Published : 26 Mar 2021 11:57 AM
Last Updated : 26 Mar 2021 11:57 AM

திரைப்படச்சோலை 17: எஸ்.வி.சுப்பையா

தன்னுடைய முதலாளிக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை. பெற்றோர்களும், சொந்த பந்தங்களும் அவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகின்றனர். அந்த வீட்டில் விசுவாசமான வேலைக்காரன் கந்தப்பன். அவன் மனைவி வள்ளி. 40 வயதான கந்தப்பன் மனைவி கருவுற்றிருக்கிறாள். தான் தெய்வமாக வணங்கும் முதலாளி அம்மாவை ஒதுக்கிவிட்டு இன்னொரு திருமணம் செய்து கொள்ள நினைக்கும் செய்தி கந்தப்பனை வருத்துகிறது. மனைவி வள்ளியுடன் பேசி, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, முதலாளி அம்மாவுக்கு பிறந்ததாக நம்ப வைத்து, அக்குழந்தை சீரும் சிறப்புமாக வசதியுடன் வாழ்வதைப் பார்த்து நாமும் சந்தோஷப்படலாம்; முதலாளி அம்மாவுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று திட்டமிடுகிறான் கந்தப்பன்.

முதலாளி அம்மா கருவுற்றிருப்பதாக நாடகமாடி வெயில் காலத்தில் அவர், கொடைக்கானலில், பிரசவ காலம் வரை தங்கினால் நல்லது என்று முதலாளியிடம் கூறி, வள்ளி, முதலாளி அம்மா கொடைக்கானலில் தங்க ஏற்பாடு செய்கிறான் கந்தப்பன். பிரசவம் ஆனதும், மிகுந்த வலியுடன் வள்ளி தன் குழந்தையை முதலாளி அம்மாவுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறாள்.

முதலாண்டு பிறந்த நாளுக்கு, தன் குழந்தையைப் பார்த்தே ஆக வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்த வள்ளி, தூரத்திலிருந்து குழந்தையைப் பார்த்துவிட்டு, கணவனுக்குத் தெரியாமல், வீடு போய்ச் சேர்ந்து விடலாமென்று வேகமாக ரோட்டைக் கடக்கும்போது, விபத்தில் அடிபட்டு இறந்து விடுகிறாள்.

வேலைக்காரன் கந்தப்பனாக எஸ்.வி.சுப்பையா அண்ணனும், வள்ளியாக சுந்தரிபாயும் நடித்தனர்.

மனைவி, இறந்துவிட்ட சேதி அறிந்து சுப்பையா அண்ணன் அழும் காட்சியைப் பார்த்து மலைத்துப் போய்விட்டேன். பெயர் பெற்ற, தமிழகத்தின் பெரிய நடிகர்கள் எல்லாம் நாடகத்தன்மையுடன், இலக்கணத்துடன், செயற்கையாக உடல்மொழி காட்டி சோகக்காட்சியில் நடிப்பார்கள்.

பாரதியாக

ஆனால் சுப்பையா, ஒரு அப்பாவி ஏழை மனைவி மீது உயிரை வைத்திருப்பவன் எப்படி அழுவானோ, அப்படி உணர்வின் உச்சத்துக்குப்போய் முகம், வாய் எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் அப்பட்டமாக கதறி அழுது நடித்தார். இவர் நடிக்கவில்லை. வாழ்ந்தார்.

அதன் பின்னர், முதலாளி அம்மாவுக்கு 2 ஆண்டுகளில் உண்மையாகவே ஒரு குழந்தை பிறந்துவிட, தன் குழந்தைக்குப் பாலும் சோறும், கந்தப்பன் குழந்தைக்கு வெறும் தண்ணீரும் கொடுத்து கொடூரத்தின் வடிவமாக முதலாளி அம்மா நடந்து கொண்டபோது குமுறிக் குமுறி அழுவார்.

அம்மா அவமானப்படுத்தும்போதெல்லாம் அந்தக் குழந்தைக்கு ஒரே ஆதரவு கந்தப்பன்தான். ஒரு நாள், ‘கந்தப்பா! என் முதுகின் மேல் ஏறி தம்பி, பீரோ மீதிருந்த கண்ணாடி ஜாடியை எடுக்க முயல - ஜாடி தரையில் விழுந்து உடைந்துவிட்டது. நீ ஏன்டா குனிஞ்சு கொடுத்தே என்று என்னை அம்மா திட்டி அடித்தார்கள்!’ என்று வந்து சொல்வான்.

‘போடா! எப்பப் பார்த்தாலும் இதே பொழப்பா போச்சு உனக்கு’ என்று கந்தப்பன் திட்ட, ‘இத்தனை நாள் எனக்கு நீ ஒருத்தன்தான் ஆதரவா இருந்தே. இப்ப உனக்கும் என்னைப் புடிக்கலியா?’ என்று மகன் அழத் தொடங்கியதும் ஓடிப்போய் அவனை எடுத்து நெஞ்சோடு அணைத்து - சுடுகாட்டுக்கு தூக்கிக் கொண்டு போய் -சமாதியைக் காட்டி, ‘இதுதான்டா, உங்க அம்மா. இவ, உன்னை அடிக்கமாட்டா!’ என்று விளக்குவார்.

கிளைமாக்ஸில் முதலாளி சகஸ்ரநாமத்திற்கு, மனைவி லலிதா -கந்தப்பன் குழந்தையைத் தன் குழந்தையாக நம்பவைத்த உண்மை தெரிந்து விடும்.

லலிதா மகன், ஜூரத்தில் அண்ணன் வேண்டும் என்று பிதற்றுவான். அந்தக் குழந்தை உயிர் பிழைக்க கந்தப்பன் குழந்தையை அழைத்து வர சகஸ்ரநாமம் மயானத்திற்கு வருவார்.

‘முதலாளி! என் பொணத்து மேலதான் என் மகனை நீங்க கூட்டிட்டுப் போகணும்!’ என்று சண்டைக் கோழி சிலிர்த்தெழுவது போல் விறைத்து நின்று சுப்பையா அண்ணன் பேசுவார். கடைசியில் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முதலாளி அம்மா கந்தப்பன் காலில் விழ -பதறிப்போய் மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போவார் எஸ்.வி.எஸ்.

சாமுண்டி சிவாஜி

1958-ல் சூலூர் சண்முகாதேவி தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்த நாள் முதல் உணர்ச்சிப் பிழம்பாக சுப்பையா போல் நடிக்க எந்த நடிகராலும் முடியாது என்று முடிவெடுத்தேன்.

‘கப்பலோட்டிய தமிழனில்’ பாரதியார் வேடம் ஏற்று நடித்திருப்பார். பாரதியே ஒரு கிறுக்கன்தான். இவர் அவனை விட அசல் கிறுக்கன். பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வந்த அரிசியைக் குருவிகள் சாப்பிட வாசலில் கொட்டிவிட்டு, அந்தக் குருவிகள் சாப்பிடும் அழகை அப்படி ரசிப்பார்.

மனைவி வந்து என்னங்க இது! நான் பக்கத்து வீட்டில் கடன் வாங்கிட்டு வந்த அரிசியை இப்படி குருவிகளுக்கு கொட்டிட்டீங்களே! என்று கேட்பார்.

‘பரவாயில்லை செல்லம். இதை சமைத்தால் நாம் இரண்டு பேர் மட்டும்தான் சாப்பிட முடியும். இப்போது பத்துப் பதினைந்து ஜீவன்கள் ஆனந்தமாகத் தின்கின்றன. மனிதரைத் தவிர எந்த ஜீவராசியும் பிச்சை எடுப்பதில்லை செல்லம்!’ என்பார்.

அசல் பாரதியே நடித்தால் கூட, இப்படி இயற்கையாக, அசலாக உணர்வுபூர்வமாக நடிக்க முடியாது. ஆதிபராசக்தியில் அபிராமி பட்டர் வேடத்தில் நடிச்சிருப்பாரு- நடிக்கலே வாழ்ந்திட்டாரு.

எந்த நேரமும் அபிராமியையே நினைச்சிட்டிருக்கறவர் -அமாவாசையன்னிக்கு, நிச்சயமா முழு நிலா வரும்னு சொல்லிருவாரு. ராஜாவுக்குக் கோபம் வந்திடும். அப்படி முழு நிலா வரலேன்னா, நெருப்பைக் கொளுத்தி உன்னை உள்ளே தூக்கிப் போட்டுருவோம்னு உத்தரவு போட்டுருவாரு ராஜா.

நேரா அம்மன்கிட்ட போவாரு. ‘என்ன, என்னைக் காப்பாத்தப் போறியா, சதா உன் நினைப்பில் வாழ்ந்திட்டிருந்த என்னை, நெருப்பில் வெந்து சாக விடப்போறியா?’ன்னு -ஏதோ அம்மன் இவரு முன்னாடி உயிரோட நிக்கற மாதிரி சண்டை போடுவார்.

அபிராம பட்டராக

சொல்லடி அபிராமின்னு ஒரு பாட்டு. - பாட்டு முடிவில் பூரண சந்திரன் வருவது -அபிராமி காட்சியளிப்பது, புராணக்கதையாக இருந்தாலும் இவருடைய அற்புதமான நடிப்பால் பார்ப்பவர்களை உணர்ச்சி வசப்பட வச்சிருவாரு.

'அரங்கேற்றம்' படத்தில் புரோகிதரா நடிச்சிருப்பார். பிரமிளா, கமல்ஹாசன், ஜெயசித்ரான்னு நிறையக் குழந்தைகள். கமலுக்கு மெடிக்கல் சீட் வாங்க மெட்ராஸ் போன பிரமிளாவை கல்லூரி கரெஸ்பாண்டண்ட் கெடுத்திடுவாரு. வீட்டுக்குத் திரும்பி வருவாள். கனவுகளோட தன் தம்பி தங்கச்சிகள் இருக்கறதைப் பார்த்து நாம கெட்டது கெட்டுப் போயிட்டோம். கூடப் பிறந்தவங்க எதிர்காலமாவது நல்லா இருக்கட்டும்னு பாலியல் தொழில் செய்ய ஹைதராபாத் போயிடுவா.

ஒரு நாள் அம்மா, அப்பாவைப் பாக்க ஊருக்கு வந்திருப்பா -பாட்டு வாத்தியார் முன்னாடி, இவளோட முந்தானை, விலகியிருக்கறது கூட தெரியாம உட்கார்ந்திருப்பா- அம்மா கேட்டதுக்கு, ‘ஆம்பிளைகளே மரத்துப் போச்சும்மா!’ என்று பதில் சொல்வாள்.

இதைத் தாயார் எம்.என்.ராஜம். சுப்பையாவிடம் கூறியபோது - இரண்டு முறை கூர்ந்துகேட்டு விட்டு, ‘ஆம்பளைகளே மறந்துப் போச்சு!’ன்னு சொல்லியிருப்பாடி அசடே. அவ மகாலட்சுமி அம்சம்!’ என்பார்.

உண்மையில் அவள், விபச்சார விடுதியில் தொழில் செய்யச் செல்கிறாள் என்று தெரிந்ததும் குளத்தில் தலை முழுகி ‘அவள், இனி என் பெண்ணே இல்ல’ என்று சொல்லிவிடுவார்.

‘காவல் தெய்வம்’ எஸ்.வி.எஸ் முதன் முதல்ல தயாரிச்ச படம். ஜெயகாந்தன் எழுதிய கைவிலங்கு என்கிற குறுநாவலை அடிப்படையாக வைத்த கதை. நானும் லட்சுமியும் ஹீரோ, ஹீரோயினா நடிப்போம். சிவாஜி அதில் சாமுண்டி கிராமணின்னு மரம் ஏறுகிற தொழிலாளியா நடிச்சிருப்பாரு. வயசுக்கு வந்த பொண்ணு, அன்னிக்கு பொறந்த நாள் படையல் வச்சு, அப்பாவோட சாமி கும்பிடும். இவர் மரமேறப் போகறதை மறைஞ்சிருந்து பாத்திட்டு 3 ரெளடிகள் உள்ளே போய் அந்தப் பிஞ்சுக் குழந்தையை குதறிப் போட்டுடுவாங்க. ‘அப்பா’ன்னு பொண்ணு அலர்ற சத்தம் கேட்டு சிவாஜி பறந்து வருவாரு.

அந்த மூணு பேர் மேலயும் புலி மாதிரி பாஞ்சு, பாளையை சீவற மாதிரி 2 பேர் தலைய சீவிடுவாரு. ஒருத்தன் -ஓ.ஏ.கே., தேவர் தப்பிச்சுருவாரு.இப்ப சிவாஜி இருக்கற ஜெயிலுக்கே தேவர் மாற்றலாகி கொண்டு வந்து ஒரு ‘செல்’லுல அடைச்சிருப்பாங்க.

சிவாஜிக்கு இது தெரிஞ்சு -பிக் பாக்கெட் கைதி, நாகேஷ்கிட்ட ஒரு ஆக்ஸா பிளேடு கேட்டு வாங்கி -தேவர் இருக்கிற ‘செல்’ -கதவுக் கம்பிகளை அறுப்பார். ஜெயில் காம்பவுண்டை ஒட்டி வெளியில இரண்யன்-பிரகலாதன் தெருக்கூத்து நடக்கும். கடவுள் தூண்லயும் இருப்பார், துரும்புலயும் இருப்பார்-ன்னு பிரகலாதன் சொல்ல, ‘இந்த தூண்லயும் இருப்பாராடா’ன்னு ஒரு தூணைக் காட்டி கேட்டுட்டு, அதை, ‘கத்தை’யால இரண்யன் தாக்க, தூணுக்குள் இருந்து நரசிம்ம அவதாரத்தில -மனுசன் உடம்பு சிங்க முகத்தில விஷ்ணு வந்து இரண்யன் நெஞ்சைப் பொளப்பாரு.

இங்கே -கம்பிய அறுத்து உள்ளே போன சிவாஜி -சிங்கம் போல, தேவர் மீது பாய்ந்து, கடித்துக் குதறுவாரு.

சிறைச்சாலை ‘பெல்’ அடிக்கும். எஸ்விஎஸ் ஜெயிலர் யூனிபார்ம்ல மிடுக்கோட வருவாரு.

சுப்பையா -நம்பியார்

‘சாமுண்டி! வெளியே வா’ம்பாரு. தேவர் உடம்பைக் கிழிச்ச அதே வெறியோட, சிவாஜி எஸ்விஎஸ்கிட்ட ஆக்ரோஷமா வருவாரு. இவரையும் தாக்குவாரோன்னு நமக்குத் தோணும். எரிமலை பொங்கற மாதிரி, கோபத்தில கண்கள் நெருப்பைக் கக்கும். புருவத்தை நெரிப்பாரு. மீசை, கன்னமெல்லாம் துடிக்கும். ரெண்டு கைகளையும் எஸ்விஎஸ் கழுத்துக்கு நேரா தூக்கி, மெரட்டும் போது - எஸ்.வி. சுப்பையா, ஒரு அணில் குஞ்சைப் பாக்கற மாதிரி அன்போடு கருணையோடு பார்ப்பார். அந்தப் பார்வைக்கு கட்டுப்பட்டு, பணிஞ்சு மெளனமா சிவாஜி அவர் பின்னாடி போவார்.

படப்பிடிப்பு முடிந்து இந்தக் காட்சிகளை மட்டும் ‘டெவலப்’ பண்ணி சிவாஜிக்குப் போட்டுக் காட்டினாங்க. சுப்பையா அண்ணன் சிலைகள் செய்யற விசுவகர்மா இனத்தில் பிறந்தவர். பொன்வேலை செய்யறவர்களையும் ஆசாரின்னு பொதுவா கூப்பிடுவாங்க.

படத்தைப் பாத்த சிவாஜி, ‘ஆசாரி கொன்னுட்டானேப்பா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த சீன்ல நான் நடிச்சேன். சாந்தமான ஒரு பார்வையிலேயே என்னைச் சாப்பிட்டார் மனுஷன்!’ என்று பாராட்டினார்.

கெளரவ வேடத்தில் நடித்த சிவாஜிக்கு ஒரு தொகை கொண்டு போனார் எஸ்.வி.எஸ். ‘உங்களுக்கு நான் செஞ்ச மரியாதை. இதுக்குப் பணம் வாங்க மாட்டேன்!’ என்று சொல்லிவிட்டார் சிவாஜி.

அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து சிவாஜிக்கு நன்றி தெரிவிப்பேன் என்று பத்திரிகையில் பேட்டி கொடுத்தார்.

சுப்பையாவின் விவசாய நிலத்தை கவனித்துக் கொள்ளும் ஹீரோ மாணிக்கமாக நான் நடித்தேன். கிளைமாக்ஸில் என் தாயார் மரணப்படுக்கையில் இருக்கும் செய்தி வரும். நாளைய தினம் பதவியை, நாயரிடம் ஒப்படைத்து விட்டு ரிடையர் ஆகப்போகும் எஸ்.வி.எஸ், சொந்த ஜாமீனில் அம்மாவைப் பார்க்க என்னை இரவில் அனுப்பியிருப்பார். அம்மாவைப் பார்த்து விட்டு, திரும்பும் வழியில் வில்லன்கள் என்னை அடித்துப் போட்டு விடுவார்கள்.

விடிந்து எல்லாக் கைதிகளும் வரிசையில் அமர்ந்திருக்க -புதிதாக ஜெயிலர் பதவி ஏற்கும் நாயர் ஒவ்வொரு கைதியாகப் பார்த்து விசாரித்து வருவார். என் இடம் காலியாக இருக்கும். ஒரு கைதி குறைவாக இருக்கும்போது பதவி ஏற்க முடியாது என்பார் நம்பியார்.

அப்போது அடித்துப் பிடித்து காயங்களுடன், கண்ணீருடன் சல்யூட் அடித்தவாறு சிறைக்குள் நான் நுழைவேன். எஸ்.வி.எஸ். கண்களில் நீர்.

‘மன்னிச்சுடுங்கய்யா!’ என்று நான் அழுவேன்.

‘அழாதே மாணிக்கம். அதான் நீ வந்திட்டியே அழாதே’ என்று சொல்லி விட்டு நாயர் பக்கம் திரும்பி, ‘மிஸ்டர் நாயர் இதோ மாணிக்கம் வந்திட்டான். இப்ப சார்ஜ் எடுத்துக்குங்க. இங்கிருக்கறவங்களை நான் கைதியாப் பாக்கறதில்லை. என் குழந்தைகளாத்தான் பாதுகாத்தேன்!’ என்பார்.

திருமண வரவேற்பில்...

‘சார்! நீங்க உண்மையிலேயே காவல் தெய்வம்...!’ என்பார் நம்பியார்.

அன்றே, ‘சப்டில் பர்ஃபாமன்ஸ்’ நடிப்பில் உச்சம் தொட்டவர் எஸ்.வி. சுப்பையா அண்ணன்.

என்னைத் தன் மகனைப் போல் கருதி அன்பு செலுத்தினார்.

காதல் காட்சியில் இயற்கையாக நடிக்க வேண்டும். சிவா- லட்சுமி ஜோடிய ரசிகர்கள் கொண்டாடணும் என்று சொல்லி ரோமியோ -ஜூலியட் - ஆங்கிலப் படம் காசினோவில் நடந்தது. என்னை அழைத்துப் போய் காட்டினார்.

படத்தின் ஹீரோயின் - சினிமாவே பார்த்ததில்லையாம். புத்தம் புதிசு. எவ்வளவு தத்ரூபமா நடிச்சிருக்கு பாரு. அந்த மாதிரி, படம் பார்க்கறவங்க சிவா-லட்சுமி சீனைப் பார்த்து லயிச்சுப் போகணும்னு சொன்னார். மூன்று நாள், சிவாஜி சாமுண்டியாக நடித்துக் கொடுத்தது படத்தின் முதுகெலும்பாக அமைந்துவிட்ட போதும், நானும் லட்சுமியும் நடித்த காட்சிகள் பத்திரிகை உலகில் பாராட்டு பெற பெரிதும் துணையாக இருந்தன.

‘கிழங்கட்டைகளையே பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு உண்மையிலேயே இளமையோடு இருக்கும் இரண்டு இளம் உள்ளங்களின் அளவான உறவாடல்களைப் பார்க்கும்போது -இவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்தத் தோன்றுகிறதல்லவா?’ என்று குமுதம் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தது.

உடல் நலம் சரியில்லாமல் விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, ‘இந்த சிவம்பயல பாக்கணும்னு தோணுது- ஆஸ்பத்திரில என்னைப் பாத்தா வருத்தப்படுவான். நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி காரனோடை தோட்டத்துக்குப் போய் சிவகுமாருக்கு போன் பண்ணி தெரிவிக்கலாம் என்று நினைத்தவர் இரவே கண்ணை மூடி விட்டார்.

காரனோடை தோட்டத்திலேயே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 6 அடி ஆழம் குழி தோண்டி, உள்ளே உடம்பை கிடத்தி மண்ணைத் தள்ளியபோது, ‘அப்பா முகத்தின் மேல மண்ணைப் போடாதீங்க. அவருக்கு மூச்சு முட்டும்!’ என்றான் அவரது பத்து வயதுப் பாலகன் சரவணன்.

----

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x