

தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர் பாபா (Amritlal Vithaldas Thakkar Baba) பிறந்த தினம் இன்று (நவம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# குஜராத் மாநிலம் பாவ்நகரில் ராஜ பரம்பரையை சேர்ந்த லோஹனா சமுதாயத்தில் (1869) பிறந்தார். ஏழைகளுக்கு சேவை செய்வதை தெய்வத் தொண்டாக கருதி செய்தவர்கள் தாய், தந்தையர். அதனால், பிறர் துயர் துடைக்கும் ஆர்வம் குழந்தைப் பருவத்திலேயே இவரிடம் குடிகொண்டது.
# நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும், புனேயில் சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ படிக்க ஏற்பாடு செய்தார் தந்தை. குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து படித்தவர், 1890-ல் டிப்ளமோ பட்டம் பெற்றார்.
# ஷோலாப்பூர், பாவ்நகர், போர்பந்தர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே பொறியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். நேர்மையாக இருந்ததால், வேலையில் நீடிக்க முடியவில்லை. 3 ஆண்டு ஒப்பந்தத்தில் 1900-ல் உகாண்டா நாட்டுக்கு சென்றார். அங்கு முதன்முதலில் இருப்புப் பாதை அமைக்கும் திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றினார்.
# தாயகம் திரும்பியதும், சாங்லி நகரில் ரயில்வே தலைமைப் பொறியாளர் வேலை கிடைத்தது. அப்போது கோபாலகிருஷ்ண கோகலேவை சந்தித்தார். அவர் மூலம் மகாத்மா காந்தியின் அறிமுகமும் கிடைத்தது.
# பின்னர் பம்பாய் நகராட்சியில் வேலைக்கு சேர்ந்தார். ரயில் பெட்டிகளில் அள்ளிவரப்படும் குப்பைகளை தொழிலாளர்கள் அகற்றுவர். அவர்களை மேற்பார்வையிடுவது இவரது பணி. நரகமாக இருந்த குடிசைப் பகுதியில் காலம் தள்ளிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் விடிவெள்ளியாக செயல்பட்டார். கந்துவட்டி தாதாக்களிடம் இருந்து அவர்களை மீட்டார். அவர்களது குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார்.
# வங்காளம், ஒரிஸா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் 1942-ல் வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்தன. ஒரிஸாவில் ஒன்றரை ஆண்டு முகாமிட்டு புனரமைப்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். 74 வயதிலும்கூட தினமும் 20 மணி நேரம் சளைக்காமல் பாடுபடுவார்.
# குஜராத்தின் பஞ்சமஹால் பகுதியை சேர்ந்த ‘பில்’ ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளியேற்ற, ‘ஆதிம் சேவா சங்’ என்ற அமைப்பை உருவாக்கினார். கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அவர்களுக்கு கடன் உதவி வழங்கினார். நூல் நூற்க கற்றுக்கொடுத்து நெசவுத் தொழிலில் ஈடுபட வைத்தார். ஆறே மாதங்களில் ஒரு உறைவிடப் பள்ளி, 4 பள்ளிகள், ஒரு விடுதி, ஒரு மருத்துவ நிலையம், பல கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டன.
# காந்திஜி தொடங்கிய ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளராக 1932-ல் பொறுப்பேற்றார். இவரது வேண்டுகோளின்பேரில், தீண்டாமை ஒழிப்புக்காக காந்திஜி 9 மாத சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் திரட்டப்பட்ட நிதி முழுவதையும் ஹரிஜன மக்கள் மேம்பாட் டுக்காக செலவழித்தார்.
# ‘தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி மக்களுக்காக பாபா சேவையாற்றியதுபோல என்னால்கூட தொண்டு செய்ய முடியவில்லை. பாபாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் காந்திஜி.
# சென்னை தி.நகரில் ஹரிஜன மாணவர்களுக்காக கட்டப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 1946-ல் அடிக்கல் நாட்டி, ‘தக்கர் பாபா வித்யாலயா’ என்று பெயர் சூட்டினார் காந்திஜி. தீண்டாமையை ஒழிக்க வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தக்கர் பாபா 82-வது வயதில் (1951) மறைந்தார்.