

இறைவன் ஒருவனே. ஆக்கல், காத்தல், நீக்கல் ஆகிய முத்தொழிலையும் அவனே செய்கிறான்.
இறைவன் இந்த முத்தொழிலைச் செய்ய மூன்று பேரை நியமித்தான். பிரம்மன், திருமால், ருத்திரன் ஆகியோரே அம்மூவர் என்று பிற்காலத்துப் புராணம் கதை புனைந்தது.
இது ஓரிறைக் கொள்கை என்ற உண்மையைக் குழப்பியதோடு பல பிரச்சினைகளை உண்டாக்கி விட்டது.
பாமர மனத்தினர் பிரம்மன், திருமால், ருத்திரன் ஆகியோரை மூன்று இறைவர்களாகக் கருதத் தொடங்கினர். அப்படிக் கருதுவதோடு நின்றுவிடா மல், இந்த மூவருள் யார் பெரியவர் என்று விவாதங்கள் செய்தனர். கதைகள் கட்டினர்.
சிவபெருமானே பெரியவர் என்பதைக் காட்டச் சைவர்கள் ஒரு கதை கட்டினர். சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக அக்கினித் தூணாய் விஸ்வரூபம் எடுத்து நின்றார். பிரம்மன் அன்னமாகி அவருடைய முடியையும், திருமால் பன்றி அவதாரம் எடுத்து அவருடைய அடியையும் தேடிச் சென்றனர். சிவபெருமான் முடியைக் கண்டேன் என்று பிரம்மன் பொய்யுரைத்தார். மண்ணை எவ்வளவு தோண்டியும் சிவபெருமா னுடைய அடியைக் காண முடியாமல் திருமால் தோல்வியோடு திரும்பினார் என்பது அந்தக் கதை.
திருமாலே ஆதிமூலம் எனக் காட்ட வைணவர் கள் ஒரு கதை புனைந்தனர். முதலையிடம் அகப் பட்ட யானை ஒன்று எவ்வளவு முயன்றும் முதலை யிடமிருந்து தன்னை விடுவிக்க முடியாத நிலைகண்டு, ‘ஆதிமூலா’என்று அழைத்தது. பிரம்மனும், சிவபெருமானும் இவ்வோசையைக் கேட்டனர். ‘நான்’ஆதிமூலம் ‘இல்லை’ என்று பேசா மல் இருந்துவிட்டனர். திருமால் அவ்வோசையைக் கேட்டவுடன் ‘ஆகா, தன்னையல்லவா ஒரு பக்தன் அழைக்கிறான்’ என்று சங்கு, சக்கர சமேதராய் கருட வாகனத்தில் ஏறி வந்து முதலையின் தலையை சக்கரத்தால் துண்டாடி யானையைக் காத்தார்.
இந்தக் கதைகளைக் கட்டியவர்களுக்குச் சிவபெருமானும் திருமாலும் வேறு வேறல்லர்; ஒருவரே. இவை ஒரே இறைவனுக்கான இரண்டு பெயர்கள் என்பது தெரியவில்லை.
‘அரியும் சிவனும் ஒண்ணு. இதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்பது பழமொழி. இது பாமரர் உருவாக்கியது. பாமரர் பெற்றிருந்த ஞானத்தைப் படித்தவர்கள் பெறவில்லை.
இதில் வியப்பேதும் இல்லை. அறிவு ஞானம் பெறத் தடையாக இருக்கும் திரை.
சரியான முகவரி இருந்தால்தான் கடிதம் உரியவரிடம் சென்று சேரும்.
நாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். வேண்டுகிறோம். ஆனால் இறைவனைப் பற்றிய சரியான பார்வை நமக்கு இல்லையென்றால், நம் பிரார்த்தனை இறைவனிடம் சென்று சேராது.
இராமாயண காவியத்தைப் பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்தாக,
‘உலகம் யாவையும்
தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும்
நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை
யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க்கே
சரண் நாங்களே’
- என்று பாடுகிறார். இது ஞானப் பாடல். கம்பரால் மட்டுமே இப்படிப் பாட முடியும்.
கம்பர் யாரிடம் பிரார்த்தனை செய்கிறார்? சிவ பெருமானிடமா? திருமாலிடமா? முருகனிடமா? விநாயகரிடமா? இல்லை அருகனிடமா?
யாரிடத்திலும் இல்லை. ஏக இறைவன் எவனோ அவனிடம் பிரார்த்தனை செய்கிறார். இதன் மூலம் அவர் சமயச் சார்பற்ற ஞானி; பொதுவானவர் என்று நிரூபிக்கிறார்.
உலகங்கள் யாவற்றையும் யார் படைத்தாரோ, அவரை வணங்குகிறார்.
உலகம் என்பது வெறும் கோளத்தை மட்டுமல்ல; அவற்றில உள்ள தாவர ஸங்கமப் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும்.
‘தாம் உளவாக்கல்’- புதிதாகப் படைத்தல் அல்ல. தன்னிடத்தில் இருந்ததை வெளிப் படுத்துதல்.
ஈஸ்வரனின் கல்யாண குணங்களே படைப்பு களாக வெளிப்பட்டன என்று வைணவம் கூறும்.
இறைவனுடைய சிபத்துகளே (பண்புகள்) படைப்புகளாக வெளிப்பட்டன என்று சூபித்துவம் கூறுகிறது.
எல்லாப் பொருள்களும் இறைவனுக்குள் மறைந்து இருந்தன (தாமுள). அவற்றையே இறைவன் வெளிப்படுத்தினானே அன்றிப் பொதுவாகக் கருதப்படுவதுபோல் இறைவன் உலகங்களைப் புதிதாகப் படைக்கவில்லை.
‘உ’ பிள்ளையார் சுழி. அதைக் கொண்டு தொடங்குவது மரபு. எனவே உலகம் என்று தொடங்குகிறார். மேலும் உலகம் மங்கலச் சொல். அதனால் அதைக் கொண்டு தொடங்குகிறார்.
‘நிலைபெறுத்தல்’- ஒவ்வொரு பொருளையும் படைத்து அதனை அதன் விதிப்படி நிலை நிறுத்துதல்.
‘நீக்கல்’- எதற்கும் அழிவில்லை. ஒருபொருள் நீக்கப்படும். அது வேறொரு வடிவில் இருக்கும்.
நாம் விதைக்கும் விதை அழிவதில்லை. அதுதான் மரமாக மாறுகிறது. அதுபோலவே முட்டை குஞ்சாகிறது; குஞ்சு கோழியாகிறது.
எனவே மரணத்திற்கு அஞ்ச வேண்டியதில்லை.
காப்பது இறைவனுடைய கடன் - ‘மரம் வைத்தவன் நீரூற்றுவான்.’
காப்பவனையே வணங்க வேண்டும். இறைவனைத் தவிர வேறு யாரும் காக்கும் சக்தி பெற்றவரில்லை. எனவே மற்றவர்களை வணங்கக் கூடாது.
உலகத்தைப் படைத்துக் காத்து அழிப்பவனே தலைவனாக இருக்க முடியும்.
‘நீங்கலா’ - முத்தொழிலையும் அவன் செய்து கொண்டேயிருக்கிறான். இவற்றில் எத்தொழிலும் அவனை விட்டு நீங்குவதில்லை.
‘நீங்கலா’ படைப்பை ஒருவரும், காத்தலை ஒருவரும், நீக்கலை ஒருவரும் செய்கிறார்கள் என்பதைக் கம்பர் இதன் மூலம் மறுக்கிறார்.
‘அலகிலா விளையாட்டு - முத்தொழிலையும் இறைவன் விளையாட்டாய்ச் செய்கிறான். அதுவும் அளவிட முடியா விளையாட்டு.
விளையாட்டு என்றாலும் ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உண்டு. அதைப் போலவே முத்தொழில்களிலும் ஊழ் போன்ற விதிகள் உண்டு. அதை மீறி ஆட மாட்டான்.
முத்தொழிலும் பொம்மலாட்டம் போன்றது. அவன் ஆட்டுகிறான். நாம் ஆடுகிறோம்.
முத்தொழில் ஒரு வகையில் கண்ணாமூச்சி ஒளித்தல் கண்டுபிடித்தல்.
எல்லா விளையாட்டுகளையும் ஈரணிகள், முரண்பட்ட இரண்டு சக்திகள் ஆடுகின்றன,
‘அவர் தலைவர்’ பொதுவாகப் புலவர்கள் கடவுள் வாழ்த்தில் அவர்கள் வணங்கும் இறைவனையே வாழ்த்துவர்.
கம்பர் அப்படிப் பாடவில்லை. அவர் சமயச் சார்பற்றவர் என்பதைக் காட்டவே, சிவனையோ, திருமாலையோ அழைக்காமல் தலைவர் என்ற பொதுச் சொல்லால் அழைக்கிறார்.
தம் காவியம் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்ததல்ல என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்திருக்கிறார். இது தமிழில் அபூர்வம்.
திருவள்ளுவரும் இளங்கோவும் கூடச் சமயம் சாராதவர்களாகவே காட்டிக் கொண்டுள்ளனர்.
‘ஒரு நாமம் ஓர் உருவம்
ஒன்றுமிலார்க் காயிரம்
திருநாமம் பாடித்
தெள்ளேணம் கொட்டாமோ’
என்பார் மாணிக்கவாசகர். அந்த ஆயிரம் பேர்களில் பல சமயச் சார்புடையவை. எனவே கம்பர் எல்லோருக்கும் பொதுவான எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ‘தலைவர்’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
முத்தொழிலைச் செய்பவர், அதை விளை யாட்டாய்ச் செய்பவர் எவரோ அவரே தலைவர் என்கிறார் கம்பர். எனவே ஒரு தொழிலை மட்டும் செய்பவர் தலைவர் அல்லர் என்று மறுக்கிறார்.
வழக்கமாக இறைவனை ‘அன்’ விகுதியிட்டு அழைப்பதுதான் மரபு. இறைவன், சிவன், முருகன், விநாயகன். ஆனால், இப்படி அழைப்பதன் மூலம் இறைவனை ஆணாக்கிவிடுகிறோம்.
இறைவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை.
எனவே கம்பர் அந்தத் தவற்றையும் நீக்கித் ‘தலைவர்’ என்கிறார். இது ஒரு ஞானப் புரட்சி.
‘சராணாங்களே’ அத்தகைய தலைவரிடமே நாம் சரணடைவோம்.
‘என்னாலாவது யாதொன்றுமில்லை. எல்லாம் நீயே. உன் கையில் நானோர் கருவி. என்னை உன் பணியில் எப்படியும் பயன்படுத்திக் கொள்’ என்று கூறி இறைவனிடம் சரணடைதல் சரணாகதித் தத்துவம். அப்படிச் சரணடைந்தவர்களை இறைவன் காப்பாற்றுவான்.
(என்னைச் சரணடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிலிருந்தும் நான் அபயமளிக்கிறேன். இது என் விரதம்.
- இராமன், வால்மீகி இராமாயணம், யுத்.கா. 18.34
- இன்னும் முத்துக் குளிக்கலாம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com
முந்தைய அத்தியாயம்: >முத்துக் குளிக்க வாரீகளா 17: கவிதைக்கு மதம் கிடையாது!