Last Updated : 26 Nov, 2015 11:49 AM

 

Published : 26 Nov 2015 11:49 AM
Last Updated : 26 Nov 2015 11:49 AM

இதுதான் நான் 3 - மஞ்சு, மரையான், உமேசா!

பள்ளிக்கூடத்து நோட்டீஸ் போர்டுல முழு பரீட்சை டைம் டேபிளை ஒட்டி னதும், தூரா கிராமத்துல இருக்குற பாட்டியோட ஞாபகம் வந்துடும். ஏன்னா, நானும் என் பாட்டியும் குளோஸ் ஃபிரெண்ட்ஸ். எப்போ ஏப்ரல், மே விடு முறை வரும்னு காத்துக்கிட்டே இருப் பேன். அப்போ மட்டும் பரீட்சைய மறந்து அப்படி ஒரு சந்தோஷம் இருக்கும்.

எப்போ மைசூருக்குப் போனாலும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்தான். அங்கே இருந்து தூராவுக்கு இருபத் தைந்து கிலோ மீட்டர் இருக்கும். அதுக்கு பஸ். ஊருக்குப் போறோம்னா அம்மா ரவா உருண்டை, முறுக்கு, மைசூர்பாக்கு இதெல்லாம் செஞ்சு கெட்டியா பேக் செஞ்சி வெச்சிடுவாங்க. எப்போ அந்த திங்கிற பண்டமெல்லாம் கிடைக்கும்னு நினைச்சுக்கிட்டே நான், அண்ணன் ராஜூ, தம்பி பிரசாத் மூவரும் ரயில்ல உட்கார்ந்திருப்போம்.

அம்மா கொஞ்சம் அசந்து தூங்கிட்டா அடுத்த நிமிஷமே பேக் செஞ்சி வெச்ச மைசூர் பாக்கு, முறுக்கு இதில் எதாவது ஒண்ண எடுத்துடுவோம். எடுத்ததை யாருக்கும் தெரியாமல் திங்கிறதும் ஒரு கலை. நாக்குக்கும் பல்லுக்கும் இடையில முறுக்கை நிறுத்தி, கடிக்கிற சத்தமே வராம எச்சில் ஈரத்திலேயே நமத்துபோக வெச்சி சாப்பிடுவோம். அம்மாவுக்கு தெரி யாம இருக்குமா, என்ன? தெரிஞ்சாலும் அதை எங்கக்கிட்டே காட்டிக்கவே மாட்டாங்க. அதுதானே அம்மா!

மைசூர்ல இருந்து தூராவுக்கு இப்போ 20 நிமிஷத்துல போய் சேர்ந்துடலாம். அதுவே, 30 வருஷத்துக்கு முன்னே ஒரே ஒரு பஸ்தான் போகும். அதுவும் போய்ச் சேர ரெண்டு மணி நேரத்துக்கும் மேல ஆகும். எல்லா வீட்லேயும் மண்ணென் ணெய் விளக்குதான். சாயங்காலம் 7 மணிக்கெல்லாம் சாப்பாட்டை முடிச்சுட் டுத் தூங்கப் போயிடுவாங்க. ஆனா, நாங்க வந்துட்டோம்னா ராத்திரி 12 மணி வரைக்கும் விளையாட்டுதான். பாத்ரூம் இல்லாத வீடுங்க. ஏதாவது அவசரம்னா ஊருக்கு வெளியிலதான் ஓடணும். பாட்டி வீட்டை பாதி தடுத்து மாட்டு கொட்டாய் இருக்கும். குளிக்கிறதெல்லாம் வீட்டு முற்றத்துலதான். சுற்றி வெளிச்சமா இருக் கும். குளிக்குறப்ப ரொம்பவும் கூச்சமா இருக்கும். ஓடி வந்து வீட்டு மெயின் கதவை சாத்திட்டுப் போய் குளிப்போம்.

நகரம் மாதிரி கிராமம் இல்ல. யாரும், யார் வீட்டுக்கு வேணும்னாலும் போலாம். கோலி விளையாட்டு, ஓடிப் புடிச்சு விளை யாடறது, மாடு மேய்க்கிறது இதெல்லாம் தான் அங்க பொழுதுபோக்கு. மஞ்சு, மரையான், உமேசா, சிவக்குமாரானு நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடைச்சாங்க. அவங்கக்கூட சேர்ந்துகிட்டு மாங்கா அடிச்சு சாப்பிடறதுல ஒரு சுகம். ஏன்னா, அது அப்போ சீசன்.

மேல வீடு இருந்தா அவனை மேல் வீட்டு மரையான்னும், பைக் வெச்சிருந்தா அவனை பைக் மஞ்சுன்னும் கூப்பிடு வோம். அதெல்லாம் அவங்களுக்குப் பட்டப் பெயருங்க. முதல் வருஷம் விடு முறையில எங்கக் கூட விளையாடின பொண்ணுங்களுக்கு அடுத்த தடவை போறப்ப கல்யாணமாயிருக்கும். அதுக்கு அடுத்த தடவை போய் பார்த்தா குழந்தையோட வந்து நிப்பாங்க. அந்த வயசுல ‘கல்யாணம் ஆகிடுச்சா’னு அதை சாதாரணமா எடுத்துக்கிட்டோம்.

தாத்தாவை எப்பவும் பீடியும் கையு மாகத்தான் பார்க்க முடியும். ஊருல அவர் வைஸ் சேர்மன். தெருவுக்குத் தெரு பஞ்சாயத்துப் பண்ணுவார். ஆனா, வீட்டுல எல்லார்கிட்டேயும் திட்டு வாங்கு வார். ஊர்க்காரங்க யாராவது வீட்டுக்கு வந்துட்டா, டக்குன்னு நாங்க அவருக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிச்சிடுவோம். உடனே, தாத்தா எங்களுக்கு ஆர்டர் போட ஆரம்பிச்சிடுவார். வந்தவங்க போனதும் மீண்டும் வீட்டுல திட்டு வாங்க ஆரம்பிச்சுடுவார். எங்க தாத்தா சமீபத்தில்தான் இறந்தார். அவர் இறந்தப்போ வயது 92. அந்த வயசிலும் நாலு பல்லுதான் போயிருந்தது. நம்ம நடிகர் ரகுவரன் சார் மாதிரி முடி அடர்த்தியா இருந்துச்சு. வாழ்க்கையில எந்த டென்ஷனும் இல்லாம வாழ்ந்தவர். அதனாலதான் கடைசி வரைக்கும் ஆரோக்கியமா வாழ்ந்தாரு.

அந்த ஊருல சிமெண்ட் வீட்டை பார்க் கவே முடியாது. கரண்ட் இருக்காது. டி.வி கிடையாது. தியேட்டருக்குப் போக ணும்னா மைசூருக்குதான் வரணும். கோயில் திருவிழா நடக்கும். அதை அங்கே ‘ஜாத்ரா’னு சொல்லுவாங்க. பாட்டி ஊருல அம்மா கட்டியிருந்த சிவன் கோயில்ல பூஜை நடத்துவாங்க. சாமி கும்பிடறதைவிட அங்க செய்யுற சக்கரப் பொங்கல் ரொம்பப் பிடிக்கும். நாங்க ஊருல இருக்குற நேரத்துல, அப்பா ஒரே ஒருநாள் மட்டும் விசிட் கொடுப்பாரு. அப்பா மட்டும் எப்போ ஊருக்கு வந்தாலும் டாக்ஸியில வந் துடுவார். மைசூர்லேர்ந்து தூராவுக்குப் போறப்ப, எங்கள அப்படி ஒரு தடவையாச்சும் டாக்ஸியில ஆட்டோவுல அழைச்சுட்டுப் போக மாட்டாங்களானு ஏக்கமா இருக்கும்.

வீட்ல ஒரு பெரிய கும்பலே இருக்கும். நாங்க வளர வளர மாமாவும், சித்தியும் வளரத்தானே செய்வாங்க. அடுத்தடுத்து அவங்களுக்குக் கல்யாணம் ஆச்சு. குழந்தைங்க பிறந்தாங்க. நாங்கதான் குழந்தைங்கன்னு விளையாடித் தீர்த்த வீட்டுக்குள்ள திடீர்னு குட்டிக் குழந் தைங்க விளையாட ஆரம்பிச்சாங்க. இனி மேல் நம்மை கொஞ்ச மாட்டேங் களோன்னு அந்த வயதுசுல ஒரு ஃபீலிங் வரத்தான் செஞ்சுது. எப்பவும் கலகலப்பா பதினைஞ்சு, இருபது பேர் ஓடியாடி விளையாடித் திரிஞ்ச வீடு. ஒரு கட்டத்துல எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கைக்காக ஓட ஆரம்பிச்சுட்டாங்க. வீட்டுல இப்போ பாட்டி மட்டும் தனியா இருக்காங்க. ஏன், இப்படியெல்லாம் நடக்குதுனு தெரியவே மாட்டேங்குது.

இப்படி தூராவுல இருக்குற ரெண்டு மாசமும் ரெண்டே நாள் மாதிரி போயி டும். மீண்டும் சென்னைக்கு வந்ததும் அந்த ஞாபகமெல்லாம் நாலு நாளைக்கு இருக்கும். அப்புறம் பரபரப்பான சென்னை வாழ்க்கைக்கு மனம் மாறிக் கும். மீண்டும் சாந்தோம் ஸ்கூல், மயிலாப் பூர் வீடுன்னு ஓட ஆரம்பிச்சுடுவேன்.

அந்த நாட்கள்லதான் அப்பா ஒரு பரபரப்பான டான்ஸ் மாஸ்டர்ங்குறது எனக்குத் தெரிய வந்தது. தீபாவளி, பொங் கல் பண்டிகை நாட்கள்ல ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்ய ராஜ், கார்த்திக், அர்ஜுன், டி.ராஜேந்தர் படங்களெல்லாம் மொத்தமா ரிலீஸா கும். இதுல அப்பா எப்படியும் நாலு படங் களுக்கு மாஸ்டரா இருப்பார். அந்தப் படங்களை எல்லாம் ரிலீஸுக்கு முன் னால ப்ரிவியூ ஷோவுல பார்க் குற வாய்ப்பு கிடைக்கும். சினிமாவுல இருக்குற பிரபலங்கள் எல்லாம் வருவாங்க. அவங்களப் பார்க்குறதுக்கு சந்தோஷமாவும் இருக்கும் டென்ஷ னாவும் இருக்கும். சந்தோஷம் ஓ.கே. டென்ஷன் ஏன்? அடுத்த வாரம் சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x