இப்படியும் கூட்டம் சேர்க்கலாம்!

இப்படியும் கூட்டம் சேர்க்கலாம்!
Updated on
1 min read

ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள் என்பது சென்னை மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரை உண்மையாகி விட்டது. செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போடுவதற்காகவே பயணித்த மக்கள் கூட்டம், படிப்படியாகக் குறைந்து, தற்போது மெட்ரோ ரயிலைச் சீண்டுபவர்கள் குறைந்துவிட்டார்கள். ஒருசில பயணிகளை மட்டுமே சுமந்தபடி அங்குமிங்குமாய் மெட்ரோ ரயில் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மெட்ரோ ரயிலில் மீண்டும் கூட்டத்தைச் சேர்க்க சில யோசனைகள்.

அரசு பொருட்காட்சியில் செய்வது போல, குலுக்கல் பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். தினமும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு வீட்டுமனை, வெளிநாட்டு சுற்றுலா, குழந்தைக்கு எல்கேஜி அட்மிஷன் போன்ற அதிரடி பரிசுகளை அறிவிக்கலாம்!

பத்து டிக்கெட்டுகளுக்கு மேல் எடுப்பவர்களுக்கு, துவரம் பருப்பு ஒரு கிலோ பாக்கெட் இலவசமாகக் கொடுக்கலாம். சீசனுக்குத் தக்கபடி, தக்காளி ஒரு கிலோ, வெங்காயம் ஒரு கிலோ என, அந்தந்த சீசனில் விலை அதிகமான பொருட்களை இலவசமாக வழங்கி, மக்களை குஷிப்படுத்தலாம்.

சில கல்யாண வீடுகளில் இலவசமாக மெகந்தி போடுவது, பாப்கார்ன் விற்பது, பஞ்சு மிட்டாய் விற்பதைப் போல மெட்ரோ ரயிலிலும் செய்து பார்க்கலாம். ‘மெட்ரோ மெகந்தி’ என்பதை பெரிய வைரலாக்கலாம்!

இன்று ஒரு தகவல் என்பது போல, இன்று ஒரு விஐபி என்று மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நடிகர் நடிகையர்களை தினம் ஒருவராக மெட்ரோ ரயிலில் பயணிக்க வைக்கலாம். அவர்களைப் பார்க்கவாவது மெட்ரோ ரயிலில் கூட்டம் கூடும். ஒரு கடைதிறப்பு விழாவுக்கு வந்த நயன்தாராவுக்கு கூடின கூட்டம் பார்த்தோம்தானே!

டிவி சீரியல்களை மெட்ரோ ரயிலில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாம். சீரியல் ஒளிபரப்புவ தென்றால், மெட்ரோ ரயிலின் வேகத்தையும் சற்று குறைக்கலாம். இல்லையெனில் விளம்பரம் முடிவதற்குள் அவரவர் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும்!

சென்னையில், காதலர்கள் சந்திப்பதற்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பீச், பர்க் அனைத்திலும் ஹவுஸ்புல் நிலைமை. எனவே, மெட்ரோ ரயிலில் அவர்களுக்கென ஒரு கம்பார்ட்மென்ட் ஒதுக்கி விட லாம்! அதில், இன்டர்னெட் சென்டர்களில் இருப்பது போல தனித்தனி கேபின்களை அமைப்பது முக்கியம்!

கவுரவம் பார்க்காமல், மெட்ரோ ரயில் பாதையின் தூண்கள் அனைத்தையும், சர்வகட்சியினருக்கும் விளம்பரம் செய்ய மொத்த குத்தைகைக்கு விடலாம்! ஆளுக்கு ஒரு தூணில், ‘எங்கள் வருங்கால பாரதத்தின் தூணே!’, ‘எதிர்கால தமிழகத்தை நிமிர்த்த வந்த தூணே!’ என்றெல்லாம் விளம்பரங்கள் தூள் பறக்கும். மெட்ரோ ரயிலுக்கு வருமானமும் கிடைக்கும்.

இப்படியெல்லாம் செய்தால் தான், மாற்றம், முன்னேற்றம், மெட்ரோ ரயில் என்றிருக்கும், இல்லையெனில் ஏமாற்றமே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in