Published : 29 Mar 2021 11:14 AM
Last Updated : 29 Mar 2021 11:14 AM

திரைப்படச்சோலை 18: சென்னையில் வீடும்... காரும்... கண்ணீரும்!

சொந்த வீட்டில் முதல் போட்டோ.

சிவகுமார்

ஓவியக்கலை படிப்பு முடியும் வரை புதுப்பேட்டை வீட்டில் 15 ரூபாய் வாடகை கொடுத்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் தங்கியாயிற்று. ஏவிஎம் படத்தில் நடித்து ‘காக்கும் கரங்கள்’ ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

ஒண்டுக்குடித்தன வீட்டில், ஒண்டிக்கட்டையாக தங்கியது போதும், சினிமா தயாரிப்பாளர்கள் பார்க்க வந்தால், ஒரு மரியாதையான வீட்டில் நம்மைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் என்று வக்கீல் நண்பர் சுப்ரமண்யராவிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, மாம்பலத்தில் (தி.நகர்) பாண்டி பஜாரை ஒட்டி தெற்காக உள்ள மாந்தோப்பும், தென்னந்தோப்பும் அடர்ந்து காணப்படும் கிருஷ்ணா தெரு வீட்டுக்கு 1965 -மே மாதம் 10-ம் தேதி குடிவந்தேன்.

இதற்கு முன் ஒரு இரவு சுப்ரமண்யராவ் இந்த வீட்டைப் பார்க்க அழைத்து வந்தார். பிருந்தாவனத்தின் நடுவே குட்டி மாளிகை போல் அந்தச் சிறிய வீடு காட்சியளித்தது. ஒண்ணரை கிரவுண்ட்- 3,600 சதுர அடி. அதை விடவும் சற்று குறைவான நிலப்பரப்பில் ஒரு பெரிய வேப்ப மரம். 4 தென்னை மரங்கள். 3 மாமரங்கள் என்று அந்த குட்டி பங்களா (பெரிய அவுட் ஹவுஸ்) வீட்டுக்குள் எரிந்த மின் விளக்கின் ஒளி, கதவுக்கு மேல் இருந்த மஞ்சள், நீலம், பச்சை கண்ணாடி வென்டிலேட்டரில் கண்ணடித்துக் கூப்பிடுவது போல் தெரிந்தது.

இந்த சொர்க்க புரியிலா நாம் இனி குடியிருக்கப் போகிறோம் என்றதும் மனம் ஆனந்தக் கூத்தாடியது.

மாடிப்படி

எங்கள் தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் மைசூர்பாக் வெட்டி எடுத்தாற்போல மூன்றரை கிரவுண்ட் வீடுகள்தான். இந்த வீட்டை ஒட்டி மூன்றரை கிரவுண்டில் உள்ள வீடும், இதுவும் எம்.பி. நாராயணன் குடும்பத்தாருக்குச் சொந்தமான 5 கிரவுண்ட் இடம்.

பாகப்பிரிவினையில் எம்பிஎன்-க்கு இந்த ஒன்றரை கிரவுண்ட் நிலம் பிரித்துக் கொடுத்து விட்டனர். டிவிஎஸ் நிறுவனத்தில் கேஷியராகப் பணிபுரிந்தார் அவர். விடுமுறை நாட்களில் லேசாக விஸ்கி அடித்துக் கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்து வந்து, ஸ்லோவாக சிகரெட் புகை விட்டு, ஸ்லோவாக ஓரிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுவார்.

வக்கீல் பாலாபழனூரும், ஸ்தனிஸ்லாசும் நானும் கூட்டாகச் சேர்ந்து ஆளுக்கு ரூ. 33/- என்று போட்டு 100 ரூபாய் வாடகையும், மின்சாரக் கட்டணம் தனியாகவும் கொடுத்துத் தங்கியிருந்தோம்.

வீட்டுக்காரர் பெங்களூரு மாற்றிப் போக வேண்டி வந்ததால் இதை வாடகைக்கு விட்டுப் போய்விட்டார். எப்போதாவது டிவிஎஸ் முதலாளிகள் சந்திப்பு இருந்தால் சென்னை வருவார். வரும்போதெல்லாம் இந்த வாடகை வீட்டுக்கு ஒரு நடை வந்து போவார். எப்போது வந்தாலும், இந்த வீட்டைக் குடுத்திடறீங்களா மொதலாளி என்று நச்சரிப்பேன். ‘சென்னையில் உள்ளது இந்த ஒரே சொத்துதான். இன்னொரு தரம் கேட்டேன்னா உதை விழும்!’ என்பார்.

திடீரென்று ஒரு நாள், ‘என்னய்யா, நீ ரெடியா இருக்கியா? நான் வீட்டை விக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!’ என்றார்.

எனக்குப் பேரதிர்ச்சி. ஒற்றை ஆளாக 12 வருஷத்துக்கு முன் சென்னையில் காலடி வைத்த எனக்கு ஒரு இடம் சொந்தமாகப் போகிறதா? பேச்சே வரவில்லை.

சூர்யா பிறந்த நாள்

படங்களுக்கு அப்படியொன்றும் பெரிய சம்பளம் வாங்கி விடவில்லை. முதல் படத்திற்கு 1,000 ரூபாய். இரண்டாவது படத்திற்கு 1,500 ரூபாய் ஜெமினி கொடுத்தது. கண்ணதாசனின் 'தாயே உனக்காக' ஹீரோ வேடத்திற்கு ரூபாய் 3,000. ஜெயலலிதா, கே.ஆர்.விஜயாவோடு நடிப்பதே பெரிய விஷயம். 'கந்தன் கருணை'க்கு சம்பளம் கூட்டிக் கேட்க முடியாது. அங்கு 3,000 ரூபாய். இப்படி குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த தொகையில் 1970- ஆகஸ்ட் 31-ம் தேதி அட்வான்ஸாக 2,000 ரூபாய் எம்.பி.என் துணைவியாரிடம் கொடுத்தேன்.

1970, டிசம்பர் 8-ம் தேதி ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று வீட்டுக்காரரிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இந்த வீட்டை சொந்தமாக்கிக் கொண்டேன்.

நியூமராலஜி எனப்படும் எண் கணிதப்படி 8-ம் எண் தவிர்க்கச் சொல்வார்கள். ஆனால், நான் சென்னை புறப்பட்டு வந்தது ஜூன் 8-ம் தேதி. கிருஷ்ணா தெரு வீட்டு எண் 17. கூட்டு நம்பர் 8. வீட்டுக்காரர் கையெழுத்துப் போட பெங்களூரிலிருந்து வந்தது 8. ஆக 8 எனக்கு ராசியான எண் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

1970-ல் வாங்கிய வீட்டில் படுக்கை அறை என்று ஒன்று தனியாகக் கிடையாது. டைனிங் டேபிள் கம் படுக்கை என இரண்டு தேவைக்குமான மேஜை ஒன்று. அதில் ஒரு பகுதியை மடித்து விட்டால் டைனிங் டேபிள். அதை நீட்டி அடியில் கொக்கி மாட்டினால் படுக்கை. இப்படி இரண்டாண்டுகளை ஓட்டி கல்யாணம் பண்ணினால் தனியே பெட்ரூம் வேண்டுமென்று மாடியில் ஒரு வட்ட வடிவமான படுக்கை அறை, சிலீங்கில் பிளாஸ்டர் ஆப் பாரிசில் கிருஷ்ணன் ராதை புடைப்பு சிலைகள் என அலங்காரமாகச் செய்து முடித்து, வீட்டின் முன் பக்கம் ஒரு அலுவலக அறை என ஐந்தரை லட்சம் செலவு செய்தேன்.

கார்த்தி பிறந்த நாள்

இன்றும் நான் பெருமைப்படுவது அந்த ஸ்பைரல் ஸ்டேர்கேஸ். மாடிக்குச் செல்ல வட்ட வடிவப் படிகள். தேக்கு மரத்தில் -பொள்ளாச்சி சென்று -நாங்களே காட்டு மரம் வாங்கி வந்து மரத்தில் சிற்பம் செய்யும் ஆட்களைக் கொண்டு செய்தது.

குட்டி பங்களாவாக இருந்தாலும், மாடியிலிருந்து புகைப்படம் எடுத்தால் தாமரை இதழ்கள் விரிந்து அழகு காட்டுவதைப் போல படிகள் காபி பொடி கலரில் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

எங்கள் தெருவிலேயே சின்ன வீடு அதுதான். தீப்பெட்டி வீடு என்று நானே கிண்டல் செய்வேன். ஆனால், அந்த சின்ன வீடுதான் சிவகுமார் 40 வருடங்கள் தொய்வில்லாமல் திரையிலும், சின்னத்திரையிலும் நடிக்க எனக்கு அடைக்கலம் கொடுத்தது.

அந்த சின்ன வீட்டில் பிறந்த இரண்டு இளம் ஹீரோக்கள் தமிழ் மக்கள் இதயத்தில் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

அந்த வீட்டில் நான் திருமணம் செய்து மனைவியைக் குடிவைத்தேன். அதே வீட்டில்தான், எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். அதே வீட்டில் வளர்ந்த அந்தக் குழந்தைகள்தான், பெரியவர்களாகி அவர்களும் திருமணம் செய்து, மனைவியரை அழைத்து வந்தனர்.

அதே சின்ன வீட்டிற்குள்தான், 5 பேரக் குழந்தைகளும், மருத்துவமனையிலிருந்து முதல் முதல் தாத்தா பாட்டி வீட்டுக்குள் வந்தார்கள். சிறுகக்கட்டி பெருக வாழ்தல் என்ற பழமொழிப்படி இந்தச் சிறியவன் 52 ஆண்டுகள் வாழ்ந்து விட்டுத்தான் கூட்டுக்குடும்பமாக வாழ சூர்யா, கார்த்தி உருவாக்கியுள்ள புது வீட்டிற்கு 2017, மார்ச் மாதம் 2-ம் தேதி துணைவியாருடன் வந்தேன். இது வீடு பற்றிய கதை.

சினிமா நடிகன் பந்தாவா தெரியணும்னா கார் முதல்ல வாங்கணும்னு நண்பர்கள் சொன்னார்கள். என்னை மாதிரி 1,000 ரூபாய், படங்களுக்குச் சம்பளம் வாங்கும் நடிகன் கார் வாங்குவது வெள்ளையானை வாங்கி பராமரிப்பது போன்ற காஸ்ட்லியான விஷயம்.

பிருந்தா பிறந்த நாள்

பந்தா எல்லாம் நமக்கு வேண்டாம். படுக்க ஒரு இடம் சொந்தமாக வாங்க வேண்டும் முதலில் என்பதில் தெளிவாக இருந்தேன்.

1970 டிசம்பரில் வீடு வாங்கிவிட்டேன். அடுத்து கார் பற்றி யோசித்தேன். இத்தாலி இன்ஜின் சூப்பர் செலக்ட் மாடல். லைட் புளூ கலர். 1963 மாடல் கார்.

ஏபிஎன் சகோதரர் மகன் முருகு காரை வாங்கிக் கொடுத்தார். ஏபிஎன்னின் சிறிய தாயார் மகன் -ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளை ராஜசேகர் ஒரே வாரத்தில் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்.

கார் இன்ஜின் ரீபோர் செய்து பெயிண்ட் அடித்து கிரில்களுக்கு குரோமியம் கோட்டிங் கொடுத்து 1971 அக்டோபர் 22-ம் தேதி சொந்தக் காரில் நானே டிரைவிங் செய்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, வழியெல்லாம் இன்ஜின் சூடாகி - ஃபிரீஸ் ஆகாமல் இருக்க ஹோஸ் பைப்-ஐத் திறந்து விட்டு, வழியில் வாய்க்கால் கண்ட இடங்களில் எல்லாம் தண்ணீர் பிடித்து ஊற்றி கூல் செய்து இரவு 10 மணிக்கு கோவை சென்றடைந்தோம்.

எந்த மண்ணில் நீ தவழ்ந்து விளையாடினாயோ - எந்த ஊரிலிருந்து தினம் 6 கிலோ மீட்டர் நடந்து 7 வருஷம் பள்ளிக்குச் சென்று படித்தாயோ, எந்த ஊரிலிருந்து சென்னைக்கு ரயில்வே கட்டணச் சலுகையுடன் 5.25 ரூபாய்க்கு ரயில் பயணம் செய்தாயோ -அந்த ஊருக்கு முதன்முதல் காரில் போய் இறங்குகிறாய். மைசூர் மகாராஜா அப்படி சந்தோஷப்பட்டிருப்பாரா? சொல்ல முடியாது. நான் சந்தோஷப்பட்டேன்.

முதல் கார்

15 ஆண்டுகள் எண்ணற்ற படங்களில் ஹீரோவாக அந்தக் காரில் போய்த்தான் நடித்தேன். ‘இனி ஒரு சுதந்திரம்’ பட பூஜையின் போது டொயோட்டா-கோரல்லா -காரில் போய் இறங்கினேன். சத்யராஜ், என்னண்ணே எப்படி அண்ணே - திடீர்னு டொயோட்டா? என்றார். ஏம்பா, பியட்ல இருந்து அம்பாசிடர் போயி, அப்புறம் மாருதி வந்து- அப்புறம் பென்ஸ் வரணும்னு சட்டமா? அதுதான் டபுள் புரோமோஷன் -டொயோட்டா! ’என்றேன்.

1986-களில் வெளிநாட்டுக்கார் இறக்குமதி இல்லை. இந்தக் கார் வாங்கியவர் துபாயில் வேலை பார்த்த அமிர்தசரஸ் இன்ஜினீயர். துபாயில் ரோடுகள் வெண்ணெய் மாதிரி இருக்கும். ஆபிஸுக்கும், குடியிருப்புக்கும் அதிக தூரமில்லை. ஆகவே புத்தம் புதிய கார் -சென்னை ஹார்பரில் இறக்குமதி ஆனது போல் தோற்றமளித்தது. வேலூர் லக்ஷ்மி சரஸ்வதி டெக்ஸ்டைல் முதலாளி அதை வாங்கி, அலுவலகத்தில் காட்சிக்கு வைத்திருப்பது போல் பயன்படுத்தாமல் வைத்திருந்தார்.

அவரிடம் நான்கரை லட்சத்துக்கு நான் வாங்கும்போது கூட ஒரு ரிக்வஸ்ட். அதிகம் ஓட்டி காரை வதைக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை நகருக்குள் வெளிர் பச்சை நிறத்தில் படகு போல என் கார் சாலையில் செல்லும்போது ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். நான் சிவாஜியோ, எம்ஜிஆரோ இல்லை. இரண்டாம் வரிசை ஹீரோ நடிகன். ஆனாலும், ராஜா முத்தையா போன்ற திருமண மண்டபங்களுக்கு இந்த காரில் போய் இறங்கினால், உயர் போலீஸ் அதிகாரிகள் யாரோ பெரிய விஐபி வருகிறார் என்று ஓடிவந்து சல்யூட் அடிப்பார்கள்.

டொயோட்டா

ஆள்பாதி- ஆடைபாதி என்பது போல -கலைஞன் பாதி -கார் பாதி என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இதெல்லாமே இன்னொருவர் பயன்படுத்திய செகண்ட் ஹேண்ட் கார்கள்தான். 192 படங்களில் நடித்து வாங்க முடியாத புது கார் லான்சரை சித்தி, அண்ணாமலை டிவி சீரியலில் நடிக்கும்போதுதான் வாங்க முடிந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?

விடைபெறும் பென்ஸ்

இந்தப் படத்திலுள்ள பென்ஸ் -பிள்ளைகள் வாங்கித் தந்தது. 10 ஆண்டுகள் என்னை மகிழ்வித்தது. மகாபாரதம் வரை இதில் போய்த்தான் பேசினேன். இன்று வேறொருவருக்கு விற்க வேண்டியதாகி விட்டது. காரும் ஒரு குழந்தை மாதிரிதான். கண்ணீருடன் விடை கொடுத்தேன்.

---

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x