

பொங்கியெழும் ஜனத்திரள் சமுத்திரத்தின் நடுவே, மனிதத் தலைகளைத் தாண்டி பிரம்மாண்டமான கலைப்பொருளாக அசைந்தாடி வரும் தேரைக் கண்டு ரசிக்கும் கண்கள் பாக்கியம் செய்தவை. கலாச்சாரம், பக்தி ஆகியவற்றுடன் பிரமிப்பூட்டும் கலைநுட்பங்களைக் கொண்டவை கோயில் தேர்கள்.
தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் ஆயிரக் கணக்கான தேர்கள் உள்ளன. மாசிமகம், ஆடிப்பூரம், பங்குனி மாதம், தைப் பூசம், சித்திரை மாதம், மார்கழி உற்சவம் போன்ற பல நிகழ்ச்சிகளில் நான்கு வீதிகளிலும் தேரோட்டங்கள் நடைபெறுவது பல ஊர்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. பிரம்மாண்டமான திருவாரூர் ஆழித்தேர், கும்பகோணம் சாரங்க பாணி கோயில் தேர், வில்லிபுத்தூர் பெருமாள் கோயில் தேர் போன்ற பல தேர்களை வடகயிற்றால் இழுத்துச் செல்பவர்களின் முகத்தில்தான் எத்தனைப் பிரகாசம்!
பெருமாள், சிவன் கோயிலுக்கு ஏற்ப பத்து தாளம் எனும் தசதாள அளவிலான தேர்கள், நவதாளம் எனப்படும் ஒன்பது தாளத்தில் செய்யப்பட்ட அம்மன் கோயில் தேர்கள், பஞ்ச தாளம் எனப்படும் ஐந்து தாளத்தில் குறுகிய வடிவில் செய்யப்படும் விநாயகர் கோயில் தேர்கள் என்று விதவிதமான தேர்களைப் பவனிவரச் செய்து இன்றும் அழகுபார்ப்பவர்கள் தமிழர்கள். கோயில் தேர்களுக்கென்றே படிகளுடன் கூடிய தேரேற்றுக் கூடங்களும் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.
அலங்கரிக்கும் அதிசயங்கள்
தேரைச் சுற்றி நான்கு புறமும் ஆடும் அசைந்தாடிகள், நான்கு முகப்பிலும் வாச மாலைகள், சுவாமிக்கு மேல் விதான ஓவியங்கள், தேர்களின் எட்டுப் புறமும் பட்டங்கள், சிவ வைஷ்ணவக் கொடிகள், எல்லாவற்றுக்கும் மேலாகக் கூம்பிய வடிவில் கலசம் போன்ற துணிகளால் ஆன கலங்கரி ஓவியத் துணிகள், தேரை இழுத்துச் செல்வது போன்ற வடிவில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட குதிரைகள் என்று தேருக்குத் தெய்வீகக் களை சேர்க்கும் விஷயங்கள் பார்க்கத் திகட்டாதவை.
தேர்களின் நான்கு வெளிப்புறத்திலும் சித்திர வேலைப்பாடுகள் அழகு சேர்க்கும். வைணவத் தேராக இருந்தால் பெருமாளின் தசாவதாரங்களைக் காட்டும் மரச் சிற்பங்களும், சிவன் கோயில் தேர்களாக இருந்தால் சிவபுராணக் கதைகள், சிவத்தொண்டர்களான 63 நாயன்மார்களின் கதைகளைச் சித்தரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கும். அவற்றைக் காணும் வெளிநாட்டுப் பயணிகளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்ப்பதே தனி அழகு.
பிரான்ஸைப் பின்பற்றலாமே!
தேரோட்டம் முடிந்த பிறகு, தேரின் அத்தனை அலங்காரங்களையும் பிரித்து, இரும்புத் தகடுகளால் தேரை முழுவதுமாக மறைத்துப் பயணிகள் பார்க்க இயலாமல் கோயில் அதிகாரிகள் மூடிவிடுகின்றனர். இதனால் தோ்த் திருவிழா முடிந்த மற்ற நாட்களில், இதனைப் பார்க்க வரும் பயணிகளால் அவற்றின் கலை அழகைக் காண இயலாமல் போய்விடுகிறது.
100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கலைப் பொருட்கள், கட்டிடங்கள் போன்றவற்றை பிரான்ஸ் நாட்டினர் திறந்தவெளி அருங் காட்சியகம் எனும் முறையில் இன்றும் பாதுகாத்துவருகின்றனர்.
தமிழகத்திலோ 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த 100-க்கும் மேற்பட்ட தேர்கள் சிதிலம் அடைந்தும், கேட்பாரற்றுக் கிடப்பதும் வேதனை யளிக்கிறது. இவற்றைப் புத்தாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், அழகிய நிலையில் உள்ள தேர்களை, தேரோட்டத்துக்குப் பிறகு மக்கள் அவற்றின் கலை அழகைக் கண்டுகளிக்கும்படியாகத் திறந்தவெளி அருங்காட்சியமாக வைக்கலாம். ஏனெனில், தேர் ஓடினால் மட்டுமல்ல, நின்றாலும் அழகுதான்!
- தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com