலேயே கொஞ்சம் ஸ்லோவான பாடல். முதல் நாள் மாலைக் காட்சியிலேயே அதைத் தமிழகம் முழுக்க வெட்டி விட்டார்கள்.

பூந்தளிர்

பாடல் கிராமபோன் ரெக்கார்டில் ஹிட் ஆனதும், எங்க அந்தப் பாட்டு, படத்தில் காணோம் என்று ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 56-வது நாள் தமிழகம் முழுக்க எல்லா தியேட்டரிலும் அந்தப் பாடல் காட்சி மீண்டும் இணைக்கப்பட்டது.

முழுக்க கிராமத்தில் எடுக்கப்பட்ட கருப்பு-வெள்ளைப் படம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை என்று எல்லா ஊர்களிலும் தாறுமாறாக ஓடியது. திருப்பூர் டவுனுக்குள் 80 நாள் ஓடி ரயில்வே பாலத்தை அடுத்த தியேட்டரில் போட்டால் 130 நாள் -இப்படி அநியாயத்துக்கு ஓடி எல்லா ஊர்களிலும் தியேட்டர்களுக்குச் சென்று கலைஞர்கள், ரசிகர்களை இடைவேளையில் சந்தித்து நன்றி சொன்னோம்.

சரித்திரம் படைத்த இந்தப் படத்தின் கதாநாயகிக்கு உச்சபட்ச புகழ். ஆனால், அதை கொண்டாடும் மனநிலையில் சுஜாதா இல்லாமல் போனது துரதிஷ்டம். படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றியபோது என் காதுக்குள் -இந்தப் படம் நல்லா போகக்கூடாது சார். போனா திரும்பத் திரும்ப என்னைப் பல படங்களுக்கு ‘புக்’ பண்ணுவாங்க. தொடர்ந்து நான் நடிக்கணும். இதே சித்ரவதையை அனுபவிக்கணும். வேண்டாம் சார்! இந்தப் படம் ஓட வேண்டாம்!’ என்று கண்ணீருடன் சொன்னார்.

அது மட்டுமல்ல, தமிழகமெங்கும் நடந்த தியேட்டர் ‘விசிட்’களில் அவர் கலந்துகொள்ளவே இல்லை.

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று கவிஞர்கள் பாடி விட்டுப் போய் விட்டனர். அந்த மங்கையர்க்கு -நாட்டில், வீட்டில், கணவனிடத்தில், பெற்றவர்களிடத்தில் உரிய மரியாதை, அன்பு, அரவணைப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதா?

40 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவு படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்தப் படத்தின் கதாநாயகி எரிமலையின் உச்சியில் அமர்ந்திருந்தால் எப்படிப் பொங்குவாளோ, அப்படி பொங்கி, ‘சார்! என்னோட கடந்த காலத்தை கேக்காம கல்யாணம் பண்ணிக்கத் தயார்னு ஒரு குருவிக்காரனோ, கிளி ஜோசியரோ சொன்னா, பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிட்டு, நடிப்புக்குக் கும்பிடு போட்டுட்டு போயிடுவேன் சார். பணம் காய்க்கும் மரமா என்னை அப்பா அம்மா பயன்படுத்தறாங்க. என் உடம்புக்கு சரியில்லாமப் போனாலும், கால்ஷீட் குடுத்திடறாங்க. எனக்குப் பிடிக்காத கேரக்டரா இருந்தாலும் பணத்துக்காக நடிக்கச் சொல்றாங்க. எனக்குன்னு தனி அக்கவுண்ட் பேங்க்ல கிடையாது. மார்க்கெட் இருக்கிற வரைக்கும் என்னை சாறாப் புழிஞ்சு எடுத்திட்டு, சாகடிக்கப் போறாங்க. என் விருப்பு, வெறுப்பு பத்தி அவங்களுக்கு அக்கறையில்லை. இந்த டார்ச்சர் தாங்காம தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூட பல தடவை தோணிச்சு!’ என்று சொன்னபோது, எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

துணையிருப்பாள் மீனாட்சி.

அந்த நாளில் இப்படி ஒவ்வொரு கதாநாயகிக்குள்ளும் ஒரு போராட்டம் இருக்கவே செய்தது. ஆனால் சுஜாதா அதை வெளியே சொல்லாமல் கண்ணீர் வழி அதை வெளிப்படுத்தி வாழ்ந்தார்.

'அன்னக்கிளி' வெளியாகும்போது தன்னையே வெறுத்த சூழலில் இருந்தவரை காலம் விடவில்லை. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த உணர்வுப் பூர்வமான கதாநாயகியாக புகழ்பெற வைத்தது. பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்' போன்ற படங்களும், பாலாஜியின், ‘விதி’ படத்து நீதிமன்றக் காட்சிகளும், என்னோடு நடித்த 10 படங்களில் 'வாட்ச்மேன் வடிவேலு' போன்ற படங்களும், கமல், ரஜினிகாந்த் உடன் நடித்ததோடு, சிவாஜியுடன் ‘தீபம்’, 'அண்ணன் ஒரு கோயில்', 'அந்தமான் காதலி', 'விஸ்வரூபம்', 'தீர்ப்பு', 'தியாகி', 'திருப்பம்' போன்ற படங்களிலும், கமலுடன், 'உயர்ந்தவர்கள்', 'கடல்மீன்கள்' எனத் தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்கள் அத்தனை பேருடனும் நடிப்பில் சவால் விட்டவர்.

டைரக்டர் தேவராஜ் (மோகன்)

நடிக்கும்போது கண்ணீர் வர, ‘க்ளிசரின்’ என்ற திரவத்தை எல்லோரும் பயன்படுத்தி அழுவார்கள். சுஜாதா எவ்வளவு எமோஷனல் காட்சியாக இருந்தாலும் தாரை தாரையாக உண்மையாகவே கண்ணீர் விட்டு அழுது நடிப்பார். தியேட்டரில் தனது காட்சிகளுக்குக் குரல் பதிவு (டப்பிங்) செய்யும்போது கூட கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டும். அப்படி ஒரு அபூர்வ நடிகை.

‘‘சார்! ஒரு வழியா எனக்குக் கல்யாணமாயிருச்சு. நடிகைகள் ஒரே ஆளோட இருக்க மாட்டாங்க. டைவர்ஸ் பண்ணிட்டு அடுத்த புருஷனைத் தேடுவாங்கன்னு குற்றச்சாட்டு இருக்கு. நான் அப்படி இல்லை. கடைசி வரை ஜெயகர் மனைவியா வாழ்ந்துதான் சாவேன்!’’ என்று சொல்லி அப்படியே ஜெயகர் மனைவியாக மரணித்தபோது, மரியாதை செய்ய அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

புன்னகை பூத்த அந்த முகத்தின் மீது அவர் சொன்ன வார்த்தைகள் ஒலித்தன.

---

அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x