

இந்த மழை நமக்கு வினோதமான அனுபவங்களைத் தந்துள்ளது. உன்னதமான இதயங்களையும் இனம்காட்டியுள்ளது. கொளத்தூரில் கம்யூட்டர் சேல்ஸ் அன்ட் சர்வீஸ் (சிப் லெவல்) கடை வைத்திருக்கும் தினகரன் மனைவிக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் நிவாரண முகாமுக்கு வந்திருக்கிறார்.
தனது வீட்டுக் கடமைகளே தலைக்குமேல் நிறைய இருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு அவர் இங்கே வந்து முகாம் பணிகளில் ஈடுபட செய்யவேண்டிய அவசியம் என்ன? அவரை நாள் தவறாமல் இவங்கே வரவழைக்க உந்தித்தள்ளியது எது? என்றெல்லாம் நமக்குத் தோன்றியதை அவரிடமே கேட்டோம்.
''என்ன சொல்றது? பல்வேறு வகையில பாதிக்கப்பட்டவங்களை நேர்ல பாத்ததுதான் காரணம். திருமுல்லைவாயல் செரீஸ் மருத்துவமனையிலிருந்து என் குழந்தை டிஸ்சார்ஜ் ஆன அன்றிலிருந்தே மழைதான்.
வீட்டு வாசலில் முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்திருக்க பிறந்த குழந்தை தன்னோட அப்பா வீட்டுக்கு முதன்முதலா வர்றான். அவன் பிறந்தநாள்லருந்தே மழை பெய்யறதை நினைச்சி சந்தோஷப்படறதா? மழைபெய்யப் பெய்ய மக்கள் மிகப்பெரிய அபாயத்தெல்லாம் சந்திக்கறாங்களேன்னு வருத்தப்படறதான்னே தெரியலை.
எப்படியோ இந்த உலகத்துக்கு அவன் வரும்போதே பெரிய மழையைக் கொண்டுவந்துட்டான் இல்லைங்களா, அதனால அவனுக்கு 'காட்சன்' (Godson) னு பேரு வச்சிருக்கோம்.
அப்புறம் எங்கப் பகுதியில மழைவெள்ளத்துல நிவாரணப் பொருள் கொடுக்க வந்தாங்க. எனக்கு இந்தமாதிரியெல்லாம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவிகள் செய்ய ரொம்ப விருப்பம். குழந்தையை விடறதா? கிட்ட இருந்து பார்த்துக்கறதான்னு ஒரே என்று குழப்பம்.
கடைசியில் கிடைக்காதவங்களுக்கு நிவாரணப்பொருள் வாங்கிக்கொடுக்கணும்னு முடிவு செஞ்சேன். குடும்பத்தில் உள்ளவர்களையும் குழந்தையையும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செட்டில் செஞ்சேன். என்னுடைய கிளையன்ட்டான தமிழ்நாடு மினரல்ஸ் ஆபீஸ்ல சர்வீஸை முடித்துவிட்டு இன்னும் கிடைக்காத எங்கள்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வாங்க சேப்பாக்கம் வந்தேன்.
அங்க போய் கேட்டபோது நாளை வாங்க தர்றோம்ன்னாங்க. மறுநாளும் போனேன். அப்போதான் பொருட்களை வாங்கினபோது இங்க எல்லாரும் மும்முரமாக இயங்கறதைப் பார்த்ததும் இங்கேயே வேலைசெய்யணும்னு நோக்கம் உருவாச்சி. அடுத்தநாள் இங்கிருந்து ஃபீல்டு வேலையாக வடசென்னை கல்யாணபுறம் போனேன்.
அங்கே குடிசைப் பகுதிகள்ல இருக்கற மண்வீடுகள் எல்லாம் இடிஞ்சிபோன சூழ்நிலையைப் பார்த்தேன். மனதில் வலியும் பாரமும் உண்டானது. அன்னிலிருந்து ஒன்பது நாளா வந்து என்னால முடிஞ்ச வேலைகளை செய்யறேன்.''
தினகரனுக்கு கம்யூட்டர் சர்வீஸ் செய்வதற்கு நிறைய வேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு அலுவலகங்களிலிருந்து இவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவர்களுக்கு ''ரெண்டுநாள் ஆகும் மூனுநாள் ஆகும் வர்றேன்'' என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார். அதையும் ஒருபக்கம் செய்யலாமே எனக் கேட்டோம்.
அதற்கு, ''கம்யூட்டர் சர்வீஸ் எப்ப வேண்ணாலும் பண்ணலாம். ஆனா இந்த மாதிரி சோஷியல் சர்வீஸ் பண்ணக்கூடிய வாய்ப்பு இந்த ஜென்மத்துல எப்பவும் கிடைக்காது சார்'' என்றார் ஒருவிதமான தீர்க்கமான பார்வையோடு.