

திருக்குறளின் பெருமைகளைப் பற்றி எழு தும்போது, இங்கு உங்களிடம் ஓரு நிகழ்ச்சி யைப் பற்றி அன்புடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி தைவான் நாட்டின் தலைநகரம் தைபேய் நக ருக்குச் சென்றிருந்தேன். அங்கு நடைபெற்ற 30-வது உலக கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தார்கள். அந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர் பெருமக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்கள். சீன நாட்டைச் சேர்ந்த கவிஞர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள்.
அங்கே நான் காண நேர்ந்த ஒரு நிகழ்வைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதாவது, என்னுடைய நண்பரும் கவிஞருமான யூசி அவர்கள் அந்த மாநாட்டில் மேடையேறினார். அவர் சொன்னார்:
‘‘நான் 2005 -ம் வருடம் இந்தியாவுக்குச் சென் றேன். அங்கு என் நண்பர் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தார். அவரும் நானும் பல்வேறு மொழியைச் சேர்ந்த கவிதைகளைப் பற்றி உரையாடிக்கொண்டு இருந்தோம். கலாம் என்னிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பிறந்து, புகழ்பெற்ற திருவள்ளுவருடைய திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்பை எனக்கு வழங்கினார்.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து திருக்குறளைப் படித்து உள்வாங்கி னேன். எவ்வளவு அருமையான கருத்துக்கள் அடங்கிய காலப்பெட்டகம் திருக்குறள்!
அறம், பொருள், இன்பத்தைப் பற்றி வள்ளுவர் எழுதிய இரண்டே இரண்டு வரிகளைக் கொண்ட இந்தக் குறள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழ் சமுதாயத்தின் மாட்சிமையை, அறிவார்ந்த சமூகத்தின் மகிமையை வெளிப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அறிவுறுத் தும் வள்ளுவப் பெருந்தகை, அந்தக் கருத்து உலகம் முழுக்க வாழும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் சிந்தித்திருக்கிறார். அது மட்டுமல்ல; அந்தக் கருத்து இந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருப்பதுதான் இதில் உள்ள அற்புதம் என்பதை உணர்ந்தேன்’’ என்றார்.
கொஞ்சம் இடைவெளிவிட்டு யூசி தொடர்ந்து சொன்னார்:
‘‘எனது நண்பர் கலாம் அவர்கள் என்னிடம் திருக்குறளைப் பரிசளித்துவிட்டு ‘இதை சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள்’ என்று ஆசையோடு கேட்டுக்கொண்டார். அவர் அப்படி கேட்டுக்கொண்ட நாளில் இருந்து அவ ருடைய வேண்டுகோளும், இந்தத் திருக்குறளும் என்னைத் தூங்க விடவில்லை.
கலாம் அவர்கள் கேட்டுக்கொண்டது போலவே உலகத் திருமறையாக விளங்குகிற திருக்குறள் சீன மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்று உடனே முடிவெடுத்தேன். உடனடி யாக அதை சீன மொழியில் மொழிபெயர்த்தேன்.
திருக்குறளின் சீன மொழி பெயர்ப்பை இதோ எனது அன்பு நண்பர் கலாம் அவர்களுடைய முன் னிலையில், இந்த 30-வது உலக கவி ஞர்கள் மாநாட்டில் வெளியிடு கிறேன்’’ என்று சொன்னார்.
யூசி அவர்கள் பேசி முடித்தபோது, அங்கு கூடியிருந்த அத்தனை கவிஞர்களும் ஆரவாரத்துடன் திருக்குறளின் சீன மொழி பெயர்ப்பை வரவேற்று அங்கீகரித்தார்கள்.
சீன மொழிபெயர்ப்புப் புத்தகம் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சீன மொழி பேசும் அத்தனை பேரையும் சென்று அடைந்தது. நிச்சயம் நமது திருக்குறள் அதன் மகிமையை சீன தேசம் முழுக்க வெளிப்படுத்தி, சீன மக்களின் வாழ்வையும் வளப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இது திருக்குறளின் மீது நான் கொண்ட நம்பிக்கை.
2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி தைவான் நாட்டின் தலைநகரம் தைபேய் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சி ஒன்று போதும், தமிழ் ஓர் உலக செம்மொழி; தமிழர் படைத்த திருக்குறள் இந்த உலகத்துக்கே கலங்கரை விளக்கம் என்பதை உறுதிப்படுத்தும்.
என் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எல்லா காலகட்டத்திலும் திருக் குறள் அருமையான வழிகாட்டியாக இருக்கிறது. சிந்தனை வெளிச்சம் நிரம்பியிருக்கிற திருக்குறள் என் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ் வொரு தருணத்திலும் என்னுடன் கூடவே பயணித் திருக்கிறது. நான் மனம் வருந்தும் நேரங்களில் எல்லாம் எனக்கு வழிகாட்டியாக இருந்து, என்னு டைய தோல்விகளை எல்லாம் தோல்வியுறச் செய்து… எனது வெற்றிக்கு உதவியிருக்கிறது.
நம்முடைய அருமையான வாழ்க்கைக்கு உதவும் இந்தத் திருக்குறளில் இருந்து எனக்குப் பிடித்தமான சில திருக்குறளை, படிக்கும் அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் என் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளுடனும் அனுபவங்களுடனும் இணைத்து விளக்கப் போகிறேன்.
- நல்வழி நீளும்…